சூப்பர் நேப்பியர் பசுந்தீவனங்களின் ராஜா

சூப்பர் நேப்பியர் பசுந்தீவனங்களின் ராஜா supernapier
Agriwiki.in- Learn Share Collaborate

சூப்பர் நேப்பியர் பசுந்தீவனங்களின் ராஜா.

 

சூப்பர் நேப்பியர் பசுந்தீவனங்களின் ராஜா – அதிக உற்பத்தி திறன் கொண்ட ரகம். கம்பையும், யானை புல்லையும்(நேப்பியர் புல்) கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டது.

பசுந்தீவன ரகங்களில், அதிக உற்பத்தி திறன் கொண்ட ரகம். சூப்பர்நேப்பியர் ,தானிய வகை பயிரான கம்பையும் ,ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட யானை புல்லையும்( நேப்பியர் புல்) கலப்பினம் செய்து, தாய்லாந்தில் உருவாக்கப்பட்டது.

ஸ்டார்ச்சும், கார்போஹைட்ரேட்டுகள் மட்டுமே செறிந்திருக்கும் புல்லில், கம்பு வகை தானியத்தை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட , சூப்பர் நேப்பியரின் புரத அளவு 14 லிருந்து 18.சதவிகிதம். இது கால்நடைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகி, உடல் எடை கூடுவது, பாலின் தரம் மேம்படுதல், கன்றுகளின் உடல்வளர்ச்சி விகிதம் கூடுதல் என துணை புரிகிறது.

சூப்பர் நேப்பியர் உற்பத்தி திறன்

சூப்பர் நேப்பியர் ஏக்கருக்கு 200 டன் உற்பத்தி திறன் கொண்டது . தீவனத்திற்க்காக, நடவு செய்து 90 நாட்களில் முதல் அறுவடையும் அடுத்தடுத்த அறுவடைகள், ஒவ்வொரு 45 நாட்களில் மேற்கொள்ளலாம். விதைகரணைகளுக்கெனில், பயிரின் 120 வது நாளிலிருந்து வெட்டி நடவு செய்யலாம்.

நடவு செய்ததிலிருந்து 3 லிருந்து 5 ஆண்டுகள் வரை சிறப்பான உற்பத்தியை தரும்.

▪கால்நடைகளுக்கான தீவன பயிர் வகைகளில் அதிகபடியான உற்பத்தி திறன் கொண்ட ரகம்.
▪ஏக்கருக்கு 200 டன் தீவனங்களை அறுவடை செய்யலாம்.
▪தண்டுபகுதிகளில் சுனை குறைவு, ஆகையால் பணியாளர்கள் சிரமம் இல்லாமல் வெட்டி, தூக்கி செல்லலாம்.
▪மிருதுவான, இனிப்பு சுவையை உடைய தண்டு பகுதிகளை, கால்நடைகள் மிகவும் விரும்பி உண்பதால், தீவனம் வீணாகுதல் இல்லை.

மற்ற புல் வகை தீவனங்கள் மாவுசத்தை மட்டுமே பிரதான சத்தாக கொண்டிருக்கின்றன.
சூப்பர் நேப்பியர், தானிய வகை கம்பு பயிருடன் புல் வகையான யானை புல்லை ( நேப்பியர்) ஒட்டுகட்டி உருவாக்கியதன் விளைவாக தானியத்தின் புரதத்தையும், புல்லின் கார்போஹைட்ரேட்டையும் ஒருங்கிணைத்து சூப்பர் நேப்பியர் புல்லாக உருவாக்கம் பெற்றுள்ளது.

சூப்பர் நேப்பியரிலுள்ள புரதத்தின் அளவு 14 லிருந்து 18 சதவிகிதம்

சூப்பர் நேப்பியரிலுள்ள புரதத்தின் அளவு 14 லிருந்து 18 சதவிகிதம்.
இந்த அளவு புரதம் புல் வகை தீவனங்களில் சூப்பர் நேப்பியரில் மட்டுமே உள்ளது.

 

நடைமுறை சிக்கல்களை சூப்பர் நேப்பியர் களைகின்றது

வழக்கமாக கால்நடை வளர்ப்பவர்கள் பண்ணையில் கோ3,4,5 போன்ற புல் வகைகளை மட்டுமே பயிரிட்டு கால்நடைகளுக்கு அளிப்பர்.
இதனால் உடல் வளர்ச்சிக்கும், பாலின் தரத்திற்கு அடிப்படையான புரத குறைபாட்டால் கன்றுகளிடேயே சரியான உடல் வளர்ச்சி இல்லாமை, சரியான காலத்தில் சினை பருவங்கள் தாமதமாகுதல், பாலின் அடர்த்தி மற்றும் அளவு குறைதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும்.
புரத தேவையை பூர்த்தி செய்ய அடர்தீவனங்களை அதிகபடியாக கொடுக்கும் சூழ்நிலை ஏற்படும். இவற்றால் பண்ணையின் செலவுகள் அதிகரிக்கும்.

இது போன்ற நடைமுறை சிக்கல்களை சூப்பர் நேப்பியர் களைகின்றது.
தட்டுபாடில்லா, புரதம் நிறைந்த தீவனங்களை உற்பத்தி செய்வதால், சிறு அளவில் கால்நடை வளர்ப்பவர்களின் தீவன செலவை பெருவாரியாக குறைக்கிறது.

சூப்பர் நேப்பியர் தொழில்முறை கால்நடை வளர்ப்பவர்களுக்கும், ஒன்று அல்லது இரண்டு என வீட்டில் வளர்ப்பவர்களுக்கும் மிகவும் இலாபகரமானதாக உள்ளது.

நடவுமுறை :

▪சூப்பர் நேப்பியர் கரணைகளை வரிசை முறையில் நடவு செய்யும் போது விளைச்சல் சிறப்பாக இருக்கும்.
▪நிலத்தை கட்டிகள் இல்லாமல், பொல பொலப்பாக புழுதி ஓட்டி, அடியுரமாக ஊட்டமேற்றிய தொழுஉரம் அல்லது ஆட்டு உரம் ஏக்கருக்கு 100 கிலோ அளவில் போட்டு, கடைசி உழவு செய்து கொள்ளலாம்.
▪வரிசை நடவின்போது, நிலத்தின், இரு புறமும், நேராக கயிறு பிடித்து, கயிற்றை ஒட்டி அரை அடிஇடைவெளியில் கரணைகளை மண்ணில் ஊன்றி நடவும்.
▪கரணைகளில் ஒரு கணு முழுவதுமாக மண்ணுக்குள்ளேயும், மறுகணு மண்ணுக்கு வெளியே 45 டிகிரி சாய்ந்து மண்ணை தொட்டும் இருக்குமாறு நடவு செய்தல் வேண்டும்.

வரிசை நடவில் இரட்டை வரிசை நடவு முறை சிறப்பாக பயனளிக்கிறது

இரட்டைவரிசையிலுள்ள, வரிசையின் இடைவெளி — 1 அடி.
கரணைகளின் இடைவெளி — அரை அடி.
ஒவ்வோர் இரட்டை வரிசைகளுக்கு இடையேயான இடைவெளி — 2 அல்லது ஒன்னே முக்கால் அடி வைக்கலாம்.

கரணைகளின் இடைவெளியை குறைத்து, வரிசைகளை, இரட்டை வரிசை மூலம் அதிகப்படுத்தி, இரட்டை வரிசைகளுக்கு இடையே, இடைவெளியை அதிகப்படுத்துவதின் மூலம், நல்ல காற்றோட்டம், பராமரிக்க எளிதான வடிவமைப்பு போன்ற சிறப்பம்சங்களால், குறைந்த இடத்தில் அதிக மகசூலை, இவ்விரட்டை வரிசை நடவு முறை தருகின்றது.

பராமரிப்பு :

▪நடவு செய்த உடன் ஜீவாமிர்தம் கலந்து பாசனம் செய்வதின் மூலம் கரணைகளில் நூறு சதவிகித முளைப்பு திறன் சாத்தியமாகிறது.
▪முளைப்புகள் வரும் வரை நான்கு நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்யலாம்.
பயிர் நன்கு கிளைத்த பின், பத்து நாட்களுக்கு ஒரு
முறை ஜீவாமிர்தம்,மீன்அமிலம் கலந்த பாசனம் செய்யலாம்.
▪நட்டு 15 நாள் கழித்து, கைகளை எடுப்பது அத்தியாவசியம்.
▪பயிரின் 90வது நாளில் முதல் அறுவடையை மேற்கொள்ளலாம்.
அதற்கு அடுத்த ஒவ்வோர் 45 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்யலாம்.
▪ஒவ்வோர் அறுவடைக்கு பின்னர், அறுவடை செய்த வரிசைகளில் ஊட்டமேற்றிய ஆட்டுஎரு அல்லது தொழு உரத்தை கொட்டி, பவர் வீடர் மூலம், வரிசைகளுக்கு இடையில் ஓட்டி விடுவதின் மூலம், எரு மண்ணுடன் கலக்கப்பட்டு,மண் மிகவும் பொல பொலப்பாக மாறும்.
இலகுவான மண்ணில் வேரோட்டம் துரிதமாக பரவுவதால், பயிரின் வளர்ச்சியும் அதிவேகமாக இருக்கும்.

தொடர் பராமரிப்பு

அறுவடைக்கு பின்னர், மீண்டும் துளிர்த்து வந்தவுடன், மீன்அமிலம் 10 லிட்டருக்கு 150 மில்லி என இலைவழி தெளிப்பு செய்வதின் மூலம் சிறப்பான பச்சையத்தையும், துரித வளர்ச்சியையும் ஊக்கப்படுத்தலாம்.

இது போன்ற சிறப்பான, தொடர் பராமரிப்பில் ஐந்து வருடங்கள் வரை சூப்பர் நேப்பியர் நிலைத்து, நம் கால்நடை செல்வங்களுக்கு தடையில்லாமல் தீவனங்களை அள்ளி தந்து கொண்டிருக்கும்.

சூப்பர் நேப்பியர்,கால்நடை வளர்ப்பின் மறுமலர்ச்சி.

அர்வின் ஃபார்ம்ஸ்
இயற்கைவழி ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை.
போளூர்.

3 Responses to “சூப்பர் நேப்பியர் பசுந்தீவனங்களின் ராஜா”

      1. அர்வின் ஆர்கானிக்ஸ்,
        ஸ்டேட்பேங்க் அருகில், போளூர், திருவண்ணாமலை மாவட்டம்.
        தொடர்பு எண்: 95003 43744

        அர்வின் ஃபார்ம்ஸ், போளூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.