அனைவருக்கும் உழவு நிலம் என்பதும் சாத்தியப்படுமா

அனைவருக்கும் உழவு நிலம் என்பதும் சாத்தியப்படுமா
Agriwiki.in- Learn Share Collaborate
அனைவருக்கும் உழவு நிலம் என்பதும் சாத்தியப்படுமா?

 

இந்தியா முழுமைக்கும் தபோல்கர் முறை சாத்தியம் தானா? //

dabholkar
dabholkar

மருத்துவம் மற்றும் ஆசிரியப் பணிகளை தொழிலாக பார்க்க ஆரம்பித்ததன் சீர்கேடுகள் நாம் அனைவரும் அறிந்ததே.

நாம் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகள்: உணவு, உடை, இருப்பிடம். இதில் சமீப காலத்தில் மருத்துவமும் சேர்ந்துள்ளது. இவற்றை பூர்த்தி செய்ய நாம் எப்போது அடுத்தவர்களை சார்ந்து இருக்க ஆரம்பிக்கிறோமோ, அப்போது நாம் அடிமை வாழ்வு துவங்குகிறது.

மருத்துவத்தில் சுய சார்பு அடைந்ததன் நன்மையை அக்குஹீலர்களாகிய நாம் நன்கு அறிவோம்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின், விவசாய விளை பொருட்கள் உள்ளிட்ட மற்ற பொருட் தேவைகளை இறக்குமதி செய்ய இயலாத நிலை கியூபாவுக்கு ஏற்பட்டது. அப்போது கியூபா அரசு, வீட்டுத் தோட்ட முறையை ஊக்குவித்தது. இம் முறை நல்ல பலனை தந்து உணவுப் பொருள் உற்பத்தியில் கியூபா தேசத்தை சுய சார்பு அடைய வைத்தது. இன்று வரை, இந்த வீட்டுத் தோட்ட முறை கியூபாவில் சிறப்பாக வளர்ச்சி பெற்று உயர்ந்த ஒரு நிலையை எட்டியுள்ளது.

கியூபா பின்பற்றிய முறை போன்ற ஒரு வழி முறைதான், தபோல்கரின் ‘ப்ர்யோக் பரிவார் முறை’.

இதோ கியூபாவின் தன்னிறைவு வரலாறு…..

கியூபாவில், ஜனவரி 1, 1959-ல், புரட்சியில் வெற்றி பெற்று அரசு அமைத்தார் ஃபிடல் காஸ்ட்ரோ.

அதிரடியான தொடக்கம் அது. மே 1959-ம் ஆண்டு, அமெரிக்கச் சர்க்கரை ஆலைகளுக்குச் சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்தார் காஸ்ட்ரோ. மிக முக்கியமாக யுனைடெட் ஃப்ரூட் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்கள் பிடுங்கப்பட்டன. ‘நீங்கள் என்ன விலைகொடுத்து வாங்கினீர்களோ, அதன் அடிப்படையில் உங்களுக்கு நஷ்ட ஈடு அளிக்க ஏற்பாடு செய்கிறேன்!’ என்றார். எந்தவொரு அமெரிக்க நிறுவனமும் நிலத்துக்கான அசல் தொகையை செலுத்தி முறைப்படி வாங்கிக் கொண்டதில்லை. எல்லாமே அடிமாட்டு விலையில் ஏமாற்றி வாங்கப்பட்டவை. இந்தத் தொகைக்கு நஷ்டஈடு என்றால் எப்படியிருக்கும்?

நிலம் மட்டுமல்ல. அமெரிக்க எண்ணெய் நிலையங்கள், தொலைபேசி நிறுவனம், வங்கிகள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. அமெரிக்கா அலறியது. இதுவரை ஏகபோகமாக அவர்கள் அனுபவித்துவந்த நிலத்தை காஸ்ட்ரோ திடீரென்று பறித்து கொண்டதை அவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இதுவரை தன் விருப்பத்துக்கு க்யூபர்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த அமெரிக்க நிறுவனங்கள் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வெளியேறின. கிட்டத்தட்ட 850 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டன.

‘நிலச்சீர்திருத்ததை தொடரவேண்டாம்!’ என்று க்யூபாவை எச்சரித்தது அமெரிக்கா. எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது. தொடர்ந்து முன்னேறிய காஸ்ட்ரோ, ஓரியண்ட் மாகாணத்திலுள்ள 80 ஆயிரம் ஏக்கர் நிலத்தை நாட்டுமையாக்கினார். அமெரிக்கர்கள் நடத்தி வந்த உல்லாச விடுதிகளிலிருந்து பாதி வருமானம் அரசாங்கத்துக்கு வந்து சேரவேண்டும் என்று உத்தரவிட்டார். தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு பணம் வசூலித்து வந்த மின்சாரத்துறை சீர்செய்யப்பட்டது. அரசுடைமையாக்கப்பட்ட நிலங்கள் விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. இரண்டு லட்சம் மக்களுக்கு நிலமும் வீடுகளும் கிடைத்தன. நில வாடகை பாதியாகக் குறைக்கப்பட்டது. ஏழை விவசாயிகள் வீடுகள் கட்டிக்கொள்ள ஊக்கப்படுத்தப்பட்டனர்.

உலக நாடுகள் பலவற்றோடு இணைந்து, கியூபா மீது பொருளாதாரத் தடையை விதித்தது அமெரிக்கா.

கரும்பு மட்டுமே விளையும் கியூபாவுக்கு உணவு உட்பட எல்லா அத்தியாவசியப் பொருட்களும் பிற நாடுகளிடமிருந்து தான் வர வேண்டும். இந்நிலையில் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை கடும் சிக்கலை கியூபாவிற்கு ஏற்படுத்தியது.

அப்போது சோவியத் ரஷ்யா கியூபாவிற்கு உதவ முன்வந்தது. கியூபாவின் சர்க்கரையைப் பெற்றுக் கொண்டு, கியூபாவிற்குத் தேவையான உணவுப் பொருட்களையும், இதர அத்தியாவசியப் பொருட்களையும் ரஷ்யா அனுப்பி வைத்தது.

அன்றைய கியூபாவின் உணவுத் தேவையில் அறுபது சதவீதம் ரஷ்யாவில் இருந்தே வந்தன. கரும்பு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கிய கியூபா, அதற்குத் தேவையான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், டீசல், வேளாண் எந்திரங்கள்… இப்படி அனைத்தையும் ரஷ்யாவிடமிருந்தே பெற்றது. நவீன வேளாண் முறையில் உணவு உற்பத்தியைத் துவங்கிய கியூபாவில் ஓர் ஆண்டிற்கு 13 லட்சம் டன் ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டன.

இந்தச் சூழலில்தான் சோவியத் ரஷ்யா சிதறுண்டது. கியூபா தன் தேவைகளுக்காக சார்ந்திருந்த ரஷ்யாவின் உதவிகள் கிடைக்கவில்லை. நவீன விவசாயத்தை சுயசார்போடு செய்ய முடியாத சூழலில் டீசல் உட்பட பல பொருட்களின் தேவை இருந்தது.

தயாரான சர்க்கரையை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. உணவுப்பொருட்கள், ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் எதையும் வெளிநாடுகளிலிருந்து வாங்க முடியாத சூழலில், ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்தார

அதன்படி, கரும்பு மட்டுமே விளைவிப்பது என்ற ஒற்றைப் பயிர் சாகுபடி முறையைக் கைவிட்டது கியூபா. தங்களுக்குத் தேவையான எல்லா உணவுப் பொருட்களையும் தங்கள் மண்ணிலேயே உற்பத்தி செய்யும் முடிவிற்கு வந்தார் ஃபிடல்.

நாடு முழுவதும் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதால். உள்நாட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உயிர் உரங்கள் இயற்கை வழி வேளாண் முறையில் தயாரிக்கப்பட்டன. குடும்பத் தோட்டங்கள், நகர்ப்புற விவசாயம் என அனைத்து வகைகளிலும் தற்சார்பு வேளாண்மைக்குத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.

கியூப மக்களின் முக்கியமான உணவுகளில் ஒன்று, அரிசி. இயற்கை வழி வேளாண்மை துவங்கப்பட்ட ஒரே ஆண்டில், கியூபாவின் ஒட்டுமொத்த தேவையில் ஐம்பது சதவீத நெல் அங்கேயே விளைந்து செழித்தது.

கிழங்கு உற்பத்தியில் தென் அமெரிக்காவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது கியூபா. கியூபாவின் மொத்த மக்கள்தொகையில் 95% கல்வி கற்றவர்கள். அவர்கள் செய்த விவசாயத்தில்தான் கியூபாவின் உணவுத்தேவை நிறைவேறத் துவங்கியது. கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல், நகர்ப்புற காலியிடங்கள் எல்லாம் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டன.

பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கூட்டுறவு சங்கங்களுக்குச் சொந்தமான காலி இடங்கள் எல்லாம் விவசாய நிலங்களாக மாறின. 1.1 கோடி மக்கள் தொகையைக் கொண்ட கியூபாவின் குடிமக்கள் அனைவரும், தங்கள் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வதற்கான சுய போராட்டத்தை தாங்களே நடத்தினார்கள். வீடுகளில் இருக்கும் குறைந்த இடங்களில் காய்கறி பயிரிட்டார்கள்.

மாடித்தோட்டம் மூலம் தங்கள் தேவையையும் நிறைவேற்றி, எஞ்சியவற்றை விற்கத் துவங்கினார்கள். இயற்கை வழி வேளாண்மையில் நிலத்தையும், சூரிய ஒளியையும் வீணாக்காமல் பயன்படுத்துவதன் அவசியத்தை விளக்குவார்கள். ‘‘ஒரு சதுர அடி இலைப் பரப்பின் மீது எட்டு மணி நேரம் தொடர்ந்து சூரிய ஒளி விழுந்தால் மூன்று கிராம் குளுகோஸ் ஒளிச்சேர்க்கையின் மூலம் தயாரிக்கப்படுகிறது’’ என்று சொல்வார் மராட்டிய கணிதப் பேராசான் ஸ்ரீபாத் தபோல்கர்.

அதே புரிதலோடு கியூபா சூரிய ஒளியை அறுவடை செய்தது. உணவிற்காக பிற நாடுகளை நம்பி இருக்க வேண்டிய அவசியத்தை உடைத்தெறிந்தது. தன் உணவுத் தேவையை தானே பூர்த்தி செய்து கொண்டது. 2000ம் ஆண்டில் நகர்ப்புற வேளாண்மையில் மட்டும் கியூபாவிற்குக் கிடைத்த உணவுப் பொருட்கள் 12 லட்சம் டன். விவசாய நிலங்களிலிருந்தும், கிராமப்புறங்களில் இருந்தும் கிடைத்த உணவுப்பொருட்களின் கணக்கு தனி.

இது எவ்வளவு பெரிய வேறுபாடு? தங்களுடைய உணவுத் தேவைக்காகவும், விவசாயத் தேவைகளுக்காகவும் பிற நாடுகளைச் சார்ந்திருந்த கியூப மக்கள், சில ஆண்டுகளில் தற்சார்பு உணவு உற்பத்தியைச் சாத்தியமாக்கினார்கள். விவசாயத்திற்காக நாட்டிற்கு வெளியிலிருந்து எந்த ரசாயனமோ, பூச்சிக்கொல்லியோ அவர்களுக்குத் தேவைப்படவில்லை.

‘சூழலியலுக்கு உங்கள் கடனைச் செலுத்துங்கள். மக்களை அல்ல, பசியை எதிர்த்துப் போராடுங்கள்’ என ஃபிடல் காஸ்ட்ரோ விடுத்த அழைப்பை ஏற்று கியூப மக்கள் தங்கள் தேவைகளை சுய முயற்சி மூலம் பூர்த்தி செய்து கொண்டார்கள்.

உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு தனிமனிதனின் காய்கறித் தேவையை அறிவிக்கிறது. அதன்படி, ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 300 கிராம் காய்கறி தேவை. இந்த உலகக் கணக்கை கியூப மக்கள் மிஞ்சி விட்டார்கள். அவர்களுடைய அன்றாட காய்கறிப் பயன்பாடு, ஒரு தனிநபருக்கு 469 கிராம்.

நிலமும், விவசாயத்திற்கான சூழலும் குறைவாக இருந்த கியூபா மாதிரியான குட்டி நாடு ரசாயனங்களைப் பயன்படுத்துவதில் இருந்து விலகி தங்கள் மண்ணையும் விவசாயத்தையும் உணவுகளையும் மக்களையும் காத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு சிறிய நாடே (கியூபா) நமக்கெல்லாம் ஒரு நல்ல முன்னோடியாக இருக்கும் போது….. நாம் நினைத்தால்…. செயல் படுத்தினால்…நடக்காதா என்ன?

Acu K. rathakrisnanbhat