ஐயா நம்மாழ்வார் அவர்களின் குரு எனக் கூறும் பெர்னார்ட் ஐயா அவர்களோடு:
மனமிருந்தால்…..
மாற்றத்தை விரும்பினால் மாற்றம் சாத்தியம் என்று செயல்படுத்திக் காட்டிய நான் மதிக்கும் ஆளுமை மிக்க மனிதர்களுள் பாண்டிச்சேரி ஆரோவில் திரு பெர்னார்ட் அவர்களும் ஒருவர். அவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் நான் விரும்பும் நம்மாழ்வார் ஐயாவின் எழுத்துக்கள் வழி விதைக்கப்பட்டது.
மூன்று வருடங்களுக்கு முன்பு நல்ல கீரை பண்ணையில் நடந்த இயற்கை வேளாண் பயிற்சி முகாமில் சிறு அமர்வுக்காக வந்திருந்தார். மிகக் குறைந்த நேரமே என்றாலும் அனைவரின் மனதிலும் அவர் ஏற்படுத்திய சிந்தனை மாற்றம் மிகவும் பெரியது.அமர்வின் நிறைவில் நான் நம்மாழ்வார் ஐயாவைப் பற்றி அவருடைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்க அவரோ நினைவுகள் என்று எதுவும் இல்லை.அவர் விரும்பிய வழியில் செயல்படுவது மட்டுமே அவரை நினைவு கூற சரியான வழி. நீயும் அவரை நினைவு கூற விரும்பினால் அவர் விரும்பிய வழியில் ஏதாவது செய் என்று மிகச் சுருக்கமாக முடித்துவிட்டார்.அவர் கூறிய வார்த்தைகள் ஏற்படுத்தியது அர்த்தமுள்ள மாற்றம்.
சமீபத்தில் 09.12.2016 அன்று மீண்டும் ஒருமுறை நண்பர்களுடன் சென்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முன் அனுமதியுடன் மாலை 3.30 முதல் 5.30 வரை மட்டுமே அவரையும் அவர் உருவாக்கிய கூழாங்கல் தோட்டத்தையும் (Pebble Garden,Auroville) பார்க்கலாம். நாங்கள் அனைவரும் அதீத ஆர்வத்தில் 2 மணிக்கே சென்று விட்டோம். அருகே காலாற சுற்றித் திரிந்து விட்டு குறித்த நேரத்திற்கு முன்பே தோட்டத்திற்குள் சென்றோம். அவரும் சில நிமிடங்களில் வந்து அமர்ந்தார்.
அவருடைய வழக்கமான பாணியில்”சென்னை எப்படி இருக்கிறது ? மழை எங்கே? தண்ணீர் இருக்கிறதா? அது போதுமா? என்ன செய்யப் போகிறீர்கள் ?” என்று கேட்டார். இன்னும் சிலர் வரவேண்டி இருக்கிறது.வந்தவுடன் ஆரம்பிக்கலாம் என்று சொன்னார். அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். வழக்கமான மின்விசிறிகள் எதுவுமற்ற இதமான குடிலின் கூரையின் கீழ் அமர்திருந்தோம். எப்பொழுதும் மின்விசிறியைத் தேடும் மனது அதை மறந்தே போனது. இதமான சூழலில் லயித்த போதே மனம் சுற்றும் முற்றும் குடிலை ஆராயத் தொடங்கியது.
நாங்கள் அமர்ந்திருந்தது பசுமைக் குடில் எனத் தெரிய வந்ததும் அதைப் பற்றிய விவரங்களைக் கேட்டு எங்கள் உரையாடலைத் துவங்கினோம்.
அதற்கு அவர் “நாங்கள் இந்த குடிலை மிகவும் சிரமப்பட்டுதான் அமைக்க முடிந்தது. நானும் கற்றுக்கொண்டேன்
இப்போது வயது முதிர்ச்சி காரணமாக இந்த வேலைகளைச் செய்ய முடியவில்லை. இப்போது நீங்கள் விரும்பினாலும் இதுபோன்ற பசுமைக் குடில்களைச் செய்வதற்கான ஆட்கள் அருகி விட்டார்கள். அப்படியே கிடைத்தாலும் இதற்கான மூலப்பொருட்களை கடினமான தேடுதலுக்கு பின்பே சேகரிக்க இயலும்.” என்றார். கடந்த முறை உங்கள் உடல் நலக்குறைவு காரணமாக சந்திக்க இயலவில்லை.தற்போது தங்கள் உடல் நலம் எவ்வாறு இருக்கிறது என்று வினவ அவரோ” இருக்கிறது. குறை சொல்லாமல் இருப்பதே சாலச் சிறந்தது” என்று புன்னகையுடன் கூறினார்.
இதற்கிடையில் செக் குடியரசு,பிரான்சு, ரசியா மற்றும் சில நாட்டவரும் வந்து சேர்ந்தனர்.
1984 முதல் தற்போது வரையிலான பல்வேறு படிநிலைகளைக் கொண்ட புகைப்படங்களை விரித்து வைத்து நெடியதொரு உரையை ஆரம்பித்தார். தங்களுடைய ஆடம்பர மரத் தேவைகளுக்காக படிப்படியாக பல ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்ட வரலாற்றை கண்முன் நிகழும் வகையில் எடுத்துரைத்தார். அந்நிய ஆதிக்கத்தால் விளைந்த நிலச் சீர்கேடுகள் அதைப் புணரமைப்பு செய்வதற்கான அவசியத்தையும் உண்டாக்கியது.
தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக தரிசாகக் கிடந்த இந்நிலங்கள் இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் காடுகள் புணரமைப்பு செய்வதற்கான திட்ட முன்வரைவு வைக்கப்பட்டு அதற்கான பணிகளை தமிழகத்தில் கிழக்குக் கடற்கரை சாலையில் பாண்டிச்சேரியில் ஆரோவில் நிர்வாகம் முன்னெடுத்துச் சென்றது. பயன்படாத நிலம்தானே என்று மக்களும் தங்கள் நிலத்தை மகிழ்ச்சியுடன் ஆரோவில்லுக்கு விற்பனை செய்துவிட்டனர்.
காடுகளின் மீட்டுருவாக்கம் அவ்வளவு எளிதில் நிகழ்ந்து விடவில்லை. பல ஹெக்டேர் நிலத்தில் பொழியும் மழை நீரைத் தக்க வைக்க ஆழமான குழிகள் எடுத்து அதற்கான வழிவகைகள் செய்யப்பட்டது. அவ்வளவு பெரிய நிலப்பரப்பில் மரக் கன்றுகளை நட்டு நீர் ஊற்றி பராமரிப்பு செய்வது நடைமுறைச் சிக்கல்கள் நிறைந்தன்றோ. எனவே வறட்சியைத் தாங்கக் கூடிய மரவகைகள் தெரிவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டது. எனினும் பலன் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.
பல கலந்தாய்வுகளுக்குப் பின்னர் மிக உயரமாகவும் செங்குத்தாகவும் வளரக்கூடிய ஆஸ்திரேலிய வகை அகேசியா மரங்கள் இந்த வறட்சி நிலத்தில் பிழைத்து வளரும் வாய்ப்பு அதிகம் என முடிவு செய்து அதன் விதைகள் வரவழைக்கப்படுகின்றன. விதைகள் அனைத்தும் நடப்பட்டு கவனமாக பராமரிக்கப்பட்டு வந்தன.அவர்கள் ஆகாயத்தை நோக்கி மரங்களைப் பார்க்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். இயற்கையோ நிலத்தை நோக்கிப் பார்க்க முடிவு செய்தது. மரம் புதர் போல வளர ஆரம்பித்தது. புரியாமல் குழப்பத்தில் நடந்ததைத் தெளிவுபடுத்த ஆராய்ந்ததில் அவர்கள் கேட்ட அகேசியா விதைகளுடன் புதர் வகை அகேசியா மர விதைகளும் தவறுதலாகக் கலந்து வந்து விட்டது தெரிகின்றது. இது தவறி தன்னைச் சீரமைக்கத் தானே தெரிந்து மாற்றத்தை நோக்கிய பயணத்தில் முதற்படி.
புதர் மரங்களில் இளைப்பாற வந்த பறவைகள் மூலமாக இயற்கை தன் சிறகுகளை விரிக்க முடிவு செய்தது. அதன் வழியில் இவர்களும் இணைந்து சிறகுகளை விரித்தனர். பறவைகளின் எச்சம் வழியாக நம் நாட்டு விராலிச் செடிப் புதர்களும் பரவுகின்றன. விராலியும், அகாசியாவும் pebble gardenன் முன்னோடித் தாவரங்கள்(Pioneer Plants) என அழைக்கிறார். (வானகத்தில் முன்னோடித் தாவரமாக சோற்றுக் கற்றாழை இருக்கிறது) இவர் இந்த இரு வகைகளில் இருந்தும் விழுந்த இலைச் சருகுகளால் நிலம் வளம் பெறத் துவங்கியது. இயற்கை மூடாக்கின் உதவியால் நிலம் தன்னையும் தன்னை நம்பியவர்களையும் மெதுவாக மீட்டுருவாக்கம் செய்ய ஆரம்பித்தது.
கைகாட்டி மரம் என்றும் ஊர் போய் சேராது என்பதற்கிணங்க புதர் வகை அகேசியா மற்றும் விராலி புதர்களின் அடியில் பல்வேறு விதமான மர வகைகளை பயிர் செய்ய ஆரம்பித்தனர். இது நல்ல விதத்தில் பலனளிக்கத் தொடங்கியது.
அதன் பிறகு எல்லாமே ஏறுமுகம் தான். அன்று தொடங்கிய மாற்றத்தின் இன்றைய சாட்சியாக நிற்கிறது பல பெயர்களில் காணப்படும் ஆரோவில் காடுகள்.
அடுத்த கட்ட நகர்வாக நாட்டுக் காய்கறிகளின் விதைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணி தொடங்கியது. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் மற்றும் பல உலக நாடுகளில் இருந்தும் தருவிக்கப்பட்டு மாடித் தோட்டத்தில் விதைக்கப்படுகின்றன. அனைத்தும் நல்ல வளர்ச்சியுடன் முன்னேற்றம் கண்டது. நாளடைவில் நேரமின்மை காரணமாக மாடித் தோட்டம் கவனிக்க இயலாது இடைவெளி ஏற்படுகிறது.
இயற்கை மற்றுமொரு மாற்றத்திற்கு கொடுத்த இடைவெளியாகவே இதுவும் அமைந்தது.
சிறிது காலம் கழித்து மாடிக்குச் சென்று பார்க்கையில் ஒன்றரை அடி உயரத்திற்கு சுற்றியிருந்த மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகளின் மூடாக்கு படுகையாக மாறியிருந்தது. அதில் ஏற்கனவே இருந்த செடிகளின் விதைகள் விழுந்து பரவி நல்ல வளர்ச்சியும் கண்டிருந்தது.
அங்கே விழுந்தது காய்ந்த இலைகள் மட்டுமல்ல. ஒரு விதத்தில் இன்று நாம் காணும் மண்ணில்லா மாடித் தோட்டத்திற்கான விதையும் கூட என்றே தோன்றுகிறது. இதையே ஏன் தொட்டிகளிலும் நிலத்திலும் செயல்படுத்தக் கூடாது என்ற சிந்தனை எழ அது செயல் வடிவம் பெறுகிறது. நிலத்தில் மேட்டுப்பாத்தியாக உருவகம் பெறுகிறது. இதில் பயிர்களுக்கான நீர்த் தேவையும் குறைவதோடு மட்டுமல்லாமல் பயிர்களின் விளைச்சலும் தரமும் மிக நன்றாக இருக்கிறது.
(தமிழகத்தில்)இயற்கை விவசாயத்திற்கான பல அடிப்படை மாற்றங்கள் இங்கிருந்து துவங்கியதே. நம்மாழ்வார் பெர்னார்ட் பற்றி கேள்விப்பட்டு இவரிடம் பாடம் படிக்க வருகிறார். இவருடைய செயல்வழிக் கற்பித்தல் முறை நம்மாழ்வாரிடம் மிகப் பெரிய தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு நீங்கள் அறிந்ததே.
நீண்ட உரைக்குப் பின்னர் செயல்வழிக் கற்றல் துவங்கியது. குடிலுக்கு வெளியே அழைத்துச் சென்று அகேசியா மற்றும் விராலிப் புதர்களின் அடியில் மண் வளத்தைக் காண்பித்தார். நடந்து கொண்டே இருந்தவர் திடீரென்று நின்று பாதையில் கிடந்த கூழாங்கற்களை பொறுக்கிக் எங்களிடம் காண்பித்து இதிலிருந்து என்ன தெரிகிறது என்று கேட்டார். நாங்கள் வழக்கம் போல விடை தெரியாது முழிக்க அவர் பல மில்லியன் வருடங்களுக்கு முன்னால் இது ஒரு நதிப் படுகை. அப்படுகை செஞ்சி வரை பரவியிருந்ததாகக் கூறினார். அதனால் தான் கூழாங்கற்கள் இங்கே நிறைந்து கிடக்கின்றன. கூழாங்கல் தோட்டம் (Pebble Garden) என்று பெயர் வைக்க காரணம் இதுதான் போலும்.
எந்த ஒரு நிலத்தையும் வளமாக்க இரண்டு அடிப்படை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார். நிலத்திற்கு தேவையான வேலையாட்கள் மற்றும் இடுபொருட்கள் வெளியில் இருந்து வரக்கூடாது என்றார்.காடுகளில் நடக்கும் இயற்கை மூடாக்கு நிகழ்வை நம் தேவைக்கு ஏற்ப மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்.எப்படிச் செய்யலாம் என்ற கேள்வியைக் கேட்டு விட்டு அதற்கான பதிலாக சில மாதிரிகளைக் காண்பித்தார்.
நாமிருக்கும் இடத்திலும் அதைச் சுற்றியும் கிடைக்கும் தாவரக் கழிவுகளை ஒரு இடத்தில் குவித்து வைத்து அது மட்கிய பின் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அங்கே கிடந்த கரும்புச் சக்கைக் குவியலை காட்டினார்.
மேட்டுப்பாத்தி அமைக்கும் முறையைக் கூறினார். 12 அடுக்கு காய்ந்த இலை தழை, அதனிடையே 12 அடுக்கு மட்கிய மண், இடையிடையே மனிதச் சிறுநீரில் ஒரு வாரம் காற்றுப் புகாமல் மூடி வைத்து எடுக்கப்பட்ட கரித்தூள் மூலம் மொத்தம் 20 செ.மீ அளவுக்கு மேட்டுப்பாத்தியை உருவாக்கி அதில் பல தானியம் விதைத்து அது பூக்கும் தருணத்தில் பிடுங்கி பாத்தியின் மேல் மூடாக்காகப் போட்டுவிட்டு நமக்குத் தேவையான காய்கறிகளின் விதைப்பைத் துவங்கலாம் என்று செயல் முறை விளக்கம் கொடுத்தார்.
தோட்டம் அனைத்தையும் சுற்றிக் காண்பித்தார். காட்டு விலங்குகளின் தொந்தரவால் பராமரிப்பது கடினமாக இருக்கிறது என்று சொன்னார்.தோட்டம் மிகவும் வளமாக இருந்தது.
உரையாடல் மற்றும் செயல்முறை விளக்கங்களுக்கு இடை இடையே சூழலியல் மற்றும் பலதரப்பட்ட உலக நடப்புகளையும் அது குறித்து தன் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
சந்திப்பு நிறைவடையும் நேரம் வந்தது. வெளிநாட்டு நண்பர் ஒருவர் மாற்றத்தைத் தரும் ஏதாவது ஒரு புத்தகத்தை எனக்கு பரிந்துரையுங்கள் என்று கேட்க அவர் Bruce Lipton-ன் Bilogical Belief என்ற புத்தகத்தைப் பரிந்துரை செய்தார். சொல்லிவிட்டு பின்னிணைப்பாக மனதளவில் மாறுவதற்குத் ஆயத்தமாக இருந்தால் எந்த புத்தகத்தைப் படித்தாலும் மாறிவிடுவீர்கள் என்றார்.
எங்களுடன் வந்த நண்பர் தினேசு நம்மாழ்வரைப் பற்றி சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கேட்டார்.
நினைவென்று எதுவுமில்லை
அவரை நீங்கள் நினைவு கூற விரும்பினால் செயல் நூறு உண்டு அவர் வழியில் செய்து முடிக்க அதற்கான மனமிருந்தால்…..
எழுத்தாக்கம் : Parthasarathy Murugesan