தற்சார்பு இயற்கை விவசாய நிர்வாக மேலாண்மை

தற்சார்பு இயற்கை விவசாய நிர்வாக மேலாண்மை
Agriwiki.in- Learn Share Collaborate

தற்சார்பு இயற்கை விவசாயத்தில் நிர்வாக நடைமுறை மேலாண்மை:
நம்முடைய நடைமுறைகளை, சரியான வகையில் நிர்வகிக்கும்போது, வாழ்க்கை, கடினங்களை கடந்து, எளிதாகும். தற்சார்பு இயற்கை விவசாய நிர்வாக மேலாண்மை முறைகளை தகுந்த கால இடைவெளிகளில் செய்யும்போது, விவசாயம் சவாலானது என்ற கூற்றை மாற்றி அமைக்கலாம்.

இயற்கை விவசாயம் சவாலானதா ?

மனிதனுடைய அன்றாட நடைமுறை வாழ்க்கை சக்கரம், சரியான இயக்கத்தில் செயல்பட, நம்முடைய செயல்களில், சரியான நேர இடைவெளிகளில், அச்செயலை, அதற்க்குரிய காலத்தில் செய்து முடிக்கும் வழக்கத்தை பின்பற்றுவோம்.

இதுபோன்ற நடைமுறைகளை வழக்கமாக கொண்டுள்ள ஒருவர், கட்டாயம் திறன் மிகுந்தவராகவும், வெற்றியாளராகவும், வாழ்க்கை பயணத்தில் பயணப்படுவார்.

நம்முடைய நடைமுறைகளை, சரியான வகையில் நிர்வகிக்கும்போது, வாழ்க்கை, கடினங்களை கடந்து, எளிதாகும்.

உழவியலிலும், நாம் சரியான நடைமுறைகளை, தகுந்த கால இடைவெளிகளில் செய்யும்போது, விவசாயம் சவாலானது என்ற கூற்றை மாற்றி அமைக்கலாம்.

மண்ணில் மட்கின் அளவு அதிகப்படுத்துதல்

முதலில், ஒரு பயிரின் விதையை நீங்கள் பயிரிட விரும்புகிறீர்கள் எனில், அப்பயிரின் முழு வாழ்நாள், பயிரை தாக்கும் நோய்கள், பூச்சிகள் போன்றவற்றின் விவரங்களை அறிந்து கொள்ளுதல் அத்தியாவசியம்.

மண்ணின் வளத்தை கூட்ட பசுந்தாள் உரங்கள், பல தானிய விதைப்பு செய்து, அவை பூக்கும் தருணத்தில், மடக்கி உழுவதின் மூலம் மண்ணில் மட்கு பொருளின் அளவை கூட்டலாம்.

தொழுஉரம் இடுதல்

விதைப்புக்கு முன்னர் அடியுரமாக, ஊட்டமேற்றிய ஆட்டுஎரு அல்லது தொழுஉரம் இடுதல் அத்தியாவசியம்.

கால்நடை கழிவுகளில், பயிரின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்குமான இடுபொருட்கள் கலக்கப்படுவதினால், பயிருக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதில் உள்ளடக்கி இருப்பதினால், பயிரில் தொய்வில்லா சிறப்பான வளர்ச்சி காணப்படும்

ஊட்டமேற்றிய தொழுஉரம்

டன் கணக்கில் எருவை கொட்டுவதை விட, கால்நடை கழிவுகளை ஊட்டமேற்றி பயன்படுத்தும் போது, அதிகபடியான செலவு தவிர்க்கப்படும்.

கால்நடைகளின் கழிவில் பஞ்சகவியம், மீன்அமிலம், இஎம் போன்ற இயற்கை இடுபொருட்களை குறைந்த அளவில் இட்டு, இந்த இடுபொருள்களில் உள்ள நுண்ணுயிரிகள் பல்கி பெருக, இந்த கால்நடை கழிவுகள் ஒரு தளமாக இருந்து செயல்படுகின்றன.
இதனால் இயற்கை இடுபொருட்களை அதிக அளவில் பயன்படுத்தாமல் குறைந்த அளவு கொடுத்து அதில் உள்ள நுண்ணுயிரிகளின் அளவை, ஏழு நாட்களில் அளவில்லாமல் பெருக்க செய்து, அவற்றின் செயலாக்க திறனை மேம்படுத்துகிறோம்.

மண்ணின் அங்கக கரிமத்தை பெருக்குவதற்க்காக சேர்க்கப்படும் மட்கிய எருவை, கடலை, ஆமணக்கு, வேம்பு, புங்கன் போன்றவற்றின் புண்ணாக்குகள், பயறுமாவு, பழக்கரைசல், சாணிப்பால், கோமியம், வெல்லம் போன்ற இயற்கை இடுபொருட்களினால், பயிருக்கு தேவைப்படும் அனைத்து சத்துக்களும் நிறைந்த ஊட்ட உரமாக உருவாக்கம் செய்யப்படுகிறது.

ஊட்ட உரத்தை காலத்தே அளித்தல்

ஊட்டஉரத்தை, பயிர்களில் அந்தந்த பருவகாலத்தில் அதாவது, வளர்பருவம், பூக்கும், காய்க்கும் போன்ற பருவங்களில் அளிக்கும்போது, இரசாயன உரங்களில் தோன்றும் உடனடி மாற்றம் போல், இவ்ஊட்ட உரங்கள் பயிர்களில் தோற்றுவிக்கும்.

ஊட்டஉரத்தின் பயன்கள்

ஊட்டஉர பயன்பாட்டினால் மண்ணில் நுண்ணுயிர் பெருக்கம் அபிரிமிதமாய் இருக்கும்.
ஆகவே, நம் பண்ணைகளில் ஊட்டஉர தயாரிப்பு தொட்டிகளை, நிரந்தர அமைப்பாக ஏற்படுத்துவதின் மூலம், அத்தொட்டிகள் நமக்கு உரத்தொழிற்சாலைகளாக இயங்கி கொண்டிருக்கும்.

பயிரின் நடவுக்கு முன்பான, கடைசி உழவின் போது ஊட்டஉரத்தை பரவலாக தெளித்து, உழவு ஓட்டிய பின்னர், பயிரை நடவு செய்யும் போது, மண்ணில் இவ்வுரம் பயிருக்கு அடியுரமாக செயல் புரியும்.

☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘

பாசன அமைப்புகள்

நம்முடைய நிலத்தில் பாசன முறைகளை, சரியான அமைப்பில் நிறுவினால், பாசனத்தில் இயற்கை இடுபொருட்களை கலப்பது சிரமில்லாமல் நடைபெறும்.

பாசனத்தில் ஜீவாமிர்தம்

ஒவ்வோர் பாசனத்தின் போதும், ஜீவாமிர்தம் கலந்து விடுவதால், நிலத்தில் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் செலவில்லாமல், மாட்டு சாணத்தின் மூலம் நம் வயல்களில் நிலைநிறுத்தப்படும்.

ஊட்டமேற்றிய ஜீவாமிர்தம்

ஜீவாமிர்த கரைசலை இன்னும் ஊட்டமாக்க, 200 லிட்டர் கரைசலில், ஒரு லிட்டர் புளித்த கடலை புண்ணாக்கு கரைசலை சேர்க்கும்போது, பயிரில் வளர்ச்சி வேகமாய் இருக்கும்.

ஒவ்வோர் களையெடுப்புக்கு பின்னரும், மண்ணில் ஊட்டஉரம் தூவி, ஜீவாமிர்த பாசனம் செய்ய வேண்டும்.
களையெடுப்பு முடிந்த பின்னர், வேருக்கு ஊட்டஉரம் தூவி, மண்ணில் ஜீவாமிர்த பாசனம் செய்து, இலைகளுக்கு வளர்ச்சிஊக்கிகளை தெளிக்கும் போது, வேருக்கும், இலைகளுக்கும் ஒரே சமயத்தில் ஊட்டங்கள் கிடைப்பதினால்,வளர்ச்சியில் தொய்வுநிலை கண்டிப்பாக இருக்காது.

 

பயிர்பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஊக்கி

பயிர்களில் நோயோ, பூச்சியோ வந்த பிறகு நிவாரணம் செய்வதை விடுத்து, 15 நாட்கள் இடைவெளியில் பயிர்பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஊக்கிகளை, இலைவழி தெளிப்பில் நடைமுறைப்படுத்தும் போது, தொய்வில்லா வளர்ச்சி பேணப்படும்.

15 நாட்கள் இடைவெளியில், பயிர்பாதுகாப்பு, வளர்ச்சி ஊக்கிகளை தெளிப்பதினால்,தெளிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தன்மை, இலைகளில் நிலைத்திருப்பதினால், பூச்சிகள் இவ்விலைகளை உண்பதை தவிர்க்கின்றன.
இதன்மூலம் நம்நிலத்தில் ஒரு பாதுகாப்பு வளையம் போன்ற இயற்கையான அமைப்பு உருவாக்கப்படும்.

உயிர் பன்மய சூழலின் சரியான விகிதம் – நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகள்

இரசாயன பூச்சிக்கொல்லிகளால், நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் ஆகிய அனைத்தும் மடிந்துவிடும்.
இதனால், சூழலியலின் தன்மை மாறுபடும்.

ஆனால், இயற்கை பயிர் பாதுகாப்பான்கள் பூச்சிகளை கொல்வதில்லை.
மாறாக, அப்பயிரை பூச்சிகள் உண்ணாத வண்ணம்  இலைகளில் கசப்பு, காரம், துவர்ப்பு என மாற்றப்படுவதினால், பூச்சிகள் அப்பயிர்களை அணுகுவதில்லை.

நன்மை செய்யும் பூச்சிகளின் இரை, தீமை செய்யும் பூச்சிகள் தான்.
ஆகையால், சூழ்யியலின் உயிர் பன்மய சூழல், சரியா ன விகிதத்தில் கட்டமைக்கப்படுகின்றது.

 

பூக்கும் போது தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த

பயிர்கள் பூக்கும் தருணத்திற்கு முன், அக்னிஅஸ்திரம் அல்லது பொன்னீம் தெளிப்பதினால் பூக்கள் மற்றும் காய்களை தாக்கும் பூச்சிகளிடமிருந்து, பயிர் பாதுகாக்கப்படும்.

பூக்கும் தருணத்தில், தேமோர் கரைசல் அல்லது அரப்புமோர் கரைசல் தெளிப்பதினால், பூக்கள் உதிராமல், பூக்களின் எண்ணிக்கை கூடி, விளைச்சல் அதிகரிக்கும்.

காய்கறி பயிர்களில் 15 நாள் இடைவெளியில் அக்னி அஸ்திரம், பஞ்சகவியம், தேமோர் கரைசல் ஆகியவற்றை தெளிப்பதின் மூலம் காய்,கனிகளை சேதப்படுத்தும் பூச்சிகளை தவிர்க்கலாம், செழுமையான காய்கறி, பழங்களையும் பெறலாம்.

பாசன மற்றும் பயிர் நிர்வாக மேலாண்மை

வாரம் 1 முறை மண்ணில் ஜீவாமிர்த பாசனம்,15 நாள் ஒரு முறை இலைவழி தெளிப்பு, மாதம் ஒரு முறை வேர்களில் ஊட்டஉரம் இடல் என சரியான பயிர் நிர்வாக மேலாண்மை மூலம் இரசாயன விவசாயத்தை காட்டிலும், இயற்கை தற்சார்பு விவசாயத்தில் அதிக மகசூல் எடுக்கலாம்.

பயிர்பாதுகாப்பான்கள்

அக்னிஅஸ்திரம், பொன்னீம், வேப்பங்கொட்டை கரைசல், மூலிகை பூச்சிவிரட்டி, சுக்குஅஸ்திரம், நீம் அஸ்திரம்.

பயிர் வளர்ச்சிஊக்கிகள்

பஞ்சகவியம், மீன்அமிலம், இஎம், பழக்காடி, கடலைபுண்ணாக்கு கரைசல் , தேமோர் கரைசல், அரப்புமோர் கரைசல்.

 

வளமான, தொய்வில்லா, பயிர்வளர்ச்சிக்கும், சிறப்பான விளைச்சலுக்குமான தற்சார்பு இயற்கை விவசாய நிர்வாக மேலாண்மை

  • நடவுக்கு முன்னர் அடியுரமாக ஊட்டஉரம்.

  • நடவுக்கு பின்னர், உயிர்தண்ணீரில் கடலைபுண்ணாக்கு, மீன்அமிலம், பஞ்சகவியம் கலந்த ஜீவாமிர்த பாசனம்

  • களையெடுப்புக்கு பின்னர், வேரில் ஊட்டஉரம், மண்ணில் ஜீவாமிர்த பாசனம், இலையில் வளர்ச்சிஊக்கி தெளிப்பு

  • பூக்கும் பருவத்திற்கு முன்னர் அக்னிஅஸ்திரம் தெளிப்பு

  • பூக்கும் பருவத்தில் தேமோர் தெளிப்பு

  • காய்க்கும் பருவத்தில் பஞ்சகவியம் தெளிப்பு

  • பயிரின் வளர்ச்சியிலும், காய்ப்பிலும் தொய்வு காணப்பட்டால், உடனடி ஊட்டம்தரும் ஊட்டஉர பயன்பாடு

  • ஒவ்வோர் பாசனத்திலும் ஜீவாமிர்த சேர்ப்பு

 

▪நடவுக்கு பின்னர், உயிர்தண்ணீரில் கடலைபுண்ணாக்கு, மீன்அமிலம், பஞ்சகவியம் கலந்த ஜீவாமிர்த பாசனம்.
▪களையெடுப்புக்கு பின்னர், வேரில் ஊட்டஉரம், மண்ணில் ஜீவாமிர்த பாசனம், இலையில் வளர்ச்சிஊக்கி தெளிப்பு.
▪பூக்கும் பருவத்திற்கு முன்னர் அக்னிஅஸ்திரம் தெளிப்பு.
▪பூக்கும் பருவத்தில் தேமோர் தெளிப்பு.
▪காய்க்கும் பருவத்தில் பஞ்சகவியம் தெளிப்பு.
▪பயிரின் வளர்ச்சியிலும், காய்ப்பிலும் தொய்வு காணப்பட்டால், உடனடி ஊட்டம்தரும் ஊட்டஉர பயன்பாடு.
▪ஒவ்வோர் பாசனத்திலும் ஜீவாமிர்த சேர்ப்பு.

*இவையே, வளமான, தொய்வில்லா, பயிர்வளர்ச்சிக்கும், சிறப்பான விளைச்சலுக்குமான தற்சார்பு இயற்கை* *விவசாய நிர்வாக மேலாண்மை.*

இந்நிர்வாக வழிமுறைகள், ஐந்து வருட காலம், எம்மண்ணில் பயின்று, தற்போது பண்ணையின் நிர்வாகத்தில் நடைமுறையில் உள்ளவை..

*நன்றிகளுடன்..*
*அர்வின் ஃபார்ம்ஸ், போளூர்.*