ஊர்திரும்புவோம்

Agriwiki.in- Learn Share Collaborate

இந்த பதிவை படிக்க வேண்டாம். இது உங்கள் தொழிலை கெடுப்பதற்காக எழுதியவை…

#மரபுத்_தொழில்கள்
#கிராம_பொருளாதாரம்
#தற்சார்பு_தன்னிறைவு

#ஊர்திரும்புவோம்
நமக்கென்று மரபு உண்டு, அதற்கு தனி திமிர் உண்டு, அதுவே நமக்கான வாழ்வு, ஊர் திரும்புவோம், மரபுத்தொழிலை கையிலெடுப்போம்…

#ஆதாயம்_யாருக்கு
நாம் அன்றாட பயன்படுத்தும் அனைத்துவிதமான பொருள்களும் ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனைத்தை சார்ந்தே உள்ளது, நமது பணம் அவர்களுக்கு மட்டுமே செல்கிறது. அதுவே அந்த பொருட்களை நேரடியாக உற்பத்தி செய்யும் சமூகத்திடம் வாங்கினால் அவர்களுக்கு நேரடியாக பயன்பெறும்.

#மீட்பு
முன்பு இருந்த மரபுத்தொழில்கள் இன்று இல்லை, எல்லாமே அழிவின் விளிம்பில் உள்ளது. அதை நாம் தான் மீட்டெடுக்க வேண்டும். அதற்கான முயற்சியை குழுவாக இணைந்து முன்னெடுக்க வேண்டும்.

#சூழல்_நலம்
இன்றைய சூழலில் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களும் அழியா தன்மையுள்ள, அதீத இயற்கை வளங்களை சுரண்டும் பொருளாகவும், பல வகையான சூழல் சீர்கேடு மாற்றத்தை உருவாக்கும் பொருள்களே. அதை விடுத்து எளிதில் அழியக்கூடிய, எந்த பாதிப்பும் இல்லாத பொருள்களுக்கு, நாம் மாற வேண்டும் அதன் உற்பத்தியிலும் இறங்க வேண்டும்.

#சமூக_எழுச்சி
இதை தனிநபர் செய்ய முடியாது ஓரு குழுவாக சமூகமாக உருவாக்க வேண்டும். நிறைய மரபு தொழில்கள் உள்ளன…
உங்களுக்கு ஏதேனும் சொந்தமாக தொழில் தொடங்க ஆர்வம் இருந்தால் அதை மரபுச் சார்ந்த தொழிலாக முயற்சியுங்கள்.

#பொருள்கள்_சாதனங்கள்
வீட்டுத் தேவைக்கான பொருள்களை, சாதனங்களை பனை, தென்னை, மூங்கில், வாழை, பிரம்பு போன்ற மரங்களில் இருந்து செய்யலாம்.
எ.கா: மூங்கில் கொண்டு 1000 பொருட்கள் செய்யமுடியும்.

#கட்டுமானம்
நவீன கட்டுமானம் பயன்பாட்டால் அதீத இயற்கை வள சுரண்டல் தான் உள்ளது. ஆதலால் மரபு கட்டுமானம் பயின்று மற்றவர்களுக்கு உறுதுணையாக இருக்கலாம்.
எ.கா: சிமென்ட், கம்பி, மணல் இல்லாமல் இயற்கையாக கட்டுமானம் செய்யலாம்.

#கைத்தறி_ஆடைகள்_இயற்கை_வண்ணம்பூசுதல்
துணி சம்மந்தமான தொழில் தொடங்க கைதறி ஆடைகள் நெசவு செய்வது அதற்கு இயற்கையான வண்ணம் பூசும் முறையை பயின்று அதை ஆரம்பிக்கலாம். இன்றைய துணிகள் அனைத்தும் நெகிழியால் ஆன இழைகளும், கச்சாய் எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் கிடைக்கும் பொருள்களை கொண்டு உற்பத்தியானவை.

#மரபுக்கல்வி
நவீன பள்ளியால் எந்த பயனும் இல்லை. பள்ளி கல்வி சார்ந்த தொழில் தொடங்க மரபுப்பள்ளியை தொடங்கலாம். அதில் மரபுச் சார்ந்த விளையாட்டு, கலைகள், கல்வியை போதிக்கலாம்.
எ.கா: தாய்தமிழ் பள்ளிகள், குக்கூ, பானு வீட்டு கல்வி முறை…

#மருந்துவம்
மாற்று மருத்துவத்தால் இருக்கும் அதீத பிரச்சனைகள் அறிந்தவையே. எளிமையான மரபு மருத்துவம், மருந்தில்லா மருத்துவம் மற்றும் உணவே மருந்தை கற்று பயனளிக்கலாம். அதனால் மற்றவர்களுக்கும் மருத்துவம் பார்க்கலாம்.

#வேளாண்மை
உணவு நஞ்சாகி அதனால் ஏனைய புது நோய்களும் அன்றாட பெருகி கொண்டு இருக்கிறது. ஆதலால் இயற்கை வழி மரபு வழி வேளாண் முறையை செயல்படுத்தி உணவு பொருட்களை உற்பத்தி செய்து நமக்கும் நம் சுற்றத்திற்கும் பயன்படுத்தலாம்.
எ.கா: கீரை, காய்கறிகள், தானியம், பருப்பு, அரிசி விற்பனை செய்யலாம்.

#கால்நடைகள்
சூழல் சார்ந்த கால் நடைகள் வளர்த்து அதன் மூலம் நமது தேவை மற்றும் சுற்றத்தார் தேவையை பூர்த்தி செய்யலாம்.
எ.கா: கோழி முட்டை, பால், இறைச்சி

#சிறுதொழில்_கைதொழில்
இளவம்பஞ்சி தலையணை மற்றும் மெத்தை, கோரைப்புல் படுக்கை, பூசை பொருட்கள், அழகு சாதன பொருட்கள், அலங்கார பொருட்கள், துணிபை என அது சார்ந்த பயிற்சி பெற்று அதன் விற்பனை மற்றும் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.

#மண்பாண்டம்
சமையல் பொருட்கள் மற்றும் அது சார்ந்த வீட்டு உபயோக பொருட்களை மண்பாண்ட பொருட்களாக பயன்படுத்தலாம். அது சார்ந்த தொழிலை முன்னெடுக்கலாம்.

#உணவகம்
மரபு சுவை இன்று வெகுவாக குறைந்து காணாமல் போய் கொண்டிருக்கிறது. ஆதலால் பாரம்பரிய உணவு வகைகளை மீட்டு அதை மற்றவர்களுக்கும் வழங்க வேண்டும். உணவகம், இனிப்பு வகை, காரவகை, பால் சார்ந்த பொருட்கள் என இயற்கையும் மரபும் மாறாமல் கற்றுக்கொண்டு அதை நடைமுறை படுத்தலாம்.

#விடுதலை
பன்னாட்டு நிறுவனங்கள், நவீன உலகின் கட்டமைப்பு என அதில் மாட்டிக்கொண்டு துயரப்படாமல், உங்களுக்கான விருப்பமான செயலை மரபுத்தொழிலை கற்றுக்கொண்டு அது சார்ந்த தேவையை பூர்த்தி செய்யுங்கள். உங்களுக்கான பொருளாதாரத்தை உங்கள் கிராமத்தில் இருந்து தன்னிறைவு அடையுங்கள்.

#தொடங்குவோம்
எங்கே தொடங்குவது என்பது கேள்வியாக இருக்கலாம். இன்றைக்கும் இந்த தொழில்கள் எங்கோ உயிர்புடன் ஆனால் அழிவின் விளிம்பில் உள்ளது. சிலவற்றை உங்கள் பகுதியிலும் இருக்கலாம். அவர்களை சந்தித்து அவர்களிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மரபுத்தொழிலுக்கு உயிர் கொடுப்போம் அதற்கான முயற்சியை முன்னெடுப்போம். இயற்கை சிதைவது அழிவது நம்மாலும்தான் அதற்கான மாற்றத்தை அர்தமுள்ளதாக பயனுள்ளதாக நாமே நம்மிடமிருந்து தொடங்க வேண்டும். தொடங்குவோம் வலிமையான சமூகத்தையும் வாழ்வியலையும் உருவாக்குவோம். நமது சந்ததியினர் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்துவோம். அனைத்து தொழிலையும் மரபு கொண்டு கட்டமைப்போம். உங்கள் அனைவரையும் கெடுத்து நல்வழிப்படுத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது.

மகிழ்வோடு இருங்கள்!!!

#சில_காணொளிகள்…

1. மரபுத் தொழில்கள் தேர்வு செய்தல்…

2.பானு வீட்டு கல்வி முறை: https://www.youtube.com/playlist?list=PLE78bTXFrTg5oYz5dYubEwk3NlHRbG_r0
3.மண்பானை செய்தல்

4.பனை பொருள்…

5.மூங்கில் பொருட்கள்…

#மேலும்_தகவல்களுக்கு
என்னுடைய அனைத்து கட்டுரைகளையும் இந்த வலைதளத்தில் படிக்கலாம். www.agriculturalist.org

அதில் சில முக்கிய தலைப்புகள்…

1) 10,000 சதுரடி தற்சார்பு வாழ்க்கை

2) ஜீரோ பட்ஜெட் மாடித்தோட்டம்

3) மேட்டுப்பாத்தி அமைக்கும் முறை

4) தமிழர் வேளாண்மை முறை

5) மரபு கட்டுமானம்

6) தேங்காய் இயற்கை உணவு

7) மியாவாக்கி காடு வளர்க்கும் முறை

8) மழையீர்ப்பு மையம்

9) தற்சார்பு கிராமம்

10) மறைநீர் பற்றிய முழு தகவல்

11) நாட்டு மாடும் தற்சார்பும்…

தொகுப்பு:
#மு_சந்தோஃச்_குமார.