மாற்றுக்கட்டுமானத்தில் நினைவில் கொள்ள வேண்டிய ஆறு விதிகள்

மாற்றுக்கட்டுமானத்தில் நினைவில் கொள்ள வேண்டிய ஆறு விதிகள்
Agriwiki.in- Learn Share Collaborate

மாற்றுக்கட்டுமானத்தில் கட்டும் முன் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஆறு விதிகள்

நீங்களோ உங்கள் குடும்பமோ இந்த மாற்றுக்கட்டுமானத்தை தேர்ந்தெடுக்கும் முன்பு நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் தான் என்ன?

1)உங்கள் இஞ்சினியரோ ஆர்கிடெக்டையோ இதை கட்டாயப்படுத்தி செய்ய சொல்கிறீர்களா என்று சிந்தியுங்கள். ஒரு இஞ்சினியரோ ஆர்கிடெக்டோ கட்டாயப்படுத்தி உங்கள் வீட்டை இப்படி கட்டி விட‌ இயலாதோ, அது போல இதுவும் சரியல்லவே. உங்களுக்கு எப்படி பழக்கப்பட்ட ஒன்றிலிருந்து மாறுபட எப்படி கடினமாக இருக்கிறதோ, அது போலத்தான் எல்லாரும். கட்டிடம் நன்றாக இருக்க வேண்டுமே என்று உங்கள் அக்கறையைப் போலவே அவர்களுக்கு இம்மாதிரி கட்டுமானத்தை திருப்திகரமாக செய்து விட முடியும் என்ற நம்பிக்கை முக்கியம். பல வருடங்கள் உழைத்து வாங்கிய நற்பெயரை ஒரு கட்டிடத்தில் தொலைத்து விட யாரும் விரும்ப மாட்டார்கள்.

2) நான் ஏன் இப்படி வீடு கட்ட வேண்டும் என்று எங்களிடம் கேட்காதீர்கள். அது நீங்கள் உங்களை கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. உங்கள் குடும்பம் முடிவு செய்ய வேண்டிய கேள்வி. இந்த சித்தாந்தத்தை உங்களை மூளைச்சலவை செய்து(நம்ம பாஷைல சொல்லணும்னா மண்டையக் கழுவி) எங்கள் சரக்கை விலை போகச் செய்வதல்ல எங்கள் நோக்கம்.

3) இதைப்பற்றி படிக்காமலோ, வேலை செய்யாமலோ, அல்லத் குறைந்து பட்ச ஈடுபாடு இல்லாத ஒரு இஞ்சினீயரோ ஆர்கிடெக்டோவிடம் சென்று இதைப்பற்றி நீங்கள் கேட்டால் – நீங்கள் அவரிடம் இருந்து பெறப்போகும் பதில் நீங்கள் கேட்க விரும்பியதே அன்றி புரிந்து கொள்ள அல்ல என்றறிக.

4) நம்மில் பலருக்கு வயதாக ஆக ஒரு விஷயத்தை புதிதாக கற்றுக்கொள்ளுதல் என்பது பிரம்ம பிரயத்தனம் மாதிரி தான். இதில் கற்ற விஷயங்களை மறந்து புதிதாக அதை காலத்திற்கு ஏற்ப கற்றுக்கொள்ளுதல் என்பது காளை மாட்டிலிருந்து பால் கறப்பதற்கு சமம்.

5) உண்மையை சொல்லப்போனால் இது கட்டுமானம் பற்றியே அல்ல. இது வாழ்வியல் முறை சார்ந்தது. வேல்யூ சிஸ்டம்ஸ் சார்ந்தது. இஞ்சினியருக்கோ ஆர்கிடெக்டுக்கோ இதில் பற்று இல்லையெனில் இந்த கட்டுமானத்தை தவிர்க்க நூறு காரணங்கள் இருக்கும். அதே போல, உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கோ இந்த விஷயங்களில் ஈடுபாடு இல்லையெனில், இவ்வகை கட்டுமானத்தை தவிர்க்க‌ உங்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும்.

6) எவ்வுளவு தான் இதைப்பற்றி படித்தாலும், புரிந்து கொள்ள முயன்றாலும் உங்களுக்கு கட்டிடம் இடிந்து விடும் என்றோ கரைந்து விடும் என்றோ பயம் இருப்பின், இவ்வகை கட்டுமானம் உங்களுக்கானது அல்ல. எல்லாருமே சந்தோஷமாக இருக்கவே வீடு கட்டி குடியேற நினைக்கிறோம். ஆனால், மாற்றுக்கட்டுமானத்தினால் அந்த முடிவே உங்களுக்கு உறுத்தல் எனில், நீங்கள் அதை தவிர்த்து விடுவது நல்லது.

வாழ்த்துக்கள்!

பேசுவோம்,