தற்சார்பு விவசாயி-10 ஆற்றல் தற்சார்பு

ஆற்றல் தற்சார்பு-flatbed fresnel
Agriwiki.in- Learn Share Collaborate
தற்சார்பு விவசாயி – அத்தியாயம் 10

(எச்சரிக்கை: இது கொஞ்சம் நீண்ட பதிவு. பொறுமை அவசியம்)

  • இந்தியாவின் தற்போதைய ஹைட்ரோகார்பன் நிலை
  • மாற்று எரிசக்தி திட்டங்கள்
  • சூரிய வெப்பம் 
  • சூரிய வெப்பத்தின் திறனை எப்படி கைக்கொள்வது
  • பரவளைய அரை உருளை (Parabolic Trough)
  • படுகைமுறை ப்ரெஸ்னல் (Flatbed Fresnel)

சிறு குறு விவசாயி ஆற்றல் தற்சார்பு குறித்து எவ்வளவு சிந்தித்தாலும், நாட்டில் நடக்கும் நல்லது கேட்டதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயையும் வீணாகி விடக்கூடாது. இலவச கரண்டை பிடுங்க போகிறார்கள். மின்சார உற்பத்தியை இஷ்டத்துக்கு நிறுத்துகிறார்கள். வீட்டு மின்சாரம் மட்டுமே ஆயிரக்கணக்கில் ஆகிறது. மீட்டருக்கு மேலே என்னென்னவோ சார்ஜ் போடுகிறார்கள். அதற்கும் மேலே பலவகையான வரி.

இந்தியாவின் தற்போதைய ஹைட்ரோகார்பன் நிலை:
இந்தியாவின் தற்போதைய ஹைட்ரோகார்பன் நிலையை ஒரு சில வரிகளில் பார்ப்போம்.

குஜராத்தின் பார்மர் படுகையில் (RJ-ON-90/1) வேதாந்தாவின் எண்ணெய் எடுக்கும் 25 வருட ஒப்பந்தம் 2020ல் முடிவுக்கு வருகிறது. இந்த ஆட்சி கலைவதற்குள் அவசரமாக மேலும் 10 வருடத்துக்கு நீட்டிப்பு செய்துள்ளது அரசு.

அதேபோல கோதாவரியிலிருந்து இயற்கை எரிவாயுவை எடுக்கும் ரியலன்ஸ் நிறுவனம், எதிர்பார்த்தபடி வராததால், புரூக்பீல்டு எனும் பன்னாட்டு நிறுவனத்துக்கு விற்பதற்கு அரசு அனுமதியளித்துள்ளது. காக்கிநாடாவிலிருந்து குஜராத்வரையுள்ள எரிவாயு குழாயும் இதில் அடங்கும்.

மாற்று எரிசக்தி திட்டங்கள்

மாற்று எரிசக்தி திட்டங்களை பற்றி பார்ப்போம்.

இந்திய அரசின் சூரிய ஆற்றல் நிறுவனம் (SECI), 1200 MW காற்று மற்றும் சூரிய மின்விசை உற்பத்தி டெண்டரை 5 வது முறையாக காலநீட்டிப்பு செய்துள்ளது. கொள்வார் இல்லை. யூனிட் ருபாய் 2.60/- க்கு அரசு கேட்கிறது. அதுவும் டெண்டர் எடுக்கும் வியாபாரி குறைந்தது 600 MW போடவேண்டும். சீன இறக்குமதிதான் வழி. தற்போது அதற்கும் 20% வரி. சாப்ட்பேங்க் மற்றும் அதானி கம்பெனிகள் மட்டுமே இந்த டெண்டரை பரிசீலிக்கின்றன. சூரிய ஒளியும், காற்றும் ஒருசேர இருக்கும் இடங்கள் இந்தியாவில் சொற்பம்.

ஏற்கனவே கமுதியில் அவசரமாக போனவருடம் அதானிக்கு 7 ரூபாய்க்கு 600 மெகாவாட் போட, தமிழ்நாடு ஒப்பந்தம் போட்டுள்ளது நினைவிருக்கும். அதாவது தற்போதைய மதிப்பின்படி இரண்டு மடங்கு கொடுத்து தமிழ்நாடு அவரிடமிருந்து “வாங்கவேண்டும்”. அவரிடம் அதிக தொகை கொடுத்து வாங்கி உங்களுக்கு மானியம் கொடுக்கவேண்டும். பிறகு உங்களை திட்டிக்கொண்டே இருக்கவேண்டும்.

தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC) நிறுவனமும் தற்போது ஒரு டெண்டரை வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவின் மேற்கு மாநிலங்களுக்கு தேவையான மாநில எல்லை பரிமாற்ற அமைப்பு (ISTS) க்காக. அதுவும் யூனிட் ருபாய் 2.49 பைசாதான். இதையும் கொள்வாரில்லை. தாங்களே கட்டமைத்து பராமரிக்கவும் வேண்டும். கஜா புயலின் கோர தாண்டவத்தை இப்போதுதான் பார்த்தோம்.

இரும்பு கட்டிடங்கள் காற்றில் பறக்கும்போது சோலார் பேனல்கள் எம்மாத்திரம். இந்த விலையில் வருடக்கணக்கில் பராமரிப்பது அசம்பவம். வியாபாரிகளுக்கு கட்டுப்படியாகவில்லை. பாதியில் விட்டு விட்டு ஓடிப்போய் விடுவார்கள். ஓடாத கூடன்குளத்துக்கு மேன் மேலும் அரசு செலவழித்துக்கொண்டிருப்பது போல இதுவும் வெட்டி செலவாக முடியும். நம் நாட்டிலேயே சோலார் பேனல் உற்பத்தி செய்வதுதான் முறை. தற்போது சைனாவில் தயாராகிறது.

அதேபோல சோலார் திட்டங்களை நிறைவேற்ற தாமதப்படுத்தினால் ஒரு நாளைக்கு ஒரு கிலோவாட்டுக்கு 1000/- அபராதம். இதுபோக உபயோகிக்கும் பொருட்களுக்கு GST 5% கட்டவேண்டுமா அல்லது 18% கட்டவேண்டுமா என்ற குளறுபடி.

சூரிய வெப்பம் 
இதை மனதில் கொண்டுதான் புதுப்பிக்கத்தக்க ஆற்றலான சூரிய வெப்பத்தை கையில் எடுத்தோம். (சூரிய ஒளி அல்ல. இது வெப்பம்). ஆனால் தற்போது கிடைக்கும் சூரிய ஒளி தகடுகள் மலிவாகத்தான் இருக்கின்றன. தனியாரிடம் ஒரு கிலோவாட்டுக்கு ஒரு லட்சம் செலவாகும். மானியத்தில் அரசாங்கத்திடம் வாங்குவோருக்கு மிக மிக குறைந்தவிலையில் கிடைக்கிறது. ஆனால் எத்தனைபேருக்கு மானியம் வாங்க பட்டா, சிட்டா, அடங்கலுடன் நிலம் இருக்கிறது ? பாகப்பிரிவினை செய்தவர்களுக்கு இது இருக்காது.

சோலாரை வாங்கினோமா, மாட்டினோமா ஓடவிட்டோமா என்று வாங்கி மாட்டுகிறார்கள் . எத்தனை நாள் அது ஓடுமென்று உத்தரவாதம் கிடையாது. புயல், மழை, வெயில், காற்று, பனி என்று அந்த மென்பொருள் தாங்கி நிற்கவேண்டும். 15 வருட உத்தரவாதத்துடன் வரும் விலை உயர்ந்த LED பல்புகளே இரண்டு வருடம்தான் தாங்குகின்றன. அதுவும் வீட்டுக்குள்.

சூரிய வெப்பத்தின் திறனை எப்படி கைக்கொள்வது
சரி இனிமேல் சூரிய வெப்பத்தின் திறனை எப்படி கைக்கொள்வது என்று பார்ப்போம். இந்த பயணத்தில் சூரிய வெப்பத்தின் மீது நம்பிக்கையும் காதலும் ஏற்பட வேண்டும். அதுதான் முதற்படி. இதற்காக நாம் மூன்று கட்டமாக பரிசோதனைகள் செய்து உறுதி செய்தோம்.

பரவளைய கிண்ணத்தின் (Parabolic Dish) மூலம் சூரிய வெப்பத்தை குவிப்பது. 600 டிகிரிக்கு மேல் கிடைத்தது. ஆனால் ஒரு புள்ளியில்தான் கிடைக்கும். இது வேலைக்கு ஆகாது. மேலும் பரவளைய கிண்ணங்களை அமைப்பது கிராமத்தில் நடக்காது. விலை கூடும். இதனால்தான் சூரிய வெப்பத்தை யாரும் கையில் எடுக்க வில்லை. இதை

எப்படி பரிசோதிப்பது என்று இந்த காணொளியில் காணவும்.

காணொளி 1 : பரவளையம் – ஜரிகை பேப்பரை உபயோகித்து – https://youtu.be/n0gKOfWuh7w

காணொளி 2 : பரவளையம் – கண்ணாடி உபயோகித்து

பரவளைய அரை உருளை (Parabolic Trough)
அடுத்து பரவளைய அரை உருளை (Parabolic Trough). இது உலகில் பல நாடுகளில் தற்சமயம் உபயோகத்தில் உள்ளது. பெரிய அளவில் நிறுவ முடியும். அதிக வெப்பம் கொடுக்கும். கட்டமைக்க அதிகம் செலவாகும். ஆனால் தற்சார்புடன் நாமே தயாரித்து கொள்ளவேண்டுமென்றால் மிகவும் கடினம். காற்றையும் தாங்கி மாபெரும் பர வளைய உருளை வடிவில் கண்ணாடியை பொருத்துவதும் கடினம். சொல்வது எளிது.

தற்போது வளையும் தன்மையுள்ள அக்ரெலிக் கண்ணாடிகள் கிடைக்கின்றன. அனால் அவை மூன்றுமடங்கு விலை கூடியவை. சூரிய வலம் வரும் திசையில் இந்த மாபெரும் அமைப்பை திருப்பிக்கொண்டு இருக்கவேண்டும். (சென்ற அத்தியாயத்தில் படங்களை பார்த்தோம்). அது கிராமத்தில் நடக்காத ஒன்று.

முதலில் ஓர் மாபெரும் பரவளையத்தை (Parabola) தரையில் வரைவதே கடினம். பிறகுதானே மற்றவை எல்லாம். என்னுடைய அனுபவத்தை இந்த காணொளியில் காணவும். நீங்களும் முயற்சிக்கலாம்.

காணொளி 3 : சார்ட் பேப்பரில் மாபெரும் பரவளையம் வரைவது எப்படி

காணொளி 4 : பரவளைய உருளை கொண்டு சூரிய வெப்பத்தை குவித்தல். நீராவி உருவாக்குதல்

இது எதுவும் வேலைக்காகாது என்று நன்றாக தெரியும். இருந்தாலும் வெட்டி முறிய காரணம், அனுபவத்தை அடைவதுதான். நாளை யாரும் நம்மிடம் இதை செய்தாயா, அதை செய்தாயா என்று கேட்டுவிட முடியாது பாருங்கள்.

படுகைமுறை ப்ரெஸ்னல்
தற்போது நாம் பார்க்கப்போவது, நான் பரிந்துரைப்பது இதுதான். படுகைமுறை ப்ரெஸ்னல் (Flatbed Fresnel) என்று கோட் பாட்டை அடியொற்றியது. அதாவது உருண்டையாக இல்லாமல் தட்டையாகவே இருந்துகொண்டு ஒளிக் கதிரை குவிப்பது. அதாவது நாம் சாதாரணமாக முகம் பார்க்கும் கண்ணாடிகளை மட்டுமே உபயோகித்து சூரிய ஆற்றலை பெறுவது. இதற்காக கடினமான கட்டுமானங்கள் தேவையில்லை. சாதாரண பட்டறையில் உருவாக்கி விட முடியும்.

காணொளி 5 : படுகை முறை ப்ரெஸ்னல் – https://youtu.be/gpRzukeJp84

இந்த காணொளியில் நீங்கள் காண்பது ஒரு செய்முறை மாதிரி. ஒரு மேசை அளவு. இதை ஒரு இரண்டாயிரம் சதுர அடிக்கு (30 அடிக்கு 70 அடி) அமையுமாறு கற்பனை செய்துகொள்ளுங்கள். இதில் தயாராகும் ஆற்றல் தாராளமாக ஒரு பண்ணைக்கு அல்லது ஒரு கிராமத்துக்கு போதும்.

மாவு திரிக்கலாம், கதிர் பிரிக்கலாம், அரைக்கலாம், தண்ணீர் சேந்தலாம் அல்லது 10 KW மின்சாரம் தயாரிக்கலாம். கட்டமைத்தபின் பராமரிப்பு செலவு ஒன்றுமில்லை. எவ்வளவு நாளும் தாங்கும். கண்ணாடி உடைந்தாலும் ஒன்றுமாகாது.

சில லட்சங்கள் பிடிக்கும். இருந்தாலும், இது சூரிய ஒளித்தகடுடன் (Solar Panel) போட்டி போடவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.

சூரிய ஒளி தகட்டை போட்டிருப்பவர்கள் அதன் சிக்கலற்ற கட்டமைப்பாலும், எளிதான அமைப்பாலும் பெரிதும் கவரபெற்றுள்ளனர்.
அதனால் இந்த படுகை முறை ப்ரெஸ்னல் (FlatBed Fresnel) அதனோடு விலையிலும், எளிதாக்கப்பட்ட வடிவிலும் போட்டி போட்டு அதை விட சிறந்த நன்மைகளை அளிக்க முடியும். ஏன் கையடக்கமான பெட்ரோல்/டீசல் ஜெனரேட்டர்களுடனே போட்டி போடமுடியும்.
இதை களத்தில் செயல்படுத்தி பார்க்க பணம் தேவை.

ஒரு குழுவாக ஆர்வலர்கள் முன்வந்தாலோ அல்லது ஒரு பெரிய நன்கொடையோ, அரசாங்க நிதியோ கிடைத்தால் செய்துபார்க்கலாம். நேரடியாக வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்தாலும் செய்து அனுப்பலாம்.

முதல் பக்கத்தில் சொன்னபடி ஆற்றல் வியாபாரிகள் மற்ற உற்பத்தி துறைகளில் பெருமளவில் முதலீடு செய்துவிட்டால் இந்த மலிவான சாதனத்தை அரசாங்கத்துடன் சேர்ந்து கூட்டாக எதிர்ப்பார்கள். அதற்கும் தயாராக வேண்டும்.

“எல்லோரும் வலிமையாக, தற்சார்புடன் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் ஒரு சிலரே அதை அடைய முயற்சியில் ஈடுபடுகிறார்கள். “ மகாத்மா காந்தி.

— வளரும்
#தற்சார்புவிவசாயி
Alwar Narayanan
https://www.facebook.com/alwar.narayanan.3/posts/2218850571458472

 

PT Rajan How much investment is required ?

For 10 kv it may cost upto 6 to 7 Lacs for the first proof of concept piece. Subsequent pieces can be made in than 5 lacs I guess. If mass produced less than that.