தற்சார்பு விவசாயி — அத்தியாயம் 8 சூரிய வெப்பம்
ஒரு தற்சார்பு விவசாயி யாரையும் எதற்கும் நம்பி இருக்கக்கூடாது. உரம், விதை, ஆற்றல், தண்ணீர் எதற்குமே.
இயற்கையை ஒட்டிய மரபு வேளாண்மை செய்வதோடு கைக்கெட்டிய தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதும் அவசியம். இனிமேல் இரண்டையும் கலந்தே காண்போம்.
நான் பள்ளியில் படிக்கும்போது கால்பந்து மைதானத்தின் வேலியோரம் யூகலிப்டஸ் மரங்கள் வரிசையாக நடப்பட்டிருந்ததை கண்டேன். தைல மரங்கள் வேகமாக வளரும். எங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் ஒரு ஆயர். நீண்ட பிரம்பை முதுகுப்புறம் அங்கியினுள் மறைத்து வைத்திருப்பார்.
ஒருநாள் அவரது செல்ல நாய் இறந்துவிட்டது. ஒரு தைல மரத்தடியில் இந்த நாயை புதைத்தனர். கொஞ்ச நாளில் அந்த மரம் மட்டும் மற்ற மரங்களைவிட வேகமாக நெட்டையாக வளர்ந்ததை நான் பார்த்து வியந்ததுண்டு. நாய் நல்ல உரமாகி இருக்கலாம்.
எங்கேயும் புல்வெளி அல்லது காடுகளை கண்டால் ஒரு எட்டு நுழைந்துவிட்டு வருவது வழக்கம். மாடு மேயும் காட்டில் மாட்டுசாணியை காணலாம். பல நாட்கள் ஆன சாணியை கவனித்துள்ளேன். பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி செடிகள் அதனுள் அல்லது அதைச்சுற்றி வளருவதாக சொல்லமுடியாது.
சாணியில் இருக்கும் சத்துக்களால் சாணி வட்டத்தின் ஒரு ஓரத்தில்வேண்டுமானால் சில புற்கள் அதிகமாக வளர்ந்திருக்கலாம். சொல்லப்போனால் சாணி பட்ட இடம் கொஞ்சம் வளர்ச்சி இல்லாமல்தான் பார்த்திருக்கிறேன். சாணி தெளித்த இடம் கட்டாந்தரையாகத்தான் இருக்கும்.
ஆகவே எது உரமாகிறது? டன் கணக்கில் சாணி வாங்குவது, ஆட்டு கிடை போடுவது, ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா கலப்பது எல்லாம் நிறைய பணம் செலவழியும் வேலைகள்.
ஏன் எல்லோரும் இவற்றை பரிந்துரைக்கிறார்கள் ? பயோ உரங்களை விற்கிறார்களே ? ஏன் ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கவேண்டும். இப்படியே போனால் தழை (நைட்ரசன்) மணி (பாஸ்பரஸ்), சாம்பல் (பொட்டாசியம்), இரும்பு, மயில் துத்தம், போரான், மாலிப்டினம், தாமிரம், மாங்கனீசு என்று சுரங்கத்தையே வாங்க சொல்லுவார்கள். வேண்டாத வெட்டிவேலை.
நகர்ப்புற சாலையின் மருங்கிலும், காட்டிலும், மலைச்சரிவிலும் இயற்கையில் விளைந்த செடி, கொடி , மரங்கள் பச்சையாகத்தானே இருக்கிறது ? உரம் போடுவது வெட்டிவேலையா ? இதன் சூச்சுமம் என்ன ? என்று ஆலோசித்ததில் புரிந்தது இதுதான்.
மனிதர்களால் ஒரு கிள்ளல் புல்லைக்கூட மென்று தின்னமுடியாது. ஆனால் மிருகங்கள் அவற்றை சுவைத்து உண்டு ஜீரணிக்கின்றன. அதற்க்கு காரணம் வயிற்றில் உள்ள நுண்ணுயிர்கள். அவை சாணிமூலம் கொஞ்சம் வெளிப்படும். பசியோடு இருக்கும் அவற்றுக்கு ஆகாரம் தேவை. சர்க்கரை, வெல்லம், மாவு பதார்த்தங்களில் உள்ள மிக நீண்ட செல்லுலோஸ், குளூக்கோஸ் சத்தை இவை உடைக்கின்றன. உடைத்து கரிம (carbon), தண்ணீர், போன்ற மூலக்கூறுகளை உருவாக்குகின்றன.
இவைதான் செடிகளுக்கு வேண்டிய சத்து. சுருக்கமாக சொன்னால் சாணி, தனியாக வேலைசெய்யாது. அதற்கு வெல்லம், விவசாய கழிவு போன்ற உணவு தேவை. இதே போன்ற முறையில்தான் வேர்களில் உள்ள நுண்ணுயிர்கள் காற்றில் 78% உள்ள தழைச்சத்தை (Nitrogen) செடிக்கு ஏற்றவாறு மாற்றி தண்ணீரில் கரைக்கின்றன.
இயற்கை வேளாண்மையில் எந்த ரசாயனமும் தேவையில்லை. இலை மஞ்சளாக இருக்கிறதா ? இருந்துவிட்டு போகட்டும். இயற்கைக்கு தெரியும் எப்போது என்ன வேண்டுமென்று. “சார், உப்ப அள்ளி வெச்சா, அப்படியே பச்சை கட்டி நிக்குதுசார்” என்பார்கள். அவர்கள் சொல்லும் உப்பு சூப்பர்பாஸ்பேட். அதிகம் பச்சையானால் பூச்சிதான் வரும்.
படத்தில் காண்பது தோட்டத்தில் எதுவும் போடாமல் விளைந்த நெற்பயிர்.
முக்கால்வாசி சத்துக்கள் வளிமண்டலத்திலிருந்துதான் செடிகளுக்கு கிடைக்கிறது. அதனால்தான் காடுகள் பசுமையாக இருக்கின்றன. நாம் அறுவடை செய்துவிடுவதால் மண் வளம் பாதுகாக்க மேற்சொன்ன இயற்கை உரங்களை கொஞ்சம் இடுவது அவசியம்.
இங்கே உரம் என்று சொல்வது செடிகளுக்கு வேண்டிய கரிமங்களும், நுண்ணுயிர்களும். அவற்றை உயிர்ப்புடன் வைக்க தண்ணீர் தெளித்து ஈரப்பதத்துடன் வைப்பது அவசியம். எங்கள் ஊரில் வேகும் வெயிலில், களிமண் பூமி காய்ந்து வெடித்துவிடும். இதற்கான தீர்வை அடுத்த பதிவில் காண்போம்.
நிற்க
நம்முடைய சிறு குறு விவசாயிகளுக்கு ஆற்றல் தேவை என்று இதுவரை பார்த்தோம். ஆற்றல் பலவகைப்படும். தற்சார்பு வேண்டுமென்றால் அதை நாமே தயாரித்து கொள்ளவேண்டும். இயற்கையை நம்பி, குறைந்த செலவில் செய்யவேண்டியது அவசியம். அதில் காற்றாடியை பற்றி மட்டும் கொஞ்சம் பார்த்தோம். இன்னும் விவாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.
நேற்று ஒரு வேடிக்கையான காணொளியை பார்க்கநேர்ந்தது. எதோ நாட்டில் யானைகளை சாதுரியமாக பழக்கி ஏர் உழுவதற்கு பணிக்கிறார்கள். ஆக, மனிதனுக்கு மாபெரும் ஆற்றல் தேவைப்படுகிறது. அதற்காகத்தான் கடனுக்கு டிராக்டர் வாங்கி கடன்காரனிடம் உதைபட்டு தூக்கில் தொங்குகிறான். இது நடக்கக்கூடாது. நடக்கவிடக்கூடாது.
இப்போது நாம் இன்னும் ஒரு மேலே சிந்திக்கவேண்டும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு தோட்டத்திலும் குறைவில்லாமல் கிடப்பது சூரிய வெப்பம். வெள்ளையாக அடிக்கும் வெப்பக்காற்று 44 டிகிரியை தாண்டும். ஐயோ, வெயில் கொளுத்துகிறது, தண்ணீர் வறண்டுவிட்டது என்ன செய்வேன் என்று அங்கலாய்ப்பதைவிட இதை பயன்படுத்துவது எப்படி என்று சிந்திக்க வேண்டும். ?
இதற்காக நாம் சென்றது ஒரு தாத்தாவை பார்க்க. இடம் ராஜ்கோட். குஜராத்.
இவர் ஒரு வேடிக்கையான தாத்தா. தொழிலதிபர். காந்தியவாதி. எதையும் மையப்படுத்துதல் இவருக்கு பிடிக்காத விஷயம். பெரும் தொழிச்சாலைகளுக்கு கடும் எதிரி. ஒவ்வொரு கிராமமும் தற்சார்புடன் இருக்கவேண்டுமென்று சொல்வதோடல்லாமல் எண்ணெய் செக்குகள், மிகச்சிறிய ஜின்னிங் மில் என்று உற்பத்தி செய்து நாடெங்கும் அனுப்புகிறார்.
நான் சென்றபோது எள் விளையும் பருவம். வெல்லமும் எள்ளும் சேர்த்து அரைத்து ஒருவித எள்ளுமிட்டாய் தயாரித்து கொண்டிருந்தனர் பெண்மணிகள். மிக தீர்க்கமுடன், மகிழ்ச்சியாக அவர்கள் வேலை செய்துகொண்டிருந்ததை பார்க்கமுடிந்தது. 3 மாதம் கழித்து வேறு வேலை செய்வார்களாம்.
எண்ணெய், அரிசி, வெல்லம், துணி, செங்கல், சிமெண்ட், ஓடு, மின்சாரம், இவற்றை கிராமங்கள் தாங்களே உற்பத்தி செய்துகொள்ளவேண்டும். என்னைப்போல ஒரு லட்சம் இன்ஜினியர்கள் இருந்தால் இந்த நாட்டை சொர்க்கமாக மாற்றுவேன் என்று சொல்வார்.
மின்னஞ்சல் போட்டால் தானே ஒவ்வொரு எழுத்தாக டைப் செய்து பதில் அனுப்புவார். உதவியாளர் என்ன ஆயிற்று என்று கேட்டேன். ஒன்றுமில்லை புடவை கட்டிக்கொண்டு வர சொன்னேன். சுடிதாரில்தான் வருவேன் என்று சொல்லிவிட்டார். எனக்கு புடவை கட்டிய உதவியாளர்தான் வேண்டுமென்கிறார். புடவையை பற்றி குஜராத்தில் புத்தகம் எழுதியுள்ளார். நமக்கு தமிழ் போல அவருக்கு குஜராத்தி.
அங்கெ சென்றது அவரது நீராவி எஞ்சினை பார்க்க. அவர் நீராவி எஞ்சின் தயாரித்துக்கொண்டிருக்கிறார். கான்வாஸ் துணியில் மலிவுவிலை காத்தாடியும் தயாரித்தார். ஆனால் அது போகவில்லை.
— வளரும்
#தற்சார்புவிவசாயி