சமூகப் பொறுப்புமிக்க கட்டிடக் கலை-லாரி பேக்கர்

Agriwiki.in- Learn Share Collaborate

சமூகப் பொறுப்புமிக்க கட்டிடக் கலை
ஹரி

வீடோ அல்லது நிறுவனக் கட்டிடமோ, எதுவாக இருந்தாலும், ‘சமூகப் பொறுப்புமிக்க கட்டிடக் கலை’, அதில் பிரதிபலிக்க வேண்டும் என்று நம்பியவர் லாரி பேக்கர்.
‘பணம் இருக்கிறது என்பதற்காக, அதிகப்படியான பொருட்செலவில் பிரம்மாண்ட கட்டிடங்களை எழுப்பக் கூடாது. அதுதான் சமூகப் பொறுப்புமிக்க கட்டிடக் கலை
என்று அவர் வரையறுத்தார்.

அவரின் கட்டிடங்கள் பெரும்பாலும் வட்டவடிவத்தில் இருப்பதைப் பலரும் கண்டிருக்கலாம். அப்படி அவர் கட்டியதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. ஒரு கட்டிடம் வட்ட வடிவத்தில் இருந்தால், சுவர்களின் நீளம் குறைவானதாக இருக்கும். அதே கட்டிடம் செவ்வகமாகவோ அல்லது சதுரமாகவோ இருந்தால், சுவர்களின் நீளம் அதிகமாக இருக்கும். சுவர்கள் எவ்வளவு நீளமாக இருக்கின்றனவோ அதற்கேற்ப கட்டுமானச் செலவுகளும் அதிகமாக இருக்கும். எனவே, வட்ட வடிவக் கட்டிடங்களைக் கட்டலாம். அது செலவைக் குறைக்கும் என்றார். சமூகப் பொறுப்புள்ள கலைக்கு இது ஒரு சான்று!

“இதனால்தான் அவர் பல நேரங்களில் அரசின் கட்டிடக் கலைக் கொள்கைகளை விமர்சித்தார். ஒரு முறை மத்திய அமைச்சர்கள் தலைமையில், நாட்டில் உள்ள வீடற்றவர்களின் நிலையைப் போக்க பல லட்சங்கள் செலவு செய்து வீடுகள் கட்டித் தருவதற்கான பத்து நாள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்கு லாரி பேக்கரும் அழைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் அரசின் கட்டுமானக் கொள்கைகளின் மீது விமர்சனம் கொண்டிருந்த பேக்கரோ, அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், தான் அங்கு வந்து திரும்புவதற்கான விமானப் பயணச் செலவு, அங்கு தங்கியிருக்க ஆகும் செலவு, உணவுச் செலவு ஆகியவற்றை எல்லாம் கணக்கிட்டால் ரூ. 30 ஆயிரம் செலவாகும் என்றும், எனவே அந்தப் பணத்தைத் தனக்கு அனுப்பிவைத்தால் இங்கிருக்கும் இரண்டு ஏழைகளுக்கு என்னால் வீடுகள் கட்டித் தந்துவிட முடியும் என்றும் என்று கூறி, அந்த ஏழைகளின் விவரங்களையும் இணைத்து எழுதியிருந்தார்.

இவ்வளவு குறைந்த பணத்தில், இரண்டு வீடுகள் கட்ட முடியும் என்பதை அரசு அதிகாரிகளால், ஒப்பந்தக்காரர்களால், சக கட்டிடக் கலைஞர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதனால், பேக்கர் பலரின் கிண்டலுக்கு ஆட்பட வேண்டியிருந்தது.

இவ்வளவு குறைந்த பணத்தில், இரண்டு வீடுகள் கட்ட முடியும் என்பதை அரசு அதிகாரிகளால், ஒப்பந்தக்காரர்களால், சக கட்டிடக் கலைஞர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதனால், பேக்கர் பலரின் கிண்டலுக்கு ஆட்பட வேண்டியிருந்தது.

எகிப்தின் மிகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரான ஹசன் ஃபாதியின் கட்டிடங்களோடு பேக்கரின் கட்டிடங்கள் ஒப்பிடப்படுவது வழக்கம். ஆனால், ஹசன் ஃபாதியின் சிந்தனைகளும் பணிகளும் சொந்த நாட்டு மக்களாலேயே கைவிடப்பட்டு வர, பேக்கரின் சிந்தனைகளோ இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்கவும் தற்போது முன்னெப்போதையும்விடப் பிரபலமாகி வருகின்றன” என்று லாரி பேக்கர் குறித்த தன் புத்தகத்தில் (Laurie Baker, life, work, writings) கவுதம் பாட்டியா எழுதுகிறார்.

தான் கட்டிக்கொடுக்கும் வீடுகளைத் தன் வீட்டைக் கட்டுவதுபோல அக்கறை எடுத்துக்கொண்டு கட்டினார் பேக்கர். இதனால் ‘தன் வாடிக்கையாளர்களின் கனவுகளைத் தன் கனவுகள் போல பாவித்தவர்’ என்று அவர் புகழப்படுகிறார். ஆம், அவர் கட்டிடங்களை, கனவாகக் கற்பனை செய்தார். அந்தக் கனவுகள், இன்று பலருக்கு நிஜமாகி இருக்கின்றன.

பேக்கரின் நுட்பத்தை அறிவியலாக்கியவர்!

பேக்கர் அறிமுகப்படுத்திய கட்டிடக் கலைத் தொழில்நுட்பங்களில் ‘ரேட் ட்ராப் பாண்ட்’ (Rat Trap Bond) மற்றும் ‘ஃபில்லர் ஸ்லாப்’ (Filler Slab) ஆகிய இரண்டு நுட்பங்கள் மிகவும் முக்கியமானவை. இந்த இரண்டு நுட்பங்களும், கட்டிடங்களுக்கு வலிமை சேர்க்கக்கூடியவை என்று பேக்கர் நம்பினாலும், அவரால் அதனை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை.

பேக்கரின் அந்த வருத்தத்தைப் போக்கியவர் பேராசிரியர் சாந்த குமார். அண்ணா பல்கலைக்கழக சிவில் இன்ஜினியரிங் துறை முதன்மையராகவும், சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், பேக்கர் தந்துவிட்டுச் சென்ற தொழில்நுட்பங்களைப் பற்றி நமக்கு விளக்குகிறார்.

“இன்றெல்லாம் கட்டிடங்கள் கட்டும்போது, பொதுவாக, ‘இங்கிலீஷ் பாண்ட்’ அல்லது ‘ஃப்ளெமிஷ் பாண்ட்’ எனும் தொழில்நுட்பத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதாவது, இந்த முறைகளில், செங்கலைப் படுக்க வைத்து, இடைவெளி இல்லாமல் சுவர் எழுப்புவார்கள்.

ரேட் ட்ராப் பாண்ட்

இதர முறைகளில் ஒரு சுவர் கட்ட ஆகும் நேரத்தில், இந்த முறையில் இரண்டு சுவர்களைக் கட்டிவிட முடியும்.

ஆனால் பேக்கரின் ‘ரேட் ட்ராப் பாண்ட்’ முறையில், செங்கலை நிற்க வைத்து, வெற்றிடங்கள் விட்டுக் கட்டப்படும். இந்த முறையில் கட்டும்போது, செங்கல் செலவும் குறையும், வேலை நேரமும் மிச்சமாகும். இதர முறைகளில் ஒரு சுவர் கட்ட ஆகும் நேரத்தில், இந்த முறையில் இரண்டு சுவர்களைக் கட்டிவிட முடியும். இந்தப் பொருளாதார மற்றும் நேரச் சிக்கத்தைக் கருத்தில் கொண்டுதான், பேக்கர் இந்த முறையை அறிமுகப்படுத்தினார்.

அதேபோல, இன்று கட்டிடம் கட்டும்போது கம்பி வைத்து கான்கிரீட் கூரைகள் போடுகிறோம். அப்போது கீழே உள்ள கான்கிரீட்டை நாம்பயன்படுத்துவதில்லை. அது தேவையற்ற பொருளாதாரச் செலவை ஏற்படுத்துகிறது. எனவே, கான்கிரீட்டுக்குப் பதிலாக மங்களூர் ஓடுகளை வைத்துக் கூரைகள் அமைத்தார் பேக்கர். ‘ஃபில்லர் ஸ்லாப்’ எனும் இந்த முறையில் அமைக்கப்படும் கூரைகள் எவ்வளவு அழுத்தம் தாங்குகின்றன என்பதைப் பரிசோதிக்க, மேலே அழுத்தம் கொடுத்தால் அந்த அழுத்தம் கீழே எப்படிப் பரவுகிறது என்பதை அறியும் ‘ஃபைனைட் எலிமென்ட் அனாலிசிஸ்’ எனும் பரிசோதனையை மேற்கொண்டோம். அதில் இந்த வகைக் கூரைகள், இன்று நாம் கட்டும் கூரைகளைவிட பலம் வாய்ந்தவை என்பதை அறிந்தோம்.

இந்தக் கண்டுபிடிப்புகளை எல்லாம் 1993-94-ம் ஆண்டில் மத்திய அரசிடம் சமர்ப்பித்தோம். அதை அறிந்த பேக்கர், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்து எங்களைச் சந்தித்து, கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். அதன் பிறகு, 2004-ம் ஆண்டில் சுனாமி ஏற்பட்டபோது, அதில் பாதிக்கப்பட்ட வீடுகளை மறுகட்டமைப்புச் செய்தபோது, பேக்கரின் இந்த உத்திகளைப் பயன்படுத்தினோம்” என்கிறார் சாந்த குமார்.

பேக்கரின் உத்திகள், இப்போது சட்டங்கள்!

“பேக்கர் அறிமுகப்படுத்திய அந்த இரண்டு உத்திகளும், ‘இந்தியத் தரச் சான்றிதழ்’ அமைப்பு வெளியிட்டுள்ள ‘நேஷனல் பில்டிங் கோட், 2016’ எனும் தேசிய கட்டிட விதிகளில் முதன்முறையாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பே, அந்த இரண்டு உத்திகளும் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், சட்ட ரீதியாக அவை நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தன. தற்போது இந்தக் கட்டிட விதிகளில், இவை சேர்க்கப்பட்டிருப்பதால், அந்த உத்திகளுக்குச் சட்ட ரீதியாகவும் அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்கிறார் சுரேஷ். புதுடெல்லியில் இயங்கி வந்த குடியிருப்பு மற்றும் நகர மேம்பாட்டுக் கழகத்தின் (ஹட்கோ) முதன்மை நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர். பேக்கர் கட்டிய கடைசி வீடு, இவருடையதுதான். அந்த வீட்டுக்கு ‘இசா வஸ்யம்’ என்று பெயர்.

“1995-97-ல் நாங்கள் இந்த வீட்டைக் கட்டினோம். இது மொத்தம் 3800 சதுர அடிகள் கொண்டது. அன்றைய தேதியில் ஒரு சதுர அடிக்கு ரூ. 1000 என்ற அடிப்படையில் பலர் வீட்டைக் கட்டினர். அதன்படி கட்டியிருந்தால், எங்களுக்கு ரூ.40 லட்சம் செலவாகியிருக்கும். ஆனால் லாரி பேக்கரோ, ஒரு சதுர அடிக்கு ரூ.300 என்ற அடிப்படையில் வீட்டைக் கட்ட முடியும் என்றார். அப்படியே கட்டவும் செய்தார். எங்களுக்கு ஆன செலவோ வெறும் ரூ.11 லட்சம்தான். என்றால், அவர் எந்த அளவுக்குக் கட்டுமானப் பொருட்களைச் சிக்கனமாகக் கையாண்டார் என்பதை நினைத்துப் பாருங்கள். அது மட்டுமல்ல, இயற்கையாகக் கிடைத்த பொருட்களை மட்டுமே வைத்து அவர் எங்கள் வீட்டின் பெரும்பகுதியைக் கட்டினார். அதனால்தான், எங்களுக்குக் குறைந்த செலவில், ஆனால் அதே சமயம் கலை நயத்துடன் கூடிய வீடு கிடைத்தது” என்கிறார் அவர்.

ஒரு கட்டிடம் வட்ட வடிவத்தில் இருந்தால், சுவர்களின் நீளம் குறைவானதாக இருக்கும். அதே கட்டிடம் செவ்வகமாகவோ அல்லது சதுரமாகவோ இருந்தால், சுவர்களின் நீளம் அதிகமாக இருக்கும். சுவர்கள் எவ்வளவு நீளமாக இருக்கின்றனவோ அதற்கேற்ப கட்டுமானச் செலவுகளும் அதிகமாக இருக்கும். எனவே, வட்ட வடிவக் கட்டிடங்களைக் கட்டலாம். அது செலவைக் குறைக்கும் என்றார்.

தொடரும்…..
உங்கள் ஆதரவுடன் நான் ஹரி