சீமைக்கருவேலம் : விவசாயிகளின் கடைசிப் புகலிடம்
சீமைக் கருவேலத்தின் தாயகம், பண்புப் பெயர், அறிவியல் பெயர், அட்டவணைப் பிரிவு இத்யாதி இத்யாதி விபரங்களெல்லாம் ஏற்கனவே திகட்டும் அளவிற்கு வெகுஜனப் பத்திரிகைகளில் ஊட்டிவிட்டார்கள். அதனால் சீமைக் கருவேலங்களைச் சுற்றி உண்டாகும் சில நடைமுறைப் பிரச்சனைகள், அதன் பின்னால் நடக்கும் அரசியல் நிகழ்வுகளையும் கொஞ்சம் பார்க்கலாம்.
பூர்வீக மரம், புகுத்தப்பட்ட மரம், இயல் தாவரம், அயல் தாவரம், நல்ல மரம், கெட்ட மரம் என்கிற பதாகைகளைத் தூக்கிக் கொண்டு பல குழுக்கள் வரிசையாகக் கிளம்பிவிட்டன. முதலில் கெட்ட செடி என்று பார்த்தீனியத்தை வேரறுக்கப் புறப்பட்டது. பிறகு அயல்தாவரங்களென அறியப்பட்ட அனைத்தையும் வேரறுக்கப் புறப்பட்டது. இன்று கெட்ட மரம் என்று சீமைக் கருவேலம் மரத்தை வேரறுக்கப் புறப்பட்டுவிட்டது.
ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சீமைக் கருவேலம் மட்டுமல்ல இன்னபிற அயல் தாவரங்கள் அனைத்தையும் அழிப்பதென்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. அப்படி முடியுமெனில் வண்ணத்துப் பூச்சிகளையும், தேனீக்களையும் மகரந்தச் சேர்க்கையினை ஏற்படுத்த உதவும் பல்வேறு உயிரினங்களையும் அழிக்க வேண்டிவரும். 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களின் உணவுகளோடு நீக்கமற நிறைந்துவிட்ட அயல் தாவரங்களை அழிப்பதென்பது, பாரம்பரியத்தைக் காக்க வேண்டுமென்று பாபர்மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கிய பாரம்பரிய காவலர்களுக்கு ஒப்பானதாகும்.
நம் சங்க இலக்கியங்களில் வருகிற பல மரங்களின் பூர்வீகம் கூட அயல் நாடுகள்தாம். அதை தொல்தமிழரென அறியப்படும் நம்மவர்களே வரவேற்றுத்தான் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இத்தனைக்கும் அதை மேலானதொரு முக்கனிகளில் வைத்து பெருமைதான் சேர்த்திருக்கிறார்கள். மனித இனம் உருவாவதற்கு முன்பே மரங்களும் உயிரினங்களும் இடம் பெயர்ந்திருக்கின்றன என்பதையும் இவ்விடத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.
ஏதோ அயல்தாவரங்கள் மட்டுமே குறிப்பிட்ட சூழலுக்கு எதிராகவும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் சுற்றுச்சூழல்வாதிகளே மாயையை உண்டு பண்ணுவது அபத்தமானது. மிதமாக வீசும் காற்றுக்கே சுமார் 300 கிலோமீட்டர்களுக்கு அப்பால் பார்த்தீனியச் செடிகளால் பரவ இயலும் என்பதால் இலாப நட்டக் கணக்குப் பார்ப்பவர்கள் பார்த்தீனியத்தை அழிக்க முன்வருவதில்லை. ஆனால் சீமைக் கருவேலம் லாபங்கொழிக்கும் தொழில் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அதனால்தான் தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரத்தை அழிக்க வேண்டுமென்று ஒரே கூச்சல் குழப்பம்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் மதுரை உயர்நீதிமன்றக்கிளை இன்னும் ஏன் சீமைக் கருவேலங்களை அழிக்கவில்லை? உடனே அழிக்க வேண்டும் என்று ஆணையும் இட்டது. இத்தீர்ப்பைக் கேட்டு தமிழகமே சீமைக் கருவேலங்களை பரம எதிரிகளாய் பார்க்க ஆரம்பித்தனர். பாரத்த இடமெல்லாம் அவை அழிக்கப்பட்டன. இத்தீர்ப்பு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது நீதிபதிகளுக்கே வெளிச்சம். எந்த அதிகாரப்பூர்வமான அமைப்பு சீமைக்கருவேலத்தை தேவையற்றது என்று அறிவித்தது? எந்த சுற்றுச்சூழல் அறிஞர் சீமைக் கருவேலமரம் குறித்து ஆய்வறிக்கை சமர்பித்தார்? அந்த அறிக்கை எந்த ஆய்வகத்தில் நிரூபிக்கப்பட்டது? குறைந்தபட்சம் இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் இருந்து சிறு குறிப்பாவது செய்தியாக வெளிவந்ததா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இன்று விடையில்லை.
சீமைக்கருவேலம் தீங்கு செய்யக்கூடியது என்று இந்தியாவில் முதன்முதலில் கண்டறிந்த கேரள வனத்துறை அம்மரத்தை மக்கள் இயக்கமாக முன்னெடுத்து அழித்தார்கள் என்றும் அதனால் கேரளம் கடவுளின் பூமியாகத் திகழ்கிறது என்றும் கேரள நிலஅமைப்பையும் தமிழக நில அமைப்பையும் ஆய்ந்தறிந்தவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறதல்லாவா? அமெரிக்காவில் தீங்கு செய்யும் தாவரங்களின் பட்டியலில் சீமைக்கருவேலம் முதல் இடத்தில் இருப்பதால், நிலத்தடி நீர் குறைந்து உற்பத்தி பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழலும் மாசடைந்திருக்கிறது என்று சொல்லாமல் விட்டதளவில் சந்தோஷம்தான்.
அணைகள் என்பதே சுற்றுச்சூழலுக்கு எதிரானது என்று பேசியவர்கள் முல்லைப் பெரியாறை ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகப் பார்த்தார்கள். பல ஏக்கர் கணக்கில் நிலம் வைத்து முப்போகம் விவசாயம் செய்து கொள்ளை லாபம் பார்க்கும் நிலச்சுவான்தாரர்களையெல்லாம் மறந்துவிட்டு, வெறும் ஒன்றிரண்டு ஏக்கரில் நிலம் வைத்து பருவமழையை மட்டுமே நம்பி புன்செய் நிலங்களில் தானியம் விளைவிக்கின்ற ஏழை விவசாயிகளை குறைந்தபட்ச கூலித் தேவைகளிலிருந்தும் விரட்டியடிக்க முயல்கிறார்கள் சீமைக் கருவேலங்களை வைத்து அரசியல் செய்யும் இயக்கங்கள்.
விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, நகராட்சிகளின் சார்பில் கண்மாய், சாலையோரங்களில் நீண்டு வளர்ந்திருக்கும் சீமைக்கருவேலங்களை வெட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு பல கோடிகளுக்கும் மேல் ஊழல் நடந்து அம்மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கு நடந்து வருகிறது. அப்படியே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளிலும் டெண்டர் விடப்பட்டு சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் லாபம் பார்க்கிறது என்பதே உண்மையான நிலவரம்.
மேலும் திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்படும் சீமைக்கருவேலமர கரித்துண்டுகள், திண்டுக்கல்லிலிருந்து அசாம் மற்றும் இன்னபிற வடமாநில கார்பன் தொழிற்சாலைகளுக்கு தனி சரக்குரயில் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. மாதத்திற்கு இரண்டு தனி சரக்கு ரயில் மூலம் சுமார் 4000 டன் கரித்துண்டுகளை ஏற்றுவது பற்றி என்றைக்காவது நாம் சிந்தித்திருப்போமா? வடக்கு மாவட்டங்களான திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளுர் போன்ற மாவட்டங்களையும் கணக்கெடுத்தால் எத்தனை சரக்கு ரயில், எத்தனை ஆயிரம் டன் கரித்துண்டுகள் என்று நீங்களே கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். ஆச்சர்யமூட்டும் தகவல்கள் இன்னும் வந்துகொண்டேயிருக்கும்.
மேற்சொன்ன மாவட்டங்களின் வறட்சிக்கு சீமைக் கருவேல மரங்களே காரணம் என்று பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது. ஆங்கிலேயர்களே நம் உற்பத்தித் தானியங்களை கொள்ளையடித்துப் போனார். அமெரிக்கர்களே பல களைச் செடிகளை நம் நாட்டிற்குள் கொண்டு வந்தார்கள். அதனால்தான் நம் நாடு வறட்சியின் போக்கை அடைந்தது என்ற வாதம் எந்த அளவிற்கு நிருபிக்கப்பட்டிருக்கிறது என்பதே குறைபாடாக உள்ளது.
நம்முடைய வரலாற்றின் மாந்தர்கள் பொருள் தேடி இடம் பெயர்ந்து அலைந்து திரிந்தவர்களாகவும், கார் காலத்தின் போதே மீண்டும் ஊர் திரும்புபவர்களாகவும் இருப்பதை நோக்குகையில் வறட்சி என்பது எப்போதும் நம்மிடையே இருந்து வந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. பருவமழையை நம்பி மட்டுமே விவசாயம் நடந்து வந்திருக்கிறது என்பதும் இதன்மூலம் உறுதியாகிறது.
வறட்சியின் காரணமாகவும் அரசின் நிதியைப் பெருக்குவதற்காகவுமே தமிழ் அரசர்கள், கால்வாய்களையும், அணைக்கட்டுகளையும், நீர்நிலைகளையும் ஏற்படுத்தி வரிவசூல் செய்து நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி ஆட்சி செய்தார்கள். பிறகே இன்று நாம் டெல்டா மாவட்டங்கள் என்று குறிப்பிடும் மாவட்டங்களில் மக்கள் விவசாயத்திலும் பயிர்ச் சாகுபடியிலும் தன்னிறவை அடைந்தார்கள். ஆனால் டெல்டா மாவட்டங்கள் மட்டுமே தமிழகம் அல்லவே. ஐவகையான தமிழ் நிலங்களில் நான்கு வகையான நிலங்கள் கால்வாய்களையும் அணைகளையும் கொண்டு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்பதையும் உணர வேண்டும்.
2016 ஆம் ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையின் போது வனத்துறை அமைச்சர், நீர்நிலைப் பகுதிகள் மற்றும் வனப்பாதுகாப்புக் காடுகளில் காணப்படும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி நீர் நிலைகளினல் 89 ஆயிரத்து ஏக்கர் பரப்பிலும் கரைகள், காப்புக்காடுகள் என 46 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி பலவகை மரக்கன்றுகள் நடப்படும் என்றார். ஆம். உச்ச, உயர்நீதிமன்ற உத்தரவுகளையெல்லாம் செவ்வனே கடைபிடிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுகளுக்கு கட்டாயம் நாம் மதிப்பளித்துத்தானே ஆக வேண்டும்.
சீமைக்கருவேலங்கள் அப்படி என்னதான் தீங்கு செய்கின்றன? நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. இதன் கிளைகள் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி ஆவியாக்குகிறது. இம்மரத்தின் நிழல் கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மையை உருவாக்குகின்றன. எவ்வுயிரினமும் இம்மரத்தை அண்டாது. இம்மரத்தின் கீழ் புல் பூண்டுகள் கூட முளைக்காது. மொத்தத்தில் கரியமிலவாயுவை அதிகம் வெளியேற்றி மனிதர்களுக்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் தீங்கை விளைவிக்கின்றன எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் அம்மரத்தின் மீது.
இத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் குற்றமற்றவர் முதலில் கல்லெறியட்டும் என்றுதான் அவர்களிடம் கேட்க வேண்டியிருக்கிறது. 1000 அடி முதல் 1500 அடி வரையிலான ஆழ்துளை கிணறு அமைத்து, புன்செய் நிலங்களில் தென்னை மரங்கள், தக்காளி, வெங்காயம், போன்றவற்றை அரளி, மல்லிகை, செண்டு, கனகாம்பரம், முல்லை, சம்பங்கி போன்ற பூ வகைகளையும் பயிரிடுவது சரியான முறையா? அப்போதெல்லாம் நிலத்தடி நீர்மட்டம் குறையவில்லையா? ஆறுகளை சாயக் கழிவுகளாலும், குடிநீர் ஆதாரங்களை கூவங்களாகவும் மாற்றிய நாம் தண்ணீரை சிக்கனமாய் சொட்டுச் சொட்டாகவா செலவழிக்கிறோம்?
கிடைக்கின்ற நீரைப் பயன்படுத்தி வளர்வது அம்மரத்தின் பண்பு. சப்பாத்திக்கள்ளியின் பண்பு போன்றதுதான் சீமைக்கருவேலத்தின் பண்பும். ஈரப்பதத்தை உறிஞ்சி ஆவியாக்கியானால் ஆவியானது எங்கே போகிறது? அது மீண்டும் என்னவாகிறது என்ற சிறு புரிதலாவது வேண்டாமா?
சீமைக்கருவேல மரங்களில் பார்க்கும் நேரமெல்லாம் ஊர்ந்து கொண்டிருக்கும் பலவகை எறும்புகள், தேனீக்கள், தேன் சிட்டுகள், அம்மரத்தைத் தொற்றிப் படர்ந்திருக்கும் கோவைக்காய் போன்ற பலவிதக் கொடிகள், அம்மரத்தின் கீழ் அடர்ந்து வளர்ந்திருக்கும் சிறுபுதர்களில் முயல்கள், கானாங்கோழிகள், புதர்க்குருவிகள், காடைகள், ஊர்வனங்கள் என எண்ணற்ற சிறு உயிரினங்களுக்கு வசிப்பிடங்கள் என்று அக்காடுகளுக்குப் போனால்தான் தெரியும்.
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் இம்மரத்தில்தான் எத்தனை வகையான பறவைகள் அடைக்கலமடைந்திருக்கின்றன. அப்பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள இடங்களில் சீமைக்கருவேல மரங்களை அழிக்க நினைப்பவர்கள் முதலில் அங்கு பல்வேறு வகையான மரங்களை நட்டுப் பாதுகாத்து, அது மரமான பின்பே சீமைக்கருவேலங்களை அழிப்பதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று கூந்தன்குள பறவை ஆர்வலர் பால்பாண்டியின் கருத்தில் நடைமுறையில் பல்வேறு மரங்களை வளர்த்து யாரும் பாதுகாக்க மாட்டார்கள் என்பதே உறுதியாகிறது.
வறட்சிக் காலங்களில் அம்மரத்தின் காய்களையும் விதைகளையும் தின்றே ஏராளமான கால்நடைகள் உயிர்பிழைத்து இனப்பெருக்கம் செய்தன என்பதே உண்மை வரலாறு.
கரியமிலவாயுவை அதிகம் வெளியிடுகிறது என்பது போன்ற ஏராளமான பொய்யான தகவல்களை பரப்புவது தவறான போக்கு மட்டுமல்லாது சுற்றுச்சூழலுக்கு எதிரானதுமாகும்.
தமிழகத்தின் சாலையோரங்களில் வீற்றிருக்கும் புளியமரங்கள் இரவில் அதிகப்படியான கரியமிலவாயுவை வெளியிடுவதில்லையா? கரியமிலவாயுவை வெளியிடாத மரங்கள் ஏதேனும் நாட்டில் உண்டா?
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் பருவமழையை நம்புகிற புன்செய் நிலப்பகுதிதான். பருவமழையின் போது கம்பு, சோளம், எள்ளு, நிலக்கடலை போன்றவற்றோடு ஊடுபயிராக மொச்சை, பாசிப்பயிர் உளுந்து போன்ற பருப்புவகைகளும் பயிரிடப்படுகின்றன. பருவமழை அற்ற சில வருடங்களுக்குள்ளாகவே அவை தரிசு நிலங்களாகக் காட்சியளிக்கின்றன. பின்னர் கால்நடைகளின் மூலம் பரவிய சீமைக்கருவேல மரங்கள் அந்நிலங்களில் முளைவிடுகின்றன. மீண்டும் பருவமழை பொழிய ஆரம்பித்ததும் சீமைக்கருவேலங்களை அகற்றிவிட்டு மீண்டும் தானிய வகைகளையே பயிரிடுகின்றனர்.
தற்போது சீமைக்கருவேலங்களை பணப் பயிராக மாற்றி லாபம் பார்க்கிறவர்களும் உண்டு. புன்செய் நிலங்களில் ஏக்கருக்கு இரண்டு வருடங்களில் 4 டன் வரை சீமைக்கருவேல மரத்துண்டுகள் வெட்டப்படுகின்றன. ஒரு டன் இரண்டாயிரம் வீதம் எட்டாயிரம் வரை இரண்டாண்டுகளில் லாபம் பார்க்கப்படுகிறது ஒரு பைசா செலவில்லாமல்.
ஆனால் தானிய வகைகளைப் பயிரிடும்போது முதலில் உழுவதற்குப் பணம், விதைத்த பிறகு இரண்டு முறை களையெடுக்கப் பணம், விளைந்த கதிர்களை அறுப்பதற்குப் பணம் இறுதியாக மாட்டுத் தீவனத்திற்காக பயிர்ச் செடிகளை அடியோடு அறுக்கப் பணம் என்று செலவழித்தது போக ஆண்டுக்கு ஒருமுறை 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. ஓர் ஆண்டிற்கு இந்தத் தொகை ஓர் குடும்பத்திற்குப் போதுமானதா? இரண்டு மூன்று ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் ஓரளவிற்கு சமாளித்துக் கொள்வார்கள். ஆனால் ஒன்றிரண்டு மழையோடு பருவமழை பொய்த்துவிட்டால் போட்ட முதலும் நட்டமாகி அவர்கள் பாடு திண்டாட்டம்தான். உண்மை நிலை என்னவென்றால் இவர்களெல்லாம் விவசாயிகள் என்கிற பிரிவின் கீழ் வருவதில்லை. மாறாக உதிரித் தொழிலாளிகள் வகைப்பாட்டில் இவர்களை வலுக்கட்டாயமாக சேர்த்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.
பருவமழையை நம்பி விவசாயம் செய்கிறவர்களையே நாம் விவசாயிகள் என்று கருத வேண்டும். அவர்களுக்கு அரசு ஊக்கத்தொகையும், நிவாரணத் தொகையும் வழங்க வேண்டும். எந்தப் பெரும்நிலக்கிழாரிடமும் ஏக்கர் கணக்கில் புன்செய் நிலம் இருந்ததில்லை. அதனால் அந்நிலம் உழுவதர்களின் கைகளுக்கே ஒன்று இரண்டு மூன்று ஏக்கர்களாக வந்து சேர்ந்தது. அப்படி உழுதவர்கள் ஏராளமான பேருக்கு துண்டு நிலம்கூட கிடைக்காமல் போனதுதான் வரலாறு. ஆனாலும் அவர்களே தேவைக்கேற்ப இயற்கையோடு இயைந்த விவசாய முறையைக் கையாண்டார்கள். மழை இல்லாத மாதங்களில் வேறு தொழில் செய்து பிழைக்கக் கற்றுக் கொண்டார்கள். ஆனால் இன்று அவர்களும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மண்ணுக்கு ஒத்துபோகாத பயிர்களையே விவசாயம் செய்துவருகிறார்கள். அதுவும் பொய்த்துப்போகிற போது சீமைக் கருவேல மரங்கள் அவர்களின் குறைந்தபட்ச தேவையை பூர்த்தி செய்கிறது.
இருப்பினும் இன்று நாம் பெரும்பாலான வயல்களையும் தோட்டங்களையும் வைத்திருப்பவர்களையே விவசாயிகள் என்று கருதுகிறோம். அவர்கள்தான் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மேட்டுக்குடி மக்களாகவும், பணங்களையும், தங்க நகைகளையும், நிலங்களையும் வாங்கிக் குவிக்கும் செல்வந்தர்களாக இருப்பதையும் கவனமாக மறந்துவிடுகிறோம்.
அவர்களைத்தான் இன்று ஏகத்திற்கு புகழ்ந்து வைத்திருக்கிறோம். நாங்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நீங்கள் சோற்றில் வாய் வைக்க முடியும் என்றதுமே தமிழக மக்களில் பெரும்பாலானோர்களுக்கு உணர்ச்சி கொப்பளித்துவிடுகிறது.
நாளை துணிகளை நெய்பவர், தமிழர்க்கு உயிரினும் மானம் பெரிது. அந்த மானத்தையே நாங்கள்தான் அளிக்கிறோம் என்று சொன்னாலும் தமிழர்களுக்கு மயிர்கற்றைகள் எழுந்து நிற்கும். இன்று அனைத்து துணி வகையறாக்களும் சிறு, பெரு முதலாளிகளின் கைகளுக்குள் அடங்கிவிட்டது. அது சரி… எல்லாவற்றையும் தூய்மைப்படுத்துபவர்களின் வாழ்வியலைச் சொல்லும்போது மட்டும் ஏன் கொந்தளிப்பு ஏற்படுவதில்லை. மாறாக அலர்ஜி ஏற்படுகிறது? மரியாதைக்குப் பதில் கழிவிரக்கம் ஏற்படுகிறது?
யார் இவர்களை சேற்றில் கால்வைத்து உலக மக்களின் வயிற்றுக்குப் பபடி அளக்கச் சொன்னது? யார் இவர்களை ஆடைகளை நெய்து தந்து மானம் காக்கச் சொன்னது? நன்செய் நிலங்களில் விவசாயம் செய்பவர்களை, அதே அளவு புன்செய் நிலங்களுக்கு மாற்றம் செய்தால் ஒப்புக் கொள்வார்களா? கதர் ஆடைகளைத் தவிர்த்து வேறு அயல்துணிகளை தயாரிக்கக் கூடாது என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?
இவ்வளவு ஏன்? கால்வாய்களின் மூலமும், ஏரிகளின் மூலமும், அணைக்கட்டுகள் மூலமும் கிடைக்கின்ற தண்ணீரில் உடலுக்கு ஊட்டம் தருகிற கார்போஹைட்ரேட் அதிகம் இல்லாத புரதங்கள் மிகுந்திருக்கும் திணை, கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, எள்ளு, உளுந்து இன்னும்பிற பருப்பு வகைளை பஞ்சகாவ்யம் உரம் மூலம் இயற்கையோடு இயைந்து பயிரிடச் சொன்னால் உலகின் வயிற்றுக்கே படி அளக்கிற நம் விவசாயிகள் அதைச் செய்வார்களா? அப்படிச் செய்தால் ஏன் பருப்பு விலை உயரப்போகிறது. அப்படியொரு உறுதியை இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் தரமுடியுமா? மேற்கு மாவட்டங்களை சாயக்கழிவால் நிறைத்துக் கொண்டிருப்பவர்களை கதர் ஆடைகளுக்கு மாறச் சொன்னால் மாறுவார்களா?
பிறகு ஏன் சேற்றில் கால் வைத்தால்தான்… தமிழருக்கு உயிரை விட மானமே பெரிது… போன்ற புல்லரிப்பெல்லாம். இதுபோன்ற புல்லரிப்பாளர்களை வைத்துக் கொண்டு போலியான அரசியல் செய்யும் நபர்களைக் குறித்தும் நாம் சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது. விவசாயி என்ற அடைமொழியே குலத்தொழில் முறைக்கு வலு சேர்ப்பதற்கான அர்த்தம்தானே.
அந்த விவசாய குலத்தைச் சேர்ந்தவர்கள்தான் இன்று சீமைக்கருவேலத்தை எதிர்க்கும் சக்தியாக விளங்குகிறார்கள். அவர்களே இன்று இயற்கையியல்வாதியாகவும், இயற்கை வேளாண் விஞ்ஞானிகளாகவும் புகழ் பெறுகிறார்கள்.
இந்த விவசாயிகளே… விவசாயப் பயிர்களை நாசப்படுத்துகிறதென்று யானைகள், பன்றிகள், குரங்குகள், மான்கள், முயல்கள், பறவைகள் ஏன் உயிர்சமன்நிலையின் உச்சத்திலிருக்கிற புலியையும், சிறுத்தையையும் கொல்ல வேண்டுமென்று போராட்டம் நடத்துகிறார்கள். மூலதனம் ஒன்றையே குறிக்கோளாய் கொண்ட அவர்களுக்கு காட்டுயிர்களாவது? சீமைக்கருவேல மரங்களாவது?
சீமைக்கருவேலங்களுக்கு முன்பு அயல்மரங்களை அழிக்கப் புறப்பட்ட குழுக்கள் முதலில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள தைல மரங்களின் மீது கை வைத்தது. எஸ்ஸேட் ராஜாக்களிடம் முடியுமா? அவர்கள் கொடுத்த பலத்த நன்கொடைகளை வரிவிலக்கற்ற 80ஜி பிரிவில் அமுக்கி கமுக்கமானதுதான் மிச்சம். இன்று சீமைக்கருவேலங்களின் மீது கை வைத்திருக்கிறது தன்னார்வ குழுக்கள். தெருக்குப்பைகளை அகற்றுவது போன்று சீமைக்கருவேலங்களை அகற்றத் தொடங்கியிருக்கிறார்கள். மதுரை மாவட்ட கலெக்டர் மதுரை நகரத்தில் சீமைக்கருவேலங்கள் அகற்றப்பட்டுவிட்டது என்று அறிக்கை வாசிக்கிறார்.
சீமைக்கருவேலங்களை அகற்றுவது குறித்து எந்தப் புலம்பலுமில்லை. சிட்டுக்குருவிக்கு ஆர்ப்பாட்டம் செய்தவர்களை நினைத்தால்… பறவைகளைக் காக்கும் பல்லுயிர்களைக் காக்கும் இயக்கங்களை நினைத்தால்… நெஞ்சு பொறுக்குதில்லையே… இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்தால். இன்று அவர்கள் விவசாயிகளின் பால், இயற்கை விவசாயிகளின் பால் அணி திரண்டுவிட்டார்கள். சீமைக்கருவேலங்களை நம்பி எண்ணற்ற பல்லுயிர்கள் அழியக் காரணமாகப் போகிற கையறு நிலையில் இருக்கிறோம். புன்செய் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாம் இங்கு முன்வைக்கவில்லை. இந்தப் பல்லுயிர்களின் புண்ணியத்தால் நாளை விவசாயம் மீண்டும் தழைத்தோங்கும். ஆனால் இந்தப் பல்லுயிரியங்களின் வாழ்விடச் சிக்கலுக்கு நாம் என்ன தீர்வு வைத்திருக்கிறோம்?
சீமைக்கருவேலங்கள் அழிக்கப்பட்ட நிலங்களனைத்தும் நாளை ரியல் எஸ்டேட்களாகவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகவும் உருமாறப்போவது திண்ணம். ஏற்கனவே சீமைக்கருவேலங்கள் அழிக்கப்பட்டுத்தான் பல தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகழகங்கள், தனியார் தொழிற்சாலைகள் பல உருவாகியுள்ளன என்பதையும் நாம் உணரவேண்டும்.
33 சதவீதக் காடுகளின் தேவைக்கேற்ப அதன் பாதி அளவேயுள்ள 17 சதவீதக் காடுகளை வைத்துக் கொண்டு, சுற்றுச்சூழல் பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாத மனிதர்கள் பரவியுள்ள நம் மாநிலத்தின் பசுமையில் 7 சதவீதம் சீமைக் கருவேல மரங்கள் என்று செயற்கைகோள் புகைப்படம் காட்டுகிறது. அந்தப் பசுமையை நாம் மறுஉருவாக்கம் செய்வது மிகக் கடினம் என்பதாலேயே சீமைக்கருவேல மரங்களை அழிப்பது தேவையற்றது என்கிற வாதத்தை இக்கட்டுரை முன்வைக்கிறது. அறிவியல் புரிதலற்ற இதுபோன்ற தேவையற்ற இயக்கங்களின் பால் பொதுமக்களை ஈடுபடுத்தி இருக்கின்ற குறைந்தபட்ச இயற்கை வளங்களையும் பாழ்படுத்துகிற ஒரு பெரும் கூட்டத்தையே அது உருவாக்கிவிடும் என்பதாலேயே இக்கட்டுரை தன்னளவிலான கருத்துக்களை முன் வைக்கிறது.
Vaazhaikumar
from Kaadugal
Excellent. என் கருத்துக்களின் 100% பிரதிபலிப்பே இக்கட்டுரை. நன்றி.
Thank you sir. Keep reading and give suggestions to improve.