புங்கனிருக்கும் இடத்தில் ஆரோக்கியம் பொங்கும்

புங்கனிருக்கும் இடத்தில் ஆரோக்கியம் பொங்கும்
Agriwiki.in- Learn Share Collaborate

புங்கனிருக்கும் இடத்தில் ஆரோக்கியம் பொங்கும்

 

நமது மண்ணின் மரங்களை அறிவோம் 3

புங்கனிருக்கும் இடத்தில் ஆரோக்கியம் பொங்கும் – புங்கன் வறட்சித் தாங்கக்கூடியது அதே சமயத்தில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் தன்மையுடைய தாவரங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.

“புங்கனிருக்கும் இடத்தில் ஆரோக்கியம் பொங்கும்” – பழமொழி…

இனி வரக்கூடிய காலங்களில் பூமி வெப்பமடைவது என்பது நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டேதான் போகும் என்கிறார்கள். அதனால், வருகிற காலங்களில் தற்போதய வெப்பத்தைவிட இன்னும் கூடுதலான வெம்மையும் இருக்கும். இப்பவே தாங்கமுடியல இதைவிட அதிகம்னு சொன்னா ?….

அந்தநிலையை மாற்றவேண்டுமெனில் பூமியின்மீது சூரிய ஒளி நேரடியாக படுகின்ற இடங்களை முடிந்தவரை குறைக்கவேண்டும். அதைத்தவிர வேறொரு வழியுமில்லை. அதற்கு தீர்வு பூமியெங்கும் தாவரப் போர்வைதான் ஒரே சிறந்த வழி…

கார்பனை குறைத்து வெப்பத்தை தணிபதற்கேற்ற அதிக ஆக்ஸிஜன் கொடுக்கின்ற மரங்களாகவும், நீண்ட காலம் நிலைத்து நிற்கக் கூடிய நமது மண்ணிற்கேற்ற மரங்களாகவும் இருக்கிற மரவகைகளின் வரிசையில் இன்று, புங்கன் மரம் அல்லது புங்கமரம் என தமிழில் குறிப்பிடப்படும் மரத்தினைப்பற்றி பார்ப்போம்…

இம்மரம் இருக்கின்ற பகுதிகளில் அங்கு வாழும் மக்கள் அவரவர் வட்டாரப் பெயர்களில் இதை கரஞ்ச், கரஞ்சா, புங்கை, புங்கு அல்லது பூந்தி அல்லது சுரஞ்சகம் Beach tree (Millettia pinnata)
என அழைக்கிறார்கள்…

இந்தியாவை தாயகமாகக் கொண்டதுதான் இந்தப் புங்கன். அதுவும் நமது மேற்குதொடர்ச்சி மலைகளில் தோன்றியதாக தாவரவிலாளர்களால் குறிப்பிடப்படுகிறது, இம்மரம்…

வெயில் காலத்தில் நல்ல குளிர்ச்சியான நிழல் தரும் மரங்களில் புங்கை மரம் சிறந்தது, ஏனெனில் அவற்றின் இலைகள் சிறிதானவை, மரம் முழுவதுமே இலைகள் நிறைந்து அடர்த்தியாக இருக்கும், அதேசமயம் இலைகளுக்கிடையே ஊடுறுவும் காற்றை தடுப்பதில்லை உள்ளே புகுந்து வெளியேவரும் காற்றானது மிகுந்த குளுமையுடன் வெளியேவருவதால் மரத்தினைச்சுற்றி எப்போதும் நிறைந்த குளுமையாகவே இருக்கும். மற்ற மரங்களை ஒப்பிடும்போது இதன் நிழல் மிக அடர்த்தியாக இருக்கும் அதாவது மரத்தினடியில் சூரிய வெளிச்சத்தினையே காணமுடியாதபடி இருக்கும்…

புங்கன்மரத்தினை வீட்டில் வளர்க்கக் கூடாது என்கிற கருத்தினைச் சிலர் சொல்வார்கள், இது மிக்க குளுமைத்தன்மையோடு இருப்பதால் வெயில் காலங்களில் இதனடியில் இருப்பவர்கள் அந்த இடத்தினைவிட்டு நகர மனமே வராது.அதனால் உழைக்காமல் சுகமாக மரத்தினடியிலேயே இருந்துவிடுவார்கள் என்பதான் காரணத்தினால் கூட, முற்காலத்தில் இவ்வாறு இம்மரத்தைப் பற்றிய கருத்தினை சொல்லியிருக்கலாம். ஆனால் தற்போதைய காலகட்டம் என்பது, புவி வெப்பமானது மிகுவெப்பத்தினை நோக்கி மேலே மேலே ணெல்கிற நிலைதான்…

ஆக நம்மைச் சுற்றி வெப்பம் அதிகமாகிக் கொண்டே இருப்பதால் புங்கன் மரங்களை வீட்டில் மட்டுமல்ல வீட்டைச்சுற்றிலும் இருக்கிற காலியிடமெங்கும் வளர்க்கப்பட வேண்டிய கட்டாயத்தில்தான் இப்போது இருக்கிறோம்…

மழைகாலத்தில் இலைகள் முற்றிலும் கொட்டிப் போகமல் இருக்கும் போதே துளிர்கள் துளிர்த்துவிடும், இம்மரம் பருவகாலத்திற்கு ஏற்றவகையில் தம்மை வளர்த்துக் கொள்ளும் தன்மை உடையது. அதன் கொத்து கொத்தான பூக்களில் தேன்(மதுரம்)நிறைந்து இருப்பதால் அவை பூக்கும் காலங்களில் தேனீக்களையும் வண்டுகளையும் அதிகளவு ஈர்க்கும். வெள்ளை நிறத்தில் மல்லிகைப் பூப் போன்று காணப்படும். இம்மரத்தின் பூக்கள் மூலிகை மருந்தாகவும் பயன்படுகிறது, இதன் காய்கள் கண் வடிவிலிருக்கும் (பார்க்க படம்). காயினுள்ளே ஒன்று அல்லது இரண்டு விதைகளோடு இருக்கும். பச்சை நிறத்திலிருக்கும் காய்கள் முதிரும்போது மஞ்சள்நிறம்கலந்த கோதுமை நிறத்திற்கு மாறி முற்றிகாய்ந்த நிலையில் உதிர்ந்துவிடும்…

புங்கை விதைகள் எண்ணெய் தன்மை கொண்டவை, இதில் கிடைக்கும் எண்ணெய் எரியும்தன்மை கொண்டது, இந்த எண்ணெயை மருந்தாகவும், பயோ டீசலாகவும் பயன்படுத்தலாம், எண்ணெய் எடுத்தபின் எஞ்சிய புண்ணாக்கு நல்ல இயற்கை உரமாகும்…

புங்கன்மரம் மிகுந்த உயரமாக வளராத நடுத்தர உயரமுள்ள என்றும் பசுமை மாறாத விரிந்த சிவிகையைஉடைய மரமாகும் நம்நாட்டில் பெரும்பாலும் நிழலுக்காகவும், அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது…

சுந்தரவனக் கரையோரப்பகுதி முதற்கொண்டு அந்தமான் மற்றும் தீபகற்ப இந்தியாவின் ஆற்றங்கரைகள், சாலை ஓரங்கள், கால்வாய் கரைகள், கடலோரப்பகுதி, தரிசு மற்றும் விவசாய நிலங்கள் என வறண்ட நிலம் சதுப்பு நிலம் உவர்மண்நிலம் வனப்பகுதி என எல்லா இடங்களிலும் எல்லாதட்பவெப்நிலையிலும் நன்கு வளரக்கூடியது…

ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களில் மூங்கிலுக்கு அடுத்தநிலையில் புங்கன்மரம் இருக்கிறது. இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறது. சாலை ஓரங்களில் நிழல் தரவும், மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன…

புங்கன் வறட்சித் தாங்கக்கூடியது அதே சமயத்தில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் தன்மையுடைய தாவரங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. வனச்சூழலில் இது விதைகள் மூலம் மளமளவென்று பரவுகிகிறது. விதைகள் மட்டுமின்றி வேர்கள் மூலம் கூட புதுமரத்தை உருவாக்கும் இயல்புடையது. நானும் எமது நண்பர்களும் மேற்குதொடர்ச்சிமலையின் அத்திக்கடவு பகுதிகளில் இருவாச்சிப் பறவைகளைத்தேடிச் செல்லும்போது பவானி நதியின் கரைகள் முழுவதும் புங்கன் நிறைந்து இருப்பதைக்கண்டோம். அதுவும் இதன் வேர்மூலம் புதிய இளம் கன்றுகளை உருவாக்கி இருப்பதை பார்த்து மிகுந்த ஆச்சரியப்பட்டோம்….

மரம் முழுவதுமே மிகுந்த மருத்துவ குணமுடையது. எங்கள் கோவை வட்டாரப் பகுதிகளில் இதன்காய்களை குழந்தைகளுக்கு கழுத்திலோ இடுப்பிலோ கட்டிவிடும் பழக்கம் சிறிது காலங்களுக்கு முன்வரை இருந்தது. இப்போது அந்தப் பழக்கம் இருக்குறதாவெனத் தெரியவில்லை. இந்தப் பழக்கம் எந்தெந்தப் பகுதியில் இருந்ததென்றும் தெரியாது…

வெப்பத்தைக் குறைப்பதில் முதலிடத்திலும்….
மிகுந்த மருத்துவ தன்மையுடைய தாவர பாகங்களையும்…
மாற்று எரிபொருளாக பயன்படும் இதன் எண்ணெயும்…
உரமாக புண்ணாக்கும்…
நாராக இதன்பட்டைகளும்…
மூச்சுக் காற்றை சுத்தம் செய்ய இது வெளிப்படுத்தும் அதிக அளவு ஆக்ஸிஜனும்….
என குறைவில்லாமல் மனிதர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் இந்தப் புங்கை…

-இப்படி எல்லாவகையிலும் பயனுள்ள எங்கும் வளரக்கூடிய நமது மண்ணின் மரமான இதை எங்கள் அவினாசி பகுதிகளில் அதிகளவில் வளர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.இதைப்படிக்கிற நீங்களும் அதிக அளவு வளர்த்து இந்தபூமியின் வெப்பத்தைக்குறைத்து அவரவரால் முடிந்த அளவில் சுற்றுச்சூழலை காப்போம்…

பேரன்புடன்,
Ramamurthi Ram