இயற்கை நமக்கு கொடுக்கும் செலவில்லாத தொழில் நுட்பங்கள்

Agriwiki.in- Learn Share Collaborate

இயற்கை நமக்கு கொடுக்கும் செலவில்லாத தொழில் நுட்பங்கள் by Sebastian Brittoraj

1. ஆமணக்கு வெளியடுக்கு
ஆமணக்கை பூச்சிகளின் பதிவேடு என்று கூறலாம், எந்த பூச்சி வந்தாலும் முதலில் ஆமணக்குச் செடியைதான் நாடும். இதை ஆங்கிலத்தில் TRAP CROP என்று கூறுவார்கள். ஆமணக்குச் செடிகளை வயலின் ஓரத்தில் நடலாம், எண்ணிக்கை குறைவாகவே நடவேண்டும். ஆமணக்குச் செடியை அடிக்கடி பரிசோதித்து, தீமைசெய்யும் பூச்சிகளைக் கண்டால் அப்பூச்சிகளை சேகரித்து அழித்து விட வேண்டும். அதிகமாக ஆமணக்கு நடக்கூடாது, நெருக்கமாகவும் இருக்கக்கூடாது, வயலின் நடுவிலும் நடக்கூடாது.
2. தட்டை பயிரிடுதல்
தட்டைச் செடிகளை வரப்போரங்களில் அல்லது ஊடுபயிராக நடலாம். இவை அசுவினிப் பூச்சிகள் வளர்வதற்கு ஏற்ற செடியாகும். அசுவினிப்பூச்சிகள் ஒரளவு வந்தவுடன் அசுவினியை உண்ண பொறிவண்டுகள் மற்றும் பல நன்மை செய்யும் பூச்சிகள் வருகின்றன.
3. மக்காச்சோளம்
மக்காச்சோளத்தில் இறைவிழுங்கிகள் அதிகம் தங்கியிருக்கும். இதை வரப்பைச் சுற்றியோ அல்லது ஊடுபயிராகவோ பயிர் செய்யும்போது நிறைய இறைவிழுங்கிகள் உற்பத்தி செய்யப்பட்டு அவை பயிரைத்தாக்கும் பூச்சிகளை அழிக்கிறது.
மேலும், மக்காச்சோளம் பறவைகள் உட்காருவதற்கு உதவியாக இருக்கும். பூச்சிவிழுங்கிப் பறவைகள் இதில் அமர்ந்து பயிரைத்தாக்கும் பூச்சிகளைப் பிடித்து உண்ணும்.
4. மஞ்சள் வண்ணப்பூச்செடிகள்
செண்டு மல்லி எனப்படும் துலுக்க சாமந்தியின் வேர்களில் இருந்து சுரக்கும் திரவங்கள் நூற்புழுக்களைக் கொல்லக்கூடியவை. இந்த திரவங்கள் ஒரு சதுர மீட்டர் பரப்பளவிற்கு செல்லக்கூடியவை. எனவே பயிர்களுக்கு அருகிலேயே துலுக்க சாமந்தியை நடவேண்டும்.
5. வேப்பங்கொட்டைக் கரைசல்
பாரம்பரியமாக நாம் பயன்படுத்தும் வேம்பில் 18 வகையான ஆல்கலாய்டு உள்ளது. இதில் முக்கியமானது அஸாடிராக்டின் என்ற ஆல்கால்ய்டு. இதனால் வேப்பங்கொட்டையில் எடுக்கப்படும் வேப்பெண்ணை சிறந்த இயற்கைமுறைப் பூச்சி மருந்தாகவும், நோய்களை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. வேப்பிலையில் 10 வகையான ஆல்கலாய்டுகளும், வேப்பம்பட்டையில் 8 வகையான ஆல்கலாய்டுகளும், வேப்பங்கொட்டையில் 18 வகையான ஆல்கலாய்டுகளும் உள்ளன.
கடைகளில் கிடைக்கும் வேப்பெண்ணை இரும்பு செக்கில் அரைக்கப்படுவதினால், வெப்பத்தினால் ஆல்கலாய்டுகள் சிதைந்து விடுகின்றன, இதனால் 18 வகையான ஆல்கலாய்டுகள் இருக்கவேண்டிய வேப்பெண்ணெயில் 8 வகையான ஆல்கலாய்டுகள் மட்டுமே உள்ளன.
இதனால் வேப்பெண்ணையை பயன்படுத்துவதை விட, வேப்ப முத்துக்களை சேகரித்து அதை இடித்து பயன்படுத்துவதுதான் சிறந்தது, இதனால் 18 வகையான ஆல்கலாய்டுகளும் முழுமையாகக் கிடைக்கிறது.
வேப்பங்கொட்டைக் கரைசலை பயிர்களுக்கு தெளிக்கும்போது, வேப்பங்கொட்டைக் கரைசல் பயிர்களின் மேல் படிகிறது. பூச்சிக்கட்டுப்பாடு மற்றும் நோய்க்கட்டுப்பாடு இரண்டிற்கும் வேப்பங்கொட்டைக் கரைசல் நல்ல தீர்வாக உள்ளது.
பூச்சிக்கட்டுப்பாடு
1. வேம்பின் வாசனை பூச்சிகளை விரட்டும்.
2. வேம்பின் கசப்புச் சுவையால் பூச்சிகள் பயிரை சாப்பிடாது.
3. கசப்புச் சுவையையும் மீறி உண்ணும் பூச்சிகளின் வயிறு மந்தம் அடைகிறது.
4. தொடர்ந்து உண்ணும் பொழுது பூச்சிகளுக்குப் பக்கவாதம் ஏற்பட்டு அவை இறந்துவிடுகிறது.
5. இறக்காத பூச்சிகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டு, இனப்பெருக்கம் செய்ய இயலாத நிலையை அடைகின்றன.
6. பெண் பூச்சிகளின் முட்டை உற்பத்தியும், முட்டையிடுதலும் தவிர்க்கப்படுகிறது.
நோய்க் கட்டுப்பாடு
1. பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதால் பூச்சிகளின் மூலம் பரவும் வைரஸ் நோய்களையும் கட்டுப்படுத்துகிறது.
2. வேப்பங்கொட்டைக் கரைசல் அடித்த பயிரில் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களின் ஸ்போர்கள் (விதை போன்றவை) முளைத்து வளர இயலாது.
நெல் பயிருக்கு பயிர் நட்டு 25 நாள்களில் தெளிக்கலாம், அடுத்து 7 நாட்களுக்கு ஒரு முறை தேவையைப் பொருத்து அடிக்கலாம்.
வேப்பங்கொட்டை கரைசல் செய்முறை:
ஒரு ஏக்கருக்கு தேவையான பொருள்கள்:
1. வேப்பங்கொட்டை 5 கிலோ
2. நாட்டுரகப் பூண்டு 500 கிராம்
இரண்டையும் தனித்தனியே ஆட்டுக்கல்லில் ஆட்டி பசை போல் செய்து கொள்ளவேண்டும். இதைப் பழைய பருத்தித் துணியில் கட்டி 10 லிட்டர் கோமியத்தில் ஊறவிட வேண்டும்.
வேப்பங்கொட்டையின் சாறு சிறிது சிறிதாக கரைந்து கோமியத்தில் கலக்கும், இரண்டு முதல் நான்கு நாட்களுக்குள் வேம்பின் சத்து கோமியத்துடன் ஊறிவிடும், இந்தச் சாற்றை வடிகட்டி அதனுடன் நூறு கிராம் காதி சோப்பைக் கரைத்து கரைசல் தயார்செய்ய வேண்டும்.
இக்கரைசலை 1:10 என்ற விதத்தில் தண்ணீருடன் கலந்து பயன்படுத்தலாம். மாலை மூன்று மணிக்கு மேல் தெளிப்பது நல்லது, காலையில் கரைசலை அடிக்கும்போது கரைசலில் உள்ள ஆல்கலாய்டுகள் சூரிய ஒளியினால் அழிந்து விடுகிறது. இதனால் வேப்பங்கொட்டைக் கரைசல் அடித்ததற்கான பலன் இல்லாமல் போகும்.
வேப்பங்கொட்டைக் கரைசல் மாலையில் அடிக்கும்போது, அதன் ஆல்காலாய்டுகள் இலையில் நன்கு ஒட்டிக்கொள்கிறது. இரண்டு நாள் முதல் நான்கு நாட்கள் வரை பயிரில் அந்த கசப்புத் தன்மை இருக்கும். கரைசல்களைத் தேவையானபோது புதியதாக தயார் செய்து பயன்படுத்துவது சிறந்தது.
ஒரு இயற்கை விவசாயி வேம்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நிலத்தைச் சுற்றி நிறைய வேப்பமரங்களை நட வேண்டும். ஒரு வருடத்திற்கு, ஒரு ஏக்கருக்கு 200 கிலோ வேப்பங்கொட்டை அடியுரமாக தேவைப்படும். 20 கிலோ வேப்பங்கொட்டை கரைசல் செய்வதற்கு தேவைப்படும். எனவே ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் 220 கிலோ வேப்பங்கொட்டையை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.
6. பொறிகள்
மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறி
பழைய எண்ணை டின்களின் மேல் மஞ்சள் வண்ணத்தை பூசி அதன் மேல் விளக்கெண்ணை அல்லது கிரீஸ் தடவி விடவேண்டும். மஞ்சள் வண்ணத்தால் கவரப்படும் பூச்சிகளான அசுவினி, தத்துபூச்சி, வெள்ளை ஈ, இலைப்பேன் போன்றவை அதன் மேல் ஒட்டிக்கொண்டு இறந்துவிடும்.
விளக்குப் பொறிகள்
பொதுவாக பூச்சிகள் ஒளியை நோக்கிச் செல்லக்கூடியவை. இரவில் மின்சார விளக்கு எரியவிட்டு அதன் கீழ் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் சில துளிகள் மண்ணெண்ணையை விட்டு இரவு 6 மணி முதல் 8 மணி வரை வைக்கவேண்டும், பூச்சிகள் இந்த விளக்கொளியில் கவரப்பட்டு பின் தண்ணீரில் விழுந்து மடிகின்றன.
இரவு 8 மணிக்குமேல் நன்மை செய்யும் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும், இதனால் 8 மணிக்கு மேல் விளக்கை அணைத்துவிட வேண்டும். இல்லையேல் நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.