கோழிகளில் உருண்டை புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்

கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் நோய்கள்
Agriwiki.in- Learn Share Collaborate
கோழிகளில் உருண்டை புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்

கோழிகளை உருண்டை புழுக்கள் அதிகம் தாக்குகின்றன. இந்த புழுக்களால் கோழிகளின் வளர்ச்சி, முட்டை உற்பத்தி மற்றும் ஆரோக்கியம்  பாதிக்கப்படுகிறது. அதை கட்டுப்படுத்தும் முறை பற்றி பார்ப்போம்.

கோழிகளை சிங்காமஸ் டிரக்கியே எனப்படும் உருண்டை புழுக்கள் பெருமளவில் தாக்குகின்றன. இந்த உருண்டை புழுக்கள் கோழி விழுங்கும் போது, அவை அதன் மூச்சுக்குழாயில் முட்டைகளை இடுகின்றன.

8 முதல் 10 நாட்களில் கருவாகி நோயை ஏற்படுத்தும். மேலும் இளம் புழுவாக மாறி கோழிகளின் எச்சத்துடன் வெளிவருகின்றன. இந்த இளம் புழுக்களை இடைநிலை உயிரிகள் எனப்படும் நத்தை, இலை அட்டை போன்ற உயிரினங்கள் உட்கொள்கின்றன.

இந்த இடைநிலை உயிரிகளை கோழிகள் உண்கின்றன. அப்போது மீண்டும் கோழிகளின் உடலுக்குள் போகும், இந்த புழுக்கள் மூச்சுக்குழாயில் முட்டையிட்டு கோழியின் மூச்சுக்குழலை தாக்குகிறது.

கருமுட்டை :

பொதுவாக, உருண்டை புழுவால் பாதிக்கப்பட்ட கோழிகளை மற்ற நோய்கள் எளிதில் தாக்கும். இந்த புழுக்கள் குடல் பகுதியில் அலைந்து திரிந்து சில சமயங்களில் கருமுட்டை குழலுக்கும் போகும்.

இதனால் கோழிகளின் முட்டைக்குள்ளும், இந்த புழுக்களை நாம் பார்க்க முடியும். இந்த வகை புழுக்கள் கோழிகளின் குடலில் அதிக எண்ணிக்கையில் பெருகிவிடும் போது குடலின் உட்பகுதியை அடைத்து கோழிகளின் இறப்புக்கும் காரணமாகிறது.

இந்த புழுக்களால் பாதிக்கப்பட்ட கோழிகள் வாயை திறந்து மூச்சு விடும். இந்த புழுக்கள் அதிக அளவில் பெருகும் போது கோழிகள் மூச்சு விட சிரமப்படுவதால் ஒரு வித உறுமல் சத்தத்துடன் மூச்சு விடும். பாதிக்கப்பட்ட கோழிகளில் மூச்சுதிணறல் ஏற்பட்டு இறப்பு நேரிடும் அபாயம் உள்ளது.

உருண்டை புழுக்கள் கோழிகளின் உடலுக்குள் செல்வதை தடுக்கும் வகையில் மண்புழு, நத்தை மற்றும் இலை அட்டை போன்ற இடைநிலை உயிரிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புறக்கடை கோழிகளில் உருண்டை புழுக்கள் வராமல் தடுக்கவும், அவற்றை கட்டுப்படுத்தவும் சரியான தீவன பராமரிப்பு அவசியம்.

இதற்கு கோழிகளின் தீவனத்தில் எல்லாவிதமான சத்துக்களும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். போதுமான அளவு உயிர்சத்துக்கள் ஏ மற்றும் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை தீவனத்தில் இருக்க வேண்டும்.

கட்டுப்படுத்தும் முறை :

கோழிகளில் உருண்டை புழுக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த ஆழ்கூளத்தை ஈரமில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

ஆழ்கூளத்தை மாற்றும் போது அதனை முழுவதுமாக மாற்ற வேண்டும். கோழிகள் அடைக்கும் இடங்களில் போதிய இடவசதி இருக்குமாறு அமைக்க வேண்டும்.

புறா மற்றும் பிற பறவை இனங்கள் கோழிப்பண்ணைக்கு அருகில் வராதபடி பார்த்து கொள்ள வேண்டும். அவற்றின் மூலம் உருண்டை புழுக்களின் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

கோழிகளின் எச்சத்தை அவ்வப்போது அகற்றி சுற்றுப்புறத்தை சுகாதாரத்துடன் வைத்து கொள்ள வேண்டும்

புதிதாக உழவு செய்த வயல்களின் மண்புழுக்கள் மற்றும் இடைநிலை உயிரிகள் அதிகமாக இருப்பதால் அங்கே கோழிகளை மேய விடுவதை தவிர்க்க வேண்டும்.

புதிய கோழிகளை அடைக்கும் முன் பண்ணையை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

கோழிகளை ஒரே வயதிற்கு ஏற்றபடி பிரித்து வளர்க்க வேண்டும்.

இளம் கோழிகளை நன்கு பராமரித்தல் மற்றும் கோழிகள் மேயும் இடங்களை சுத்தமாக வைப்பதன் மூலம் உருண்டை புழுக்களின் தாக்குதலை குறைக்கலாம்.