நுண்ணுயிர்களை கண்டறிய உதவும் மைக்ரோஸ்கோப்புகள்

*அறிவியல் அறிவோம்*

*நுண்ணுயிர்களை கண்டறிய உதவும் மைக்ரோஸ்கோப்புகள்*

முதன் முதலில் விஞ்ஞான பூர்வமாக மைக்ரோஸ்கோப்புகளை தாமே அமைத்து அவைகளைக் கொண்டு கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிர்களைக் கண்டறிந்தவர் *அன்டோனி வான் லேவென் ஹீக்*- (Antoine Van Leeuwenhoek) என்பவரே.
*இவரது (1632 – 1723) வாழ்க்கை காலம்.*

ஹாலந்து நாட்டை சார்ந்த இவர் இளமையிலேயே தந்தையை இழந்தவர். தந்தையுடன் பள்ளிப்படிப்பும் போய்விட்டது. அப்பொழுது அவருக்கு வயது பதினாறு.வாணிபம் கற்றுக்கொண்டு நகரமன்ற வாயில் காப்பானாகப் பணியாற்றிய இவர் தமது ஓய்வு நேரங்களில் *கண்ணாடி வில்லைகளை இழைத்துச் செப்பமிடும் வேலையில் ஈடுபட்டு வந்தார்*. தான் செப்பனிட்ட கண்ணாடி வில்லைகளை இணைத்து நுண்ணுயிர்களை பன்மடங்கு பெரிதாக பார்த்தார். *இதுவே முதல் மைக்ரோஸ்கோப்* ஆகும். இதே போன்று 247 மைக்ராேஸ்கோப்புகளை அமைத்தார். ஒரு பொருளை 40- 270 மடங்கு பெரிதாக்கி காட்டின. இவைகளை மைக்ரோஸ்கோப் என்பதை விட லென்ஸ்கள் என்பதே சரியாகும்.

இவர் தாம் உருவாக்கிய மைக்ரோஸ் கோப்புகளைக் கொண்டு கண்ட கண்ட பொருட்களையெல்லாம் ஆராய்ந்து பார்த்தார். இதனைக் கண்ட பலரும் பைத்தியகாரன் என்றார்கள். அப்படிக் கூறிய மக்களைப் பார்த்து வேலன் ஹீக் மனம் வருந்தி அறியாமையால் உள்ள அவர்களை மன்னிப்போம் என்றார்.
ஹீக் தான் எடுத்துக் கொண்ட பொருளை நூற்றுக்கணக்கான முறைகள் ஆராய்ந்து பார்த்த பின்னர் அவற்றை பதிவு செய்வது என முடிவுக்கு வந்தார்.

பலமுறை பரிசோதனை செய்து தாம் கண்ட உண்மைகளை தொகுத்து இங்கிலாந்தில் *முதலாம் சார்லஸ் மன்னரால் ஏற்படுத்தப்பட்டிருந்த ராயல் சொசைட்டி என்னும் விஞ்ஞான கழகத்திற்கு அனுப்பினார்.* என்னுடைய மைக்ராேஸ்கோப்புகள் மூலம் நான் மயிர்களையும், விதைகளையும், தேனீக்களின் கொடுக்குகளையும், ஈக்களின் மூளையையும் பல நுண்ணுயிர்களையும் உற்றுப்பார்த்து வருகிறேன் சான்றோர்களே எனவும் இதுவரை எந்த மனிதனும் கண்டிராதவைகளை நான் பார்கிறேன் எனவும் எழுதி அனுப்பினார். மேலும் தான் அனுப்பிய கடிதத்தில் தான் பார்த்த பாக்டீரியாக்களையும் வரைந்திருந்தார்.

ஆனாலும் அவரது அறிவுப் பசியால் பல ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டார். தேங்கி நிற்கும் மழைநீர், பல்லின் அழுக்கு, பலவகை பூச்சிகள், தவளைகளின் குடல் என தனது ஆய்வை மேற்கொண்டார். சுத்தமான மழைநீரில் எத்தகைய உயிரும் இல்லை எனவும் அதனுடன் மிளகுப்பொடியை கலந்து நன்கு உறியதும் காற்றில் நான்கு நாட்கள் வைத்திருந்து நுண்ணுயிர்கள் பெருகுவதையும் கண்டறிந்து மகிழ்ந்தார். உடனே ராயல் சொசைட்டிக்கு ஒரு துளி மிளகு நீரில் பல லட்சம் நுண்ணுயிர்களைக் கண்டேன் என எழுதினார்.
*லேவென் ஹீக் தான் முதன் முதலில் பாக்டீரியாக்களை செயற்கை சூழ் நிலையில் சாேதனைச் சாலையில் வளர்க்கும் முறையை கண்டறிந்தவர். இத்தகைய ஆராய்சியின் விளைவாக இவரை *நுண்ணுயிர் இயலின் தந்தை* என்று அறிவியலாளர்கள் அழைக்கின்றனர்.

இவர் ஒருநாள் சிறிய மீனைப் பிடித்து அதன் வாலின் மீது மைக்ரோஸ்கோப்பை வைத்துப் பார்த்த போது மயிரிழை போன்ற இரத்தக் குழாய்களைக் கண்டார். அவைகளின் வழியே குருதி ஓடுவதைக் கண்டார். இதுவே *குருதி சுழற்சி ஓட்டம் பற்றிய அறிவை அறிவியல் அடிப்படையில் விளக்கியது*. மேலும் சூடான காஃபியைக் குடித்த பின் தமது பல்லில் உட்பகுதி அழுக்கை மைக்ராேஸ்கோப் மூலம் ஆராய்ந்தார். வெப்பமே பாக்டீரியாக்களை கொள்கின்றன என்பதை அறிவியல் அடிப்படையில் விளக்கினார். (நாம் இன்னும் காலையில் தரையை தண்ணிரில் வாசல் தெளித்து பாக்டீரியாக்களை வளர்கிறோம்.)

நுண்ணுயிர் அறிஞர் பலர் இருப்பினும் அனைவருள்ளும் மிகச் சிறப்பான சான்றோர் இவரே ஆவார். இவர் தமது ஆய்வை மிகச் சரியாகச் செய்தவர். ஆனாலும் இவர் ஏனையோருடன் ஒத்துழைக்காததால் லூயி பாஸ்டர் (1822 – 1895) வரும் வரை சுமார் 150 ஆண்டு காலம் வரை நுண்ணுயிர் இயல் வளர்ச்சி அடையவில்லை. ஹீக் தமது கருவிகளை குடும்ப உறுப்பினர்கள் கூடத் தொடாதவாறு பாதுகாத்து வைத்திருந்தார்.

நாம் தற்போது பயன் படுத்தும் எலெக்ட்ரான் மைக்ரோஸ் கோப்பிற்கும் லேவென் ஹீக் மைக்ரோஸ்கோப்பிற்கும் நிறைய வேறுபாடு உண்டு. லென்ஸ் மைக்ரோஸ்கோப் ஒரு பொருளை 2500 – 3000 மடங்கு அதிகப்படுத்திக்காட்டும். ஆனால் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் ஒரு பொருளை ) 200000 மடங்கு பெரிதாக்கிக் காட்டும். இத்தகைய மைக்ரோஸ்கோப்புகள் கண்டுபிடித்ததன் விளைவாகத் தான் அம்மை போன்ற கொடிய நோய்கள் ஒழிக்கப்பட்டன. அதுவரை பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை பற்றி அறியாத நாம் நம்மூரில் அம்மை நோய்க்கு மாரியம்மனுக்கு படையல் மற்றும் வேப்பிலை போட்டு தண்ணீர் ஊற்றி அபிசேகம் செய்து வந்தோம் என்பதே உண்மை.

எது எப்படியாகினும் லேவென் ஹீக் கண்டறிந்த மைக்ரோஸகோப் தான் நுண்ணுயிர் கண்டுபிடிப்பதில் முன்னோடி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

தனது தந்தையை இளம் வயதில் இழந்தாலும் சோர்ந்து போகாமல் தனது தன்னம்பிக்கையாலும் தளராத முயற்சியாலும் பகுத்தறிவாலும் முன்னேறி *மாபெரும் கண்டுபிடிப்பை உலகுக்குக் கொடுத்த லேவென் ஹீக்கை நாம் கொண்டாடுவதோடு நமது முன்னேற்றத்திற்கு தன்னம்பிக்கையூட்டிக்கொள்ள இவர் போன்றே சிந்திப்போம்.*

தகவல்…வளர்ந்தது விஞ்ஞானம், வீழ்ந்தது மூட நம்பிக்கை எனும் நூலிலிருந்து….

க.வி.நல்லசிவன்
திருப்பூர் இயற்கை கழகம்.