கத்திரி… காய்ப்புழுக்களைக் கண்டு கவலையே வேண்டாம்

கத்திரிக்காய்ச் சாகுபடி தொழில்நுட்பங்கள்
Agriwiki.in- Learn Share Collaborate

கத்திரி… காய்ப்புழுக்களைக் கண்டு கவலையே வேண்டாம்!

Table of Contents

கத்திரிக்காய்ச் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய ஒரு விளக்கமான உரை

 

கத்திரியை தாக்கும் முக்கிய பூச்சிகள்

  1. தண்டுத் துளைப்பான்
  2. புள்ளி வண்டு
  3. சாம்பல் கூண் வண்டு 
  4. பச்சை தத்துப்பூச்சி
  5. மாவுப்பூச்சி
  6. அசுவினி

கத்திரிக்காய்ச் சாகுபடியில் பூச்சி, நோய் மேலாண்மை :

“காய்கறிப் பயிர்களில் அதிக அளவில் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாவது கத்திரிச்செடிகள்தான். குறிப்பாக, புழுத்தாக்குதல் அதிகளவில் உள்ள பயிர் இது. தண்டு மற்றும் காய்களைத் துளைக்கும் புழுக்களால், அதிகளவில் சொத்தைக் காய்கள் உண்டாகும். இதில் ஒரே வகைப்புழுக்கள்தான் தண்டு மற்றும் காய்கள் இரண்டிலுமே சேதத்தை உண்டாக்குகின்றன. இவைதான் கத்திரிக்காய் விவசாயிகளின் வில்லன். இவற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சேதத்தைத் தவிர்க்க முடியாது.

தாய் அந்துப்பூச்சி முட்டை இடுவதை தடுப்பது எப்படி?

இயற்கை விவசாயத்தில் எப்போதுமே ‘வருமுன் காப்போம்’ என்பதுதான் சிறந்தது. கத்திரி நாற்றுகளை நடவு செய்த முதல் நாளிலிருந்து 20-ம் நாள் வரையான காலகட்டம் மிகவும் முக்கியமானது. விவசாயிகள் அதிக விழிப்புடன் இருக்கவேண்டிய நேரம் இது.

இக்காலத்தில் ஒவ்வொரு செடியிலும் இரண்டு மூன்று கிளைகள் விட்டிருக்கும். அவற்றில் முதன்முதலில் வெளியே வந்த கிளையின் தண்டு மற்ற கிளைகளைவிடச் சற்றுத் தடிமனாக இருக்கும். இந்தச் சமயத்தில்தான் தாய் அந்துப்பூச்சிகள் செடிகளைத் தேடிவரும்.

இந்த அந்துப்பூச்சிகள், தடிமனான தண்டிலிருந்து கிளை பிரியும் இடத்தில் முட்டை இடும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள்தான் தண்டைத்துளைத்து உள்ளே சென்று சேதத்தை உண்டாக்குகின்றன. சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக முட்டை இடுவதைத் தடுத்துவிட்டால் போதும். அதன் பிறகு கத்திரிக்காய்ச் சாகுபடியில் பெரிய சிக்கல் எதுவும் இருக்காது.

தண்டுத் துளைப்பான் புழுக்களின் வாழ்க்கை பருவம்

தாய் அந்துப்பூச்சி, ஒரு கணுவில் மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். இந்த முட்டைகள் அடுத்த ஐந்து நாள்களில் பொரியும். அப்போது முட்டையிலிருந்து வெளியே வரும் புழுக்கள், தண்டைத் துளைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிடும். புழுக்கள், பதினைந்து நாள்கள் வரை (புழுப்பருவம் முடியும் வரை) தண்டுக்குள் இருந்து சதைப்பகுதி முழுவதையும் உண்டு முடித்தவுடன்… தண்டு உடைந்து விழுந்துவிடும். உடைந்த பகுதியின் வழியாக வெளிவரும் புழுக்கள் மண்ணுக்கு வந்தவுடன் கூட்டுப்புழுப் பருவம் தொடங்கும். மண்ணில் ஏழு நாள்கள் கூட்டுப்புழு பருவத்தில் இருந்தபிறகு, அந்துப்பூச்சியாக மாறிவிடும்.

 

இந்தத் தண்டுத் துளைப்பான் புழுக்கள், தண்டுக்குள் போன பிறகு அவற்றை ஒன்றுமே செய்ய முடியாது. எந்த வகையான பூச்சிக்கொல்லிகளைத் தெளித்தாலும் பயன் இருக்காது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டும்தான் சிறந்த பலன் கொடுக்கும்

 

தண்டுத் துளைப்பான் புழுக்களுக்கான சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இந்தத் தண்டுத் துளைப்பான் புழுக்கள், தண்டுக்குள் போன பிறகு அவற்றை ஒன்றுமே செய்ய முடியாது. எந்த வகையான பூச்சிக்கொல்லிகளைத் தெளித்தாலும் பயன் இருக்காது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டும்தான் சிறந்த பலன் கொடுக்கும்.

நாற்று நடவு செய்த 15 முதல் 20 நாள்களில்தான் தாய் அந்துப்பூச்சிகள் வரத்துவங்கும். இதே தாய் அந்துப்பூச்சிகள், பூக்களில் முட்டையிட்டால், சொத்தைக்காய்தான் காய்க்கும். தாய் அந்துப்பூச்சிகள் முட்டையிட்டிருப்பதை உடனே அறிந்துகொள்ள முடியாது. 50-ம் நாளுக்குமேல், காய் வரும்போதுதான் தாக்குதல் ஏற்பட்டதை அறிந்துகொள்ள முடியும்.

நடவு செய்த 20-ம் நாள்… ஒரு லிட்டர் தண்ணீரில் மூன்று மில்லி வேப்பெண்ணெய் மருந்தைக் கலந்து தெளித்துவிட்டால், செடிகளைத் தேடி வரும் தாய் அந்துப்பூச்சிகள் ஓடிவிடும்.

தண்டு துளைப்பானுக்கு ரசாயனப் பூச்சிக்கொல்லிகளால் தீர்வே கிடையாது

ஒரு தாய் அந்துப்பூச்சி தனது வாழ்நாளில் 250 முட்டைகள் வரை இடும். கத்திரியில் ஏற்படும் சேதாரங்களில் 60 முதல் 70 சதவிகிதம் இந்தப் புழுக்களால் மட்டுமே ஏற்படுகிறது. இதற்கு ரசாயனப் பூச்சிக்கொல்லிகளால் தீர்வே கிடையாது. பல்வேறு பெயர்களில் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் கிடைத்தாலும், அவற்றால் செலவு அதிகரிக்குமே தவிர, ஒரு பயனும் கிடைக்காது என்பதுதான் உண்மை.

நாற்று நடவு செய்த 20-ம் நாளிலிருந்து மாதம் ஒருமுறை வேப்பெண்ணெய் மருந்தைக் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி வேப்பெண்ணெய் கலந்த கரைசல்) கடைசி அறுவடை வரை தெளித்து வருவதுதான் தண்டு மற்றும் காய்த் துளைப்பான் புழுக்களைத்தடுக்க ஒரேவழி.

அதேபோலப் பயிர்சுழற்சி முறையைக் கடைப்பிடிப்பதும் மிகவும் அவசியம். ஒருமுறை கத்திரி போட்டு அறுவடை முடிந்த வயலில், அடுத்த பயிராகக் கத்திரியை நடவு செய்யக்கூடாது. வேறு பயிரைத்தான் சாகுபடி செய்ய வேண்டும்.

காய்ப்புழுத் தாக்குதலைச் சமாளித்து வளரும் சிறப்புக் கத்திரி ரகங்கள்

தண்டு மற்றும் காய்ப்புழுத் தாக்குதலைச் சமாளித்து வளரும் இரண்டு சிறப்புக் கத்திரி ரகங்கள் உள்ளன. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள ‘பூசா பர்ப்பில்’ மற்றும் பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ‘பஞ்சாப் நீலம்’ ஆகிய கத்திரி ரகங்கள் தண்டு மற்றும் காய்ப்புழுத் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டவை. இவற்றைப் பயிரிட்டால் தண்டு மற்றும் காய்ப்புழுத் தாக்குதலைத் தவிர்க்கலாம்.

காய்புழுக்களுக்கு எதிர் உயிரி

‘டிரைக்கோ கிரம்மா பைலோனிஸ்’ எனும் எதிர் உயிரியின் மூலமும் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். ஒரு ஹெக்டேர் பரப்புக்குப் பத்து முதல் பதினைந்து லட்சம் என்ற எண்ணிக்கையில், இந்த எதிர் உயிரி அட்டையை ஆங்காங்கு வைக்கவேண்டும். ஓர் அட்டையிலேயே லட்சக்கணக்கான உயிரிகள் இருக்கும். இந்த எதிர் உயிரிகள், தாய் அந்துப்பூச்சிகள் இடும் முட்டைகளை உண்டுவிடும்.

நடவு செய்த 20-ம் நாளிலிருந்து அறுவடை முடியும் வரை, இந்த அட்டையை வைத்திருக்க வேண்டும். இந்த எதிர் உயிரிகள், ஊதியமில்லா ஊழியனாக இருந்து காய்ப்புழுக்களின் தாக்குதலிலிருந்து பயிர்களைக் காக்கும்.

அந்துப்பூச்சிக்கு இனக்கவர்ச்சி பொறி

ஒரு ஹெக்டேர் பரப்புக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்தும் அந்துப்பூச்சிகளை அழிக்கலாம். விளக்குப்பொறிகள் பயன்படுத்தும்போது மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே விளக்குகளை எரியவிடவேண்டும். இந்த நேரம்தான் அந்துப்பூச்சிகள் நடமாடும் நேரம். விடிய விடிய விளக்குகளை எரியவிட்டால், பல நன்மை செய்யும் பூச்சிகளும் பொறியில் சிக்கி இறந்துவிடும்.

புள்ளி வண்டு :

காய்ப்புழுக்களுக்கு அடுத்து கத்திரியைத் தாக்கக்கூடிய முக்கியமான பூச்சிகள் புள்ளி வண்டு மற்றும் சாம்பல் கூண்வண்டு ஆகியவைதான். புள்ளி வண்டு, இலையில் இருக்கக்கூடிய பச்சையம் முழுவதையும் சுரண்டிவிடும். அதனால், இலை சல்லடைபோல மாறிவிடும். செடியை லேசாக உலுக்கினால் இந்த வண்டுகள் கீழே உதிரும். அவற்றை மிதித்துக் கொன்றுவிடலாம். ஒரு ஏக்கருக்கு 12 கிலோ அடுப்புச் சாம்பலை மணலோடு கலந்து இலைகளில் தூவிவிட்டும், இந்த வண்டுகளை அழிக்கலாம். இலையில் உள்ள பச்சையத்தைப் புள்ளி வண்டுகள் சுரண்டி உண்ணும்போது, இலைகள்மீது படிந்துள்ள சாம்பலும் உள்ளே போகும். அப்போது சாம்பலில் உள்ள சிலிக்கான் எனும் பொருளால், வண்டுகளின் அரவைப் பல் நொறுங்கிப்போவதால், அவை இலையைச் சுரண்டுவதை நிறுத்திவிடும்.

சாம்பல் கூண் வண்டு :

சாம்பல் கூண் வண்டு, இலையின் விளிம்புப் பகுதியைக் கடித்து உண்ணும். கடைசி உழவுக்கு முன் வேப்பம் பிண்ணாக்கை ஒரு ஹெக்டேர் பரப்புக்கு 500 கிலோ தூவி உழவு செய்தாலே, இந்த வண்டுத் தாக்குதல் இருக்காது.

பச்சை தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி

மேலும், கத்திரியில், பச்சை தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி ஆகியவற்றின் தாக்குதலும் பரவலாக இருக்கும். 40 மில்லி மீன் அமினோ அமிலத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து, இவற்றைக் கட்டுப்படுத்தலாம். கத்திரியில் வரும் மாவுப்பூச்சி மிகவும் கொடூரமானது. இது மீன் அமினோ அமிலத்துக்குக் கட்டுப்படா விட்டால், ‘வெர்டிசீலியம் லக்கானி’ என்ற பூஞ்சணத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் எனக் கலந்து தெளிக்க வேண்டும்.

 

அசுவினி

அசுவினி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளின் நடமாட்டம் இருந்தால், இஞ்சி பூண்டு கரைசல் தெளிக்கலாம்.

ஒரு கிலோ பூண்டை ஒரு லிட்டர் மண்ணெண்ணெயில் 12 மணி நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ள வேண்டும். அதில் தலா அரைக்கிலோ அளவு பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியைத் தனித்தனியாக அரைத்து, பிறகு இரண்டையும் சேர்த்துக் கலக்க வேண்டும்.

இந்தக் கலவையை ஒரு காடாத்துணியில் போட்டு கட்டி, ஆறு லிட்டர் தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் இட வேண்டும். இக்கரைசல் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீரில் இறங்கும். இதுதான் இஞ்சி பூண்டு கரைசல்.

தாக்குதலின் தீவிரத்தைப் பொறுத்து 500 மில்லி முதல் ஒரு லிட்டர் வரை இக்கரைசலை எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். செடியில் கரைசல் ஒட்டுவதற்காகக் கொஞ்சம் காதிசோப் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கத்திரிக்காய் நடவு செய்யும் வயலைச் சுற்றி ஆமணக்கை நடவு செய்வது, ஆங்காங்கே பறவை தாங்கிகள் அமைப்பது, மஞ்சள் வண்ணப் பூக்கள் பூக்கும் செடிகளை நடவு செய்வது போன்றவை மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

நோய்கள் :

 

வாடல் நோய்

கத்திரியை வாடல் நோயும் அதிகளவில் தாக்கும். இந்நோய் தாக்கிய செடிகளின் இலைகள் பழுப்பு நிறமாக மாறிவிடும். இலையில் சில புள்ளிகள் தென்படும். தொடர்ந்து, தண்டிலிருந்து ஒரு திரவம் வடியும்.

நடவுக்கு முன்பாக சூடோமோனஸ், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றைத் தொழுவுரத்துடன் கலந்து மண்ணில்போட்டால், வாடல் நோய் வரவே வராது.

இந்த உயிர் உரங்களைச் சரியாகக் கொடுக்காமல் விட்டு, வாடல் நோய் தாக்கினால்… ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அளவு சூடோமோனஸ் (திரவ வடிவிலானது) என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

குளிர் காலத்தில் காலிஃபிளவர், முட்டைகோஸ் ஆகியவற்றைச் சாகுபடி செய்த பிறகு, அதே வயலில் அடுத்த பயிராகக் கத்திரிக்காய்ச் சாகுபடி செய்தால் வாடல் நோய் வராது.

கழுத்து அழுகல் நோய்

வயலில் தண்ணீர் அதிகமாக இருந்தால் கழுத்து அழுகல் நோய் வரும். போதுமான அளவுக்கு மட்டுமே பாசனம் செய்தால் இந்நோயைத் தவிர்த்துவிடலாம். இந்நோய் தாக்கினால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அளவு சூடோமோனஸ் (திரவ வடிவிலானது) என்ற விகிதத்தில் கலந்து, செடிகளின் தூர் பகுதியில் ஊற்ற வேண்டும்.

வளர்ச்சி மற்றும் அறுவடை

நடவு செய்த 28-ம் நாளில் முதல் பூவெடுக்கும். 35-ம் நாளில் 25 சதவிகிதம் பூக்கள் எடுக்கும். 50-ம் நாளில் 100 சதவிகிதம் பூத்துவிடும். 50 முதல் 60 நாள்களில் முதல் அறுவடை செய்யலாம்.

நாட்டு ரகங்களாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 25 டன் முதல் 30 டன் அளவு மொத்த மகசூல் கிடைக்கும். வீரிய ரகங்களில் 60 டன் முதல் 80 டன் வரை மகசூல் கிடைக்கும்.

ஒரு கிலோ கத்திரிக்காய் குறைந்தபட்சம் 10 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 40 ரூபாய் வரை விற்பனையாகிறது. மேற்சொன்ன பராமரிப்பு முறைகளையும் தொழில்நுட்பங்களையும் முறையாகப் பின்பற்றினால், கத்திரிக்காய்ச் சாகுபடியில் நிச்சயம் நல்ல மகசூல் எடுக்கலாம்” என்ற தகவலைச் சொல்லி முடித்தார், பேராசிரியர் செந்தூர்குமரன்.

புற்றுநோயைத் தடுக்கும் கத்திரி !

கத்திரிக்காயை ‘எக் பிளான்ட்’ (Egg Plant) என்கிறார்கள், ஐரோப்பியர்கள். கூஸ் வாத்துக்குக் கண், காது வைத்தால் எப்படி இருக்குமோ அதேபோல் கத்திரிக்காயின் தோற்றம் இருப்பதால் இதை எக் பிளான்ட் என அழைக்கிறார்கள். கத்திரிக்காய்ச் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் என்றாலும், இதில் நம் ஆரோக்கியத்துக்குத் தேவையான பல்வேறு சத்துகள் இருக்கின்றன.

இதன் விதையோடு கூடிய சதைப்பகுதியில் ‘ஆன்தோ சையானின்’ (Antho cyanin) மற்றும் ‘ஃபிளேவோனாய்ட்ஸ்’ (Flavonoids) என்ற இரண்டாம்நிலை வேதிக்கூறுகள் இருக்கின்றன. இவை, நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடியவை. கத்திரிக்காயின் தோலில் பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்துகள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் ஆகியவை இருக்கின்றன.

மனித உடலில் புற்றுநோய் பெருக காரணமாக இருக்கும் ‘ஃபிரீ ரேடிக்கிள்’ (Free radicle) என்ற திசுக்களைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கத்திரிக்காயில் உள்ள ‘பினோலிக் அமில’த்தில் (Phenolic Acid) இருக்கிறது. இதே பினோலிக் அமிலம், அனைத்து விதமான பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்தாலும்… கத்திரிக்காய் தவிர்த்து மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள அமிலத்துக்குப் புற்றுநோய்க் கிருமிகள் தொற்றாமல் தடுக்கக்கூடிய ஆற்றல் மட்டுமே உண்டு.

ஆனால், புற்றுநோய் தாக்கிய பிறகும், புற்றுநோய்க்கிருமிகளைப் பரவாமல் தடுக்கக்கூடிய ஆற்றல், கத்திரிக்காயில் உள்ள பினோலிக் அமிலத்துக்கு உண்டு.

இக்காயின் முக்கியமான குணாதிசயம் இது. கத்திரிக்காயில் உள்ள ‘அன்தோனாசைனின்’ (Antho nasynin) என்ற பொருள் சீரான ரத்த ஓட்டத்தைப் பராமரிக்க உதவுகிறது. தொடர்ந்து கத்திரிக்காய் சாப்பிட்டுவந்தால் காய்ச்சல் வராது.

 

கத்தரியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

கத்தரியில் அதிகம் பூச்சி  தாக்குதல் அதிகம். அதை தடுக்க கீழ் கண்ட வழிமுறைகளை  நீங்கள் கடைபிடிக்கலாம். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்

1.பறவை தாங்கிகளை எக்டருக்கு 25 வைப்பதன் மூலம் பூச்சிகளை உண்ணும் பறவைகளை கவர்ந்து இழுத்து பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

2)
1டெல்டா பொறி மற்றும் மஞ்சள் வண்ண அட்டை பொறியை எக்டருக்கு 5 என்ற எண்ணிக்கையில் வைப்பதன் மூலம் தத்துப்பூச்சி மற்றும் வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

3) தண்டு மற்றும் காய்புழுவின் பாதிப்பை கண்காணிக்க இனக்கவர்ச்சி பொறியை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையிலும், கவர்ந்திழுக்க எக்டருக்கு 100 என்ற எண்ணிக்கையிலும் வைக்க வேண்டும்.

4) நட்ட 30 நாட்கள் கழித்து வேப்பம்புண்ணாக்கு 50 கிலோஞிஎக்டர் என்ற அளவில் இடுவது புழு தாக்குதலை குறைக்கும்.

5) பாதிக்கப்பட்ட தண்டு மற்றும் காய்களை சேகரித்து அழிக்க வேண்டும்.

6) டிரைக்கோகிரம்மா பிரேசிலின்ஸிஸ் முட்டை ஒட்டுண்ணியை ஒரு லட்சம் ஞி எக்டர் என்றளவில் ஆறுமுறை பூக்கும் தருணத்தில் இருந்து விடுதல் தண்டு மற்றும் காய்ப்புழுவின் தாக்குதலை குறைக்க உதவும்.

7) சிற்றிலை நோயால் பாதிக்கப்பட்ட செடிகளை சேகரித்து அழிக்க வேண்டும்.

8) வேப்பங்கொட்டை கரைசல் 5%யை மூன்று முறை தெளிப்பது சாறு உண்ணும் பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உதவும்.

9) ஹட்டா புள்ளி வண்டுகளின் முட்டைகள், இளம் பூச்சிகள் மற்றும் வண்டுகளை அவ்வப்போது சேகரித்து அழிக்க வேண்டும்.

10) தொடர்ச்சியாக கத்தரியை வயலில் பயிரிடுவதால் தண்டு மற்றும் காயப்புழு மற்றும் வாடல் நோய் பாதிப்பு அதிகரிக்கும். எனவே பயிர் சுழற்சியை கடைப்படித்தல் அவசியம்.

11) பசுந்தாள் உரங்களை இடுதல், நிலப்போர்வை அமைத்தல் மற்றும் பிளிச்சிங் பவுடர் இடுதல் ஆகியவை பாக்டீரிய வாடல் நோயை தவிர்க்க உதவும்.

12) பச்சை தத்துப்பூச்சி நடமாட்டத்தை கண்காணிக்க வெண்டையை தடுப்பு பயிராக நட வேண்டும். வெண்டையில் எண்ணிக்கை அதிகமாகும்போது பூச்சி மருந்துகளை வெண்டையில் மட்டும் தெளிக்கலாம்.

13) பரந்து விரிந்து செயலாற்றும் பூச்சி கொல்லி மருந்துகளை தவிர்ப்பதன் மூலம் இயற்கை எதிரிகளின் நடமாட்டத்தை அதிகரிக்கலாம். குறிப்பாக புள்ளி வண்டுகள் மற்றும் கிரைசோபா இரை விழுங்கிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

14) வேகமாக வளரும் மக்காச்சோளம், சோளம் (அ) கம்பு ஆகியவற்றை வயலை சுற்றி நடுவதன் மூலம் வெள்ளை ஈக்களின் பாதிப்பை குறைக்கலாம்.

15) சூடோமோனாஸ் ப்ளுரோசன்ஸ் 5 கிராம் ஞி லிட்டர் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி 5 கிராம் ஞி லிட்டர் என்றளவில் இலைவழி தெளிப்பும் மற்றும் இவற்றை ஏக்கருக்கு 2 கிலோ என்றளவில் தொழு உரத்துடன் கலந்து இடுவது நோய் தாக்குதலை குறைக்க உதவும்.

16) பேசில்லோமைசிஸ் லில்லேசினஸ் 2 கிலோவை 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு (அ) 500 கிலோ மண் புழு உரத்துடன் கலந்து இடுதல் நூற்புழு பாதிப்பை குறைக்க உதவும்.