செவ்வாழை பயிரிட்டு சிறப்படைய சில வழிமுறைகள்

செவ்வாழை பயிரிட்டு சிறப்படைய சில வழிமுறைகள்
Agriwiki.in- Learn Share Collaborate
செவ்வாழை பயிரிட்டு சிறப்படைய சில வழிமுறைகள்!

ஈஷா விவசாயக்குழு கோபி செட்டிப்பாளையம் அருகில் TN பாளையத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி திரு.ஆறுமுகம் அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தது. குறைந்த நிலத்தில் வாழையையும் மஞ்சளையும் நிறைவான வகையில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார். அவரது அனுபவங்களும், ஆலோசனைகளும் உங்களுக்காக!

நீங்கள் எவ்வளவு வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறீர்கள்?

வணக்கம், திண்டுக்கல்லில் 2007ம் வருடம் நடைபெற்ற சுபாஷ் பாலேக்கர் ஐயா அவர்களின் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயப் பயிற்சியில் கலந்து கொண்டேன், அதன் பின் படிப்படியாக இயற்கை விவசாயத்திற்கு மாறினேன்.

இயற்கை விவசாயத்தின் மேல் தங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?

நான் இரசாயன விவசாயம் செய்துவந்த போது, விவசாயிகள் அனைவரும் கண்டிப்பாக இயற்கை விவசாயத்திற்கு மாறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை உணரமுடிந்தது, படிப்படியாக இந்த எண்ணம் வலுப்பெற்று இயற்கை விவசாயத்திற்கு மாறினேன். இதை ஒவ்வொரு விவசாயியும் உணர்ந்து இயற்கைக்கு மாறவேண்டிய அத்தியாவசியம் தற்போதுதான் அனைவருக்கும் புரியவந்துள்ளது.

பசுமைபுரட்சியில் சாதனை படைத்த மாநிலம் பஞ்சாப், ஆனால் தற்போது பஞ்சாப் விவசாயிகள் மைராடா பயிற்சி மையத்திற்கு வந்து இயற்கை விவசாயம் கற்று வருகின்றனர். அவர்கள் ஒருமுறை என்னிடம் பேசியபோது, மண் எந்த அளவு கெட்டுப்போயுள்ளது என்பதை புரிந்துகொள்ளமுடிந்தது.

“எங்கள் வயல்களில் இரசாயன உரம் போட்டு போட்டு உப்பு படிந்து விட்டது, அந்த உப்பை நீக்காமல் விவசாயமே செய்ய முடியவில்லை. நிலத்தில் இருந்து நான்கு அங்குல ஆழத்திற்கு மேல் மண்ணை வெளியில் எடுத்துப் போட்டுவிட்டுதான் தற்போது விவசாயம் செய்யமுடிகிறது” என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

மண் தாய் என்றால், அதில் மடி போன்றது மேல் மண்; அந்த மேல் மண்ணில் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியுள்ளது. இப்படிப்பட்ட அவலமான சூழ்நிலையை நோக்கித்தான் விவசாயம் சென்றுகொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் கேள்விப்படும் போது, இந்த நிலை எல்லா மாநிலத்துக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற உணர்வும், இருப்பதையாவது காத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், இயற்கை விவசாயத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலும் ஏற்படுகிறது.

பொன்ன காப்பாத்துனா வீடு செழிக்கும்; மண்ண காப்பாத்துனா நாடு செழிக்கும்னு என்ற ஊர்ல ஒரு சொலவட சொல்லுவாங்கோ! அதைய தானுங்க நம்ம ஆறுமுகம் அண்ணா சொல்ல வர்றாப்டி! இந்த கள்ளிப்பட்டி கலைவாணி கூட இயற்கை விவசாயத்தோட அவசியத்த செரியா புரிஞ்சுகிட்டு, இப்போ ஒட்டுக்க அல்லா நெலத்துலயும் இயற்கை விவசாயத்த செய்யுறேனுங்க!

தற்போது என்னென்ன சாகுபடி செய்து வருகிறீர்கள்?

நான் வழையையும் மஞ்சளையும்தான் சாகுபடி செய்துவருகிறேன், அதிலும் முக்கியமா செவ்வாழையைத்தான் பயிர் செய்கிறேன். இந்த வருஷம் ஒரு ஏக்கரில் செவ்வாழை இருக்கு, 10 மாதப்பயிர் அதில் ஊடுபயிரா மஞ்சள் போட்டிருக்கேன், மற்றொரு ஏக்கரில் செவ்வாழை நட்டு 4 மாதம் ஆகிறது, அதில் தட்டைப்பயிரை ஊடுபயிரா போட்டிருக்கேன். வாழை நடவு செய்யும்போது சிறிய கன்றுகள் மற்றும் பெரிய கன்றுகள் என பிரித்து தனித்தனியாக நடுவேன், இதனால் கன்றுகளின் வளர்ச்சி ஒரே சீராக இருக்கும்.

வாழையில் மூடாக்கு மற்றும் உயிர் மூடாக்கு எப்படிச் செய்வது?

வாழையில் களைகளை கட்டுப்படுத்த மூடாக்கு அவசியம், வாழையில் தட்டைப்பயிரை ஊடுபயிராக போடுவது நல்லது, வாழைக்கட்டை நடும் போதே தட்டை பயிரைத் தூவிவிடவேண்டும். தட்டைப்பயிர் வேகமா வளர்ந்து நல்லா மண்ணை மூடிக்கும், சூரிய வெளிச்சம் மண்ணில் படாத அளவு மண்ணை மூடிடும். தட்டைபயிரை சில நேரம் காய்ப்புக்கும் விடுவேன், சிலநேரம் பூப்பதற்கு முன்பே மடக்கி உழுதும் விடுவேன்.

உளுந்து, பாசிப்பயிரையும் ஊடுபயிரா போடுவாங்க ஆனா உளுந்தும் பாசிப்பயிரும் வேகமா வளர்ந்து மண்ணை மூடாது, அதனால் களைகள் அதிகமா வளர்ந்துடும். எனக்குத் தேவைப்பட்டால் பக்கத்தில் உள்ள பண்ணைகளில் கிடைக்கும் சோளத்தட்டையையும் மூடாக்காக போடுவேன். மஞ்சள் இல்லாதபோது பாகல், பீர்க்கன் போன்றவையும் விதைத்து விடுவேன். உயிர் மூடாக்காக மண்ணை போர்த்துவதோடு கனிசமான காய்கறிகளும் கிடைக்கும்.

அட சாமி… அண்ணா ரொம்ப வெகராமத்தா மூடாக்கு போடுறாப்புடி பாருங்கோ! நம்ம ஊர்ல ரொம்ப விவசாயிக நெலத்துல பயிர்களுக்கு பக்கத்தாப்புல ஒரு செடிகூட இருக்க கூடாதுன்னு களையெடுக்க ஆள் போட்டு, ரொம்ப செலவழிப்பாங்கல்லீங்கோ! ஆனா… அதெல்லாங் வேஸ்ட்டுங்கோ! பயிர்களுக்கு பக்கத்தாப்புல இப்புடி ஊடுபயிரா மூடாக்கு போடுறது இயற்கை விவசாயத்துல ஒரு தொழிற்நுட்பமுங்க!

மூடாக்கு போடும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

மூடாக்கு போடுவது எந்த அளவு அவசியமோ, அந்த அளவுக்கு முக்கியம் மூடாக்கை சரியான முறையில் பராமரிப்பது. மூடாக்கு இட்ட நிலத்திற்கு கண்டிப்பாக வடிகால் வசதி இருக்க வேண்டும். நிலத்தில் தண்ணீர் கோர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சரியான அளவு இருக்கும் போது மட்டும்தான் அளவான ஈரப்பதம், நல்ல காற்றோட்டம் மற்றும் மண்ணில் பொலபொலப்புத் தன்மை ஏற்பட்டு வாப்சா என்ற நிலை உருவாகி இருக்கும்.

மண்ணில் இயற்கை விவசாயம் ஏற்படுத்திய மாற்றம்…

கடந்த எட்டு வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருவதால் எனது நிலத்தில் மண் வளமாக மாறியுள்ளது. இதை நேரடியாகவே நீங்கள் பார்க்கலாம். இப்படிப்பட்ட சூழலை இயற்கை விவசாயப் பண்ணைகளில் மட்டுமே காணமுடியும்” என்று நிலத்தை எங்களுக்கு காட்டினார்.

வாழைத் தோப்பில் உள்ள மூடாக்கை கரையான்கள் தின்று கொண்டிருந்ததையும், அதனால் ஏற்பட்ட துளைகளினால் மண்ணுக்கு நல்ல காற்றோட்டம் ஏற்பட்டிருப்பதையும் காணமுடிந்தது. உச்சிவெய்யில் நேரத்திலும் மண்ணை தோண்டிப் பார்த்ததில், மண் மிக குளிர்ச்சியாக இருந்தது. மண்ணை கையில் எடுத்து பார்க்கும்போது மண்புழுக்கள் துளையிட்டதற்காக அடையாளங்கள் நன்றாகத் தெரிந்தன, மேலும் மண் பொறுபொறுப்புத் தன்மையுடன் குருணை குருணையாக இருந்தது.

இப்போ மனுசங்களோட மனசு இறுக்கமாகிப் போனதுமாறிய அவங்க நெலமும் இரசாயன உரங்களால இறுகிப்போச்சுதுங்க! ஆனா… உண்மையில மண்ணுன்னா நல்லா நம்ம ஆத்தா கடையில இருக்குற பச்சரிசி புட்டு மாதிரி பொல பொலன்னு இருக்கோனுமுங்க! அதுக்கு மண்ணுல மண்புழு அவசியமுங்க. ஆனா… இரசாயன உரம்போட்டா மண்புழு இருக்காதுங்க!

இடுபொருட்கள் என்னென்ன பயன் படுத்துகிறீர்கள்?

இடுபொருட்கள் என்று சொன்னவுடன் ஒரு விஷயத்தை நான் சொல்ல விரும்புகிறேன். எந்த இடுபொருளைச் செய்தாலும் அதன் தயாரிப்பு முறையும் அதை பாதுகாக்கும் முறையும் மிக அவசியம். பாலேக்கர் ஐயா இடுபொருள் தயாரிப்பை எவ்விதம் செய்யச் சொன்னாரோ அதை விட ஒரு பங்கு மேலாகவும் தூய்மையாகவும் செய்ய வேண்டும், அந்த கவனம் இருந்தால்தான் இடுபொருட்கள் நன்றாக வேலை செய்யும்.

உதாரணமாக ஜீவாமிர்த தொட்டியை வெய்யிலில் வைத்துவிடுவது, பழைய சாணத்தை பயன்படுத்துவது, தினந்தோறும் காலை மாலை கலக்கிவிடாமல் அப்படியே விட்டுவிடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அந்த வகையில் புதிய விவசாயிகள், ஈஷா விவசாய இயக்கம் தற்போது நடத்திவரும் இடுபொருள் தயாரிப்புப் பயிற்சியில் கலந்து கொள்வது மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த பயிற்சியினால் விவசாயிகள் சரியான தயாரிப்பு முறைகளைத் தெரிந்து கொள்கின்றனர்.

மஞ்சள் விதை கிழங்கை பீஜாமிர்தம் நனைத்து நடுவேன், 8 நாளுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம் தருகிறேன், பெரும்பாலும் ஜீவாமிர்தம் தயாரிக்க பழைய கோமியத்தைதான் பயன்படுத்துகிறேன். அதிகப்படியாக கிடைக்கும் கோமியத்தை தனித்தனியாக சேமித்து வைத்துள்ளேன். ஒரு வருடம் பழையதான கோமியம் கூட என்னிடம் இருக்கிறது. ஒரு விவசாயிக்கு அவரது மாட்டை நன்றாகப் பராமரிக்கத் தெரிந்திருக்க வேண்டும், இந்த தன்மை இயற்கை விவசாயத்திற்கு மிகவும் அவசியமானது.

ஐயோ சாமி… என்ன அருமையா சொல்றாப்டி நம்ம ஆறுமுகம் அண்ணா பாருங்கோ! என்ற ஊர்ல பெரிய வூட்டு ஆத்தா, மாடு மேய்க்காம கெட்டது; பயிரு பாக்காம கெட்டதுன்னு ஒரு பழமொழிய அடிக்கடி சொல்லுவாப்டிங்கோ! இயற்கை விவசாயமானாலும் விவசாயிக பக்குவமா பாத்தாதானுங்க அதுக்கான பலன் கிடைக்கும். அதைய தானுங்க அண்ணா சொல்றாப்டி.

இறுதியாக நம்மிடம் பகிர்ந்து கொண்டவை…

எனது பண்ணைக்கு மாணவ மாணவிகள் அவ்வப்போது வந்து பயிற்சி பெற்று செல்கின்றனர். மாணவச்செல்வங்களுக்கும் விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம்.

இதற்காக அனுபவ விவசாயிகளை பயிற்றுனராக நியமித்து, அவர்களுக்கு பயிற்சிகள் அளித்து சேனாதிபதியாக மாற்றவேண்டும், அவர்கள் மூலம் இரசாயன விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொழில் நுட்பத்தையும் கற்றுத்தர வேண்டும், என்று அவரது விருப்பத்தையும் தெரிவித்தார்.

ஆறுமுகம் ஐயாவின் ஆர்வத்திற்கும் நல்லெண்ணத்திற்கும் ஈஷா விவசாய இயக்கம் சார்பாக வணக்கங்களைக் கூறிக்கொண்டு விடைபெற்றோம்.

தொகுப்பு
ஈஷா விவசாய இயக்கம்