பப்பாளி சாகுபடி

papaya
Agriwiki.in- Learn Share Collaborate
பப்பாளி பயிர் கிட்டத் தட்ட 16 – ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவில் வளர்க்கப்பட்டு வருகிறது . அமெரிக்கா கண்டத் தில் தோன்றிய இப்பயிர் , தற் பொழுது இலங்கை தாய்லாந்து , பல ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளி லும் , பெருமளவு பயிர் செய்யப் படுகிறது .
பயன்கள்:
1. பப்பாளிப்பழம் பலவகையான உணவுச் சத்துக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது . இவற்றில் மிகவும் முக்கியமானது , உயிர்ச்சத்து ‘ ஏ ‘ . உயிர்ச்சத்து ‘ சி ‘ . சுண்ணாம்பு , இரும்பு , பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகள் ஆகும் .
2. மூலம் , கல்லீரல் , மண்ணீரல் , ஜீரணக் கோளாறுகள் , கடும் மலச்சிக்கல் , முழங்கால் வலி , நீரிழிவு மற்றும் கண் பார்வை மங்குதல் போன்ற பல்வேறு வகையான உபாதைகளுக்கு , இது நிவாரணம் அளிக்கிறது .
3. இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் . புற்று நோயாளிகளுக்கும் இது ஒரு நல்ல மருந்தாக விளங்குகிறது .
4. பப்பாளிக் காய்கள் சமையலுக்கு உபயோகமாகிறது .
5. பப்பாளியிலிருந்து எடுக்கப்படும் பால் , ‘ பப்பெயின் ‘ எனப்படும் ஒரு நொதியைக் கொண்டுள்ளது . இந்த நொதிப்பொருளுக்காகவும் , வணிக ரீதியில் பப்பாளிச்சாகுபடி செய்யப் பலர் முனைந்துள்ளனர் . இந்த பப்பெயின் எனப்படும் நொதிப்பொருள் , இறைச்சியை மென்படுத்துவதற்காகவும் , அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கவும், பீர் போன்ற மதுபான வகைகளில் குளிர்ச்சியை நிலைப்படுத்தவும் , ஜவுளித் தொழில் , காகிதத் தொழில் மற்றும் கவும் , தோல் பதனிடும் தொழிலிலும் பயன்படுகிறது .
6. பழுத்த பழங்கள் ஜாம் , ஜெல்லி , தேன் , கிரீம் , ரொட்டிகளில் பயன்படும் டுட்டீப்ருட்டி எனப் பல வகையாகப் பதப்படுத்தப்பட்டும் , பயன் படுகிறது.
எனினும் , இப்பழம் தமிழ் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெறவில்லை . இது உடல் வெப்பத்தை உண்டாக்கும் பழம் எனவும் கர்ப்பிணிப் பெண்கள் உட்கொண்டால் கருக்கலைப்பு ஏற்படுகிறது எனவும் தவறான சில கருத்துக்கள் நிலவிவருகின்றன . எனினும் , சமீப காலங்களில் இப்பழம் மிகப் பிரபலமாகிவருகிறது . குறிப்பாக நகரப் பகுதிகளில் பப்பாளிப் பழங்களுக்கு தேவை அதிகரித்துவருகிறது.
ரகங்கள் :
பப்பாளி ரகங்களைப் பொதுவாக இரு வகையாகப் பிரிக்கலாம் .
முதல் வகையில் ஆண் மரங்கள் மற்றும் பெண் மரங்கள் தனித்தனியே காணப்படும் . இவ்வகையில் , பழங்கள் பொதுவாக மஞ்சள் நிற சதைப்பற்றை கொண்டுள்ளதாக இருக்கும் . இரண்டாவது வகையில் பெண் மரங்களும் , இருபால் பூக்கள் கொண்ட மரங்களும் காணப்படும் . முதல் வகையில் பெண் மரங்கள் சரியான முறையில் மகரந்தச் சேர்க்கைக்கு உட்பட 10 பெண் மரங்களுக்கு ஒரு ஆண்மரம் என்ற விகிதத்தில் ஆண் மரங்கள் தோட்டம் முழுவதும் பரவலாக உள்ளவாறு பார்த்துக் கொள்ளல் வேண்டும்.

ரகங்கள்

கோ 1:
இது ராஞ்சி என்னும் வட இந்திய ரகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டது . மரங்கள் குட்டையாக வளரும் தன்மை கொண்டவை . சதைப்பகுதி மஞ்சள் நிறம் கொண்டது . ஒரு மரத்திலிருந்து வருடத்திற்கு 80 முதல் 90 காய்கள் பெற முடியும் . இந்தக் காய்களிலிருந்து அதிக அளவு பால் எடுக்க முடியும்.
கோ 2 :
இது நாட்டு ரகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டது . பழங்கள் நீண்ட உருவமுடையதாக இருக்கும் . மரம் ஒன்றுக்கு ஒரு வருடத்தில் 60 முதல் 90 பழங்கள் வரை கிடைக்கும் . பழங்கள் ஒவ்வொன்றும் ஒன்றரை முதல் இரண்டரை கிலோ எடை இருக்கும் . ஒரு காயிலிருந்து 25 முதல் 30 கிராம் வரை பப்பெயின் கிடைக்கும் . இது பழத்திற்கு , பப்பெயின் எடுக்கவும் ஏற்ற ரகம் . ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மிகவும் பிரபலமான ரகம் இது .
கோ 3:
இது கோ 2 சன்ரைஸ் சோலோ ஆகிய ரகங்களை இனச்சேர்க்கை செய்து உருவாக்கப்பட்டது . பெண் பூக்கள் மற்றும் இருபால் இனத்தைச் சேர்ந்த பூக்கள் கொண்ட மரங்கள் உருவாகும் . பழங்கள் நடுத்தர பருமனுடையதாக இருக்கும் . சதைப்பற்று நல்ல சிவப்பு நிறமுடையதாக இருக்கும் . உண்பதற்கு மிகவும் ஏற்ற ரகம் . 450 முதல் 500 கிராம் எடை கொண்ட பழங்கள் , மரம் ஒன்றிலிருந்து 90 முதல் 120 வரை கிடைக்கும்.
கோ 4 :
இந்த ரகம் கோ 1 மற்றும் வாஷிங்டன் ஆகிய இரு ரகங்களையும் இனச்சேர்க்கை செய்து உருவாக்கப்பட்ட ரகமாகும் . இதன் நண்டு மற்றும் இலைக் காம்புகள் வாஷிங்டன் ரகத்தைப் போல் ஊதா நிறமுடையதாகும் . ஆண் மரங்களும் பெண் மரங்களும் தனித்தனியாக வெளிப்படும் . பழங்களில் சதைப்பற்று நிறைந்தும் , ஊதா கலந்த மஞ்சள் நிறமுடையதாகவும் இருக்கும் . வீட்டுத் தோட்டங்களுக்கு மிகவும் ஏற்ற ரகம் .
கோ 5 :
இது வாஷிங்டன் ரகத்திலிருந்து தனித்தேர்வு மூலம் உருவாக்கப்பட்ட ரகம் . பப்பெயின் எடுப்பதற்கு மிகவும் ஏற்ற ரகம் , பழம் ஒன்றுக்கு 50 முதல் 60 கிராம் வரை பப்பெயின் தரக்கூடியது . உண்பதற்கும் உகந்தது . ஒரு ஹெக்டேரிலிருந்து 100 கிலோ வரை உலர்ந்த பப்பெயின் கிடைக்கும் .
கோ 6 :
ஆண் பூக்களையும் பெண் பூக்களையும் தனித்தனி மரங்களில் கொண்ட ரகம் இது . பழங்கள் கோ – 5 விட பெரி தாகவும் , இளம் பச்சை நிறமுடையதாகவும் இருக்கும்.
கோ 7:
இது பெண் மரங்களும் , இருபால் பூக்கள் கொண்ட மரங்களும் உள்ளடக்கிய ரகமாகும் . கோ – 3 , பூசா டெலிஸியஸ் சிபி – 75 மற்றும் கூர்க் ஹனிடியூ போன்ற ரகங்களின் கலப்பால் உருவானது . கோ 3 ரகத்தை விட விளைச்சலிலும் தரத்திலும் சிறந்தது . பழங்களின் சதைப்பகுதி சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
இதர ரகங்கள்:
அகில இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து , பூசா டெலிஸியஸ் , பூசா ஜயன்ட் பூசாட் வார்ஃப் , பூசா மெஜஸ்டிக் , பூசா நான்ஷா போன்ற ரகங்களும் வெளியிடப்பட்டுள்ளன . ஹவாயிலிருந்து உருவாக்கப்பட்ட சோலோ ரகங்கள் உலகப்புகழ் பெற்றவை.

சாகுபடிக் குறிப்புகள்

நிலம் :
பப்பாளிப் பயிர் பலவகைப்பட்ட மண்ணிலும் வளரக்கூடியது . படுகை நிலங்கள் , மணல் கலந்த பூமி , நல்ல வடிகால் வசதி கொண்ட நீர் தேங்காத நிலங்கள் பப்பாளி பயிரிட ஏற்றன . களிமண் பூமி பப்பாளி சாகுபடி செய்ய உகந்ததல்ல . தட்ப வெப்ப நிலை சமவெளிப் பகுதிகளில் மிதமானது முதல் சற்றே வெப்பம் அதிகமாகவும் நிலவும் இடங்களில் இப்பயிர் நன்கு வளரும் . மலைப்பகுதிகளில் சுமார் 100 மீட்டர் உயரம் வரையிலான இடங்களிலும் இது வளர்ந்து பயனளிக்கக் கூடியது.
பருவம் :
வெப்பநிலை அதிகம் நிலவும் சமவெளிப் பகுதிகளில் , நீர் வசதி இருப்பின் , பப்பாளியை வருடம் முழுவதும் பயிரிடலாம் . நடவுப் பருவத்தில் மிகவும் அதிக மழை இல்லாமலிருத்தல் நல்லது . தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ஜூன் முதல் ஆகஸ்ட் மற்றும் நவம்பர் முதல் டிசம்பர் வரை உள்ள காலங்கள் நடவுக்கு ஏற்றவை .
விதையும் விதைத்தலும் பப்பாளிப் பயிர் விதைகள் மூலமாகவே இனப்பெருக்கம் செய்யப்படுகிறது . ஒரு ஏக்கர் அளவு பப்பாளி வளர்ப்பதற்கு சுமார் 200 கிராம் விதை தேவைப்படும் .
ஒரு பங்கு மக்கிய தொழு உரம் , ஒரு பங்கு வண்டல் அல்லது செம்மண் மற்றும் இரு பங்கு மணல் கலந்த மண் கலவையை 14 செ.மீ நீளம் 9 செ.மீ அகலம் உள்ள பாலித்தீன் பைகளில் இட்டு , நிரப்பிக்கொள்ள வேண்டும் . ஒரு பாலித்தீன் பையில் , குறைந்தது நான்கு விதைகளாவது விதைக்க வேண்டும் . விதைகளை ஒரு செ.மீ ஆழத்தில் விதைக்கவும் , பிறகு பாலித்தீன் பைகளைச் சற்று நிழல் படும் இடத்தில் அடுக்கி வைத்துப் பராமரிக்க வேண்டும் .
தினமும் காலையிலும் , மாலையிலும் பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்றவும் . விதைகள் 10 முதல் 20 நாட்களில் முளைக்க ஆரம்பிக்கும் . செடிகள் கிட்டத்தட்ட ஒரு அடி உயரம் வளரும் தருணத்தில் நிலத்தில் நடலாம் . நாற்றுக்கள் சுமார் 40 முதல் 50 நாட்களில் நடவுக்குத் தயாராகும் .
நிலம் தயாரித்தல்:
நிலத்தை 2 முதல் 3 முறை நன்கு உழுது சமப்படுத்திக் கொள்ள வேண்டும் . பிறகு 45 செ.மீ அகலம் , 45. செ.மீ ஆழம் உள்ள குழிகளை 1.8 மீ மற்றும் 1.8 மீ என்ற இடைவெளியில் ( 6 அடிக்கு 6 அடி எடுக்க வேண்டும் . அவை சுமார் ஒருவார காலம் ஆற விடப்பட வேண்டும் . குழியிலிருந்து எடுத்த மண்ணுடன் 10 கிலோ மக்கிய தொழு உரம் மற்றும் 50 கிராம் மணிச்சத்து சேர்த்து குழிகளை நிரப்பவேண்டும் .
நாற்று நடுதல் :
நாற்றுக்களை வெயில் தாழ்ந்த மாலை வேளையில் , குழிகளின் சரி மத்தியில் நடவேண்டும் . 4 முதல் 5 நாற்றுக்கள் முளைத்த பாலித்தீன் பைகளைப் பைகளின் அடிப்பாகத்தில் மட்டும் சற்றே கிழித்துவிட்டு குழியில் நடவேண்டும் . கூடிய மட்டும் செடிகள் உயிர் பிடிக்கும் வரை பூவாளியில் தண்ணீர் விடுதல் நல்லது . குழிகளில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளுதல் அவசியம் . காற்றுக் காலங்களில் , செடிகளுக்கு 2 அடி உயர குச்சிகளை வைத்துக் கட்டுதல் நன்று.
மண் அணைத்தல் :
செடிகள் சற்று வளர்ந்தவுடன் தேவைக்கேற்ப , மரங்களைச் சுற்றிலும் மண்ணை அணைக்க வேண்டும் . மரம் காற்றினால் சாயாது இருக்க இது உதவும் . பொதுவாக , நட்ட 4 – ஆவது மற்றும் 4 – ஆவது மாதத்தில் மண் அணைப்பது நல்லது .
ஆண் பெண் செடிகள் நீக்குதல் :
செடிகள் நடவுசெய்த மூன்று மாதத்திற்குப் பிறகு பூக்க ஆரம்பிக்கும் . இந்நிலையில் ஒரு குழியில் ஒரு பெண் செடியை விட்டு இதர ஆண் , பெண் செடிகளை நீக்கவேண்டும் . அதே வேளையில் 10 முதல் 15 பெண் செடிகளுக்கு ஒரு ஆண் செடியை விட வேண்டும் . ஆண் மரங்களில் பூக்கள் நீண்ட கொத்தாகக் காணப்படும் . கோ -3 மற்றும் கோ -7 போன்ற இருபால் ரகங்களில் இருபால் பூக்கள் கொண்ட மரங்களை மட்டும் வைத்துக்கொண்டு , பெண் மரங்களை நீக்கிவிட வேண்டும் .
உரமிடுதல் ஆண் , பெண் செடிகள் நீக்கியவுடன் செடி ஒன்றிற்கு தழை , மணி மற்றும் சாம்பல் சத்து ஒவ்வொன்றிலும் 50 கிராம் வீதம் கொடுக்க வேண்டும் . இதே அளவு இரண்டு மாதத்திற்கொருமுறை கொடுக்க வேண்டும் . உரம் கொடுத்த பின் , செடிகளுக்கு நன்கு நீர் பாய்ச்ச வேண்டும்.
நீர் பாய்ச்சுதல்:
பப்பாளிப் பயிருக்கு 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சுதல் வேண்டும் . செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டும் . களை எடுத்தல் பப்பாளி பயிர் சற்றே வளரும் வரை 3 அல்லது 4 முறை களை எடுக்க வேண்டிவரும் . பின்னர் , பெரும்பாலும் நிழல் படர்ந்து விடுவதால் களைகள் வளர்வதில்லை.
அறுவடை:
செடிகள் நட்ட 9 முதல் 10 – ஆவது மாதத்தில் பப்பாளி அறுவடைக்கு வரும் . பழங்களின் தோலில் சற்றே மஞ்சள் நிறம் தோன்ற ஆரம்பிக்கும்போது அறுவடை செய்ய வேண்டும் . மகசூல் கோ 2 , கோ 5 , கோ 6 , ரகங்கள் போன்ற ஒரு பால் மர ரகங்கள் 200 முதல் 250 டன்கள் ஒரு எக்டருக்கு . கோ 3 , கோ 7 மற்றும் சோலோ ரகங்கள் 150 முதல் 200 டன்கள் ஒரு எக்டருக்கு . செடிகள் நட்ட தேதியிலிருந்து 2 வருடங்கள் வரை சீரான மகசூல் கிடைக்கும் .
பப்பாளிப் பால் எடுக்கும் முறை:
நடவு செய்த 3 – ஆவது மாதத்திலிருந்து காய்கள் ஆரம்பிக்கும் 75 முதல் 90 நாட்கள் வயதுடைய முதிர்ந்த காய்களிலிருந்து பால் எடுக்க வேண்டும் . ஒரு பழத்திலிருந்து நான்கு முறை பால் எடுக்கலாம் .
ஒவ்வொரு முறை பால் எடுப்பதற்கு குறைந்தது 3 அல்லது 4 நாட்கள் இடைவெளி கொடுத்து பால் எடுக்கவேண்டும் . பழத்தின் நான்கு பகுதிகளிலும் மூங்கில் குச்சியின் நுனியில் கூரான பிளேடினைச் செருகி சுமார் 2 மி.மீ. அளவு ஆழத்தில் கீறிப் பால் எடுக்கவேண்டும் . அதி ஆழமாகக் கீறக்கூடாது . பாலினைச் சேகரிக்க அலுமினியம் அல்லது பாலித்தீன் சீட்டுகளை மரத்தின் தண்டுப் பகுதியில் பொருத்திச் சேகரிக்கலாம் . பாலினை காலை 6 முதல் 9 மணி வரை சேகரிப்பது மிகவும் சிறந்தது .
வெயில் நேரங்களில் பால் வரத்து குறையும் . கோடை காலங்களில் பால் வரத்து குறையும் . ஆனால் குளிர் காலங்களில் பால் வரத்து அதிகமாக இருக்கும் . சேகரித்த பப்பாளிப் பாலினை நிழலில் அலுமினியத் தட்டில் வைத்து உலர்த்தவேண்டும் .
உலர்ந்த பாலினைச் சல்லடை மூலம் சலித்து , பின்கட்டிகளை உடைத்து பவுடராக மாற்றவேண்டும் .
பப்பாளிப் பாலின் பயன்கள் :
பப்பாளிப் பாலுடன் இரசாயனப் பொருள்களைச் சேர்த்து ” பப்பாயின் என்னும் பொருள் தயாரிக்கப்படுகிறது .
1. பப்பாயின் புரத ஊக்கியாகும் . பப்பாயின் மூலம் அழகு பொருட்கள் தயாரிக்கவும் , பற்பசை தயாரிக்கவும் , தோல் பதப்படுத்தவும் , பீர்மதுவை நிலைப்படுத்தவும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது .
2. அஜீரணத்தை தடுக்கவும் சுவாச உறுப்புகளில் ஏற்படும் ரத்த திசுகளைக் கரைக்கவும் பயன்படுகிறது .
3. செரிமானம் , புழுக்களால் ஏற்படும் தொல்லைகள் , தோல் நோய் , நாக்கு மற்றும் தொண்டையில் ஏற்படும் புண் , சிறுநீரக நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும் .
பப்பாளி பால் எடுக்கும் திறன்:
கோ 2 -ல் 25 முதல் 30 கிராம் / பழம்
கோ 5 – ல் 50 முதல் 70 கிராம் / பழம்
பப்பாளிப் பழத்தின் பயன்கள்:
பப்பாளிப் பழத்தில் அதிக அளவு வைட்டமின்களும் தாது உப்புகளும் அடங்கியுள்ளன . சாதாரண அளவுள்ள பப்பாளிப் பழத்தின் உணவு சத்துக்கள் 4 ஆப்பிள் பழத்திலிருந்து பெறக்கூடிய சத்துக்களுக்குச் சமமானது . இப்பழத்தில் வைட்டமின்கள் அதிக அளவு இருப்பதால் ஜீரண சக்தியைத் தருவதுடன் மலச்சிக்கலைப் போக்கும் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது . நீரிழிவு , நரம்புத்தளர்ச்சி , நரம்பு வலிகள் போன்றவற்றைப் போக்கவல்லது . கண் நோயினையும் குணமாக்க வல்லது . பப்பாளிப் பழம் மிகவும் சுவையாக இருப்பதால் பழக்கூழ் , இனிப்புப் பலகாரங்கள் போன்ற சுவைமிக்க பண்டங்களை செய்ய உதவுகிறது .
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.