பாசனம் தேவைப்படாத குழிநுட்பம்

பாசனம் தேவைப்படாத குழி நுட்பம்
Agriwiki.in- Learn Share Collaborate

பாசனம் தேவைப்படாத ‘குழி’நுட்பம்

முருங்கையை வழக்கமான முறையில் சாகுபடி செய்யாமல், குழி தொழில்நுட்பம் முறையில் சாகுபடி செய்தால் கடுமையான வறட்சியையும் தாங்கி, முருங்கை அதிக மகசூல் கொடுக்கும்.

ஏக்கருக்கு ஆண்டு வருமானம் 6 லட்சம் கொடுக்கும் முருங்கை!

வரலாறு காணாத வறட்சி நமக்குப் பல பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது. அதிக தண்ணீர் தேவையுள்ள பயிர்கள், கடும் வெயிலில் கருகிப்போன கொடுமையை சந்தித்திருக்கிறோம். அனுபவத்தை விட சிறந்த ஆசான் வேறொன்றுமில்லை. கடந்தக்கால கசப்பான அனுபவத்தை வைத்து எதிர்கால விவசாயத்தை திட்டமிடத் தொடங்க வேண்டும். இனியாகிலும், அதிக தண்ணீர் தேவையுள்ள பயிர்களைத் தவிர்த்து, குறைந்த தண்ணீரில், வறட்சியை சமாளிக்கும் பயிர்களைச் சாகுபடி செய்யவேண்டும். அந்த வகையில் குறைந்த தண்ணீரில், வறட்சியைத் தாங்கி வளரும் பயிர்களில் முருங்கைக்கு முக்கிய இடம் உண்டு.

முருங்கையையும் வழக்கமான முறையில் சாகுபடி செய்யாமல், குழி தொழில்நுட்பம் முறையில் சாகுபடி செய்தால் கடுமையான வறட்சியையும் தாங்கி, முருங்கை அதிக மகசூல் கொடுக்கும்.

‘குழி’ தொழில்நுட்பம் :

வழக்கமான முருங்கை சாகுபடியில் ஒன்றரை அடிக்கு குழி எடுத்து, அதில் செடியை நடவு செய்வார்கள். இப்படி செய்யும் போது அடிக்கடி பாசனம் செய்வது அவசியமாகிறது. காரணம் நாம் கொடுக்கும் பாசன நீர் மட்டும் தான் ஆதாரம். பெய்யும் மழை நீர், அந்த இடத்தை நனைத்து விட்டு வழிந்தோடி விடும்.

இயல்பிலேயே முருங்கை அதிக வறட்சியைத் தாங்கக்கூடிய பயிர். அதனுடன் சில தொழில்நுட்பங்களை இணைத்தால் இரண்டு, மூன்று மாதங்கள் பாசனம் இல்லாவிட்டாலும் மரம் வாடாமல் பசுமையாக நின்று மகசூல் கொடுக்கும்.

இயல்பிலேயே முருங்கை அதிக வறட்சியைத் தாங்கக்கூடிய பயிர். அதனுடன் சில தொழில்நுட்பங்களை இணைத்தால் இரண்டு, மூன்று மாதங்கள் பாசனம் இல்லாவிட்டாலும் மரம் வாடாமல் பசுமையாக நின்று மகசூல் கொடுக்கும். இதற்கு நாம் செடியை நடவு செய்ய குழி எடுக்கும் போது ஆழமாக எடுத்தால் போதும். அதாவது, 5 அடி ஆழம், 4 அடி நீளம், அகலத்தில் குழி எடுக்க வேண்டும். முருங்கை கன்றுக்கு இத்தனை ஆழமான குழிகளா எனத் தோன்றும். ஆனால், இந்த குழிகள் தான் வறட்சியில் இருந்து முருங்கையை காக்கும் கவசம். இப்படி எடுக்கும்போது ஒரு ஏக்கருக்கு தோராயமாக 80 முதல் 100 குழிகள் வரை எடுக்கலாம்.

ஆழகுழி நடவு :

4 அடி நீள, அகலத்தில் அளந்துக்கொண்டு குழியெடுக்க வேண்டும். முதல் மூன்று அடி ஆழம் வரை எடுக்கும் மண்ணை குழியின் மேல் பக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு அடி ஆழத்தில் எடுக்கும் மண்ணை குழியின் கீழ் பக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழியின் ஆழம் 5 அடி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, நாம் ஏற்கெனவே எடுத்து வைத்துள்ள மேல்மண்ணை குழியில் கொட்டி நிரப்ப வேண்டும். அதற்கு மேல், தொழுவுரம், சாம்பல் கலந்த கலவையை ஒவ்வொரு குழியிலும் ஒரு அடி உயரத்திற்கு கொட்ட வேண்டும். அதற்கு மேல் கீழ் பக்கமாக எடுத்து வைத்துள்ள மண்ணை ஒரு அடி அளவுக்கு குழிக்குள் தள்ள வேண்டும். இப்போது, குழியில் தண்ணீர் விட வேண்டும். மேலுள்ள மண், அரையடி ஆழத்திற்கு இறங்கும்.

ஒரு நாள் இடைவெளி விட்டு, நான்கு அடி குழியில், ஒரு முனையில் இருந்து அரையடி தள்ளி, கையால் குழியெடுத்து, முருங்கை செடிகளை நடவு செய்ய வேண்டும். அதே குழியின் மறுமுனையில் இருந்தும் அரை அடி இடைவெளி விட்டு, மற்றொரு செடியை நடவேண்டும். ஆக, ஒரு குழியில் இரண்டு செடிகளை நடவேண்டும். இரண்டு செடிகளுக்கான இடைவெளி மூன்று அடி இருக்க வேண்டும்.

நடவு வயலைச் சுற்றி, 15 அடி இடைவெளியிலும், வயலுக்குள் 30 அடி இடைவெளியிலும் இதே முறையில் குழி எடுத்து நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழியின் அருகேயும் உள்ள கீழ்மண்ணை நீளமாக கரையாக அமைத்து விட வேண்டும். இப்படி செய்தால் பெய்யும் மழைநீர் அந்தந்த பகுதியிலேயே தடுக்கப்படும்.

நடவு செய்தவுடன் பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் வரை மூன்று நாட்களுக்கு ஒருமுறையும், இரண்டாவது மாதத்தில் இருந்து வாரம் ஒருமுறையும், மூன்றாவது மாதத்தில் இருந்து 15 நாட்களுக்கு ஒருமுறையும் பாசனம் செய்தால் போதுமானது.

தண்ணீர் தட்டுப்பாடு உள்ளவர்கள், இரண்டு ஆண்டுகள் கழித்து மாதம் ஒருமுறை பாசனம் செய்தால் கூடப் போதும். வாய்க்கால் பாசனத்தை விட, சொட்டுநீர் பாசனம் அமைத்தால் குறைந்த நீர்வசதி உள்ளவர்கள் கூட முருங்கை பயிரிடலாம்.

ஒவ்வொரு குழியும் ஒரு ஒட்டகம்!

குழித் தொழில்நுட்பம் பற்றி பேசும் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த முன்னோடி முருங்கை விவசாயி அழகர்சாமி, ‘‘முருங்கை மரம் அதிக பலமில்லாத மரம். வேகமா காத்தடிச்சா கீழே சாய்ஞ்சிடும். அதேப் போல வறட்சியைத் தாங்கி வளர்ற பயிர்னாலும், கடும் வறட்சிக்கு தாக்கு பிடிக்க முடியாம மரம் காஞ்சிப்போயிடும். அதுக்குக் காரணம், நாம அதிக ஆழம் இல்லாம மேலாக குழி எடுத்து நடுறதுதான். அஞ்சு அடி ஆழத்துக்கு குழி எடுத்து நடும்போது, வளமான மேல் மண் கீழே போயிடுது. செடிக்கு தேவையான சத்து சாம்பல், எரு கலவையில கிடைச்சிடுது. அஞ்சு அழி குழியும் மண்ணு பொலபொலப்பா இருக்கும். அதுனால, இந்த குழியில நடுற செடியோட வேர் அஞ்சு அடி ஆழம் வரைக்கும் வேகமாப் போகும். செடியும் செழிப்பா வளரும். அஞ்சி அடிக்கு மேல மண்ணு கடினமா இருக்கும். அதுல போய் வேர் முட்டி, உடைஞ்சு பல கிளைகளாகப் பிரியும். ஒரு குழியில ரெண்டு செடிகளை நடும்போது, ரெண்டு வேரும் இப்படி பல கிளைகளாப் பிரிஞ்சு ஒண்ணோடு ஒண்ணு பின்னிக்கும். அதுனால எவ்வளவு காத்தடிச்சாலும் மரம் சாயாது.

பொதுவா முருங்கையை நெருக்கமா வைக்கும்போது, காத்து உள்ள நுழைஞ்சு வெளியப் போக வழியில்லாம கிளைகள்ல மோதி மரம் சாயும். ஆனால், முப்பது அடி இடைவெளியில முருங்கையை நடும்போது, காத்து உள்ள நுழைஞ்சு, சுலபமா வெளியப் போயிடும். அதுனால இந்த முறையில நடுறவங்க காத்தைப் பத்தி கவலைப்பட வேண்டாம்.

அடுத்தது, பாசனம். இந்த அஞ்சு அடி குழி ஒவ்வொன்னும் ஒரு ஒட்டகம் மாதிரி..மழை பெய்யும்போது அந்த இடத்துல விழுகுற அவ்வளவு தண்ணியையும் பிடிச்சு வெச்சுக்கும். அதுனால மரத்தோட வேர் பகுதி எப்பவும் ஈரப்பதமாகவே இருக்கும். அதனால, ரெண்டு மூணு மாசம் பாசனமே இல்லன்னாலும் மரம் செழிப்பா இருக்கும்.

மூணு மாசத்துக்குள்ள எப்படியும் ஒரு மழை கிடைச்சிடும். அதுனால இடையக்கோட்டை, பள்ளப்பட்டி மாதிரியான ஒரு சில இடங்கள்ல இந்த முறையில முருங்கையை மானாவாரியாகவே சாகுபடி செய்றாங்க. இப்படி செய்யும் போது ரசாயனத்துக்கு வேலையே இல்லை.

ஆறு மாசத்துக்கு ஒருதடவை சாம்பலையும், எருவையும் கலந்து கொடுத்தாப் போதும். காய் வர்ற நேரத்துல, பஞ்சகவ்யா தெளிச்சா, காய் நல்லா பெருசா வரும். இதனால மகசூலும் அதிகரிக்கும்.

வருமானம் எப்போது வரும்?

முருங்கையை நடவு செய்த 6-ம் மாதத்தில் இருந்து மகசூலுக்கு வரும். தொடக்கத்தில் 10 கிலோ, 20 கிலோ எனத் தொடங்கும் மகசூல் படிப்படியாக அதிகரிக்கும். சராசரியாக ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 200 கிலோ மகசூலாகக் கிடைக்கும்.

ஒரு ஏக்கரில் 80 குழிகள் இருந்தாலும், குழிக்கு இரண்டு மரங்கள் வீதம் 160 மரங்கள் இருக்கும். சராசரியாக 150 மரங்கள் என வைத்துக்கொண்டாலும் 30 ஆயிரம் கிலோ (50 டன்) காய்கள் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விலைக்கிடைக்கும். சராசரியாக கிலோ 20 ரூபாய் என வைத்துக்கொண்டாலும், 30 டன் காய்க்கு 6 லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்‘‘ என்றார்.

வரும் மழைக்காலத்தை மனதில் வைத்து, வாய்ப்புள்ள இடங்களில் முருங்கையை நடவு செய்தால், வறட்சியை சமாளித்து, நல்ல வருமானமும் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.