கலப்பு தீவனம் தயாரிப்பது எப்படி

கால்நடைகளுக்கு கலப்பு தீவனம் தயாரிப்பது எப்படி
Agriwiki.in- Learn Share Collaborate

கலப்பு தீவனம் தயாரிப்பது எப்படி?
கோவை கால்நடை பயிற்சி மையத்தில் ஆலோசனை..!!

வீடுகளில் எளிய முறையில் நாம் வளர்க்கும் கால்நடைகளுக்கு கலப்பு தீவனம் தயாரிக்க, கோவை கால்நடை பயிற்சி மையத்தில் ஆலோசனை வழங்கப்படுகிறது.

கலப்பு தீவனத்தை, கடைகளில் வாங்கி மாடுகளுக்கு உணவாக கொடுப்பதை காட்டிலும், தீவனங்களின் அளவுக்கேற்ப வீடுகளிலே தயாரிக்க இயலும்.

மாடுகளின் செரிமான முறை, தீவனத்தில் உள்ள சத்துக்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, எடைக்கேற்ப தயாரிப்பதன் மூலம், மாடுகளுக்கு சத்துள்ள மாற்று தீவனத்தை தயாரிக்க முடியும்.

கலப்பு தீவன தயாரிப்பு குறித்து, கால்நடை பயிற்சி மையத்தில், மாதிரிகள் தயாரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதில், மலிவாக கிடைக்கும் தீவனங்களான, சோளம், மக்காச்சோளம், கம்பு, ராகி, பயிறு வகைகள், புண்ணாக்கு, தவிடு, தாது உப்புகள் மற்றும் சமையல் உப்பு மற்றும் கரும்பு சர்க்கரை ஆகியவை கலந்து தயாரிக்கப்பட்டது. இந்த தீவன மாதிரியை, கறவை மாடுகளுக்கு உணவாக அளித்தில் நல்ல பலன். இதில், முன்பை காட்டிலும் அதிகளவு பால் உற்பத்தியாவதும், மாடுகள் ஆரோக்கியமாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகையில்:-

10 கிலோ கலப்பு தீவனம் தயாரிக்க, நான்கு கிலோ தானியங்கள், மூன்று கிலோ புண்ணாக்கு, 2.5 கிலோ தவிடு, 250கிராம் நாட்டு சர்க்கரை மற்றும் 100 கிராம் தாது உப்பு கலவை மற்றும் 150 கிராம் சமையல் உப்பு ஆகியவற்றை சேர்த்து, பொடியாக அரைத்து, மாடுகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

தீவன தட்டுப்பாடு ஏற்படும் சமயத்தில், மாடுகளுக்கு உணவாக கொடுப்பதால், சத்துக்குறைபாடு பிரச்னை ஏற்படுவதை பெருமளவு குறைக்க முடியும்.

கூடுதல் தகவலுக்கு, கால்நடை பயிற்சி மையத்தை நேரிலோ அல்லது 0422 266 9965 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்’ என்றனர்.

தொகுப்பு : நாட்டு மாடுகளை வளர்ப்போம் முகநூல் குழு.