தன்னார்வலர்களுக்கான இயற்கை வழி வேளாண் மற்றும் வாழ்வியல் பயிற்சி

Agriwiki.in- Learn Share Collaborate

வானகத்தில் மூன்று மற்றும் ஆறு மாத கால தன்னார்வலர்களுக்கான இயற்கை வழி வேளாண் மற்றும் வாழ்வியல் பயிற்சி.

என்னுடைய நோக்கங்கிறது…
இந்த நாட்டுல உணவு உற்பத்தி செஞ்சி குவிக்கிற 52 விழுக்காடு மானாவாரி விவசாயிங்க, நாட்டோட பசியைத் தீர்க்குற அவங்களோட நிலமை ரொம்ப மோசம், மேலும் வறுமையில தற்கொலைக்கு தள்ளப்படுகிற அப்படியான புழுதியிலும் புழுதியாய் இருக்கிற விவசாயிங்கள ஒருபடி மேல உயர்த்தி விடனும், அதே போல என்னை மாதிரி ஆயிரம் பேரைக் கண்டறிந்து அவங்களுக்குப் பயிற்சி அளித்து நாடு முழுவதும் பரவ விடனும், அது தான் வானகத்த மையமா வச்சி செயல்படுற நம்மாழ்வாரோட நோக்கம். இந்தப் பணியை நானும், எனக்கு அப்புறம் வானகமும் தொடர்ந்து செய்து வரும். இந்த நோக்கத்துல தங்களையும் இணைச்சுக்க விரும்புறவங்க வந்து இணைஞ்சுக்கலாம் வானகம் எப்போதும் திறந்தே இருக்கும், திறந்த கரங்களோடு அரவணைத்துக்கொள்ளும்.

இப்படியான மானாவரி நிலமான நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம், தனது உணவு உற்பத்தி மற்றும் பண்ணை ஆராய்ச்சிப் பணிகளை விரிவாக்கம் செய்ய பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது, சரளைக் கற்களும் சுண்ணாம்பு குவியளுமாக கிடக்கும் 25 ஏக்கர் நிலப்பரப்பில் நிரந்தர வேளாண்மை, மானாவரி விவசாயம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு, கால்நடை வளர்ப்பு, அனைத்தும் விதையில் இருந்து துளிர்ப்பது போல புதிய செயலாக்கமாக அமையவுள்ளது, இயற்கை வழி வேளாண் மற்றும் இயற்கையோடு இயைந்த வாழ்கையை விரும்பும் நண்பர்களை இணைத்துக்கொண்டு பயணிக்க வானகம் அழைக்கிறது.

இந்த ஆறு மாத பயிற்சியில் உயிர் வேலி அமைத்தல் தொடங்கி, உழவு, விதைத்தல், தினசரி பராமரிப்போடு, இயற்கையை கூர்ந்து கவனித்து காலநிலை மாற்றங்களோடு எவ்வாறு ஒரு உயிர் தன்னை தகவமைத்து வளர்கிறது, பூச்சிகள், நுண்ணுயிர் நமக்கு எவ்வாறு நண்பனாக இருக்கின்றன போன்றவைகளையும், விழிப்புணர்வோடு பதிவு செய்து, அறுவடை வரைக்குமான அணைத்து செயல்பாடுகளும் செயல் வழி கற்றல் என்ற பாணியில் நடைபெறும்.

கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து, “எல்லாமும் எல்லோருக்கும்” என்ற அடிப்படை புரிதலோடு இயங்குவோம், அது உணவில் தொடங்கி பொது வேலைகள், பண்ணை வேலை என அனைத்திலும் அனைவரது பங்களிப்போடு இயங்குவோம்.

ஆசிரியர் மாணவர் மனநிலை உடைத்து கூடி கற்றலுக்கான தளமொன்றை அமைக்க விரும்பினார் அய்யா நம்மாழ்வார், அப்படியான தளத்தை அமைத்து கொடுக்க வானகம் மகிழ்ச்சியோடு உங்களை அழைக்கிறது, பண்ணை ஆராய்ச்சி மற்றும் உணவு உற்பத்திக்கான செயல்பாடுகளில் இணைத்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் வானகத்துடன் ஒன்றிணையலாம்.

கட்டணத்தை செலுத்த முடியாது பங்கெடுக்க இயலவில்லை என்ற வருத்தம் தெரிவித்த நண்பர்களை கணக்கில் கொண்டு, இந்த ஆறு மாத கால பயிற்சிக்கு விருப்பக் கட்டணம் (தாங்கள் விரும்பிய தொகையை) நேரில் செலுத்தி இணைந்து கொள்ளலாம்.

உணவு தங்குமிடம் வழங்கப்படும்.

மாதம் இருமுறை கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பூச்சிகள் நமது நண்பன், நிரந்தர வேளாண்மை, தோட்டக் கலை, கிராமிய பொருளாதாரம், சுவரில்லாக் கல்வி இன்னும் பிற சிறப்பு வகுப்புகள் இருக்கும்.

தமிழகத்தில் உள்ள சிறந்த மாதிரி பண்ணைகளை பார்வையிடல்.

தினசரி பண்ணை வடிவமைத்தல் மற்றும் உணவு உற்பத்திக்கு குறைந்த பட்சம் 5 மணி நேரம் உடல் உழைப்பு அவசியம்.

மாதம் இரண்டு நாள் மட்டும் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

பயிற்சியில் பனிரெண்டு நபர்கள் மட்டுமே இணைய வாய்ப்புள்ளது.

3 ஆகஸ்ட் 2017 வியாழன் முதல் பயிற்சி தொடங்கவுள்ளது,
ஆகஸ்ட் 4,5,6 நடைபெறவுள்ள மூன்று நாள் பயிற்சியில் கட்டாயம் பங்கு கொள்ள வேண்டும் .
(வானகத்தில் முன்னரே முன்னரே மூன்று நாள் பயிற்சி பெற்றவர்கள் 4,5,6 பயிற்சிக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை, மற்றவர்கள் 1800/- செலுத்த வேண்டும்)
மூன்று மற்றும் ஆறு மாத கால பயிற்சிக்கு நாள் ஒன்றுக்கு 50/- ரூபாய் வழங்க வேண்டும்.
அதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் வானகத்தில் தங்கி வானக சூழலை புரிந்து கொண்ட பின்னர் ஆறு அல்லது மூன்று மாத பயிற்சியில் தொடரலாம்.
>>அடையாள அட்டை மற்றும் புகைப்படம் அவசியம் கொண்டு வரவும்
விருப்பமுள்ள நண்பர்கள் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி செய்யவும்.
தொடர்புக்கு : 9500765537 – 9944236236