‘வளர்ச்சி’ மயக்கத்திலிருந்து விழித்தெழுங்கள்! எய்ம்ஸ் மருத்துவமனையை முன்வைத்து…

aiims-patna
Agriwiki.in- Learn Share Collaborate

‘வளர்ச்சி’ மயக்கத்திலிருந்து விழித்தெழுங்கள்!
எய்ம்ஸ் மருத்துவமனையை முன்வைத்து…

ப.கலாநிதி

தமிழ்நாட்டில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பதில் பல்வேறு தரப்பினரும் போட்டிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக தமிழக அரசு அனுப்பிய பரிந்துரைப் பட்டியலில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை மாவட்டம் தோப்பூர், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி ஆகியவை இடம் பெற்றிருந்தன. இவற்றில் காஞ்சிபுரம், ஈரோடு ஆகியவற்றை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

மீதமுள்ள இடங்களில், ‘மதுரையில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும்; இல்லாவிட்டால் பதவி விலகுவோம்’ என்று மதுரை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எந்தவொரு கொள்கை, கோட்பாடுகளுக்காகவும், மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காகவும் இப்படி அறிவிக்காத ‘மாண்புமிகு’க்கள், எய்ம்ஸ் மருத்துவமனை என்கிற ‘உன்னத’ கோரிக்கைக்காக இப்படி அறிவித்துள்ளனர்.

செங்கிப்பட்டியில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று செங்கிப்பட்டியில் அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து போராட்டம் நடத்தி இருக்கின்றனர். காவிரி, கச்சத்தீவு என எந்தவொரு வாழ்வாதாரப் பிரச்னையிலும் சட்டமன்றத்தில் ஓரணியில் நிற்காத திமுகவும், அதிமுகவும், காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக, செங்கிப்பட்டியில் கைகோர்த்து நின்றார்கள்.

புதுக்கோட்டையில் தான் அமைய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கையெழுத்து இயக்கத்தையும், அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்கண்ட செய்திகளைப் படிக்கும் போது எனக்கு வியப்பு மேலிடுகிறது. ‘எங்கள் ஊரில் கண்டிப்பாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் ‘என்று யாராவது போராடினால், அந்த ஊரில் குற்றங்கள் அதிகரித்துவிட்டன என்று பொருள் கொள்ளலாம். அதேபோல, ‘எங்கள் ஊரில் மருத்துவமனை அமைக்க வேண்டும்’ என்று போராடுவதாக இருந்தால், அந்த ஊரில் நோயாளிகளின் எண்ணிக்கையும், திடீரென இறப்பு விகிதமும் அதிகரித்திருக்க வேண்டும். மேற்கண்ட ஊர்களில் அப்படி ஏதும், நடந்து விட்டதாக ஒரு தகவலும் இல்லை.

இப்போது, என்னிடம் ஒரு கேள்வி இயல்பாக எழுகிறது. அந்தக் கேள்வியை ‘எய்ம்ஸ்’ காதலர்களை நோக்கிக் கேட்கிறேன். ‘உங்கள் எல்லோருக்கும் நலமான வாழ்க்கை வேண்டுமா, அல்லது மருத்துவமனை வேண்டுமா?’ என்பதே அந்தக் கேள்வி.

‘நலமான வாழ்க்கைதான் வேண்டும்’ என்பது உங்களுடைய பதிலாக இருந்தால், அதற்கு நூறு வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றில் ஒரே ஒரு வாய்ப்பை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாலும்கூட, உங்களுக்கு நலமான வாழ்க்கை வழங்கப்படும் அல்லது கிடைத்துவிடும்.

‘மருத்துவமனைதான் வேண்டும்’ என்பது உங்களுடைய பதிலாக இருந்தால், பின்வரும் புள்ளிவிவரங்கள் உங்களுக்கானவை.

மதுரை மாவட்டத்தில், மதுரை மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த இராஜாஜி அரசு மருத்துவமனை, கிறிஸ்டியன் மிஷன் மருத்துவமனை, உசிலம்பட்டி – மேலூர் – திருமங்கலம் ஆகிய ஊர்களில் அரசு தலைமை மருத்துவமனைகள், மதுரையில் குடும்ப நல மருத்துவமனை, 17 இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 தனியார் தொண்டு நிறுவன மருத்துவமனைகள், 48 தனியார் மருத்துவமனைகள் (பதிவு செய்யப்பட்டவை), 20 அரசு சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள், திருமங்கலத்தில் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த ஓமியோமதி மருத்துவமனை ஆகியவை இருக்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த அரசு மருத்துவமனை, புகழ்பெற்ற இராஜா மிராசுதார் மருத்துவமனை, கும்பகோணம் – பட்டுக்கோட்டை – பேராவூரணி ஆகிய ஊர்களில் அரசு தலைமை மருத்துவமனைகள், அதிராமபட்டினம் – பாபநாசம் – திருவிடைமருதூர் – ஒரத்தநாடு ஆகிய ஊர்களில் குடும்ப நல மருத்துவமனைகள், 8 இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 18 தனியார் மருத்துவமனைகள் (பதிவு செய்யப்பட்டவை), 20 அரசு சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் ஆகியவை இருக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை – அறந்தாங்கி – திருமயம் ஆகிய ஊர்களில் அரசு தலைமை மருத்துவமனைகள், வளையபட்டியில் குடும்ப நல மருத்துவமனை, 2 தொண்டு நிறுவன மருத்துவமனைகள், 11 தனியார் மருத்துவமனைகள் (பதிவு செய்யப்பட்டவை), 22 அரசு சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் ஆகியவை இருக்கின்றன.

இத்தனை மருத்துவ வசதிகளாலும் கிடைக்காத உடல் நலமும், நோய்களுக்கான தீர்வும்தான் எய்ம்ஸ் மருத்துவமனையால் கிடைத்துவிடும் என நீங்கள் நினைக்கிறீர்கள். மருத்துவமனைகளால் நோய்களைத் தீர்த்துவிட முடியும் என்றால், புதிய மருத்துவமனைகளுக்கான தேவையே இருக்கக் கூடாது.

உடலைப் புரிந்துகொள்வதும், வாழ்க்கை முறையின் மாற்றத்தைக் கொண்டு வருவதுமே, இப்போதையத் தேவை. அப்படிச் செய்வதன் மூலம் எந்த மருத்துவ முறையையும் கடைப்பிடிக்காமல், மருத்துவமே தேவைப்படாமல் நலமாக வாழ முடியும். அப்படி வாழ்பவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.

ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைந்துள்ள டெல்லி, புவனேஸ்வர், ஜோத்பூர், பட்னா, ராய்ப்பூர், ரிஷிகேஷ், போபால் ஆகிய ஊர்களில் எல்லாம் எல்லா மக்களும் நோய்நொடியின்றி நலமாக வாழ்கிறார்களா என்று யோசித்துப் பாருங்கள். அந்த ஊர்களில் மட்டும் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துவிட்டதா எனத் தேடிப் பாருங்கள். (எய்ம்ஸ் என்பது அடிப்படையில் மருத்துவக் கல்லூரி. அதனுடன் இணைந்த மருத்துவமனையில் பொதுமக்கள் கட்டணம் செலுத்தி, சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும்.)

2012ம் ஆண்டிற்கான மத்திய திட்டக்குழுவின் அறிக்கையின்படி, சுகாதாரத்தில் கேரளா முதல் இடத்திலும், கோவா இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் ஆந்திரா எட்டாவது இடத்திலும் உள்ளன. ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பீகார் 19ஆவது இடத்திலும், மத்தியப் பிரதேசம் 20ஆவது இடத்திலும் தான் இருக்கின்றன.

நிலைமை இப்படி இருக்க, எதிர்காலத்தில் அமைக்கப்படுவதற்கான வரைவு பட்டியலில் தமிழ்நாடு, கேரளா (கோழிக்கோடு), ஆந்திரா (மங்களகிரி) ஆகிய மாநிலங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏதாவது ஓர் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துவிட்டால், என்னவெல்லாம் செய்யலாம் என யோசித்துப் பார்த்தேன். கே.புதுப்பட்டி சாலையோ, கந்தர்வகோட்டை சாலையோ, மானாமதுரை சாலையோ தேசிய நெடுஞ்சாலையாக மாறலாம். அங்கெல்லாம் நிலத்தின் மதிப்பு உயரும், நில வணிகம் செழிக்கும், கடைகள் கட்டலாம், தங்குமிடங்கள் – விடுதிகள் கட்டலாம், வீடுகளின் வாடகையை உயர்த்தி வாடகைக்கு விடலாம், இப்படி இன்னும் எத்தனையோ ‘லாம்கள்’.

ஆனால், பிரம்மாண்டமான கட்டடங்கள், அவற்றின் நிர்வாகத்திற்கான துணைக் கட்டடங்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் எனப் பலவிதமான கட்டுமானப் பணிகளுக்கும், அவற்றிற்கு வந்து செல்வோருக்கும், தங்கிச் செல்வோருக்குமான தண்ணீர் எங்கிருந்து எடுக்கப்படும்? நிலத்தடி நீரில்தானே கைவைப்பீர்கள்?

எங்கள் ஊருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும் என்றுப் போராடுகிறவர்களே, உங்கள் ஊருக்கு அடியில் நிலத்தில் இவற்றுக்கெல்லாம் தண்ணீர் இருக்கிறதா? அடுத்த 40, 50 ஆண்டுகளுக்கு உங்களுக்கும், உங்கள் சந்ததியினருக்கும் பற்றாக்குறை ஏற்படாமல் தண்ணீர் கிடைக்குமா? லாரிகளில் கொண்டு வருவோம் என்றாலும், வேறு ஏதோ ஓர் ஊரின் வளத்தைச் சுரண்டுவீர்கள், அப்படித்தானே?

தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் ஓர் இடத்தில் குவியும் குப்பைகளை எங்கு கொட்டுவார்கள்? மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை எங்கு கொட்டுவார்கள்? அவற்றிற்கெல்லாம் உங்களது வீட்டு வாசல் புறங்களையும், கொல்லைப் புறங்களையும் தயார் செய்து வைத்துவிட்டீர்களா?

மருத்துவமனை அமைந்தால், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று வழக்கம்போல கம்யூனிஸ்டுகள் சொல்வார்கள். உங்கள் எல்லோருக்கும் மருத்துவமனையில் ‘டீன்’ வேலையா கொடுக்கப் போகிறார்கள்? உரிய ஏஜென்ஸிகள் மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை நிரப்பிவிட்டு, கடைநிலை ஊழியர்களாகத் தான் உள்ளூர் ஆட்களை ஒப்பந்தத்திற்கு எடுப்பார்கள். ஏற்கனவே விவசாயம் செய்து கொண்டும், ஆடு, மாடுகளை வளர்த்துக் கொண்டும், சுயதொழில் செய்து கொண்டும் யாருக்கும் அடிபணியாமல் தற்சார்பாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை, ஒப்பந்தத் தொழிலாளர்களாக்குவதற்குப் பெயர்தான் வேலைவாய்ப்பா?

வளர்ச்சி, வளர்ச்சி என்று வெறியாட்டம் போட்டது, போதும். அடுத்த தலைமுறைக்கு பசியாற நல்ல உணவில்லை, குடிக்க நல்ல தண்ணீரில்லை, சுவாசிக்க நல்ல காற்று இல்லை. ஒரு பருவத்தில் மழை பொய்த்துவிட்டால், ஓராண்டு காலம் காவிரி ஆறு வற்றிவிட்டால், தாகத்தில் செத்துப் போவதைத் தவிர வேறு வழியில்லை.

அரசுகள், கட்சிகள், அமைப்புகள், நிறுவனங்கள், தனிநபர்கள் என யாரிடமும் இதற்குத் தீர்வு இல்லை. நிலைமை கை மீறிப் போய்விட்டது.

உங்களின் பாதம் பணிந்து வேண்டுகிறேன். வளர்ச்சியைத் தூக்கி வீசிவிட்டு, இயற்கைக்குத் திரும்புங்கள். அடுத்த தலைமுறைக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுங்கள்.