ஆமணக்கு பயிர் செய்யுங்கள்

ஆமணக்கு பயிர் செய்யுங்கள்
Agriwiki.in- Learn Share Collaborate

ஆமணக்கு பயிர் செய்யுங்கள்

இந்த ஆண்டில் மழை குறைவாகவே இருக்கும் என பஞ்சாங்கம் சொல்கிறது.

நீர் தேவை குறைவான, அதே நேரத்தில் சந்தை தேடும் பொருள்களை பயிர் செய்ய தேர்ந்தெடுக்க வேண்டும்.

இருக்கும் நீருக்கு ஏற்ப கொஞ்சமாக காய்கறிகள் பயிர் செய்யுங்கள்.

கொஞ்சம் பப்பாளி, கொஞ்சம் முருங்கை (கீரைக்காவும்).

இப்படி உங்களுக்கு வருவாய் தரும் பயிர்களை செய்யுங்கள்.

கறவை வைத்திருப்பவர்கள் தீவனத்துக்கு முன்னுரிமை கொடுங்கள்.

மீண்டும் நினைவுறுத்த எண்ணுவது ஆமணக்கு.

இதற்கான நீர் தேவை குறைவு. சந்தை விலையும் கிலோ ₹50 என்ற அளவில் தொடர்ந்து உள்ளது.

இதற்கான ஏற்றுமதி வாய்ப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனால் விலையில் அதிகம் மாற்றம் இருக்காது.

GCH4 என்ற வீரிய ஒட்டு விதைகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பயிர் செய்யப் படுகிறது. நல்ல பலனை கொடுக்கிறது.

அதிக பட்சமாக ஏக்கருக்கு 1200கிலோ அளவுக்கு மகசூல் கொடுக்கும்.

இப்போதைய ஈரத்தை பயன்படுத்தி ஐந்து கலப்பை கொண்டு உழவு செய்து வையுங்கள். தொழு உரம் முடியும் அளவுக்கு போட்டு ரொட்டோவேட்டர் கொண்டு மண்ணில் கலந்து விடுங்கள்.

ஐந்து அடி பார் அமைத்து 3′ ஒரு செடி இருக்கும் படியாக விதையை நடவு செய்யுங்கள்.

மழை பெய்தவுடன் விதைகள் முளைக்கும். (சென்ற ஆண்டு நண்பரின் தோட்டத்தில் விதைகளை நடவு செய்து ஒரு மாதம் கழித்துதான் மழை வந்தது. ஆனாலும் எல்லா விதைகளும் முளைத்தது. ஆனால் விதைகளை நனைந்து நடவு செய்யாதீர்கள்).

10 நாட்களில் செடிகள் தெரியும். செடிகளை சுற்றி ஒரு அடிக்கு களைகளை எடுத்து விடுங்கள். ஒரு மாதம் வரை செடியின் வளர்ச்சி குறைவாகவே இருக்கும்.

ஒரு மாதம் கழித்து பலர் டில்லர் கொண்டு இடையுழவு செய்து விடுங்கள். இனி வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.
இதற்கு மேல் களைகள் செடியின் வளர்ச்சிக்கு தடையாக இருக்காது.
இந்த நிலையில் தொழு உரம் செடிக்கு செடி வைத்து செடியை சுற்றி நன்றாக மண் அணையுங்கள். இது பின்னால் செடி சாயாது இருக்கும்.

60 நாள் முதல் குலை தோன்றும். இது சுமார் இரண்டு அடி நீளம் இருக்கும். பின்னர் வரும் குலைகள் அளவு சிறிதாக இருக்கும்.

சிவப்பு நிறப்பூக்கள் பெண் பூக்கள். இது நிறைய தோன்ற 30வது நாளில் பஞ்சகவியம் 10% கலவையை தெளித்து விடுங்கள். மீண்டும் ஒருமுறை தெளியுங்கள்.
100வது நாள் முதல் குலைகளை அறுவடை செய்யலாம்.

நீர் வசதி உள்ளவர்கள் 30வது நாட்களுக்கு பின் ஈரப்பதம் நன்றாக இருக்கும் படியாக நீர் பாய்ச்சுங்கள்.

வைகாசி நல்ல பட்டம். பூக்கும் தருணத்தில் மழை இல்லாமல் இருந்தால் மகசூல் கூடும். அதனால் வைகாசியில் பயிர் செய்யுங்கள்.

ஆமணக்கு களையை விட வேகமாக வளரும் தன்மையுடையது. நிறைய காய்ந்த சருகுகளை உருவாக்கி மண்ணை வளப்படுத்துகிறது. தரிசாக இருக்கும் நிலங்களில் இதன் விதைகளை வீசியெறிந்தால் கூட அவைகள் முளைத்து மண்ணை வளப்படுத்தும். வளர்ந்த பிறகு வெட்டி அடித்து தூளாக்கி மண்ணுக்கே திருப்பி கொடுத்து நம் மண்ணில் ஆர்கானிக் கார்பனின் அளவை அதிகப்படுத்தலாம்.

வாழ்த்துகள்.