கூந்தற்பனை

கூந்தற்பனை
Agriwiki.in- Learn Share Collaborate

கூந்தற்பனை – Caryota urens – உலத்தி

கன்னியாகுமரி மாவட்டத்தில்
உலத்தி‘ என்ற பெயரில் அழைக்கப்படும் இம்மரம் மற்ற இடங்களில் #கூந்தற்பனை என்று அழைக்கப்படுகிறது.
இதன் தாவரவியல் பெயர்
Caryota urens.
‘யா மரம்’ என்று குறுந்தொகையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த மரத்தின் இலைகளும் தண்டும் யானைகளுக்கு மிகவும் விருப்பமான ஸ்னாக்ஸ்.
லத்தீன் மொழியில் urens என்ற பெயருக்கு ‘அரிக்கும் தன்மையுடையது’ என்ற அர்த்தமுண்டு.

இம்மரத்தைப் பார்க்கும்போது, குளித்து முடித்த பின் ஒரு பெண் தன் கூந்தலை விரித்து உலர்த்திக்கொண்டிருப்பது போலவும், பூங்கொத்துகள் நீளமான கூந்தலைப்போலவும் தோன்றுவதால் கூந்தற்பனை, மற்றும் உலத்தி என்ற பெயர்கள் பொருத்தமானதாகவே தோன்றுகிறது. பனைவகையைச் சேர்ந்த இம்மரங்கள் சுமார் 15 மீ. வரை வளரக்கூடியது.

வழவழப்பான, உருண்டையான இதன் தண்டுப்பகுதி சுமார் 30 செ.மீ விட்டமுடையதானதாக இருக்கும். உதிர்ந்த இலைகள் இதன் உடலில் விட்டுச்செல்லும் தடங்கள் பார்ப்பதற்கு வளையங்களைப் பதித்தது போலவே இருக்கும்.

கூந்தற்பனை (இலங்கை வழக்கில் கித்தூள்) என்பது இலங்கை, இந்தியா, சிங்கப்பூர்,மியான்மர் ஆகிய நாடுகளில் மழைக் காட்டு நிலங்களில் வளரும் பனைக் குடும்ப பூக்கும் தாவரஇனமாகும்.

பொதுவாகவே பனைக்குடும்ப வகையைச் சேர்ந்த மரங்களிலிருந்து பதநீர் இறக்கப்படுவதும், அது காய்ச்சப்பட்டு வெல்லம் தயாரிக்கப்படுவதும் உண்டு. இதற்கு கூந்தற்பனைமரமும் விதி விலக்கல்ல.

இதிலிருந்து இறக்கப்படும் நீர் ‘#கித்தூள் பானி‘ என்று அழைக்கப்படுகிறது.
இளநீர், பதநீர் என்று அழைக்கப்படுவதால் சம்பந்தப்பட்ட மரங்களை இளநீர் மரம் என்றோ பதநீர் மரம் என்றோ நாம் அழைப்பதில்லை. மாறாக தென்னை, பனை என்று அழைக்கிறோம். ஆனால், கூந்தற்பனையிலிருந்து பெறப்படும் நீர் ‘கித்தூள்’ எனப்படுவதால் கித்தூள் மரமென்று அழைக்கப்படும் பெருமை இம்மரத்திற்கு மட்டுமே உண்டு. ஆமாம்,..இலங்கையில் இந்த மரத்தைக் கித்தூள் மரமென்றுதான் அழைக்கிறார்கள்

சமையலில் வழக்கமான வெல்லத்திற்குப் பதிலாக இதைப்பயன்படுத்தி இனிப்புகள் செய்யலாம்.