மழைநீரை சேமிக்கும் வழிகள்

மழைநீரை சேமிக்கும் வழிகள்
Agriwiki.in- Learn Share Collaborate

மழைநீரை சேமிக்கும் வழிகள்

விவசாயிகள் மழைக்காலங்களில் பெரும் மழை நீரை சேமிக்கும் வழிகள்

கோடைஉழவு

விவசாயிகள் கோடை உழவின் மூலம் மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மையினை அதிரித்து மண்வளத்தினை பாதுகாக்கலாம். பொதுவாக களிமண் நிலங்களில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை சட்டிக்கலப்பை கொண்டு கோடையில் ஆழஉழவு செய்யவேண்டும். செம்மண் நிலங்களில் ஒன்று முதல் இரண்டு வருட இடைவெளியில் இத்தகைய ஆழஉழவு மழைநீர் சேமிப்பிற்கு உதவியாக இருக்கும்.

உழவு முறை

நாம் உழும்போது பயிரிடும்போதும் நிலத்தின் அமைப்பினை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். எப்போதும் உழவும் பயிர் சாலும் சரிவிற்கு குறுக்காகத்தான் இருக்க வேண்டும். உழவின் கரையும் பயிரின் கரையும் பெய்யும் மழை நீரின் வேகத்தினை கட்டுப்படுத்தி அதிக அளவு நீர் மண்ணின் உள்ளே செல்வதற்கு உதவியாக இருக்கும்.

அறைவட்ட கரைகள் போடுதல்

குறைந்த செலவில் மரத்திற்கு நீர் கிடைக்க வட்டப்பாத்திகள் ஒரு மீட்டர் வட்டத்தில் செடிகளைச் சுற்றி போடலாம் இது சமதளபூமிக்கு மிகவும் உகந்தது. ஆனால் சரிவான நிலத்தில் அரை வட்டத்திலோ அல்லது பிறைவட்டத்திலோ பாத்தி செய்து மழைநீரை சேமித்து மரங்களுக்கு கிடைக்கச் செய்யலாம்.

பண்ணைக் குட்டை அமைத்தல்

விவசாயிகளின் நிலங்களில் மழைநீரை தேக்கி வைப்பதற்கு நில அமைப்பிற்கு ஏற்ப சிறிய குட்டை அமைத்து அதில் சேகரிக்கப்படும் நீரை வறட்சிக் காலத்தில் பயிரின் முக்கிய பருவத்தில் நீர் பாசனம் செய்யலாம். பண்ணைக் குட்டையின் கொள்ளளவு ஒரு ஹெக்டேருக்கு சுமார் 250 கனமீட்டர் கொண்டதாக இருக்கலாம்.

கசிவு நீர் குட்டை

மழைநீர் செல்லும் ஓடைப்பகுதியில் கசிவு நீர்க்குட்டை அமைத்து அதில் மழைக்காலங்களில் மழைநீரைத் தேவையான அளவிற்கு தேக்கி விவசாயத்திற்கும், கால்நடைகளின் உபயோகத்திற்கும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் பயன்படுத்தலாம். இந்தக் குட்டையால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள கிணறுகள் பயன்பெறும்

சமமட்ட குழிகள் தோண்டுதல்:

மண் அதிக்கப்பட்ட தரிசு நிலங்களில் மண்வளப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தலாம். 30 செ.மீ அகலம் மற்றும் ஆழமுள்ள குழிகளை சமகோட்டில் தொடர்ச்சியாக தோண்டி ஓடும் நீரை தடுக்கலாம். இதில் காய்ந்த சருகு, இலை மற்றும் கழிவுகளை இட்டு நீர் ஆவியாதலை குறைக்கலாம். இம்முறை களிமண் நிலங்களுக்கு மிகவும் உகந்தது.

வயல் வரப்புகளை உயர்த்துதல்:

வயல் வரப்புகளை உயர்த்தி மழைநீரை வீணாக வெளியில் செல்வதைத் தடுக்கலாம் இதற்கு செம்மண்ணில் சரிவுப்பாத்தி முறையையும் களி மண்ணில் ஆழச்சால் அகலபாத்தி முறையையும் பின்பற்றலாம்.

நிலத்தைச் சமப்படுத்துதல்:

நிலத்தில் மேடு பள்ளம் இருந்தால் அதிக அளவில் தண்ணீர் குடிக்கலாம். ஒரு பக்கம் நிலம் காயும், மற்றொரு பக்கம் தண்ணீர் தேங்கி நிற்கும். ஆகையால் முதலில் நிலத்தில் மேடு பள்ளங்கள் இல்லாமல் நிரவி சமப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

மண் ஈரச் சேமிப்பு:

மண்ணில் செடியின் ஆழத்திற்கு உட்பட்ட இடங்களில் இருந்து மட்டும் 50 சதவீதம் தண்ணீர் ஆவியாகி விடுகின்றது. இலை, தழை, சருகு போன்ற நிலப்போர்வைகளைப் பயன்படுத்தி மண்ணின் ஈரப்பதம் ஆவியாகாமல் பாதுகாத்தல் வேண்டும்.

நீர் சேமிக்கும் முறை

மிகக் குறைந்த அளவு தண்ணீரை வைத்து வெங்காயம், தக்காளி, மக்காச்சோளம், பயறுவகைகள் மற்றும் கொடிவகை பயிர்களை சாகுபடி செய்யலாம்
தென்னை நார்க்கழிவு, கரும்புத்தோகை, போன்ற விவசாய கழிவுப்பொருட்களை பயன்படுத்தி நிலப்போர்வை செய்து நீர் ஆவியாவதைத் தடுக்கலாம்

சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் முறைகளைப் பயன்படுத்தி காய்கறி, பருத்தி, நெல், வாழை போன்றவற்றை சாகுபடி செய்வதன் மூலம் தண்ணீரை சேமிக்கலாம்.

தரிசு நிலங்களிலும், மலைப்பகுதியிலும்; மரங்களை நடவு செய்வதன் மூலம் மழை பெய்வதற்கு காரணமாகிறது. சுற்றுப்புற சூழல் மற்றும் நிலத்தடிநீர் ஆவியாகாமல் பாதுகாக்கப்படுகிறது.

~ ப.பி