கோமாரி நோய்

Agriwiki.in- Learn Share Collaborate

இயற்கை கால்நடை மருத்துவர் தஞ்சை
திரு. புண்ணிய மூர்த்தி ஐயாவின் எளிமையான மருத்துவக் குறிப்பு !!!!

கோமாரி நோய்க்கு:

 

வெந்தயம், சீரகம் தலா 100 கிராம் எடுத்து, 100 மில்லி நீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி நன்றாக அரைக்க வேண்டும்.

இவற்றுடன் பூண்டு 4 பல், மஞ்சள் தூள் 10 கிராம், நாட்டுச் சர்க்கரை 100 கிராம் ஆகியவற்றைச் சேர்த்து குழம்பாக அரைக்க வேண்டும்.

இவற்றுடன் துருவியத் தேங்காயைச் சேர்த்து உருண்டையாக்க வேண்டும்.
இந்த மூலிகை மருந்து உருண்டையை கால்நடைகள் சாப்பிடும் வகையில், அதன் வாயை அகலமாக விரித்து, கடவாய் பல்லில் தடவ வேண்டும்.

இந்த உருண்டை உமிழ் நீருடன் சேர்ந்து ரத்த ஓட்டத்தில் கலக்கும்.

இதேபோல, 3 மணி நேரத்துக்கு ஒரு முறை புதியதாகத் தயார் செய்த மருத்தை ஒரு நாளைக்கு 3 அல்லது 5 முறை கொடுக்க வேண்டும்.

தொடர்ந்து, 3 முதல் 5 நாள்கள் வரை இந்த மூலிகை மருந்தை கொடுப்பதன் மூலம் 100% கால்நடைகளை கோமாரி நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம்.

கால் புண்:

—————–
காலில் புண் இருந்தால், குப்பைமேனி, காட்டுத் துளசி அல்லது திருநீற்றுப் பச்சை செடிகளில் ஏதேனும் ஒரு செடியின் 100 கிராம் இலையுடன், பூண்டு 10 பல்கள், 100 கிராம் மஞ்சள் தூள் ஆகியவற்றை நன்றாக இடித்து 250 மிலி.

நல்லெண்ணெய் அல்லது வேப்பெண்ணெயில் காய்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடையின் கால் குளம்புகளில் தடவ வேண்டும்.

மருத்தைத் தடவுவதற்கு முன்பு, கால்நடையின் கால் குளம்புகளை உப்பு, மஞ்சள் தூள் கலந்த நீரில் நன்றாகக் கழுவி ஈரத்தை துடைக்க வேண்டும்.

கால் புண்ணில் புழுக்கள் இருந்தால் முதல் நாளில் கற்பூரம் சேர்த்து புண்ணில் தடவ வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் புழுக்கள் உருவாகுவது கட்டுப்படுத்தப்படும்.
இந்த மூலிகை மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம் கோமாரி நோய் கட்டுப்படுத்தப்பட்டு நல்ல பயனைத் தந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

கன்று ஈன்ற கறவை மாடுகளுக்கான சிக்கல்களைத் தவிர்க்கும் வழிமுறைகள்!!!!

கன்று ஈன்ற கறவை மாடுகளுக்கு ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க உரிய வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று ஈரோடு கால்நடை மருத்துவப் பல்கலைப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உதவிப் பேராசிரியை நா.வீ.கவிதா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கன்று ஈன்ற கறவை மாடுகளில் நஞ்சுக்கொடி தங்குதல் மற்றும் கருப்பை வெளித்தள்ளுதல் ஆகிய இரண்டு முக்கிய சிக்கல்கள் உருவாகின்றன.

நஞ்சுக்கொடி:

***************
மாடுகள் சினையாக இருக்கும்போது கருப்பையினுள் வளரும் சிசுவுக்கு தேவையான உணவு மற்றும் பிராண வாயுவை அளிப்பதுடன் சிசுவின் கழிவுப்பொருள்களை அகற்றும் உறுப்பாக செயல்படுவது நஞ்சுக்கொடி ஆகும்.

பொதுவாக கன்று ஈன்ற 3 முதல் 8 மணி நேரத்திற்குள் நஞ்சுக்கொடி தானாகவே வெளித்தள்ளப்பட்டு விழுந்துவிடும். இதற்கு மேலும் அதாவது 8 முதல் 12 மணி நேரம் கழிந்தும் கூட நஞ்சுக்கொடி விழாமலிருந்தால் அதனை உடனடியாக கவனிக்க வேண்டும்.

சில விவசாயிகள் கன்று ஈன்ற மாடு நஞ்சுக்கொடி போடும் வரை பாலில் நச்சுத்தன்மை இருக்கும் என நினைத்துக்கொண்டு சீம்பாலினைக் கறக்காமல் இருப்பர். இது அறிவியல் ரீதியாக உண்மையல்ல. மாறாக கன்றினை 30நிமிடத்திற்கள் பால் குடிக்க விடுவதால் ஈன்ற மாடுகளின் நாளமில்லாச் சுரப்பிகள் தூண்டப்பட்டு கருப்பை சுருங்கி விரியும். இதனால் நஞ்சுக்கொடி தானாகவே விழும் வாய்ப்புள்ளது.

சிலர் தொங்கிக் கொண்டிருக்கும் நஞ்சுக்கொடியை விழ வைப்பதற்காக அதை ஒரு குச்சியைக்கொண்டு சுற்றி இழுப்பார்கள் அல்லது அதில் ஒரு கல்லைக் கட்டி விடுவர். இவ்வாறு செய்வதால் நஞ்சுக்கொடியானது முழுமையாக பிரிந்து வராமல் மாட்டிற்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கும் பகுதி மட்டும் அறுந்து விழுந்துவிடும். மீதம் உள்ள பகுதி கருப்பையின் உள்ளேயே தங்கி நோயை உருவாக்கும்.

அடுத்து கன்று ஈன்றவுடன் மாடுகளுக்கு மூங்கில் இலை அல்லது வெண்டைக்காய் அல்லது சந்தனம் ஆகியவற்றை தீவனமாகக் கொடுப்பது வழக்கத்தில் உள்ளது. மூங்கில் இலை மற்றும் வெண்டைக்காயில் கருப்பையைச் சுருங்கி விரியச் செய்யக்கூடிய வேதிப்பொருள் உள்ளது. இது கருப்பையைச் சுருங்கி விரியச் செய்வதால் நஞ்சுக்கொடி தானாகவே பிரிந்து விழ வாய்ப்புள்ளது.

நஞ்சுக்கொடி தங்கியுள்ள மாடுகளில் காணப்படும் அறிகுறிகள்:

கன்று ஈன்று 8 மணி நேரத்திற்கு பின்பும் நஞ்சுக்கொடி தங்கியிருக்கும் மாடுகளில் காய்ச்சல், சோர்வு, தீவனம் உண்ணாமை போன்ற அறிகுறிகள் காணப்படும்.

கன்று ஈன்ற 24 மணி நேரம் கழிந்த பின் நஞ்சுக்கொடி அழுக ஆரம்பித்து துர்நாற்றம் அடிக்கும்.

அறையின் வெளிப்புறத்தில் ஈக்கள் மொய்க்கும்.

பால் உற்பத்தி குறைந்து விடும்.

சிவப்பான நீரைப்போன்ற திரவம் மிக அதிக அளவில் துர்நாற்றத்துடன் காணப்படும்.

இது ரத்தத்தில் நச்சுத்தன்மை கலந்து விட்டதைக் குறிக்கும்.

நஞ்சுக்கொடி தொங்கிக் கொண்டிருக்கும்போது மாடு கீழே படுப்பதை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும்.

நஞ்சுக்கொடிதானே என நினைத்து தகுதியற்றவர்களைக் கொண்டு எடுக்க முற்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவர்கள் கருப்பையில் உள்ள முடிச்சுகளை முறையாகப் பிரித்து எடுக்காமல் நஞ்சுக்கொடியை வெறுமனே பிடித்து இழுப்பார்கள். இதனால், கருப்பை முடிச்சுகள் அறுந்து ரத்தக் கசிவு ஏற்படும்.

கருப்பை வெளித்தள்ளுதல்:

******************************
கருப்பை வாய் தள்ளுதல், உறுப்புத் தள்ளுதல், அடி தள்ளுதல், சவுரி தள்ளுதல், நாய்த்தலை படுதல், சொவரொட்டி தள்ளுதல் எனப் பல்வேறு பெயர்களில் கருப்பை வெளித்தள்ளுதல் அழைக்கப்படுகிறது. கருப்பை வெளித்தள்ளுதலுக்கு முக்கியக் காரணம் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சில பசுக்களில் அதிக அளவில் சுரப்பதேயாகும்.

இதன் காரணமாக இடுப்புப் பகுதிச் சதைகள் மற்றும் கருப்பையின் பாகங்கள் தளர்ந்து போய்விடுகின்றன.
இந்த தளர்ச்சியின் காரணமாக முதலில் கருவறை சற்று வெளியே தெரிகிறது.

இவ்வாறு வெளியே தள்ளப்பட்ட கருப்பையின் வாயை நுண்ணுயிரிகள் தாக்கும்போது இந்த மென்மையான உறுப்பிற்கு ஒருவித எரிச்சல் ஏற்படுகிறது. இந்த எரிச்சலின் காரணமாக கருப்பையானது மேலும் வெளித்தள்ளப்படுகிறது.

முதலுதவி சிகிச்சைகள் :

*********************:******
வெளித்தள்ளப்பட்ட கருப்பையினை உடல்மட்டத்திற்குச் சிறிது மேலே தூக்கிப் பிடித்தால் சிறுநீர் வெளியேற வாய்ப்புண்டு.

மேலும் இவ்வாறு செய்வதால் கருப்பை வீங்கிப்போவதையும் தடுக்கலாம். மருத்துவரிடம் கொண்டு செல்லும் வரையோ அல்லது மருத்துவர் வரும் வெளித்ள்ளப்பட்ட கருப்பையினை முடிந்த வரை ஈரத்தன்மையுடன் இருக்கச் செய்ய வேண்டும்.

அதற்குச் சுத்தமான ஈரத்துணியை கருப்பையின் மேலே போட்டு மூடிவைக்க வேண்டும். துணி காயக் காய சுத்தமான குளிர்ந்த நீரினை ஊற்ற வேண்டும்.

தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரல்லாத மற்ற நபர்களைக் கொண்டு வெளித்தள்ளப்பட்ட உறுப்புக்களை மீண்டும் உள்ளே தள்ள முயற்சிக்கக் கூடாது.

கையால் அமுக்கவோ, அடிக்கடி கருப்பையினைத் தொட்டுப் பார்ப்பதோ கூடாது.கூடுமான வரையில் மாடு முக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதற்கு மாட்டிற்கு ஏதாவது உண்ணக் கொடுத்தோ அல்லது சிறிதளவு சமையல் உப்பினை மாட்டின் நாக்கில் தேய்த்துவிட்டோ மாடு அசைபோடும்படி செய்தால் மாடு முக்காமல் இருக்கும்.

மாட்டின் கீழ்தாடையில் வைக்கோல் பிரி அல்லது கயிற்றினைக் கட்டி விட்டாலும் மாடு அசைபோட்டுக் கொண்டு முக்காமல் இருக்கும்.

நோய்குறியீடு ஏற்படாமல் தவிர்க்கும் முறைகள்:

இக்கருப்பை வெளித்தள்ளுதல் தாது உப்புகள் மற்றும் சத்துக்கள் குறைவினாலும் ஏற்படும். ஆகவே சினைக்காலத்தில் பசும்புல் அளிப்பது அவசியம்.

நிறை சினைக் காலத்தில் மாடுகளுக்குத் தீவனத்தினை ஒரே வேளையில் அதிக அளவு அளிக்காமல் 3 அல்லது 4 பகுதியாகப் பிரித்து அளிக்க வேண்டும்.

தொழுவத்தில் மாடுகள் நிற்கும் இடம் முன்னோக்குச் சரிவு கொண்டதாக அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி

தொகுப்பு: நாட்டு மாடுகளை வளர்போம் முகநூல் குழு.

தொடர்புக்கு,
திரு.புண்ணியமூர்த்தி
9842455833.