தற்சார்பு விவசாயி-6 காற்றாடி

Agriwiki.in- Learn Share Collaborate

தற்சார்பு விவசாயி — அத்தியாயம் 6

நான் விறகு பொறுக்க போகும்போது அம்மா, “அத்தி மரத்திலிருந்தோ அதனைச் சுற்றியோ காய்ந்த விறகைப் பொறுக்காதே,” என்று என்னை எச்சரித்தார். “ஏன்” என்றேன். “அது கடவுளின் மரம், அதனை வெட்டவோ, தீ எரிக்கவோ மாட்டோம்” என்றார். அப்போது அவர் என்ன சொல்கிறார் என்று எனக்கு புரியவில்லை.

அத்தி மரத்திலிருந்து இருநூறு முழம் தள்ளி ஒரு நீரோடை இருந்தது. அதற்கு ஆப்பிரிக்காவில் காணுங்கு என்று பெயர். நேரடியாகவே அந்த தண்ணீரை குடிப்போம். சிறுமியாக, நீரூற்று கொப்பழித்து புறப்படும் இடத்துக்கு போயிருக்கிறேன். ஆரோரூட் பயிரிடுவோம். செடிகளின் கீழ் நூற்றுக்கணக்கான தவளை முட்டைகள் இருக்கும். அவற்றை மாலையாக அணிய ஆசை.

அத்திமர வேர் அமைப்பிற்கும் நிலத்தடி நீர் தேக்கத்திற்கும் நேரடி தொடரிப்பு இருக்கிறது என்று  அறிந்துகொண்டேன். வேர்கள் பாறையை குடைந்து மண்ணையும் தாண்டி நிலத்தடி நீரை அடையும். வேர்களின் வழியாக தண்ணீர் மேல் எழும்.

— இதை எழுதியவர் வங்காரி மாத்தாய். இவர் பிறந்தது ஆப்பிரிக்காவின் கென்யா மாகாணத்தில் இகித்தே கிராமத்தில்.

இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய தோட்டம் அமைந்துள்ள நாச்சங்குளத்தில் காற்று இல்லை. தொடர்ந்து மூன்று நாட்களாக காற்றாடி சுற்றவில்லை என்கிறார் என் நண்பன் சுப்பு. இதே நாள் மூன்று வருடம் முன்பு தண்ணீர் டிராக்டரில் தண்ணீர் வாங்கினோம். அப்படித்தான் மரங்களை காப்பாற்ற முடிந்தது. தோட்டம் பெரிதாகி விட்டது. இப்போது மின்சாரம் மாற்றாக உள்ளது. ஓரளவு தண்ணீர் ஏற்றுவதில் சிக்கல் இல்லாமல் தன்னிறைவு அடைந்துவிட்டோம்.

ஒற்றை காற்றாடியின் தண்ணீர் போதவில்லை. 2 வருடம் முன்பு இன்னொரு போர் போட்டோம். அதற்க்கு இன்னொரு காத்தடியை நானே வடிவமைத்தேன். அனால் அது நிறைவேறவில்லை. வள்ளியூரில் எங்கோ பட்டறையில் அரைகுறையாக அது மூலையில் உறங்கிக்கொண்டிருக்கும்.

ஆகவே வீட்டு கரண்டுக்கு விண்ணப்பம் கொடுத்திருந்தோம். வீட்டு கரண்ட் என்றால் உடனே கிடைக்கும் என்று சொன்னார்கள்.. அதுவும் 1.5 ஆண்டுகள் இழுத்தடித்து 10 விவசாயிகள் சேர்ந்தவுடன் ஒரு டிரான்பார்மர் போட்டு கிடைத்தது. தேவையான அளவு மின்சாரம் வராது. லோ வோல்டேஜ் ஆகிவிடும். டெஸ்மோ மோட்டார் ஓடவில்லை. கட்டைகள் (கெப்பாசிட்டர்) போட்டும் போராட்டம்தான். செலவு எகிறிக்கொண்டு போகும் (தனிப்பதிவு பிறகு).

பிறகு வாடகைக்கு ஜெனரேட்டர், அது இது என்று அலைந்துவிட்டு மீண்டும் காத்தாடிக்கு வந்திருக்கிறோம். மின்சாரம், காற்றில்லாதபோது தொட்டுக்கொள்ளத்தான்.

விஷயம் அதுவல்ல. தோட்டத்தை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள விசை அல்லது ஆற்றல் எப்போதும் தேவை. அது எங்கிருந்து கிடைக்கும்? இணைத்துள்ள படத்தை பார்க்கவும். எதை திறவு செய்கிறீர்கள் என்பது உங்களுக்கு எவ்வளவு இயற்கையின் மீது பொறுப்பு இருக்கிறது என்பதை பொறுத்தது. இந்த படத்தில் மஞ்சள் நிறம் அப்பியவைகளை நான் கையாண்டிருக்கிறேன். காத்தாடியை பற்றி மட்டும்தான் இதுவரை பார்த்தோம்.

இதைவிட கனரக ஆற்றலை தரவல்ல, இலவசமாக என்றும் பெறவுள்ள பேராற்றல் உங்கள் தோட்டத்தில் இருக்கிறது. அதுதான் சூரிய வெப்பம். சூரிய வெளிச்சத்தை பேசவில்லை. அதாவது சோலார் என்று நீங்கள் புரிந்து வைத்திருப்பதை பேசவில்லை. நான் சொல்வது சூரிய வெப்பம். அநேகமாக உங்களுக்கு பரிச்சயமில்லாதது. இந்த ஆற்றலை கைக்குள் கொண்டுவர திட்டங்கள் தயார். ஆனால் அதற்கு ஒரு ஐந்து லட்சமாவது தேவை. அதை இப்போது முதலீடாக போடுமளவு துணிவு வரவில்லை. அதற்கான ஒரு நீராவி எந்திரத்தை பார்க்க நான் விரைந்த இடம் குஜராத்திலுள்ள, ராஜ்கோட்.

கைகூடாத அந்த கதையை அப்புறம் பார்ப்போம். அது இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றவல்லது.

இப்போது பல நண்பர்கள் காத்தாடியின் விவரத்தை பதிவிட கோரியிருக்கிறார்கள். அதனால் கீழ்கண்ட விவரங்களை தருகிறேன். தோட்டத்துக்கு வாங்க விருப்பமுள்ளவர்கள் மட்டும் மேலதிக கேள்விகளை மின்னஞ்சலில் கேட்கவும். வெறும் ஆர்வம் மட்டும் உங்களுக்கு இருந்தால் வலைதளத்தில் தேடி பெறவும்.

இவ்வுலகம் விந்தையானது. எதிரி போல இருப்பவர்கள் சில நேரத்தில் உங்களை வாழ்விப்பார்கள். நண்பனைப்போல இருப்பவர்கள் நாட்டை கெடுப்பார்கள். இப்படித்தான் பென்னி குவிக் போன்ற நல்ல உள்ளம் படைத்த வெள்ளையர் இருவர் இங்கிலாந்தில் இருந்தனர். அவர்கள் பெயர் “சாண்டி போலக்” மற்றும் “பால் டௌசன்” (Sandy Polak and Paul Dawson) என்பதாகும்.

இவ்விரு இன்ஜினியர்களுக்கு ஆப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகளில் உள்ள சிறு விவசாயிகளுக்காகவும், காட்டு விலங்குகள் குடிக்கும் குட்டைகளுக்காகவும் குறைந்த செலவில், அதிக காலம் உழைக்குமாறு, தற்சார்புடன் தாங்களே தயாரித்துக்கொள்ளுமாறு ஒரு காற்றாடியை வடிவமைத்தனர்.

இதனை சாதாரண உபகரணங்கள் கொண்டு தயாரிக்கலாம். மற்ற காத்தாடிகளைப்போல கியர் பெட்டி, வார்ப்பு இரும்பு கவசம் போன்றவை தேவையில்லை. இதில் உள்ளது SKF நம் ஊரில் கிடைக்கும் பால்பேரிங். 20 வருடம் முதல் 50 வருடம் உழைக்க வல்லது.

இவர்கள் வடிவமைத்த எளிமையான காத்தாடியை பதிவு செய்யாமல் பொது பயன்பாட்டுக்கு தாரைவார்த்துவிட்டனர். இதன் பெயர் POLDAW (போல்டா) என்பதாகும். அது அவர்கள் பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களை சேர்த்தால் வரும் வார்த்தை என்பது புரிந்திருக்கும்.

நான் வாங்கிய காத்தாடியை தயாரித்தது ABS என்ற மும்பை நிறுவனம். வடிவமைத்தவர்களின் விருப்பத்துக்கிணங்க இது எளிமையான விவசாயிகளுக்கு மட்டும் விற்கப்படும். கேளிக்கை மையங்கள், கிளப், நீச்சல் குளங்கள் மற்றும் சொகுசு விடுதிகளுக்கு விற்கப்படமாட்டாது. இது அறம் சார்ந்த முடிவு.

இரண்டு மாடல்களில் வருகிறது.

காற்றாடி விட்டம் 3.5 மீட்டர்
டவர் உயரம் 9 மீட்டர்
21000 லிட்டர் நீரை இறைக்கும்.

காற்றாடி விட்டம் 5 மீட்டர்.
டவர் உயரம் 12 மீட்டர்.
43000 லிட்டர் நீரை இறைக்கும்.

விலை 2 லட்சத்திலிருந்து 3.5 வரை இருக்கும்.

மேற்கொண்டு வாங்க விருப்பம் இருந்தால் என்னுடைய முகவரிக்கு உங்கள் விருப்பத்தை எழுதவும். (ஈமெயில்: narayanalwar@hotmail.com) உங்கள் தேவைக்கு ஏற்ற சரியான தேர்வுதானா என்று கணித்தபின் அந்த கம்பெனி முகவரை  அறிமுகப்படுத்துகிறேன். சில நேரங்களில் ABS கம்பெனியாருக்கு உங்கள் தேவை புரியாது.

அங்குள்ளவர்கள் முக்கியமான தொழில் இதுவல்ல. அவர்கள் உயர் அழுத்த பாய்லர் துறையில் தொழில் செய்கிறார்கள். காத்தாடிக்கென்று தனியாக ஆட்கள் கிடையாது. காத்தாடி தயார் செய்து விற்பது அவர்கள் மேலதிகமாக செய்யும் ஒரு சமூக சேவை. அநேகமாக வரவேற்பு இல்லையென்றால் இதை நிறுத்திவிடவும் வாய்ப்புள்ளது.

தற்போது அவர்களிடம் ஒரு காத்தாடி தயார் நிலையில் உள்ளது. ஆர்டர் கொடுத்தால் லாரியில் கூரியர் செய்து மாட்டிவிடுவார்கள். இல்லையென்றால் இன்னொன்று செய்ய ஒரு 1 முதல் 3 மாதம் ஆகும்.

– – வளரும்
#தற்சார்புவிவசாயி (alwar narayanan )

சென்ற அத்தியாயம் 5