பசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை

பசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை
Agriwiki.in- Learn Share Collaborate

பசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை

– by Hari

சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னால் இந்த பசுமை வீடுகள் பற்றி ஆராய ஆரம்பித்த பொழுது, அந்த உலகம் என்னுள் ஒரு இனம் புரியாத பரவசத்தையும் குழப்பத்தையும் ஒரு சேர தந்த உணர்வு. என்னுள் எழுந்த கேள்விகளுக்கு பதிலை தேடி தேடி அலைந்து கிடைக்காமல் அடுத்தவரின் கேள்விகளாலும் கிண்டல்களாலும் அவமானங்களை சந்தித்த வருடங்கள்.

 

இந்த மண் சார் கட்டுமானத்தின் சித்தாந்தத்துக்கு நாங்கள் எந்த அளவு உண்மையாக இருக்க முடியும்? தமிழ்நாட்டில் குறிப்பாக எங்கள் பகுதிகளில் யாரும் கேள்விப்படாத ஒரு விஷயத்தை நாம் பொது வெளியில் எடுத்துச் செல்ல முற்படும்போது வெறும் சித்தாந்தத்தை மட்டும் நம்பி வீடு கிடைக்குமா? அதை வைத்து நாங்கள் காலம் தள்ள முடியுமா?

ஒரு தலைவரை விமர்சித்துவிட்டு தேர்தலுக்காக வேறு வழி இல்லாமல் அவர்கள் கூட கூட்டணி அமைத்துக் கொள்வது போல நாங்களும் வாய் கிழிய பேசிவிட்டு க்ளையண்ட் கிடைக்காமல் எங்கள் சித்தாந்தத்தை மூட்டை கட்டி வைக்கும் நிலை வந்தால் நாங்கள் எங்களுக்கே உண்மையாக இல்லை என்றாகிவிடுமா?

(((ஆரம்ப காலகட்டம் என்பதால் கோபத்தில் உதறி தள்ளிவிட்டு 3 வருடங்கள் சாதாரண கட்டுமானத்தில் வேலை செய்தேன்.. இப்போது அதற்கும் வாய்ப்பில்லை..)))

இந்த கேள்விகளுக்கெல்லாம் எளிதாக எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. ஒரு ப்ரொஃபஷனலாக க்ளையண்ட் கேட்பதை ஒழுங்காக செய்து முடிப்பது மட்டும் பிஸினஸுக்கு அழகு. ஆனால் வேல்யூ சிஸ்டம்ஸ் ஒத்து போக க்ளையண்ட்ஸ் கிடைக்கும் அளவுக்கு உங்கள் கஸ்டமர் பேஸ் இல்லையெனில் என்ன செய்ய? சந்தையில் கஸ்டமர் தான் ராஜா எனில் எங்களை பொறுத்தவரை இந்த பசுமை வீடு கான்செப்ட்களை எப்படி அணுகுகிறோம்?..வேறு வழியே இல்லை …கஸ்டமர்களை உருவாக்கி அவர்கள் ரெபரென்ஸ் மூலம் அடுத்தடுத்த கஷ்டமர்களை பிடிக்க வேண்டும்.

((இன்று வரை என் தந்தை அதற்க்கு பெரும் உதவியாக இருக்கிறார்.கிரீஸ் டப்பா சீனில் கவுண்டமணி செந்திலை கிணற்றில் எட்டி உதைத்து தள்ளிவிட்டது போல என்னை இதில் தள்ளிவிட்டது அவர்தானே))

1) கட்டுமானம் என்பதே பசுமைக்கு முரணான விஷயம் தான். ஒரு கசாப்பு கடைக்காரர் ஜீவ காருண்யம் பேசுவது போல. நாங்கள் சொல்லும் மண் சார் கட்டுமானம் எல்லாம் முடிந்த வரை பூமிக்கு பாரமில்லாமல் வீடு கட்டுவதற்காகத்தான். ஹலால் மாமிசம் மாதிரி தான்.

2) கட்டுமானப்பொருட்களை முடிந்த வரை வெறும் பொருளாக மட்டும் பார்க்காமல் எந்த இடத்தில் எதற்காக பயன் படுத்த முனைகிறோம் என்று புரிந்து அதன் மூலம் அப்பொருளை மதிப்பிடுவது.

உதாரணங்கள் சில இதோ

A) ஒரு இடத்தில் கற்கள் அதிகமாகவும், மண் மிகக்குறைவாகவும் கிடைத்தால், அங்கு நான் இத்தனை நாள் சொன்னது போல மண் கொண்டு கட்டினால் அந்த இடத்தில் உண்மையில் அதை பசுமை வீடு என எடுத்துகொள்ளலாமா?

B) மண்-சார் கட்டுமானத்தில், சோலார் போட்டு, மின்சாரம் அதிகம் குடிக்காத ஃபேன்,லைட் என வாங்கி, மழை நீர் சேமித்து, ஒரு சொட்டு நீரை கூட விரயமாக்காமல் மறு சுழற்சி செய்து ஒரு வீடு கட்டினால் அதுவல்லவா பசுமை வீடு என்று தானே தோன்றும் நமக்கு. மேற்சொன்ன வீடு 10000 சதுர பரப்பில் மூன்றே பேர் குடியிருக்க கட்டிய வீடு எனில் அப்பொழுதும் அதை நாம் பூமிக்கு பாரமில்லாத பசுமை வீடு என்று சொல்லலாமா? ஆம் – ஏனெனில் அவரவர் வீடு எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவரவர் விருப்பம். நான் 10000 சதுர அடியில் மாளிகை தான் கட்டுவேன் என ஒரு குடும்பம் முடிவு எடுத்து விட்டால், பின்னர் சிமெண்ட் கான்கீரீட் பெயிண்ட் வீட்டுக்கு நான் சொன்ன வீடு பசுமை வீடுதான். கட்டலாமா கூடாதா என்ற முடிவு அந்த குடும்பம் எடுக்காத வரையில், அது பசுமை வீடு அல்ல என்று வேண்டுமானால் சொல்லலாம்.

3) இயற்கை கட்டுமான ஆர்வலர்கள் ஒரு துளி சிமெண்ட் கூட விஷமே என்று வாதிடுவார்கள். எனில், முழுக்க முழுக்க இயற்கை இடுபொருட்கள் கொண்டு நம் ஊரில் நடக்கும் எல்லா கட்டுமானத்தையும் செய்து விட முடியுமா? சிமெண்ட் கான்கீரீட் என்னும் ராவணனிடம் நல்ல விஷ்யம் துளி கூடவா இல்லை? இயற்கை பொருட்கள் என்னும் ராமரிடம் எந்த ஒரு குறையும் கிடையாதா?அப்பழுக்கற்றவர் என்று சொல்லலாமா? மகத்துவமான பொருளை தவறான இடத்தில் பயன்படுத்தினாலும் அது பிழையே.

4) பசுமை வீடு என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட உண்மை. அதற்காக மனிதன் எடுக்கும் முயற்சி தான் இங்கே உண்மையின் வேர். இம்முயற்சி க்ளையண்டின் ஆர்வம், வேலை செய்பவர்களின் திறன்,ஆர்கிடெக்ட் அல்லது பொறியாளரின் புரிதல் – இவை கூட நேரம், கட்டும் இடத்தின் தன்மை, கட்டிடத்தின் பட்ஜெட் என பல காரணிகளால் வேறுபடும். ஒரு க்ளையண்ட் கீற்றுக்கூரை தான் வேண்டும் என்று முடிவு செய்து தீ பிடிக்கும் என்பதனால் நீர் தெளிப்பானையும் (sprinklers) சேர்த்தே வீட்டில் மாட்டிய ஒரு கதையை படித்த ஞாயபகம். நம்மில் எத்தனை பேர் அதனை செய்ய முன்வர முடியும்?

இந்தப்பதிவின் சாரம் இது தான்… பசுமை வீடு என்ற விஷயமே absolute ஆக பார்க்க கூடாது. இவை எல்லாம் relative தான். வாழ்க்கை போல கருப்பு வெள்ளை யாக இவற்றை பிரித்து விடுவது எளிதல்ல‌. ராவணனா அல்லது ராமரா என்று இடம் பொருள் ஏவல் பொருத்தே முடிவு செய்ய வேண்டும். எந்த அளவுக்கு நாம் இவ்விஷயத்தில் அடியெடுத்து வைக்க முடியுமென்பது கட்டுபவரே முடிவெடுத்தல் நலம். ஏனெனில் ஒவ்வொருவர் சூழ்நிலைகள் வேறு. எதிர்பார்ப்புகள் வேறு.தேவைகள் வேறு. வீடு மட்டும் ஒரே மாதிரி ஏன் இருக்க வேண்டும்?நானும் இந்த விஷயத்தில் பல முறை hypocrite ஆக நடந்து கொள்கிறேனென்று எனக்கு அவ்வொப்பொழுது நினைவு படுத்திக்கொள்கிறேன்

உன்னை விட நான் புனிதன் என்று காட்ட வேண்டிய விஷயமே அல்ல இது. என்னால் முடிந்த அளவு சரியான திசையில் அடியெடுத்து வைக்கிறேனா என்பது தான் முக்கியம். அதுதான் நீங்களும் உங்களை கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

நன்றி…
பொறி.ஹரி

படங்கள் : விகடன் கட்டுரை..

தஞ்சாவூரில் பூச்சு வேலை செய்யாமல் லாரிபாக்கெர் முறையில் வட்ட வடிவில் கட்டப்பட்ட வீடு