இயற்கைப் பிரசவங்கள் முறையான வழிகாட்டலுடன் பெருக வேண்டும்

Agriwiki.in- Learn Share Collaborate

ஹீலர் பாஸ்கர் விடுவிக்கப்பட வேண்டும்
இயற்கைப் பிரசவங்கள் முறையான வழிகாட்டலுடன் பெருக வேண்டும்!

ம.செந்தமிழன்

நண்பர்களே,
வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. எல்லாக் குழந்தைகளும் மருத்துவமனையில்தான் பிறக்க வேண்டும் என்ற கருத்து, மக்கள் மீது திணிக்கப்படக் கூடாது. அதேவேளை, வீட்டுப் பிரசவங்களில் நிகழும் தவறுகளைப் போகிறபோக்கில் கடந்து செல்வது மன்னிக்கவியலாத செயல். பேறுகாலம், பிரசவ நேரம், குழந்தை வளர்ப்பு ஆகிய மூன்று நிலைகளைப் பற்றியும் இந்தத் தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறான கல்விமுறை உருவாக்கப்பட வேண்டும். இக்கல்விமுறை, அலோபதி மருத்துவத்தின் கீழ் இல்லாமல், மரபு வழிப்பட்டதாக இருக்க வேண்டும். இதுவே என் கருத்து.

நவீன மருத்துவத்திற்கெதிராக விழிப்புணர்வை உருவாக்கி வரும், ஹீலர் பாஸ்கர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. அவரது எல்லாக் கொள்கைகளையும் நான் வழிமொழியவில்லை. எனக்கு மாற்றுக் கருத்துகள் பல உள்ளன. அதைப் பற்றிப் பொதுவெளியில் பேசியதும், எழுதியதும் இல்லை. இனியும் அவ்வாறு செய்யமாட்டேன். ஏனெனில், எவருடைய தனித்தன்மையையும் கேலி செய்யவோ, கேள்விக்குள்ளாக்கவோ கூடாது என்பது நான் கடைபிடிக்கும் கொள்கை.

வீட்டுப் பிரசவம் குறித்த அவரது கொள்கைகளிலும் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. ஆனால், அவரைக் கைது செய்யும் நடவடிக்கையைத் துளியும் ஒப்புக்கொள்ள இயலாது.

வீட்டுப் பிரசவம் குறித்த பயிற்சி நடத்துவதாக அவர் அறிவித்திருந்தார். இதை ஒட்டி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்படி இந்த வழக்கினை எதிர்கொண்டு, மீண்டு வர முடியும்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்ச் சமூகத்தின் பொதுமனம் மாற்றம் பெற்றுள்ளது. மரபுகளை நோக்கிய சிந்தனை வெகுவாக வளர்ந்துள்ளது. இயற்கை வாழ்வியலை மக்கள் விரும்புகிறார்கள். ஏறுதழுவல் போராட்டத்தின்போது கோடிக்கணக்கானோர் ஆதரவளித்தது, இம்மாற்றத்தின் வெளிப்பாடுதான். நவீன வாழ்க்கை முறையின் குரூரத்தைச் சகிக்கவியலாமல் நிகழும் மாற்றம் இது.

சமூகத்தின் மிகச் சிறுபான்மையினராக உள்ள நவீனப் பகுத்தறிவாளர்களும் நாத்திகர்களும், இம்மாற்றத்தைக் கண்டு சினம் கொள்கின்றனர்.

அலோபதி மருத்துவமனைகளைத் தங்கள் ஆலயமாகக் கருதுவது பகுத்தறிவாளர்களின் குணம். உலகெங்கும் அலோபதி மருத்துவத்துறையின் சீர்கேடுகள் அம்பலமாகின்றன. முறையான தரவுகளோடும், சான்றுகளோடும் அலோபதியை அம்பலப்படுத்துபவர்களில் பெரும்பகுதியினர் நன்கு கற்றறிந்த அலோபதி மருத்துவர்கள்தான்.

‘சர்க்கரை ஒரு நோயல்ல, பற்றாக்குறை. வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கம் வழியாகவே இதைச் சீராக்கலாம்’ என்ற கருத்தினை பிரிட்டன் சுகாதார அமைப்பு, உலக சுகாதாரம் அமைப்பு, அமெரிக்க சுகாதார அமைப்பு ஆகியன வெளிப்படையாக அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில், எந்த மருத்துவமனையும் இந்தக் கருத்தினை வெளிப்படுத்துவதில்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழக சுகாதாரத் துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. ‘காய்ச்சலுடன் வரும் மக்களுக்கு உடனடியாக ஆண்டி பயாடிக் மருந்துகளை அளிக்காதீர்கள்’ என்பது அவ்வறிக்கையின் சாரம். இந்த மருந்துகள் உருவாக்கும் தீமைகள் கட்டுப்படுத்த முடியாதவை என்பதால் இவ்வாறான அறிக்கை வெளியிடப்பட்டது.

அலோபதி மருத்துவமுறையின் சிக்கல்களிலிருந்து தப்புவதற்காகத்தான், ஓகக் கலையை மக்கள் நாடிச் செல்கின்றனர். இந்திய அரசு கொள்கை அளவில் ஓகத்தை நோய்த் தடுப்பிற்கும், நோய் எதிர்ப்பிற்குமான வழிமுறையாக அறிவித்துள்ளது. இவை எல்லாம் எதைக் காட்டி நிற்கின்றன? நவீன மருத்துவத் துறையினால், சமூகத்தில் உருவாகும் சிக்கல்களைக் களைவதற்கான வழிமுறைகள் தேவை என்பதைத்தானே!

இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளின்படி, ‘ஒவ்வொரு குடிமகனுக்கும் / குடிமகளுக்கும் மரபுவழிப்பட்ட வாழ்வியலைக் கடைபிடிக்கவும், தமக்குத் தேவையான மருத்துவ வழிகளைத் தேர்ந்தெடுக்கவும் உரிமை உண்டு’.

‘எல்லோரும் அலோபதி மருத்துவமுறையில்தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்’ என வாதிடுவது அரசமைப்புச் சட்டத்திற்கே எதிரானது.

பகுத்தறிவுவாதிகளுக்கும் வேறு சிலருக்கும் தேவை என்றால், அவர்கள் மருத்துவமனைக்குச் செல்லட்டும். அவர்களை எவரும் தடுக்கப் போவதில்லை. வீட்டுப் பிரசவத்தைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள், கட்டாயப்படுத்தப்பட்டால் அது குற்றம். அவர்களே விரும்பி அவ்வழியைத் தேர்ந்தெடுத்தால், அதில் என்ன குற்றம் இருக்க முடியும்?

அரசு மருத்துவமனைகளில், மரபுவழி பிரசவத்திற்கான பயிற்றுனர்கள் வேண்டும். மருந்தில்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ளும் வழிவகைகளை அவர்கள் மக்களுக்குக் கற்றுத்தர வேண்டும். இதுதான் தீர்வாக அமையும்.

‘எனக்கு எந்த மருந்தும் வேண்டாம். அறுவை சிகிச்சை வேண்டாம்’ என ஒரு பெண் விரும்பினால், அது குற்றமா? மூடநம்பிக்கையா?

‘எந்த மருந்தும் இல்லாமல் நான் வாழ்வேன். குழந்தை பெற்றுக்கொள்வேன்’ என ஒரு பெண் சுயமாக முடிவெடுத்தால் அதுதான் உண்மையான விடுதலை. அவ்வாறு விடுதலை பெற்ற பெண்கள் இப்போது அதிகரிக்கிறார்கள். அவர்களுடைய இந்த விருப்பம் நிறைவேறுவதற்கான சூழல், அரசு மருத்துவமனைகளில் இல்லை. அங்கு அலோபதி மருந்துகள் மட்டும்தான் ஒரே தீர்வாக முன்வைக்கப்படுகின்றன. ஆகவே, சரி செய்யவேண்டியது அரசு மருத்துவத்துறையைத்தானே தவிர, பெண்களின் மனநிலையை அல்ல.

சிசேரியன் பிரசவத்திற்குப் பிந்தைய பெண்களின் வாழ்க்கை, வலிமிகுந்ததாக இருக்கிறது. சிசேரியனால் எந்தத் தீய விளைவும் இல்லை என அலோபதி மருத்துவமுறையும் கூறவில்லை. ‘எல்லா விளைவுகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்’ என கையொப்பம் வாங்கிவிட்டுத்தான் அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.

குறிப்பிட்ட ஜாதக அமைப்பில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக, நாள் நட்சத்திரம் பார்த்து சிசேரியன் செய்யும் மருத்துவர்கள் இங்கு இருக்கிறார்கள் என்பதை, எந்தப் பகுத்தறிவாளரும் அறிந்ததில்லையோ! பேருந்துகளின் பின்புறம், ‘2 இலட்சம் ரூபாய் பிரசவகால பேக்கேஜ் (package)’ என்று விளம்பரம் செய்யும் மருத்துவமனைகளைப் பற்றிப் பேசுவோர் யார்?

’மந்திரமாவது நீறு’ என்று தேவாரம் பாடி நோய் தீர்க்கும் முறை, இந்த நாட்டில் இன்னும் உள்ளது. இதை மூடநம்பிக்கை என்று தூற்றுவோரைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. பகுத்தறிவாளர்களிடம் சான்றிதழ் பெறுவதல்ல, வாழ்க்கையின் நோக்கம். அற்புத சுகமளிக்கும் கூட்டங்களில் பங்கேற்று, இறந்துபோனோர் பட்டியலை ஆய்வு செய்த வரலாறு உண்டா? இனியாவது செய்வார்களா? ஒருகாலத்திலும் அந்த நேர்மையும் துணிவும் அவர்களுக்கு வராது. ஏனெனில், பகுத்தறிவு என்றால், தமிழ் மரபுகளைக் கேலி செய்வது என்ற தெளிவில் இருக்கிறார்கள் அவர்கள்.

வீட்டுப் பிரசவம், இயற்கை வாழ்வியல், மரபு வாழ்வியல் ஆகிய சிந்தனைகளை எந்த நாத்திகவாதமும் அசைக்க முடியாது.

இது மரபுகளுக்குத் திரும்பும் காலம். அரசு இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அலோபதியின் கொடுமைகளைக் கட்டுப்படுத்தாமல் விட்டால், வீட்டுப் பிரசவத்தின்போது நிகழும் மரணங்களும் தொடர் கதையாகிவிடும். அலோபதி மீதான அச்சமும் அருவெறுப்பும்தான் மக்களை பீதியடையச் செய்கின்றன. இதன் விளைவாகத்தான், முறையான வழிகாட்டுதல் இல்லாமல், பிரசவ மரணங்கள் நிகழ்கின்றன.

வீட்டுப் பிரசவம் குறித்துப் பேசுவோர், எழுதுவோரை எல்லாம் சிறையில் அடைக்கத் துடிக்கும் பகுத்தறிவாளர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒருபுறம் ’இந்த அரசாங்கமே மோசமானது. இது பொம்மை அரசாங்கம்’ எனக் கேலி செய்கிறார்கள். மறுபக்கம், ‘மரபுகளைப் பற்றிப் பேசுவோரை எல்லாம் சிறையிலடைக்க வேண்டும்’ என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறார்கள்.

இந்த நிலத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த நிலத்தின் மரபுகளையும், வாழ்வியலையும், வழிபாட்டு முறைகளையும் இறுகப் பற்றிக்கொள்ளும் உரிமை உண்டு.

இறை, இயற்கை, மரபு ஆகிய சிந்தனைகளின் ஆயுள், நாத்திகம் எனும் பச்சிளம் குழந்தையைக் காட்டிலும் பல்லாயிரம் ஆண்டு தொன்மை மிக்கது.

ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளது, ஒரு தனி மனிதருக்கு எதிரான நடவடிக்கை அல்ல. அலோபதி, நவீனம், பெருநிறுவனங்கள், பகுத்தறிவுவாதம் ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்படுவோருக்கான எச்சரிக்கை. தமிழக அரசுக்கு இந்த உள்நோக்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால், அவர் கைதினைக் கொண்டாடுவோருக்கு இவைதான் உள்நோக்கங்கள்.

மீண்டும் கூறுகிறேன். இயற்கைப் பிரசவம் நம் உரிமை. அதைப் பற்றிய முறையான கல்வியை வழிகாட்டலை வழங்க வேண்டியது அரசின் கடமை. வீட்டுப் பிரசவங்களில் நிகழும் ஏராளமான தவறுகளை நான் தொடர்ந்து கண்டித்து வருகிறேன். முறையான வழிகாட்டல் இல்லாமல் வீட்டில் பிரசவம் பார்க்க நினைத்த பலரை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளேன்.

இயற்கைப் பிரசவங்களை அரசு முறைப்படுத்த வேண்டும். அலோபதி எனும் ஒற்றை முறையை நோக்கி எல்லா மனிதர்களையும் விரட்டுவது, அறமற்ற செயல். அரசுக்கு அறமே காவல்.

எனது இந்தப் பதிவிற்கு எதிராகவும் அவர்கள் இழிவாக, கண்ணியமற்றவகையில் செயலாற்றுவார்கள். மரபுவழிகளில் பிடிப்புகொண்டோர் அவர்களிடம் விவாதம் செய்து நேரத்தை விரயமாக்காதிருங்கள். நமது கருத்துகளை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். நமது நியாயங்களை அரசுக்கு எடுத்துச் செல்லுங்கள்.

உண்மையில் நமது எண்ணிக்கை மிகவும் பெரிது. நமக்கெதிராக வசைபாடுவோர் மிகச் சிறுபான்மையினர். அவர்களுக்கு ஊடகங்களைக் கையாளும் கலை தெரிகிறது. அவ்வளவுதான். நமது எந்தக் கேள்விக்கும் அவர்கள் பதில் அளிக்க மாட்டார்கள். எந்த தனியார் மருத்துவமனைக்கு எதிராகவும் பரப்புரை செய்ய மாட்டார்கள். எந்த அற்புதச் சுகமளிக்கும் கூட்டத்திற்கும் சென்று கேள்விகேட்க மாட்டார்கள். பகுத்தறிவின் பலவீனங்கள் இவை.

நாம் மரபுகளின் செழுமையில் வாழ்கிறோம். தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், வேர்களிலிருந்து வலிமை பெறவும் நம்மால் மட்டுமே முடியும்.

ஹீலர் பாஸ்கர் கைதினை ஆதரிப்பவர்களிடம் ஒரு நொடியைக்கூட வீணடிக்காதீர்கள். அவர்களது சொற்களிலிருந்து பகுத்தறிவின் கண்ணியக்குறைபாட்டினை நீங்கள் கண்டுகொள்ளலாம். ஒரே ஒரு விவாதத்தைக்கூட கண்ணியமாக நடத்த முடியாதவர்கள் அவர்கள். நீங்கள் இந்தச் சகதிக்குள் இறங்காதீர்கள்.

ஹீலர் பாஸ்கர் விடுவிக்கப்பட வேண்டும்.
இயற்கைப் பிரசவங்கள் முறையான வழிகாட்டலுடன் பெருக வேண்டும்.

இந்த இரண்டு செய்திகளை மட்டும் இயன்றவரை எடுத்துச் செல்லுங்கள்.