மண் வீட்டினை கட்டும் முறை

மண் வீட்டினை கட்டும் முறை
Agriwiki.in- Learn Share Collaborate
மண் வீட்டினை கட்டும் முறை

கல் வீடு கட்டுவது போன்றே சரியான திட்டமிடலுடன் மண் வீட்டினையும் அமைக்க வேண்டும்.
வீட்டின் முக்கிய அங்கங்கள் :
– அத்திவாரம்
– சுவர்
– கூரை
– தரை

முதலில் சுவர் பற்றிப் பார்ப்போமானால் ஏனையவை சுலபமாக இருக்கும். சுவர் கட்டுவதற்கு முக்கியமானவை.

1 – மண்

சாதாரணமாக வயல்கள் தோட்டங்களில் கிடைக்கும் களிமண் மிகவும் சிறந்தது. மேற்பரப்பில் குப்பை கலந்திருந்தால் 2 – 3 சென்ரிமீற்றர் ஆழமான பகுதியை அகற்றிவிட்டுத் தோண்டி எடுக்கலாம். மண்ணிலுள்ள களி (clay) 25 வீதம் அளவில் இருக்க வேண்டும். களித் தன்மை அதிகமாக இருந்தால் மணல் சேர்க்க வேண்டியிருக்கும். களி அதிகமான மண் காயும்போது வெடித்து விடும். சுவர் கட்டும் விதங்களைப் பொறுத்து களியின் அளவு சற்றுக் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கும்.

2 – வைக்கோல்

முன்னைய காலங்களில் மண் வீடுகளில் வைக்கோல் பாவிக்கப் படவில்லை. ஈரமான மண் உள்ளடக்கியிருக்கும் நீர் ஆவியாக வெளியேறும்போது மண் சுருங்குவதால் ஏற்படும் வெற்றிடம் வெடிப்பாக மாறுகிறது. இதனைத் தடுப்பதற்கக வைக்கலைத் துண்டுகளாக்கி மண்ணுடன் கலந்துவிட்டால் வெடிப்பு ஏற்படாது. வெற்றிடத்தை நோக்கி களி சுருங்கிச் செல்ல விடாது வைக்கல் துண்டுகள் பிடித்து வைத்திருக்கும். வைக்கலினால் இன்னும் ஒரு பயன்பாடு என்னவென்றால், வெப்பத்தை மண்சுவர் உறிஞ்சுவதைக் குறைக்கும். அதே போன்று குளிர் நாடுகளில் குளிர் காலங்களில் வீட்டிற்கு உள்ளிருக்கும் வெப்பத்தை வெளியே விரயமாக்காமல் தடுக்கும்.

3 – நீர்

மண் மிகவும் உலர்ந்ததாக இருந்தால் நீர் சேர்த்துக் குழைத்துக் கொள்ளலாம். அதிக நீர் சேர்க்கக் கூடாது. வேலையும் சுலபமாக இருக்கும்.

4 – சூரிய ஒளி

சுவர்கள் சிறிது சிறிதாக உலர வைக்கப்பட வேண்டும். கொழுத்தும் வெயிலில் உலரும் சுவர் இலகுவாக இடிந்துவிடும். மதிய நேரத்தில் நேரடிச் சூரிய ஒளி படாமல் சுவரின் மேல் பகுதியில் இலைகுழைகளை வைக்கலாம்.

5 – ஆட்கள்

சுவர் கட்டுவததற்குப் பல விதமான முறைகள் உள்ளன. தொழில்நுட்பமோ அனுபவமோ தேவையில்லை. கட்டத் தொடங்கும்போதே அனுபவத்தையும் பெற்றுக் கொள்ளலாம். மண் தோண்டுவது, வைக்கல் – நீர் கலப்பது – கட்டுபவருக்கு மண்ணை அள்ளிக் கொடுப்பது போன்ற சாதாரண பணிகள் இருப்பதால் குடும்பத்தில் உள்ள அனைவரும் பங்கு கொள்ளலாம். ஒரே நாளில் ஒரு சுவரை முடிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. நேரம் கிடைக்கும் போது நிறிது சிறிதாகக் கட்டலாம்.

6 – உபகரணங்கள்

சுவர் கட்டும் முறையைப் பொறுத்து சில விசேடமான உபகரணங்கள் தேவைப்படலாம். ஆனால் சாதாரணமாகக் கிடைக்கும் மண்வெட்டி, வாளி, சாந்தகப்பை போன்றவற்றைக் கொண்டே கட்ட முடியும்.

 

சுவர் கட்டும் முறைகள்

 

இனி சுவர் கட்டும் முறைகளைப் பார்ப்போம்.

1 – களிமண் கற்கள் (Adobe)

முன்பு எமது கிராமங்களில் மரக் குச்சிகளால் வேலி போன்று அமைத்து அதனைச் சுற்றிக் களிமண்ணால் மூடிச் சுவர் கட்டும் முறையைப் பார்த்திருப்போம். இவ்வாறான சுவர்களை மிக இலகுவாகக் கட்ட முடியுமாயினும் நேர்த்தியற்றனவாக அழகற்றதாக இருக்கும்.

ஆகவே சீமெந்து போலவே கற்களை அரிந்து சுவர் கட்டும் Adobe முறையை முதலில் பார்ப்போம். களிமண் வைக்கோல் துண்டுகள் அல்லது அதற்குச் சமனான நார்ப் பொருட்கள் நீர் ஆகியவற்றைச் சேர்த்துக் குழைத்துக் கற்களை அரிந்து கொள்ள வேண்டும். சாதாரண கற்களை விடப் பெரிதாக இருக்க வேண்டும். ஏனென்றால் சுவரின் அகலம் வீட்டின் உயரத்தைப் பொறுத்து 30 முதல் 40 சென்ரி மீற்றர்களாக இருக்கும். நான்கு பலகைகளை நீள்சதுரமாக அடித்து அச்சினைச் செய்துகொள்ள வேண்டும். நீரின் அளவைக் கல் அரிவதற்கு வசதிக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம். கற்களை அரியும்போது நிலத்துகடன் களிமண் ஒட்டாமல் இருக்கச் சிறிதளவு மணல் தூவி விடலாம்.

அரியப்பட்ட கற்களை நேரடியாக வெயிலில் வைத்து உலர்த்தக் கூடாது. அப்படி உலர்த்தினால் இலகுவாக வெடித்தும் உருந்தும் போய்விடும். மரங்களுக்குக் கீழ் அல்லது ஓலைகளால் மூடி விடலாம். அவை முற்றாக உலர இரண்டு கிழமை ஆகும். 4 நாட்களின் பின்னர் கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக ஒவ்வொரு அடுக்குக்கும் இடையில் காற்றுப் போகக் கூடியவாறு அடுக்கியும் உலர விடலாம்.

காய்ந்த கற்களை சீமெந்துக் கற்களை அடுக்கிச் சுவர் கட்டுவது போலவே அடுக்கிக் கட்ட வேண்டும். கற்களை ஒட்டவைக்க சற்று அதிகம் களி அதிகமான மண் அல்லது சுண்ணாம்பும் மணலும் சேர்ந்த கலவையைப் பாவிக்கலாம். கதவு அல்லது கூரையின் தீராந்தி தாங்கும் இடங்களில் கீழுள்ள படத்தில் காட்டப்பட்டது போன்று கற்களைச் சதுரமாக அடுக்கிக் கட்ட வேண்டும். நடுவில் இரும்பு தேவையில்லை. நடுவிலுள்ள இடைவெளியைக் களிமண்ணால் நிரப்பலாம்.

வீடு கட்டி முடிக்கப்பட்டதும் இச் சுவர்களின் மீது விசேடமான களிக் கலவையால் நேர்த்தியாகப் பூசி மெழுகியபின் சுண்ணாம்புப் பூச்சு அல்லது இயற்கையான வண்ணக் கலவைகளைப் பாவித்துச் சீமெந்துச் சுவர் போலவே ஆக்கலாம். ஆனால் சுண்ணாம்புப் பூச்ச்சு 100 வீதமான மண்சுவரின் பயனைத் தராது.

இம் முறையில் ஒரு மாடி வரையில் சுவரை எழுப்பிக் கட்ட முடியும். அதற்குமேல் உறுதியாக இராது. மழைநீர் சுவரில் படாதவாறு கூரைகள் சுவரை விட வெளியே நீண்டிருக்க வேண்டும்.

வெள்ளப் பெருக்கை மட்டுமே இச் சுவர் தாக்குப் பிடிப்பது கடினம். சரியான முறையில் பராமரிக்கப்படும் சுவர்கள் 100 வருடங்களைத் தாண்டியும் அதே தன்மையுடன் இருக்கும்.

2 – அச்சுச் சுவர்(rammed earth)

சாக்குப் பைகளில் மண்ணை நிரப்பி அடுக்கிச் சுவர்களாக்கும் இன்னொரு முறையும் உண்டு. இதுவும் அழகாக இராது.

மனிதனின் தேவைக்குள் அழகும் முக்கியத்துவம் பெறுவதால் வேறு முறைகளைக் கையாள வேண்டும். அச்சுச் சுவர் என்பது சரியான பதமோ தெரியவில்லை. இரு பக்கமும் தட்டையான பலகைகளை வைத்து நடுவில் களிமண்ணை நிரப்பி இடித்து நேர்த்தியான சுவராகக் கட்டுவதே இந்த முறையாகும்.

இது பிரான்சிலும் சில வட ஆபிரிக்க நாடுகளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. களியின் அளவு இன்னும் குறைவாக 15 வீதம் வரையில் இருப்பதே இந்த முறையின் சிறப்பாகும். அத்துடன் சிறிய கற்களையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். வைக்கோல் தேவையில்லை.

Adobe முறையில் கட்டச் சாத்தியப்படாத இடங்களில் இம் முறையைத் தெரிவு செய்யலாம். ஆனால் கொஞ்சம் தொழில்நுட்பம் தேவைப்படும். அச்சுப் பலகையை உருவாக்கவும் நேர்த்தியாகக் கையாளவும் சற்று அனுபவம் வேண்டும்.

சுவர்களின் தடிப்பம் Adobe முறையை விட அதிகமாக இருக்கும். 60 – 70 சென்ரி மீற்றர் அகலமாக இருக்க வேண்டும். வெளிச் சுவர்கள் நாளடைவில் மழையில் கரைந்து போகும். இவ்வாறான சுவர்கள் தடிப்பம் அதிகமாக இருப்பதால் 4 – 5 வருடங்களுக்கு ஒரு தடவை களிமண்ணால் பூசி மெழுகி விடுவார்கள். பிரான்சில் சில வீடுகளின் சுவர் 2 மீற்றர் தடிப்பமாகவும் உள்ளன. இச் சுவர்கள் 20 – 30 ஆண்டுகள் மழையைத் தாக்குப் பிடிப்பதுடன் குளிரையும் நன்றாகத் தாங்கும்.

இந்த முறையில் சுவர்களை மிக வேகமாகக் கட்ட முடியும் என்பதால் தொழில்நுட்ப ரீதியாக ஆராயப்பட்டுப் புதுமைகள் புகுத்தப்பட்டால் களி குறைந்த மணல் பிரதேசங்களிலும் மண் வீடுகளைக் கட்டிக் கொள்ளலாம்.

இவை எல்லாவற்றையும் விடச் சற்றுத் தொழில்நுட்பம் கூடியதும் உறுதியானதும் செலவு குறைந்ததும் வேகமாகக் கட்டக் கூடியதும் மண்ணைச் சிக்கனமாகப் பாவிக்கக் கூடியதும் அழகானதுமான இன்னுமொரு முறை உள்ளது.

3 – அமுக்கத்துக்குள்ளாக்கப்பட்ட மண் கற்கள்(compressed mud block)

நவீன முறையில் தயாரிக்கப்படும் இக் கற்கள் ஏறத்தாள சுட்ட செங்கற்கள் போல் காட்சியளிக்கும். இக் கற்களை உருவாக்க 15 முதல் 20 வீதமான களியை உள்ளடக்கிய மண் போதுமானது. நீர் அதிகம் தேவையில்லை. வைக்கோலும் தேவையில்லை. ஆனால் குருணிக் கற்களைச் சேர்த்துக் கொள்வது நல்லது. சிலர் 5 வீதம் சுண்ணாம்பும் சேர்த்துக் கொள்வார்கள்.

தயாரான மண்ணை அச்சு ஒன்றில் இட்டு அதனை சில வினாடிகள் அமுக்கத்துக்கு உட்படுத்த வேண்டும். இங்குதான் கொஞ்சம் தொழில்நுட்பம் தேவைப்படும். கீழுள்ள படத்தில் இருப்பது போன்று கையால் அமுக்கும் கருவியை உள்ளூரிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும்.

அமுக்கும் திறன் 25 kg/cm2 (2.5 MPa) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது 30 சென்ரிமீற்றர் நீளமும் 20 சென்ரிமீற்றர் அகலமும் உடைய கல்லில் 15 தொன் அமுக்கத்தைப் பிரயோகிக்க வேண்டும்.

ஆபிரிக்க நாடுகளில் மின்சாரத்தில் இயங்கும் இயந்திரங்களும் பாவிக்கப்படுகின்றன. இவற்றினால் பெரும் தொகையான கற்களை விரைவாக உருவாக்க முடியும். அமுக்கும் திறனும் அதிகமாக இருக்கும். இவ்வகையான இயந்திரங்கள் 2 கன மீற்றர் அளவான் மண்ணை 1 கன மீற்றர் அளவுக்குச் சுருக்கும் திறன் உடையன. அமுக்கம் அதிகமாக கல்லின் உறுதியும் அதிகரிக்கும். கல்லின் நிறையும் மிக அதிகமாக இருக்கும்.

கற்களை உருவாக்கியபின் அவற்றை இடைவெளி உள்ளவாறு அடுக்கி, படங்கினால் மூடி 3 – 4 கிழமைக்கு விட வேண்டும். 3 நாட்களுக்கு ஒரு தடவை கற்களின் மேல் நீர் தெளித்து ஈரப்படுத்த வேண்டும். 4 கிழமைகளுக்குப் பின்னர் படங்கினை நீக்கிவிட்டு நிழலில் 3 மாதங்கள் உலர விட வேண்டும்.

மண்ணின் தன்மையையும் அமுக்கத்தின் அளவையும் பொறுத்து இக் கற்கள் 4 முதல் 10 MPa அளவான அமுக்கத்தைத் தாங்கவல்லவை. அதாவது 1 MPa என்பது 1 சதுர மீற்றர் பரப்பளவில் ஏறத்தாள 100 தொன் பாரத்தை வைப்பதற்குச் சமன்.

இக் கற்களைப் பயன்படுத்தி உறுதியான பாரமான கூரையைத் தாங்கக் கூடியதான மாடி வீட்டினைக் கட்டிக் கொள்ளலாம். Adobe கற்களைப் போலவே களிமண்ணால் இவற்றை ஒட்டிச் சுவர் அமைக்கலாம். கல்லை ஒட்டுவதற்கு முன்னர் ஒட்ட வேண்டிய பகுதியை நீரில் நனைத்து ஒட்டினால் உறுதியாக இருக்கும். சீமெந்துக் கற்களை விட இவை பாரமாக இருப்பதால் ஒரே தடவையில் ருவரைக் கட்டி எழுப்புவது நல்லதல்ல. 1 மீற்றர் உயரமாகக் கட்டியபின் உலர விட்டு அடுத்தநாள் தொடரலாம்.

இக் கற்களின் மேற்பரப்பு நேர்த்தியாக இருப்பதால் வெளிப் பரப்பில் எதுவும் பூசாது கற்களுக்கு இடையில் ஒட்டுவதற்காக பயன்படுத்திய களிமண்ணை மட்டும் மட்டமாகச் சுரண்டி விட்டால் அழகாக இருக்கும்.

பிரான்சில் ஒரு நிறுவனம் வித்தியாசமான முறையில் கற்களை வடிவமைத்துள்ளது. இவற்றை ஒட்ட வேண்டியதில்லை. ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் போதுமானது.

வெளிப் பூச்சை விரும்புபவர்கள் தமக்குப் பிடித்தமான வகையில் பூசி பெயின்ற் அடித்து விட்டால் மண் சுவர் என்றே சொல்ல முடியாது. இயற்கையான பூட்டுக்களும் உள்ளன. அவற்றில் ஒன்றையும் பார்க்கலாம்.

அமுக்கப்பட்ட மண்கற்கள் மழையில் இலகுவாகக் கரைந்து விடாது. இவற்றின் மேற்பரப்பு இறுக்கமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதால் நீர் இலகுவாக உள்ளே நுளைய முடியாது. ஆபிரிக்காவில் இவற்றைக் கொண்டு வெளி மதில்கள் அமைக்கப்படுகின்றன.

இவற்றின் திணிவு சீமெந்துக் கற்களை விட அதிகமாக இருப்பதுடன் கட்டப்படும் சுவர்கள் அதிகம் தடிப்பாகவும் இருப்பதால் சிறந்த ஒலித் தடுப்பாற்றலையும் வெப்பத் தடுப்பாற்றலையும் கொண்டுள்ளதுடன் உடைப்பதும் கடினமானதாக இருக்கும்.

சுவரை அமைக்கும்போது கீழுள்ள முறையில் கற்களை அடுக்கி தடிப்பான சுவரை அமைக்க வேண்டும். சிலர் இரண்டு கற்களாக அடுக்குவதற்குப் பதிலாக மூன்று கற்களாகவும் அடுக்குவார்கள். வெளிப்புறத்தில் வரும் மூன்றாவது அடுக்கினை இவ்வாறு அழகாக அடுக்கிக் கொள்ளலாம்.

இக் கற்களை அரிந்து கொள்வதற்குக் கையால் இயக்கப்படும் இயந்திரத்தை ஐரோப்பிய நாடுகளில் சுமார் 800 முதல் 5000 யூரோக்களுக்கு வாங்க முடியும். விலைக்கேற்றவாறு இயந்திரங்களின் திறனும் மேறுபடும். கீழுள்ள இந்த இயந்திரத்தை 3 பேர் சேர்ந்து – ஒருவர் மண்ணை நிரப்பவும் இன்னொருவர் அமுக்கம் செய்யவும் மூன்றாமவர் கற்களை அடுக்கவும் ஒரு நாளில் 400 கற்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

காணொளி பார்க்க
https://www.youtube.com/watch?v=QtlFTwKnzdA

சிலர் மண்ணுடன் 5 வீதம் சீமெந்தையும் சேர்த்துக் கொள்கின்றனர்.

இந்தக் காணொலியில் மின்சார இயந்திரம் இலகுவாகவும் விரைவாகவும் கற்களை உருவாக்குவதைப் பார்க்கலாம். இவ்வகை இயந்திரம் ஒன்றின் விலை ஏறத்தாள 7000 முதல் 15000 யூரோக்கள் ஆகும்.

காணொளி பார்க்க

இக் கற்கள் வர்த்தக முறையில் தயாரிக்கப்பட்டு அதிக விலைக்கு ஐரோப்பாவில் விற்கப்படுகின்றன.

எனது தெரிவு 100 வீதம் இயற்கையானதும் இலவசமானதுமான Adobe கற்களே. இன்று யாழ்ப்பாணத்தில் கட்டப்படும் மாடி அற்ற சாதாரணமான விசாலமான வீடொன்றைக் கட்டிக்கொள்ள Adobe கற்கள் பொருத்தமானவை.

அடுத்ததாகச் சுவருக்கு அழகையும் பாதுகாப்பையும் தரும் பூச்சுக்களைப் பார்ப்போம்.

மறக்காம ஷேர் பண்ணுங்க…..

தொடரும் …
நான் உங்கள் ஹரி
9865368997