இயற்கை வேளாண்மைக்கு எது தடை?

இயற்கை வேளாண்மைக்கு எது தடை
Agriwiki.in- Learn Share Collaborate
இயற்கை வேளாண்மைக்கு எது தடை?

by: Subash Krishnasamy

இயற்கை வேளாண்மைக்கு எது தடை : பசுமைப் புரட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்ட வேதிப் பொருட்கள் சார்ந்த விவசாய முறைகளின் தீங்குகள் உணரப்பட்டு இயற்கை விவசாயத்தின்பால் நாட்டம் அதிகரித்து வருகிறது.

ஆனாலும் உடனே மாற்றிக்கொள்ள முடியவில்லை. காரணங்கள் என்ன?

அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டதுபோல் இயற்கை சார்ந்த பழைய பாரம்பரிய விவசாய முறைகளைக் கைவிட்டு விட்டோம்;.

இப்போது அதை எப்படிப் புதுப்பிப்பது என்று தெரியாமல் விழித்து விழிபிதுங்கி நிற்கிறோம்.

ஆதாவது ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த உலகில் இல்லாத ஒன்றை நாம் புதிதாக உருவாக்கிவிட முடியாது. அதேசமயம் இருப்பது எதையும் இல்லாமல் செய்யவும் முடியாது! இன்னும் சொல்லப் போனால் இவ்வுலகில் இருந்து ஒரு அணுவைக்கூடக் கூட்டக் குறைக்க மனிதனால் முடியாது.

ஒன்றை இன்னொன்றாக மாற்றி நாமும் அப்படியே மாறுவதன் மூலம் வாழ்ந்துகொண்டு உள்ளளோம். அவ்வளவே!

ஆனால் அந்த மாற்றத்தை என்னமாதிரிச் செய்கிறோம் என்பதைப் பொருத்தே இந்த உலகவாழ்வின் சாதக பாதக அம்சங்கள் உருவாகின்றன.

அப்படிப் பார்த்தால் மனித நாகரிகம் தோன்றிய நாள் முதலாக நாம் தோன்றி வளர்ந்து வாழ்ந்து வரும் இ;நதப் பூமிப் பந்தை இயற்கையை உயிரின வாழ்வுக்குத் தகுதியற்றதாக ஆக்குவதன் மூலம்தான் நமது சாதனைகளை நிகழ்த்தி வருகிறோம்.

அதில் ஒன்றுதான் விவசாயம் ஆகும்.

விவசாயம் செய்வதற்காகக் காடுகளை அழித்தோம். எண்ணற்ற தாவரங்களை அழித்தோம். உயிரினங்களை அழித்தோம். புல் பூண்டுகூட நாம் அனுமதித்தால்தான் வாழமுடியும் என்ற சூழலை உருவாக்கினோம்.

காடுகளை அழித்து அந்த இடங்களையெல்லாம் விவசாய நிலங்களாகவும் மேய்ச்சல் நிலங்களாகவும் வாழும் இடங்களாகவும் மாற்றினோம்.

வளமான மண்ணாக இருந்ததாலும் கால்நடைகள் சார்ந்த விவசாய முறைகளாக இருந்ததாலும் இயற்கை தன்னை எவ்வளவு சேதப்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் புத்துயிர் பெற்று நமக்கு வாழ்வளித்தது.

ஆனால் மக்கள் பெருக்கம் அதிகரித்ததாலும் தேவைகள் அதிகரித்ததாலும் காடுகள் மேலும் மேலும் அழிக்கப்பட்டன. வாழும் இடங்களும் விவசாயமல்லாத தொழில்களும் புல்பூண்டுகூட முளைக்கமுடியாத எந்த உயிரினமும் வாழத் தகுதி இல்லாத பூமிப்பரப்பும் விரிவடைந்து கொண்டே போவதை இன்றும் காண்கிறோம்.

இந்த நிலையி;ல் பெருகி வரும் மக்கள் தேவைக் கேற்ப மற்றவற்றைப் போலவே உணவுத் தேவையும் மற்ற விளைபொருள் தேவையும் அதிகரிக்கிறது.

அதனால் மிகை உற்பத்திக்காகத் திட்டமிடப்படுகிறது.

அதன்காரணமாக விவசாயத்தில் இயந்திரங்கள் புகுத்தப்படுகின்றன. ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் பயன்பாட்டுக்கு வருகின்றன. அவை பயன்படுத்தப்படுவதற்கு ஏற்ப வீரிய ஒட்டுரகங்கள் அனைத்துப்பயிர்களிலும் புகுத்தப்படுகின்றன.

கால்நடைகளுக்கு மேய்ச்சலுக்காக விடப்பட்ட நிலங்கள் எல்லாம் விளைநிலங்களாக மாற்றப்படுகின்றன.

கால்நடைகளின் கழிவுகள் மூலம் வளமடைந்து வந்த நிலங்கள் ரசாயன உரங்களைமட்டும் நம்பி விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளபட்டு விட்டன.

துவக்கத்தில் ஏற்கனவே வளமிக்கதாக இருந்த நிலங்கள் ரசாயன உரப் பயன்பாட்டின் மூலம் தாற்காலிகமாக கூடுதல் விளைச்சலைக் கொடுத்துவிட்டு நிலத்தின் இயற்கை வளம் குறைந்தபோது எடுபடாமல் போனதுடன் விவசாயிகளுக்குப் பெருத்த நஷடத்தை உண்டுபண்ணி தற்கொலைகள் நிகழும் நிலைக்கு வந்தது.

கால்நடைப்பயன்பாடு என்பது வெறும் பால் உற்பத்திக்கு மட்டுமே என்பது போலச் சுருங்கிவிட்டது.

இந்த நிலையில் இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு இப்போது மேலோங்கினாலும் அதைச் செயல்படுத்த முடியாத அளவு எதிர் மறை அம்சங்கள் உள்ளன.

இயற்கை வேளாண்மை சிறப்பாக நடக்கவேண்டுமானால் கால்நடைகள் பயன்பாட்டுக்கு வரவேண்டும். அல்லது அதற்கு ஈடாக பால்பண்ணைத் தொழில் விரிவடைய வேண்டும்.

எப்படி எடுத்துக்கொண்டாலும் விவசாய நிலங்களுக்கு ஈடாக மேய்ச்சல் நிலங்களும் அதில் மேய்வதன் மூலம் பயன்தரக்கூடிய கால் நடைகளும் இருக்கவேண்டும். அப்போதுதான் பயிர்நிலங்களுக்கு வெளியில் இருந்து பயிர்நிலங்களுக்குத் தேவையான இயற்கை உரங்களைப் பெறமுடியும்.

அதுவல்லாமல் அந்தந்த நிலங்களில் விளையும் விளைபொருட்களாகவும் அவற்றின் சக்கைகளாகவும் வெளியேறும் சத்துக்களை மீட்டு நிலத்தை வளப்படுத்த வேறு வழி கிடையாது.

எந்த வகையான இயற்கை உரங்களைப் பெறவேண்டுமானாலும் அவை நேரடியாகவோ மறைமுகமாகவோ பிற நிலப்பகுதிகளின் பயன்பாட்டைச் சார்ந்துதான் இருக்கமுடியும்.

அப்படியானால் என்னபொருள்?

விவசாய நிலத்தின் ஒரு பகுதி விளைநிலமாகவும் மறுபகுதி மேய்ச்சல் நிலமாகவும் இருக்கவேண்டும்.

முன்னர் அப்படித்தான் இருந்தன. ஆதாவது கால்நடைகள் வேறு மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்துவிட்டுவந்து விளைநிலங்களுக்கான உரத்தைக் கொடுத்தன. உழைக்கவும் செய்தன.

இப்போது மேய்ச்சல் நிலங்கள் இல்லாத நிலையில் அந்தந்த நிலங்களிலேயே கால்நடைத் தீவனத்தையும் உற்பத்திசெய்து கால்நடைகளையும் வளர்த்து நிலத்தையும் மேம்படுத்த வேண்டும்.

அறுவடைக்குப் பின் கால்நடைகளுக்குப் பயன்படாத காய்கறிச்செடிக்; கழிவுகள் அப்படியே நிலத்தில் விடப்பட்டால் இற்று எருவாகும் ஆனால் அதைக்கூட இற்று மண்ணுக்கு எருவாகும் வரை இருந்தால் அடுத்த பயிர் செய்யமுடியாது என்பதால் தீ வைத்துக் கொளுத்துவதுதான் நடக்கிறது.

பெரும்பாலான தோப்புகளிலும் தென்னை மட்டைகள் தீவைத்துக் கொளுத்தப் படுகின்றன. அல்லது எரிப்பவர்களுக்கு விற்கப்படுகின்றன.

ஆதாவது ஒரு பயிர்நிலத்திலிருந்து நம்மால் உறுஞ்சப்படும் சத்துக்களுக்குக் கூடுதலாக அல்லது இணையாகவாவது வெளியில் இருந்து கொடுக்கப்படவேண்டும். ஆனால் அப்படிக் கொடுக்காதது மட்டுமல்ல நிலத்துக்கு அவசியமானவை கொழுத்தப்படுவதும் நடக்கிறது.

இதில் ஒரு கொடுமையான விஷயம் என்வென்றால் இன்று கால்நடைகளுக்கான தீவனப் புல் வகைகள் அனைத்தும் ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னலும் வேதி உரங்கள் இடப்பட்டுத்தான் வளர்க்கப்படுகின்றன. வேதி உரங்கள் இடப்படாத தீவனப்புல் வகைகள்தான் கால்நடைகளுக்குப் போடவேண்டும் என்றால் இன்று நமது நாட்டில் கால்நடைகளே அதிலும் கரவைமாடுகள் அல்லது வேலை மாடுகள் வைத்திருக்கமுடியாது என்பதுதான் உண்மை!

இந்த நிலையில் இயற்கைவிவசாயம் செய்யத் தேவையான நில வளத்தைப் பெறுவது எப்படி என்பதுதான் நம்முன் உள்ள பிரச்சினை!

சிலர் மட்டும் செய்யும்போது அவரவர் முயற்சிக்கு ஏற்ப ஏதாவது ஒரு வகையில் சாணக் கழிவுகளோ பிற கழிவுகளோ கொண்டுவந்து தங்கள் நிலத்தில் இடமுடியும். ஆனால் அதுவே அனைவரும் பின்பற்றும் வேளாண்முறை ஆனால் நிலத்தை வளப்படுத்துவது எப்படி என்பதுதான் பிரச்சினை!

விவசாய நிலங்களில் ஒரு கணிசமான பகுதி நிலங்கள் மேய்ச்சல் நிலங்களாக பயன்படுத்தப்படவேண்டும். அதற்கு இணக்கமான திட்டங்;கள் வகுக்கப்பட்டு அரசுகள் விவசாயிகளுக்கு உதவவேண்டும். ஒரு சராசரிக் குடிமகனின் வருவாயில் கணிசமான பகுதியை உணவுப்பொருட்களுக்கு செலவிடப்படும்படியான ஒரு பொருளாதார நிலை உருவாக்கவேண்டும். இன்றைய காலநிலைமைகளுக்கேற்ப விவசாய வேலைகளுக்குக் கூலிகொடுக்க கட்டுபடியாகும் விதத்தில் விவசாய வருமானம் உயரவேண்டும்.

அப்படிஏதும் நடக்காமல் இயற்கை விவசாயம் மட்டுமல்ல எந்த விவசாயமும் செய்வது கடினமே!

– Subash Krishnasamy

http://www.drumsoftruth.com/2012/07/31.html?m=1