வெள்ளாடு வளர்ப்பு

Agriwiki.in- Learn Share Collaborate
மிகக்குறைந்த செலவில் பசு, எருமை போன்ற கால்நடைகளில் வளர்க்க முடியாத சூழலில் கூட வெள்ளாடுகளை வளர்க்கலாம். இதற்கு முதலீடு மிகவும் குறைவு. மேலும் வெள்ளாடுகள் மழை அளவு குறைவாக உள்ள வறண்ட நிலங்களில் கூட வளர்த்தல் எளிது. எனவே தான் வெள்ளாடுகளை “ஏழைகளின் பசு” என்று அழைக்கின்றனர்.
வெள்ளாடுகள் (மாமிசம்) இறைச்சி மற்றும் பால் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன.
வெள்ளாடு வளர்ப்பின் நன்மைகள்
1 வெள்ளாடு வளர்ப்பில் முதலீடு மிகவும் குறைவு.
2. இவை அளவில் சிறியதாக உள்ளதால் கொட்டகைப் பராமரிப்புச் செலவு குறைவு.
3. ஆடுகள் மிக்குறைந்த காலத்தில் 10-12 மாதங்களில் பருவ வயதை அடைந்து விடும். இவை 16-17 மாதங்களில் குட்டி ஈன்று விடும்.
4. பொதுவாக ஆடுகள் ஒரு தருணத்தில் 2 குட்டிகள் மட்டுமே போடும். 3 அல்லது நான்கு குட்டிகள் போடுவது மிகவும் அரிது.
5.வறண்ட நிலங்களில் மற்ற கால்நடையை விட வெள்ளாடு வளர்ப்பே சிறந்ததாகும்.
6. ஆடுகள், பலவகைப்பட்ட பயிர்களையும் உண்பவை. இவை முட்புதர்கள், பூடுகள், வேளாண் பயிர்க்கழிவுகள் மேலும் வேளாண் உப விளைப்பொருட்கள் போன்ற அனைத்தையும் உண்பதால் தீவனப் பராமரிப்புக் குறைவு.
7. ஆட்டு இறைச்சியில் பன்றி இறைச்சியை விட கொழுப்பு குறைவாகவே உள்ளது. மேலும் இதன் குளிர்ச்சி மற்றும் மென்று உண்பதில் எளிதாகையால் வெயில் காலங்களுக்கு மிகவும் ஏற்றது.
8. பசும்பாலை விட வெள்ளாட்டுப்பால் எளிதில் செரிக்கக்கூடியது. இதில் ஏதும் ஒவ்வாமை ஏற்படுவதில்லை. மேலும் வெள்ளாட்டுப்பாலில் சிறிய கொழுப்பு திரள்களே உள்ளன. பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பொருட்கள் அதிகளவு உள்ளதால், நோய் எதிர்ப்பாற்றல் குறைவு.
9. வெள்ளாடு செம்மறி ஆட்டுடன் ஒப்பிடும் போது 2.5 மடங்கு பொருளாதார அளவில் மிதவெப்பம் பகுதிகளுக்கு ஏற்றவை.
10. ஆட்டிலிருந்து கிடைக்கும் தோல், முடி ஆகியவையும் பதனிடு தொழிற்சாலைகளில் பயன்படுகின்றன.
கிராமப்புறப் பகுதிகளில் கூலி வேலை செய்வோர் மற்றும் ஏழை மக்களுக்கு இவ்வளர்ப்பு மிகவும் உகந்தது. கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பால் பொருட்கள் சம்பந்தமான குடிசைத் தொழில்களின் வளர்ச்சிக்கு இந்த ஆடு வளர்ப்பு பெரும் உதவி புரிகின்றது.
வெள்ளாட்டு இனங்களின் தேர்வு :
மலபாரி (டெல்லிச்சேரி) அட்டபாடி, சேனன் மலபாரி கலப்பு இனங்கள் அதிகம் காணப்படுகின்றன.
வயது முதிர்ந்த ஆடுகள் வாங்கும் போது அதன் பால் உற்பத்தித் திறனை அறிந்த பின் வாங்குதல் நலம். ஒரு நாளின் உற்பத்தி அளவு என்பது அடுத்தடுத்த இரண்டு கறத்தலில் பாலின் அளவு 0.5 கிகி அதிகமாக இருப்பதாகும். இந்த அளவுக் குட்டிகள் ஊட்டியது போல மீதமுள்ள அளவாகும்.
இளம் ஆடுகளை வாங்கும் போது அதன் குட்டி ஈனும் உற்பத்தி அளவைப் பார்த்து வாங்குதல் வேண்டும். அதோடு ஆடு எந்த ஒரு உடல் குறைபாடும் இன்றி இருக்கவேண்டும்.
ஆடுகளின் 120 நாள் பால் உற்பத்தி அளவை வைத்தும், 2 வருட வயதில் அது ஈன்ற குட்டிகள் எண்ணிக்கையை வைத்தும் ஆட்டின் செயல்திறனைக் கணிக்கலாம்.
வெள்ளாடு இனங்கள்
தமிழ்நாட்டில் மூன்று வகையான வெள்ளாட்டு இனங்கள் உள்ளன.
கன்னி ஆடுகள்
கொடி ஆடுகள் மற்றும்
சேலம் கருப்பு
கன்னி ஆடுகள்:
இவை திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படும். உயரமான ஆடுகள், கருமை நிறம் கொண்டது. முகத்திலும், காதுகளிலும், கழுத்திலும் இரு வெள்ளை கோடுகள் இருக்கும். அடி வயிற்றுப் பகுதி மற்றும் கால்களின் உட்புறத்தில் வெள்ளைநிறம் காணப்படும். இத்தகைய நிறம் அமையப்பெற்ற ஆடுகளை ‘பால்கன்னி’ என்றும், வெண்மை நிறத்திற்குப் பதிலாக செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை ‘செங்கன்னி’ என்றும் அழைக்கப்பர்.
கொடி ஆடுகள்:
இவை தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, எட்டயபுரம் மற்றும் விளாத்திக்குளம் வட்டங்களில் பெரும்பாலும் காணப்படுகிறது. மிக உயரமான இவ்வகை ஆடுகள் நீண்ட கழுத்தும், உடலும் கொண்டவை. வெள்ளையில் கருமை நிறம் சிதறியது போன்ற நிறம் கொண்ட ஆடுகளை ‘கரும்போரை’ என்றும், வெள்ளையில் செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை ‘செம்போரை’ என்றும் அழைப்பர்.
சேலம் கருப்பு:
இந்த வகையான ஆடுகள் சேலம் மாவட்டத்தில் குறிப்பாக ஓமலூர், மேச்சேரிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. மேலும் தர்மபுரி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை பெயருக்கேற்றபடி முற்றிலும் கருமை நிறம் கொண்டவை. உயரமானவை மற்றும் மெலிந்த உடலமைப்பு கொண்டவை.
இம்மூன்று இனங்களும் இறைச்சி மற்றும் தோலுக்காகவே பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது.
இந்திய வெள்ளாட்டு இனங்கள்
இந்தியாவில் மட்டும் 19 அறியப்பட்ட இனங்கள் நாடு முழுவதும் பரவிக் காண்ப்படுகின்றன. இவை காணப்படும் இடங்களைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன.
ஹிமாலயன் இனங்கள் (மலைப்பிரதேசங்களில காணப்படுபவை)
இந்த இன ஆடுகள், ஜம்மு மற்றும் காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசத்தின் சில இடங்களில் காணப்படுகின்றன.
ஹிமாலயன் இனம்:
இவ்வின ஆடுகள் வெள்ளை நிற முடியுடன் மிக வலிமையானவை. இவை காடி, ஜம்பா, காஷ்மீரி என்று வளரும் இடங்களைப் பொறுத்து பல பெயர்களில் வழங்கப்படுகின்றன. இவை காங்ரா, குளுவாலி, சம்பா, சிர்மூர், சிம்லா, ஹிமாச்சலப்பகுதி மற்றும் ஜம்முவின் சில பகுதிகளில் பரவியுள்ளது. ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட ஆடுகள் மலைகளில் வண்டி இழுப்பதற்கும் பயன்படுகின்றன.
பாஸ்மினா:
இவை சிறிய சுறுசுறுப்பான ஆடுகள் 3400 மீ ஹிமாலய மலை உயரங்களில் லக்சத் தீவுகள் மற்றும் ஸ்பிட்டி பள்ளதாக்குகளில் பரவுயுள்ளன. அதிகத் தரமுள்ள மென்மையான வெதுவெதுப்பான துணி தயாரிக்கத் தேவையான ரோமங்களைக் கொண்டுள்ளன. பாஸ்மினாவின் உற்பத்தி 75-150 கி வரை இருக்கும்.
ஜமுனா பூரி:
உத்திரப்பிரதேசத்தின் “எட்டாவா” மாவட்டத்தைச் சேர்ந்த இவ்வினம் மிகப்பெரிய தொங்கும் காதுகளையும், நல்ல உயரமும் உடையவை. இது ரோமன் மூக்குடன் நீளமான அடர்ந்த முடியை உடையது. கொம்புகள் சிறியவையாக தட்டையாக இருக்கும். கிடா ஆடுகள் 65-86 கிலோ எடையும் பெட்டை ஆடுகள் 45-61 கிலோ எடையும் கொண்டிருக்கும். தினமும் 2.25 – 2.7 கி.கி பால் தரக்கூடியது. இதன் பால் உற்பத்தி 250 நாட்களில் 250-300 கி.கி வரை 3.5 சதவிகிதம் கொழுப்புச் சத்துடன் இருக்கும். இந்த இனங்கள் இங்கிலாந்தின் ‘ஆங்கிலோ நுபியன்’ என்னும் இனத்தை உருவாக்க கலப்பின ஆடாகப் பயன்படுத்தப்படுகிறது.
பீட்டல்:
இது முக்கியமாக பஞ்சாபில் காணப்படுகிறது. ஜமுனாபுரியிலிருந்தே இவ்வினம் உருவாக்கப்படுகிறது. சிவப்பு நிறத்தில் வெள்ளை பொட்டுக்களுடன் கூடியது. கிடாக்கள் 65-85 கிலோவும், பெட்டை ஆடுகள் 45-61 கி.கி எடையும், பால் அளவு நாளொன்றுக்கு 1 கி.கி அளவும் இருக்கும். கிடாக்கள் தாடியுடன் இருக்கும்.
பார்பரி:
இவ்வினம் உத்திரப் பிரதேசத்தின் எட்டாவா, எட்டா, ஆக்ரா, மதுரா மாவட்டங்களிலும் கமல், பானிபட், சோடக் பகுதிகளிலும் (ஹரியானா) காணப்படுகிறது. இது சிவப்பு, வெண்மை நிறங்களில் உள்ளது. கொம்புகள் நீண்டும், உரோமங்கள் குட்டையாகவும் உள்ள இவ்வாடுகள் அளவில் சிறியவை. கிடா ஆடுகள் 36-45 கிலோவும், பெட்டை ஆடுகள் 27-36 கிலோ எடையும் கொண்டவை. இவைக் கொட்டில் முறையில் பொதுவாக வளர்க்கப்படும். பால் உற்பத்தி 0.90 -1.25 கி.கிமும் கொழுப்புச்சத்து 50 சதவிகிதம் அளவும் பால் தரும் காலம் 108 நாட்களாகவும் இருக்கும். இவை 12-15 மாதங்களுக்கு இரு முறை மட்டுமே குட்டி போடுபவை.
மத்தியப்பகுதிகளில் காணப்படுபவை
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம். குஜராத், மஹாராஷ்டிரா, மார்வாரி, மெஹ்சேனா மற்றும் ஷால்வாடி போன்ற இடங்களில் இருக்கும் ஆடுகள் இவ்வகையைச் சார்ந்தவை. இவ்வாடுகள் ஜமுனாபுரியிலிருந்து உருவானவை. இதன் பால் உற்பத்தி நாளொன்றுக்கு 0.75 – 1 கி.கி.
பெராரி:
நாக்பூர், மகாராஷ்டிராவின் வார்டா மாவட்டம், மத்தியப் பிரதேசத்தின் நினார் மாவட்டங்களில் பரவியுள்ளன. இவை உயரமான, கருப்பு நிறமுடையவை. பெட்டை ஆடுகள் நாளொன்றுக்கு 0.6 கிகி பால் தரக்கூடியவை.
கத்தை வாரி:
இது கட்ச், வடக்கு குஜராத், ராஜஸ்தான் பகுதிகளை தாயகமாகக் கொண்டது. இவ்வகை ஆடுகள் கறுப்பு நிறத்தில் கழுத்தில் சிவப்பு நிறமுடன் காணப்படுகிறது. பெட்டை ஆடுகளின் பால் அளவு நாளொன்றுக்கு 1.25 கி.கி
தென் மாநிலங்களில் காணப்படுபவை
மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் காணப்படும் இனங்கள் இவ்வகையாகும்.
சுர்தி:
இவ்வின ஆடுகள் பெராரி போன்று குட்டையான கால்களையும் வெள்ளை நிறத்தையும் உடையவை. இவை பாம்பே நாசிக், சூரத்தில் அதிகமாக உள்ளன. பால் உற்பத்தி நாளொன்றுக்கு 2.25 கி.கி.
மலபார் (அ) தலச்சேரி:
வெள்ளை மற்றும் பழுப்பு, கறுப்பு நிறங்களில் காணப்படும். 2-3 குட்டிகள் போடவல்லது கிடாக்கள் 40 / 50 கிலோ எடையும், பெட்டை ஆடுகள் 30 கிலோ எடையும் கொண்டவை. நன்றாகப் பால் கொடுக்கக்கூடிய இனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.