தற்சார்பு விவசாயி-1 ஆரம்பம்

Agriwiki.in- Learn Share Collaborate

தற்சார்பு விவசாயி-1 ஆரம்பம்
by  alwar narayanan

ஒரு சிலரைத்தவிர பலருக்கு நான் விவசாயம் செய்வது தெரியாது. அட எனக்கே தெரியாது. ஏனென்றால் அது விவசாயமல்ல. இது விவசாயம்போல ஒன்று.

நான் ஒரு விவசாயியுமல்ல. சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லாததால் இதுவரை சொல்லவில்லை. ரகசியம் எல்லாம் இல்லை.

கரண்டு கம்பிக்கடியில் ஒரு களர் நிலத்தை குறைந்தவிலைக்கு வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக இப்படி ஆக்கியுள்ளோம். இதற்கு 8 வருடம் பிடித்தது. மண்ணில் இரங்கி செய்யாததால் இப்படி. 800 கிலோமீட்டர் தூரத்திலிருந்து இதுதான் செய்ய முடியும். அங்கேயே இருந்திருந்தால் ஒருவேளை தூக்கி தப்பியிருக்கலாமோ என்னவோ.

அட ! குறைந்தபட்சம் கத்திரிக்காய் பாட்டிகளுக்காவது காய்கறியை தலைச்சுமையளவு தந்திருக்கலாம், உணவுண்டு இளைப்பாற ஓய்வு நிழல் கொடுத்திருக்கலாம். குட்டையில் நாங்கள் கஷ்டப்பட்டு களக்காட்டிலிருந்து கொண்டுவந்து சிறைபிடித்த மீன்களை வலையை அறுத்து விடுவித்த நண்டுகளின் மூக்கை அறுத்திருக்கலாம்……

தற்சார்பு விவசாயம்!!

செய்யும் ஒவ்வொன்றிலும் தற்சார்பு !!. இந்திய திருநாட்டின் உணவு பாதுகாப்பே சிறு, குறு விவசாயிகளின் கையில்தான் உள்ளது என்று உணர்ந்தபின் திரும்பி பார்க்க நேரமில்லை. பார்க்கவும் பயம். கடந்த பாதை வலியது. நம்பிக்கையில்லாதது.

அது எப்படி கழனி வாடையே கண்டிராத மாச சம்பளக்காரனுக்கு விவசாய பேராசை ? செய்ய தூண்டியது ஒரு சம்பவம்.

2010 ஆண்டில் ஹைதராபாத் மாநகரத்தின் மாராடுப்பள்ளி குடியிருப்பின் குறுகிய சந்துகளில் மாருதி காரைச் செலுத்தி ஒட்டிக்கொண்டிருக்கும்போது அது நிகழ்ந்தது. ஒரு நண்பனிடம் ஊர்பக்கத்தில் நிலம் வாங்க 50ஆ முன்பணம் அப்போதுதான் குழப்பத்துடன் தயங்கி கொடுத்திருந்தேன். சிந்தனையுடன் காரில் திரும்பும்போது திடீரென்று எதோ ஒன்று “சொத்” என்று கண்ணாடியின் மீது விழுந்தது. கண்ணை மறைத்தது.

மேல்மாடியிலிருந்து ஒரு பெண்மணி உணவுப்பொட்டலத்தை காலி மனையை நோக்கி வீசியிருக்கிறார். தவறி அது வண்டியின் மீது விழுந்துவிட்டது. கொஞ்ச தூரத்தில் காரை நிறுத்தி நெகிழியை இழுத்தால் பொட்டலம் மேலும்உடைந்து காரை மெழுகிவிட்டது. வண்டி முழுவதும் சொட்ட சொட்ட அன்னத்தால் அபிஷேகம். துடைக்க வழியில்லை.

அது ஒரு சமிக்ஜை. உணவு உற்பத்தி செய்ய உத்தரவு என்று உணர்ந்துகொண்டேன்.

— வளரும்.
#தற்சார்புவிவசாயி

 அத்தியாயம் இரண்டு