தற்சார்பு விவசாயி-9 குவிக்கப்பட்ட சூரிய வெப்பம்

Agriwiki.in- Learn Share Collaborate
தற்சார்பு விவசாயி — அத்தியாயம் 9 குவிக்கப்பட்ட சூரிய வெப்பம்

(எச்சரிக்கை: இது கொஞ்சம் நீண்ட பதிவு. பொறுமை அவசியம்)

ஒரு தற்சார்பு விவசாயி விதை, ஆற்றல், உரம், தண்ணீர் எதற்குமே கைநீட்டக்கூடாது என்று சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம். தோட்டத்துக்கு வேண்டிய ஆற்றலை நாமே உற்பத்தி செய்துகொள்ள பல வழிகள் உள்ளன என்றும் தெரிந்துகொண்டோம். அது, கட்டமைத்துக்கொள்ள எளிதாகவும், விலையில்லாமலும் சுற்றுச்சூழலை பாதிக்காவண்ணமும் இருக்கவேண்டும்.

காற்றாடிமூலம் தண்ணீரை சேந்துவது எப்படி என்றும் பார்த்தோம். பதிவுகளை படித்ததில் இதுவரை காற்றாடியை வாங்குவதற்கு முயற்சித்தவர்கள் இரண்டுபேர்தான். விவசாயிகளிடம் நாள்பட நம்பிக்கை நழுவிக்கொண்டிருக்கிறது. மனதளவில் மாற்றம் கொண்டுவர இன்னும் நிறைய உழைக்கவேண்டியிருக்கிறது. இதற்காக அடக்கவிலையில் மலிவுவிலை காற்றாடி மாதிரி ஒன்று தயாராகிக்கொண்டிருக்கிறது. பிரிதொரு அத்தியாயத்தில் அதைபற்றி ஆழ பயிலுவோம்.

இப்போது அதி முக்கியமான ஒரு இயற்கை ஆற்றலை பற்றி இந்த அத்தியாயத்தில் காண்போம்.

இன்றைக்கு சிறுதொழில் மற்றும் விவசாயிகளுக்கு அளப்பரிய சக்தி தேவைப்படுகிறது. எந்திரங்கள்தான் அனைத்து வேலைகளையும் செய்கின்றன. இரண்டு மூன்று குதிரை சக்தியைக்கொண்டு என்ன சாதிக்கமுடியும் ? ஒரு யானைக்கட்டி போர் அடித்த இடத்தில் குறைந்தது ஒரு புகைவண்டி தொடரை தள்ளிகொண்டுபோகுமளவு ஆற்றல் வேண்டாமா.?

அந்த ஆற்றல் உங்களிடத்தில், உங்கள் தோட்டத்திலேயே இருக்கிறது. அதுதான் சூரிய வெப்பம். “உஸ் அப்பாடா !” என்று 45 டிகிரி வெயிலில் வியர்வையில் நனையாத விவசாயி பாரில் இருக்கமுடியாது. வெறும் சாணி வறட்டியை உமியில் புரட்டி, தட்டி வெயிலில் காயவைத்து எடுத்தால் போதாது. இந்த வெயிலை பயன்மிகு ஆற்றலாக மாற்ற தெரிந்திருக்கவேண்டும்.

இதற்கு தேவை வெறும் கண்ணாடி. ஆமாம் முகம்பார்க்கும் ரசம் பூசிய மலிவுவிலை கண்ணாடி மட்டும்தான். ஆச்சரியமாக இருக்கிறதா ?

கண்ணாடிகளைக் கொண்டு சூரிய வெப்பத்தை திரட்டி தண்ணீரை கொதிக்கவைத்து நீராவி எடுத்து எந்திரத்தை ஓடச்செய்யவேண்டும். இது பழங்கதையல்ல. இன்றைக்கு நீங்கள் அதிநவீன அணுமின் நிலையத்திலும், தூத்துக்குடி அனல்மிநிலையத்திலும் கொண்டாடும் மின்சாரம் தயாரிப்பது நீராவி எஞ்சின்கள்தான். அங்கெ தண்ணீரை கொதிக்கவைக்க முறையே அணுவைப்பிளந்தும், நிலக்கரியை எரித்தும் வெப்பம் உண்டுபண்ணுகிறார்கள். நாம் அதைவிடுத்து சூரிய ஒளியை குவிக்க சொல்கிறோம். சரிதானே !

இவ்வளவு எளிதாக இருக்கும்போது அரசாங்கம் ஏன் இதுவரை செய்யவில்லை? தனியார் கம்பெனிகள் இதில் இறங்கவில்லை ? என்ற கேள்விகளை தவிர்க்கமுடியாது. அதை புரிந்துகொள்ள அரசியல், வணிகம் தெரிந்திருக்கவேண்டும்.

சூரிய ஒளி என்றவுடன் தற்போது புழக்கத்தில் இருக்கும் சோலார் பேனல் உங்கள் நினைவுக்கு வரும். அதுவேறு, நாம் சொல்லும் சூரிய வெப்பம் வேறு.

தற்போது அதிகமாக பேசப்படும் சோலார் பேனல் – அது ஏன் உங்கள் செல்போன் முதுகில் இன்னும் பதிக்கப்படவில்லை ?. இன்னமும் செல்போனை மின்சாரத்தில் சார்ஜ் செய்துகொண்டிருக்கிறீர்களே ? உங்கள் வாகனத்தின் கூரை சும்மாதானே இருக்கிறது. அதில் ஏன் சோலார் பேனல் இல்லை ? அங்காடியில் ஏன் சோலார் பேனல் எளிதாக விற்கப்படுவதில்லை ? சும்மா வாங்கி மாட்டவேண்டியதுதானே !. இன்னமும் சைனாவிலிருந்து இறக்குமதியாவது ஏன் ? டீலர்கள் கமிஷன் பார்ப்பது ஏன் ?

உங்கள் தொலைகாட்சி ரிமோட், காமிரா, செல்போன், விளையாட்டு சாமான்கள் எல்லாவற்றிலும் அபாயமான ரசாயன பாட்டரிக்கட்டைகளை இன்றளவும் பணம் கொடுத்து வாங்கி அடுக்குவதன் அவசியமென்ன ? 40 வருடம் முன்பே கைக்கடிகாரத்திலும், வானொலியிலும், தலையாட்டி பொம்மையிலும் சின்ன சோலார் பேனல் பொருத்தி இருந்தது. வீட்டின் உள் அறையில் குழல் விளக்கு ஒளியிலே அவை இயங்கும். பாட்டரி அவசியமில்லை. தற்போது அவை எங்கே. ஏன் ஒழிக்கப்பட்டது ?

மின்னணு துறையில் எத்தனையோ முன்னேறிவிட்டாலும் இன்றளவும் உங்கள் இருசக்கர வாகனத்தை உதைத்து பற்றவைத்து பெட்ரோல் ஊற்றித்தானே ஓட்டவேண்டியிருக்கிறது ? மின்சார வாகனங்கள் ஏன் மலிவாக வரவில்லை. உங்கள் அடுக்களையில் சுமித் மிக்ஸி ஒரு 30 வருடமாக ஓடிக்கொண்டிருக்கும்போது அதைப்போன்ற மின் மோட்டார்தானே வாகனத்துக்கும் பொறுத்த வேண்டும் ! அதை ஏன் இன்னமும் வாகன கம்பெனிகள் தயார் செய்யவில்லை ?

இந்த பதிவின் நோக்கம் இவற்றுக்கான விடைகளை பட்டியல் இடுவது அல்ல. அது நீங்களாக கண்டுபிடிக்கவேண்டியது.

இந்தியா தற்போது உற்பத்தி செய்யும் ஆற்றல் 344.69 GW. அதில் வெறும் 18% தான் விவசாயி உபயோகிக்கிறான். இந்தியா ஏற்கனவே மின் மிகை நாடாக இருக்கிறது. இருந்தாலும் இலவச மின்சாரத்தை நிறுத்த துடிக்கிறார்கள். அடுத்த 4 ஆண்டுகளில் 100 GW மின்சாரத்தை சோலார் பேனல் மூலமும் 75 GW மின்சாரத்தை ராட்சத காற்றாலைகள் மூலமும் பெறுவதற்கு திட்டம் தீட்டி வருகின்றனர். அவற்றில் மொத்தம் மொத்தம் கோலோச்சி இருப்பது சீன கம்பெனிகள். கமிஷன் பார்ப்பது ஊழல் வாதிகள்.

இரண்டு வருடம் முன்பு கமுதியில் 2,500 ஏக்கரில் 648 MW சூரிய விசை தகடு மூலம் மின் உற்பத்தி செய்ய அதானி கம்பெனி சோலார் பேனல்களை இறக்குமதி செய்தது. சீனாவிலிருந்து நேராக இறக்குமதியானவை. அப்படியே மாட்டவேண்டியதுதான். தூத்துக்குடி வழியாக கப்பல் கப்பலாக கண்டைனர்கள், சாமானை வைக்க இடமில்லை. நிலம் கூட தயாராகவில்லை. 8 மாதத்தில் மழை வெள்ளத்திலும் மாட்டி ஓடவிட்டார்கள். அந்த மின்சாரத்தின் ஒப்பந்த விலை யூனிட் 7ருபாய் 1 பைசா.

ஒரே வருடத்தில் ராஜஸ்தான் பாலைவனத்தில் பலோடி என்ற ஊரில் யூனிட் ருபாய் 2.44க்கு ஏலத்தில் வென்று 1365 MW அளவுக்கு NTPC நிறுவனம் பத்லா சோலார் பார்க் (Bhadla Solar Park)அமைப்பை ஏற்படுத்தி விலையை இறங்கிவிட்டது. இப்போது நஷ்டப்பட்டது யார் ?

இந்த போட்டிக்கு காரணம் சீன அரசு உள்நாட்டு சலுகைகளை விலக்கி கொண்டதால், வேறு வழியில்லாமல் சீன கம்பெனிகள் வந்தவிலைக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். மெல்லியதான இத்தனை பேனல்களும் கொஞ்ச நாளில் காயலான் கடைக்கு கூட போடமுடியாமல் குப்பையாகும். 25 வருடம் உழைக்கும் என்பது பொய்.

அண்ணாந்து பார்க்கவேண்டாம். மேலே சொன்ன விஷயத்துக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

உங்களைப்பொறுத்தவரை உங்கள் வீட்டின், பண்ணையின் மாத மின்சார கட்டணம் ஆயிரத்தை தாண்டியிருக்கும். தனியார் மயமானால் மேலும் வளரும். எனவேதான் கவனமாக கேளுங்கள்.

உங்களுக்கு கைகொடுக்க போவது குவிக்கப்பட்ட சூரிய வெப்பம். (Concentrated Solar Power – CSP)

இதுவும் புதிதல்ல. பல ஆயிரம் கண்ணாடிகளை உபயோகித்து அமெரிக்காவின் கலிபோர்னியா பாலைவனத்தில், சோலானா என்ற இடத்தில் 250 MW (Ivanpah California), ஸ்பெயின் நாட்டில் (2,300 MW), மொராக்கோவில் (2,000 megawatt), மற்றும் ஆப்பிரிக்காவில் போட்டுவருகிறார்கள்.

ஆனால் பெட்ரோலியம் மாபியா, டீசல் மாபியா, பாட்டரி மாபியா, நிலக்கரி மாபியா எல்லோரும் சேர்ந்து CSP தொழில் நுட்பத்தை வளரவிடாமல் செய்கிறார்கள். மேலும் அரசாங்கத்துக்கும் அக்கறையில்லை. ஆனால் வருங்காலத்தில் இது ஒன்றுதான் பிரதானமான ஆற்றல் உற்பத்தி தொழில்நுட்மாக இருக்கும். அதற்குள் இதுவும் ஓர் மாபெரும் சோலார் மாபியாவிடம் போய் சேர்ந்துவிடும். பல நூறு கம்பெனிகள் இப்போதே தோன்றிவிட்டன. அவர்கள் பூமி சூடாவதைப்பற்றி விவாதித்துவிட்டு அதை தணிக்க வளர்ந்த நாடுகளின் பணத்தில் சோலார் ஆர்டரை வாங்கிக்கொண்டு கமிஷன் பார்ப்பார்கள்.

அதற்கான அறிகுறிகளை இப்போதே காணலாம். உதாரணமாக Flagsol என்றொரு கம்பெனி. எங்கள் நோக்கமே ஐரோப்பாவின் 15% மின்சார தேவையை பூர்த்தி செய்ய ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்வோம் என்பதுதான்.

அதாவது வெள்ளைக்காரனுக்கு நாங்கள் ஆப்பிரிக்காவில் மின்சாரம் தயாரித்து ஏற்றுமதி செய்வோம் என்று கூறுகிறார்கள். இதுதான் தற்போதைய போக்கு. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

முறையற்ற தனியார் மின்சார உற்பத்தி மையங்களை தொடங்கி, புகைகக்கும் நிலக்கரி, ஆபத்தான யுரேனியம், நிலத்தடி நீரை ஒழிக்கும் மீத்தேன், எரிவாயு, அருகிவரும் பெட்ரோலியம், மற்றும் உணவு விவசாயத்தை முற்றிலும் ஒழித்து ஏரி பொருளுக்காக “ஜாத்ரோபா” போன்ற தாவரங்கள், கரும்புச் சாறிலிருந்து “எத்தனால்” என்று சகட்டுமேனிக்கு மானியத்தில் மின்சாரம் உற்பத்தி செய்து ராட்சத கேபிள்கள் மூலம் மேலை நாடுகளுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய இந்தியாவும் தயார் !.

எப்படிப்பார்த்தாலும் உங்களை காப்பாற்ற போவது நீங்கள் மட்டும்தான். தற்சார்புதான் உங்கள் சந்ததியை காப்பாற்றும்.

அது சரி, சூரிய ஒளிக்கற்றையை இந்தியாவில் எதுவும் இதுவரை செய்யவில்லையா ? செய்திருக்கிறார்கள். அனால் அவை பரீட்ச்சார்த்த ரீதியிலும், செயல்முறை மாதிரியாகவும் மட்டும்தான் இருக்கிறது.

ராஜஸ்தானில் மவுண்ட் அபுவில் பிரம்ம குமாரி ஆஸ்ரமத்தில் 35 ஏக்கரில் 1 MW மின் உற்பத்தி செய்யுமளவு நம் அரசாங்கத்தின் உதவியோடும், GmbH என்ற ஜெர்மன் கம்பெனியின் துணையோடும் செய்துள்ளார்கள். ஆனால் அது புழக்கத்தில் இல்லை. என்றாலும் எல்லோருக்கும் ஒரு நல்ல மாதிரியாக செயல் படுகிறது.

http://india-one.net/about-us/

அகமதாபாத்தில் கஜராஜ் ட்ரை கிளீனர்ஸ், அவர்கள் துணியை நீராவி மூலம் இஸ்திரி போட சூரிய வெப்பத்தை பயன்படுத்துகிறார்கள்.

அதே போல மஹாராஷ்டிரா பாராமதியில் “புர்புல்” Purple Creations (https://www.youtube.com/watch?v=RqFL6joXsak&t=685s) என்ற ஆயத்த ஆடை நிறுவனமும், திருப்பதி அன்னதான கூடமும், முனி சேவா ஆஸ்ரமத்தின் சமையல் கூடத்திலும், ஷீரடியிலும் இவ்வகை கண்ணாடிகளை பயன்படுத்துகிறார்கள்.

ஏற்கனவே சொன்னதுபோல, இதை அரசாங்கம் வளர்த்தெடுக்க நாளாகும். அப்படி வரும் நாளில் அது கைக்கெட்டாத கனியாகும்.

எது வணிகத்தால் கவனிக்கப்படாமல் இருக்கிறதோ, எது அரசியல் வாதிகளின் கையில் சிக்காமல் இருக்கிறதோ, எது மலிவாக கிடைக்கிறதோ, அது சாலச் சிறந்தது. அதில் நன்மை இருக்கிறது. எனவே இதை இன்றே இப்போதே உங்கள் தோட்டத்தில் பேராற்றலை பெறுவதற்கு குறைந்த செலவில் முன்னெடுப்போம்.

— வளரும்
#தற்சார்புவிவசாயி (alwar narayanan)