கோழிப்பண்ணையில் என்ன வகை கோழிகளை வளர்க்கலாம்
கோழிப்பண்ணை வைக்க வேண்டும். என்ன வகை கோழிகளை வளர்க்கலாம் என்று ஒருவர் கேட்டிருந்தார்.
இன்றைய ட்ரெண்ட் நாட்டுக் கோழிகள் தான்… அதில் தூய நாட்டுக்கோழி இனங்கள் பெருவிடை, சிறுவிடை மற்றும் கடக்நாத் என்று சொல்வார்கள். கடக்நாத் என்பது கருங்கோழி இனம். அது பற்றி எனக்கு அதிகம் தெரியாது.
பெருவிடைக் கோழிகள்
இதில் பெருவிடைக் கோழிகள் 3 – 5 கிலோ எடை வரும். ஆனால் எடை வர கொஞ்சம் தாமதமாகும். 10-11 முட்டைகள் தான் இடும். இவற்றை தான் சண்டைக்கு பயன்படுத்துவார்கள். பொதுவாக இந்த முட்டைகளை யாரும் விற்பனை செய்ய மாட்டார்கள். காரணம் முட்டை இடுவதே குறைவான எண்ணிக்கையில் தான் என்பதால் அதை பெருக்கம் செய்வதே லாபகரமானது. பெருவிடையை அசில் என்றும் சொல்வார்கள்.
சிறுவிடைக் கோழிகள்
அடுத்ததாக சிறுவிடைக் கோழிகள். சிலர் வளர்ச்சி குன்றிய கோழிகளை சிறுவிடை என்பார்கள். ஆனால் அது தவறான கருத்து. சிறுவிடை கோழிகள் தூக்கு வால், கத்திக் கொண்டை, குட்டைக் கால்களுடன் இருக்கும். இவை அழிந்து வரும் இனமாகும்.
சிறுவிடைக் கோழிகள் முழு வளர்ச்சி அடைந்த கோழிகளே ஒரு கிலோ தான் எடை இருக்கும். இவை 18 முட்டைகள் இடும். நன்றாக அடை படுக்கும். தாய்மை குணம் அதிகம். முட்டை பொரிப்புத் திறன் அதிகம். அதனால் சீக்கிரம் பெருக்கம் ஆகும். அதனால் தூய நாட்டுக்கோழி முட்டைகளை விற்பனை செய்யவும் அடை வைக்கவும் இதை வளர்க்கலாம்.
பொதுவாக கோழி வளர்ப்பவர்கள் இரண்டுமே வளர்ப்பார்கள். பெருவிடையை அடை படுக்க விடாமல் அடை தெளிய வைத்து அடுத்த ஈத்துக்கு தயார் செய்து விட்டு பெருவிடை முட்டைகளையும் சிறுவிடைக் கோழிகளில் அடை வைத்து விடுவார்கள். அல்லது இன்குபேட்டரில் வைப்பார்கள்.
இடைவெட்டு
இது போக இடைவெட்டு என்ற ஒரு இனம் உண்டு. அதன் தாய் சிறுவிடை தந்தை பெருவிடையாக அல்லது தாய் பெருவிடை தந்தை சிறுவிடையாக இருக்கும். இந்த கோழிகளில் இரண்டின் சாயல்கள் மற்றும் குணங்களும் கலந்திருக்கும். எனினும் பல பேர் தூய சிறுவிடை அல்லது தூய பெருவிடையையே விரும்பி கேட்பதால் வளர்ப்பவர்கள் க்ராஸ் பிரீட் ஆகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
இவ்வாறு ஒரிஜினல் பெருவிடை சேவலை போந்தா கோழியுடன் இணை சேர்த்து உற்பத்தி செய்வது அசில் க்ராஸ் வகை எனப்படும். இவை சீக்கிரம் எடை வந்து விடும். முட்டையும் இடும். ஆனால் அடை படுக்கும் தன்மை குறைவாக இருக்கும். பல கறிக்கடைகளில் நாட்டுக்கோழி என்று சொல்லி அசில் க்ராஸ் தான் விற்பனை செய்கிறார்கள். இதன் முட்டைகளையும் நாட்டுக்கோழி முட்டைகள் என்றே சொல்லி விற்கிறார்கள்.
அசில் க்ராஸ் பண்ணைக்கோழி இனமாகும். ஒன்றை ஒன்று கொத்திக் கொள்ளாமல் இருக்க மூக்கை வெட்டி விடுவார்கள். நாட்டுக்கோழி அளவுக்கு இவற்றுக்கு விலை கிடைக்காது. எனினும் அவற்றை ஹார்மோன் ஊசிகள் போடாமல் மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது அவையும் நாட்டுக்கோழி போலவே உடலுக்கு நல்லது தான்.
எது எந்த வகைக் கோழி என்பதை குஞ்சுப்பருவத்தில் கண்டுபிடிப்பது சிரமம். வளர வளர அனுபவசாலிகள் கண்டுபிடித்து விடுவார்கள்.
கோழிப்பண்ணை வைப்பவர்கள் இடவசதியைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு இனங்கள் மட்டும் வளர்ப்பது நல்லது. இறைச்சியை மட்டும் நம்பி இருக்காமல் முட்டைகளின் விற்பனையையும் கணக்கில் கொண்டு வளர்த்தால் தீவன செலவை சுலபமாக ஈடு கட்டலாம்.
Suhaina Mazhar from facebook