நெல். ஜெயராமன் காலமானார்

neljayaraman
Agriwiki.in- Learn Share Collaborate

இயற்கை விவசாயி நெல். ஜெயராமன் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார்…

புற்று நோய் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயற்கை விவசாயி நெல். ஜெயராமன் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலும் நெல் திருவிழா நடத்தும் பேரியக்கத்தை உருவாக்கியவர் இரா.ஜெயராமன். இவரது சேவையை பாராட்டி குடியரசு தலைவர் விருது, தமிழக அரசின் விருது, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் விருது உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

நெல். ஜெயராமன் காலமானார் :

இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக கடும் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தார். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புற்றுநோய் சிகிச்சைப் பெற்று வந்தார். இவரின் சேவையை உணர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள், சேவையாளர்கள், நண்பர்கள், விவசாயிகள் மற்றும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் என பலரும் நேரில் சந்தித்தும், நிதியுதவி அளித்து வந்தனர்.

சமீபத்தில் நடிகர் கார்த்தி, சூரி ஆகியோர் நெல் ஜெயராமனை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன், இவரின் முழு மருத்துவ செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக கூறி அனைத்து உதவிகளையும் செய்து வந்தார்.

இந்நிலையில், ஜெயராமனின் உடல்நலம் மிகவும் மோசமடைந்ததால் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரின் மறைவு நம் எல்லோருக்கும் ஒரு பேரிழப்பு . அவர் விட்டுச்சென்ற பணியை நாம் தொடர்வதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

பாமயன் அய்யா அஞ்சலி

என் கெழுதகை நண்பரும் மரபு நெல்லின் காவலருமான ஜெயராமன் இயற்கை எய்திய செய்தி கேட்டு நெஞ்சம் துடித்தேன். அவருடன் உரையாடி மகிழ்ந்த நாட்கள் கண்ணில் தெரிகின்றன. இனி எங்கும் எப்பொழுதும் அவருடன் உரையாட முடியாது. அவருடன் பயணித்த நிமிடங்கள் மனக் கண்ணில் மின்னி மறைகின்றன. மிக விரைவாக அவரை இயற்கை அழைத்துக்கொண்டது. ‘அண்ணா’ என்று அவர் அழைக்கும் அன்பான குரலை நான் எப்போது கேட்க முடியும்? என் கண்ணீரை அஞ்சலியாக்குகிறேன்.


நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம் அஞ்சலி

நெல் ஜெயராமன் ஓய்வு கொண்டார் :

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடுமையான நோயோடு போராடிய நம் ஜெயராமன் இன்று நம்மிடமில்லை.

பெட்காட் ஜெயராமன் ஆக, நுகர்வோர் அமைப்பின் கள செயற்பாட்டாளராக, கட்டி மேடு என்ற அடையாளம் தெரியாத குக்கிராமத்தில் இயங்கியவர் ஜெயராமன்.

நம்மாழ்வார், “ஈரோடு மாவட்டத்திற்கு இனி நான் தேவையில்லை” என்று தஞ்சையில் இயங்கத் தொடங்கிய போது நம்மாழ்வாரால் ஈர்க்கப்பட்டார். நுகர்வோர் உரிமைகளில் நஞ்சில்லாத உணவு முக்கியமில்லையா என்ற கேள்வியின் ஆழம் புரிந்த ஜெயராமன் நம்மாழ்வாரோடு கை கோர்த்தார்.

பாரம்பரிய விதைகளின் தேவை, பாதுகாப்பது, பரவலாக்குவது போன்ற விசயங்கள் எப்போதும் ஆழ்வாரின் இதயத்திற்கு நெருக்கமான ஒன்று. “நம் நெல்லைக் காப்போம்” (Save Our Rice Campaign) தீவிரமாகும் போதுதமிழகத்தில் இந்த வேலைகளை எடுத்துச் செல்ல ஜெயராமனிடம் பணித்தார். மேலும் விதைகள் நம்மோடு மட்டும் இருந்து விடக்கூடாது. விதைகள் விவசாயிகளால் பாதுகாத்து, பரவலாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும் பணித்தார். அதன் விளைவு தான் நெல் திருவிழாவும் விதை பகிர்வும், பரிமாற்றமும்.

ஜெயராமனைத் தவிர வேறு எவரும் இந்த முக்கியமானப் பணியை இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது. அத்தகைய சிறந்த களப் பணியாளர். பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்த நெல் திருவிழா தமிழக விவசாய தளத்தில் உருவாக்கிய மாற்றமும் தாக்கமும் மிகப் பெரியது. பல்லாயிரம் விவசாயிகள் பாரம்பரிய நெல்லைக் பயிரிடுவதற்கு காரணமானதால் பெட்காட் ஜெயராமன் நெல் ஜெயராமனாக நம் உழவர்களால் கொண்டாடப்பட்டார்.

இன்று நம் உழவர் சமூகத்தில் பாரம்பரிய நெல் பரவலாகி இருப்பதற்கு நெல் ஜெயராமனின் உழைப்பு அளப்பரியது.

என்னுடைய தளபதிகளில் ஒருவர் என நம்மாழ்வார் புளகாங்கிதத்துடன் ஜெயராமனைச் சொல்வார். நம்மாழ்வாரின் மறைவுக்குப் பின் இந்த வேலை நின்றுவிடும் எனப் பலரும் நினைத்த போது அந்த நினைப்புகளைப் பொய்யாக்கிய ஜெயராமன் இனி இது உங்கள் வேலை என நம்மிடம் கொடுத்து விட்டு, நம்மிடம் இருந்து விடை பெற்றுவிட்டார்.

பாரம்பரிய நெல்லைப் பரவலாக்கும் பணியில் மிகப் பெரிய பங்கு வகித்த ஜெயராமனுக்கு நாம் செய்யும் உண்மையா அஞ்சலி ஒவ்வொரு விவசாயியும் ஒரு நெல் ரகத்தையாவது தன் வாழ்நாள் முழுக்க காப்பாற்றி வருவேன் என உறுதி கொள்வதும் நடைமுறைப்படுத்துவதும் தான் எனக் கருதுகிறோம்.
பலநூறு ஜெயராமன்கள் நம்மிடமிருந்து முகிழ்த்து வர வேண்டும். இதுவே ஜெயராமனுக்கும் நம்மாழ்வாருக்கும் நாம் செய்யும் உண்மையான செயல் அஞ்சலியாக இருக்கும்.

இந்த துக்கமான சூழலில் ஒன்றை நினைவு கூறவும் வானகம் கடமைப்பட்டுள்ளது.
ஜெராமனுக்கு உடல்நலக் குறைவு என்றதும் அவருடைய உடல் நலனில் நம் உழவர்களும், பிறரும் காட்டிய அக்கறையும், நீட்டிய உதவிக்கரமும் நன்றிக்குறியது. நம் சமூகத்திற்காக கைமாறு கருதாது உழைப்பவரின் பிரச்சனையை தங்களுன் பிரச்சனையாக எடுத்துக் கொண்ட பண்பு, களப் பணியாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒன்றாகும்.

எங்களின் சக செயல்பாட்டாளருக்கு அரசு அளித்த உதவிகள், மற்றவர்கள் அளித்த உதவிகள் அனைத்தும் சிறப்பானவை, நினைவு கூறத் தக்கவை. அவர்களுக்கு வானகம் நன்றியை சமர்பித்துக் கொள்கிறது.

வானகம் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது.

வானகம்
நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம்

Ramasamy Selvam அஞ்சலி

தம்பி நீயே விதை நெல்லானாய்…..

ஜெயராமன், எங்களுக்கெல்லாம் நீ என்றும் பெட்காட் ஜெயராமன் அல்லது தம்பி ஜெயராமன்.
இன்று நெல் ஜெயராமனாக விடை பெற்றது பெரும் சூன்யத்தை உருவாக்கியுள்ளது.

நுகர்வோர் நலனுக்காக இயங்கிய பெட்காட் ன் கட்டிமேடு கிராமத்து கிளையை உருவாக்கி இயங்கிய நீ நம்மாழ்வாரின் அறிமுகத்திற்குப் பின் இயற்கை வேளாண்மை பக்கம் திரும்பினாய்.

என்றும் காலில் சக்கரங்களுடன் இருப்பவன் போல இயங்கிய உன்னுடைய முதல் சந்திப்பு இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. 1997-98 வாக்கில் அறச்சலூரில் நடத்திய சுதந்திரப் பொன்விழாக்கொண்டாட்டமாக நடத்திய இயற்கை விவசாயக் கருத்தரங்கில் பங்கேற்க வந்தாய். மூன்று நாள் நிகழ்வில் முதல் நாள் முடிவின் போதே நெருங்கிய உறவினர் மரணம் காரணமாக பாதியில் சென்றாய்.
வேகமாக ஓடுவது உன் இயல்பு என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை.
அதனால் தான் இப்போதும் வேகமாகச் சென்றாயோ?

ஒரு விசயத்தைக் கற்றுக் கொள்வதில் நீ அதிக சிரமம் எடுத்துக் கொள்பவன் என்பது எங்களுக்குத் தெரியும். ஒரு முறை மரபணு மாற்றுக் கத்தரியை எதிர்த்து நடத்திய ஆர்பாட்டத்தின் போது நான் இருக்க வேண்டும் என்றாய். பத்திரிக்கையாளர்களிடம் விவரமாகப் பேச நான் வேண்டும் என்றாய். மறுத்தேன். நீ கோபித்தாய். இந்தப் பிரச்சனையை பேசும் ஒரே நபராக நான் இருக்கக் கூடாது. பலரும் வர வேண்டும் என்பது என் எண்ணம். ஆகவே நீ பேசு என்றேன். முணுமுணுப்பாய் தொலை பேசியை வைத்தாய்.

அரை மணி நேரத்தில் மீண்டும் கூப்பிட்டு விளக்கமாக விளக்கச் சொன்னாய். இது தான் ஜெயராமன்.

சவாலை சந்திப்பதில் சந்தோசப்படுபவன். அடுத்த கட்டத்திற்கு தன் பணியை நகர்த்திச் செல்பவன்.
இதன் காரணமாகவே நம்மாழ்வாரின் நெஞ்சுக்கு நெருக்கமான தளபதிகளில் ஒருவரானாய்.

Save Rice Campaign என்ற தெற்காசிய பிரச்சாரப் பயணம் தமிழகத்தில் நடக்கவேண்டும் என அவ்வமைப்பினர் நம்மாழ்வாரைக் கேட்ட போது அவர் உன்னைப் பணித்தார்.
எந்த வேலை செய்தாலும் அதை பத்திரிக்கை செய்தியாக்கி பலரும் அறிய வைப்பதில் நீ சிறந்தவன். அந்த வகையில் இந்தப் பிரச்சாரப் பயணத்தை பலரும் அறியும் நிகழ்வாக்கினாய்.
இந்தப் பிரச்சாரப் பயணத்தின் இறுதியில் வெறும் பிரச்சாரம் போதுமானதல்ல, அதற்கு மேலும் நகர வேண்டும். பாரம்பரிய விதைகள் பெருக்கப்பட வேண்டும், மேம்படுத்தப்பட வேண்டும், பரவலாக வேண்டும் என்பது நம்மாழ்வாரின் புரிதல்.

விதைகள் தனி நபர்களால், தனி அமைப்புகளால் பாதுகாக்கப்படுவதை விட விவசாயிகளால் பாதுகாக்கப்படுவதே சிறப்பானது, பாதுகாப்பானது என்பது நம்மாழ்வாரின் புரிதல்.
இந்தப் பணியை ஆழ்வார் உன் மீது கொண்ட நம்பிக்கையால், உன் செயல் திறமறிந்து ஒப்படைத்தார்.

சிறந்த களப் பணியாளரான, சிறந்த தகவல் தொடர்பாளரான நீ நம்மாழ்வாரின் உள்ளார்ந்த விருப்பத்தை புரிந்து கொண்டாய். களம் பெரிதினும் நடத்திக் காட்டினாய்.

மரணத்தைக் கொண்டாடு என்றவர் விதை சேமிப்பை, பகிர்தலை எப்படி சாதாரண நிகழ்வாக செய்ய அனுமதிப்பார்?
விழாவாக, கொண்டாட்டமாக, வெற்றிக் கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என நம்மாழ்வார் கூறியதும் “நெல் திருவிழாவாக” விதைப் பகிர்தலை நடத்தினாய். அங்கே தான் நீ புதிதாய்ப் பிறந்தாய். உன்னுடைய வேலைகளை செய்தியாக்கும் பாங்கு மூலம் பலரையும் தொட்டாய்.

ஆழ்வார் வைத்த நம்பிக்கையை காப்பாற்றினாய்.

நம்மாழ்வாருடைய பயணத்தில் எங்களுக்குப் பின் இணைந்தாய். பின் ஏனடா தம்பி வேகமாக விடை பெற்றாய்.

எவ்வளவு பெரிய பொறுப்பை விட்டுச் சென்றிருக்கிறாய்.
எப்படி இந்த தமிழ் சமூகம் உன் பணியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்.

எவரெவர் பொறுப்பெடுத்துக் கொள்வார்?

எம்மைப் பொறுத்த வரை பாரம்பரிய நெல்லைப் பரவலாக்குவதில் நம்மாழ்வாரின் கனவை நிறைவேற்றினார் தம்பி ஜெயராமன்.

அடுத்த கட்டம் என்பது ஒவ்வொரு இரகத்தையும் பல நூறு பேர் தங்களின் பொறுப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். பல நூறு பேரிடம் ஒவ்வொரு இரகமும் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். பகிரப்பட வேண்டும்.

இது தான் தம்பி ஜெயராமனைக் கொண்டாடுவதாக இருக்கும்.

தம்பி உன் வாழ்க்கை இன்னொன்றையும் காட்டியுள்ளது. தமிழ் சமூகத்திற்காக உழைபவர்களை இச்சமூகம் தாங்கிக் கொள்கிறது என்பதை நாங்கள் கண்டோம். உனது சிக்கலான காலத்தில் எத்தனை பேர் உன் சிரமம் தூக்க வந்தனர். சமூகச் செயல்பாட்டாளர்களை தாங்குக் கொள்ள இந்த சமூகம் பக்குவப்பட்டுள்ளதை உன் சிரம கால வாழ்க்கை காட்டியுள்ளது.

அவர்களுக்கெல்லாம் நன்றி கூறினால் அது தமிழ் சமூகத்தை அவமானப்படுத்துவதாகிவிடும். ஆகவே அவர்களுக்கு நன்றிகள் சொல்ல மாட்டேன்.

ஆனால் உனக்கு சொல்வேன் நன்றி தமிழ் சமூகத்தின் இந்த முகத்தைக் காட்டியமைக்கு.

மரணம் எல்லோருக்கும் வரும். தடுத்து நிறுத்த முடியா.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட கால பயணத்தில் ஏற்படுத்திய மாற்றங்களே வாழ்வை அர்த்தமுள்ளதாக்கியதற்கு அடையாளம்.

உன் பிரிவு தாங்க இயலா ஒன்றே. நீ சுமந்த சுமையை சுமக்க இன்னும் பல நூறு ஜெயராமன்களை விதைத்த வாழ்வை வாழ்ந்திருக்கிறாய் என்பதை உணர்வோர் நீ வாழ்ந்த வாழ்வை, உன் மரணத்தை இன்னும் அர்த்தமுள்ளவர்கள் ஆக்குவர்- உன் நெல் திருவிழாவைப் போலவே.

நம்மாழ்வார் ஒரு முறை மேதா பட்கர் ன் நிகழ்வில் பங்கேற்றுத் திரும்பும் போது கூறியது இந்தத் தருணத்திற்குப் பொறுத்தமாக இருக்கும்.
“ஐயா இந்த மேதா பட்கர் தன்னிடமிருக்கும் அழகான விளக்கை ஒளியேற்றி வெளிச்சம் காட்டுகிறார். நாம் அவரவர் விளக்கை இவர் விளக்கிலிருந்து ஒளி பெற்று இன்னும் பல நூறு விளக்குகளுக்கு ஒளி ஏற்ற வேண்டும்”, என்றார்.

நம்மாழ்வாரின் விளக்கிலிருந்து உன் விளக்கை ஏற்றினாய். இருட்டிற்குள் ஒளிக் கீற்றாய் பிரகாசித்தாய். உன் விளக்கிலிருந்து இன்னும் பல நூறு பேர் தங்கள் கை விளக்கை ஒளியேற்றி இருப்பார். அவர்களின் விளக்கொளி நம் தமிழ் சமூகத்தை இன்னும் பிரகாசிக்கச் செய்யும்.

வணக்கம் தம்பி. இன்னும் எங்களுக்கு வேலை இருக்கிறது.

உன் நினைவு எங்களின் உரமாக இருக்கும்.
நன்றி தம்பி.

Paramez Aadhiyagai அஞ்சலி

இந்த விதைக்கான உறக்க காலம் போலும்..

விதைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நெல்மணியை நம்மில் விதைத்து சென்றுள்ளார்.. நாம் உறங்கியது போதும்..முளைக்க தயாராகிடுவோம்…

ஐயாவின் பணிகளை நாமும் கையிலெடுத்துக்கொண்டு களத்தில் முளைப்போம் விதையாக..

நெல் ஜெயராமன் ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்..

 

பாவலர் வையவன்

மாடுகட்டிப் போரடித்தால்
‘மாளாத’ செந்நெல்லை
தேர்தல் காட்டி மயக்கி
மாளவிட்டோம்

‘ஆனந்த’ சுதந்தரம்
அடைந்த அடுத்தநொடி…
இருந்த நெல்லினங்களும்
பொரியாயின!

ஐ.ஆர்.எட்டுகள்
அதிகாரிகளானதால்
கிச்சிலி, சீரக சம்பாக்கள்
ஏதிலிதாகி
காணாமல் போய்விட்டன

மண்ணின் மொழியின்
பெருமையைப் பேசியே மூச்சிரைத்ததால்
நெல்லின் பெருமையைப்
பேச மறந்துவிட்டோம்!

வில்லுக்குள்ள பெருமை
நெல்லுக்கும் உண்டென்பதை
நினைவூட்டி…

எங்கள்
நெல்மரபை மீட்ட
ஜெயராமன் அய்யாவுக்கு
வீர வணக்கம்!