பாரம்பரியக் கட்டடக்கலை

பாரம்பரியக் கட்டடக்கலை கட்டிடக்கலை
Agriwiki.in- Learn Share Collaborate

கட்டிடக்கலை

பகுதி இரண்டு: பாரம்பரியக் கட்டடக்கலை

வளர்ந்த நாடுகளைப் பொறுத்த வரையில் கட்டடங்களைத் தொழில்மயப்படுத்துவதாலேற்படும் நன்மைகள் பற்றியும், இவ்விதம் தொழில் மயப்படுத்துவது எவ்விதம் வீட்டுப் பிரச்சினையைக் குறைப்பதற்கு உதவ முடியுமென்பது பற்றியும் பார்த்தோம்.

இனி கட்டட மூலப்பொருட்களையும், வடிவமைப்பையும் (Design) எவ்விதம் இவ்வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில் கையாளலாம் என்பது பற்றிப் பார்ப்போம். முதலில் கட்டட மூலப்பொருட்களைப் பற்றிப் பார்ப்போம்.

வீடு கட்டுவதற்கான செலவில் 60%ற்கும் அதிகமான பங்கை இம்மூலப்பொருட்களே எடுப்பதால், குறைந்த செலவு வீடுகளைக் கட்டும்போது இம்மூலப் பொருட்களைத் தகுந்த முறையில், குறைத்த செலவில் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயவேண்டியதன் தேவை தவிர்க்க முடியாததே.

வீட்டிற்கான மூலப்பொருட் செலவுகளை எவ்விதம் குறைக்கலாம்?

இதற்கான விடையின் ஒரு பகுதியினைப் பாரம்பரியக் கட்டடக்கலை (Traditional Architecture) எமக்குச் சுட்டிக் காட்டுகின்றது.

பாரம்பரியக் கட்டடக்கலை: 
எமக்கு நன்கு பரிச்சயமான தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் இங்கு வீடுகள் எவ்விதம் கட்டப்பட்டு வந்துள்ளன என்பதை ஆராய்ந்து பாருங்கள். பனையும் தென்னையும் ஒரு வீட்டின் அமைப்பில் எவ்விதம் ஆதிக்கம்ச் செலுத்துகின்றன என்பதை உடனே புரிந்து கொள்வீர்கள்.

வீட்டின் கூரைகள், உத்தரம் என்று பனை மரம் பயன்படுத்தப்படுகின்றது. பனையோலை , தென்னோலை கொண்டு உருவாக்கப்பட்ட கிடுகுகளால் வேயப்படுகின்றன. வீட்டு வளவின் வேலிகள் கிடுகுகளால் அமைக்கப்படுகின்றன.

மண் சுவர்கள், மண் தரை என்று மண் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதையும் காண முடிகிறது. வீடுகள் கட்டும் போது மரம் அதிகம் கிடைக்கும் பகுதிகளில் மரச்சட்டங்கள் கொண்டு வீடுகளை அமைக்கின்றார்கள். உதாரணமாகத் தென்தமிழகத்தில் பாரம்பரியக் கட்டடக்கலை இதனைத் தான் எமக்குப் புலபப்டுத்துகின்றது.

அங்கு பெருமளவில் கிடைக்கும் மரங்களை வெட்டி, மரச்சட்டங்களை (Timber Frames) உருவாக்குகின்றார்கள். இவ்விதம் குறுக்கும் நெடுக்குமாகச் சிறு சிறு பிரிவுகளாக அமையப்படும் மேற்படி சட்டங்களில் மண்ணைக் குழைத்து நிரப்புவதன் மூலம் வீட்டுச் சுவர்களை அமைக்கின்றார்கள்.இத்தகைய முறையினை ஆங்கிலத்தில் Wattle and Daub என அழைப்பார்கள்.

இத்தகைய பாரம்பரியக் கட்டடக் கலை முறையில் வீடுகளை அமைக்கும் முறையிலிருந்து நாம் முக்கியமாக் அறிந்து கொள்வதென்ன?

நமது முன்னோர்கள் வீடுகளைக் கட்டும் போது அவர்கள் தாம் வாழ்ந்த பகுதிகளிலிருந்து கிடைக்கக் கூடிய மூலப்பொருட்களைக் மிக அதிக அளவில் பாவித்தார்கள் என்பதைத் தான் அறிகின்றோம்.

இது எம் முன்னோர்களுக்கு மட்டுமல்ல உலகின் வேறு பகுதிகளில் வாழ்ந்த வாழும் மக்களுக்கும் பொருந்தும். பாரம்பரியக் கட்டடக்கலை உலகின் எப்பகுதியினைச்
சேர்ந்ததாகவிருந்தாலும் பொதுவாக மேற்படி உண்மையினையே காட்டி நிற்கிறது.

வளரும் நாடுகளின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேற்படி உண்மை கைகொடுக்கிறது. வீடுகள் அமையவிருக்கும் பகுதிகளில் அதிக அளவில் காணப்படும் மூலப்பொருட்களை அதிக அளவில் பாவிக்க நாம் முயல வேண்டும். வீடுகளுக்கான மூலப் பொருட்செலவின் பெரும் பகுதியினை இவ்விதம் பாவிப்பதன் மூலம் குறைத்துக் கொள்ளலாம்.

உள்ளூர் மூலப்பொருட்களைப் பாவிக்க வேண்டுமென்பதற்காக நம் முன்னோர்கள் பாவித்த மாதிரியே நாமும் பாவிக்க வேண்டுமென்பதில்லை. நவீன விஞ்ஞானத் தொழில் நுட்பங்களைத் தகுந்த முறையில் பாவிப்பதன் மூலம் பெருமளவில் கிடைக்கக் கூடிய உள்ளூர் மூலப்பொருட்களின் தரம் (Quality), உறுதி (Strength), நீண்டகாலப் பயன்பாட்டுத் தன்மை (Durability) ஆகியவற்றையெல்லாம் அதிகரித்துப் பயன்படுத்தலாம்.

இது பற்றிப் பல்வேறு வகையான ஆய்வுகள் பல்வேறு நாடுகளில்
நடைபெற்று வருகின்றன. பல்வேறு வகையான தொழில் நுட்பங்கள் ஏற்கனவே நடைபெற்ற இத்தகைய ஆய்வுகள் மூலம் நடைமுறையில் செயற்படுத்தப்பட்டும் வருகின்றன.

 

பாரம்பரிய மூலப்பொருட்கள்:

பாரம்பரிய மூலப்பொருட்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம். மண், ஓலைகளிலான கிடுகு, கல், மரம், செங்கற்கள், சுட்ட களிமண்ணாலான ஓடுகள், சுண்ணாம்பு, களிமண்..
இவ்விதமாகக் கூறிக்கொண்டே செல்லலாம்.

முதலில் மண்ணையும் மூங்கிலையும் எவ்விதம் தரமுயர்த்தலாமென்பது பற்றிப் பார்ப்போம்.

மண்ணும் மூக்கிலும் நீண்ட காலப்பயன்பாடு குறைவான பொருட்கள். வளரும்நாடுகளின் பொருளாதார நிலை காரணமாக இவற்ரின் பயன்பாடு ஒழிந்து போகப் போவதில்லை. அரசுகள் வீடமைப்புத் திட்டங்களை அமுலாக்கும் அதே சமயம் மக்களோ மண்ணும் மூங்கிலும்  கொண்ட வீடுகளை அமைத்துக் கொண்டுதான் வருகின்றார்கள்.  எனவே இவற்றின் தரத்தை உயர்த்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

உதாரணமாக மண் சுவர்களின் நீர் எதிர்ப்புத் தன்மையை (Water Proof)மண்ணெண்ணெய், அஸ்பால்ட் போன்றவற்றால் உருவான கலவையைத் தெளிப்பதன் மூலம் அதிகரிக்கலாம். மண்ணின் உறுதியை சிமெண்ட் போன்றவற்றை மண்ணுடன் கலந்து உறுதியாக்குவதன் மூலம் அதிகரிக்கலாம்.

மேலும் மூங்கில்களின் நெருப்பெதிர்க்கும் தன்மையினை மூங்கிலை  அமோனியம் பொஸ்பேட் உரத்தால் உருவான கரைசலிற்குள் தோய்த்தெடுப்பதன் மூலம் அதிகரித்துக் கொள்ளலாம். இந்தியா போன்ற நாடுகள் சிலவற்றில் ஏற்கனவே இத்தகையமுறைகள் அமுலிலுள்ளன.

வளரும்நாடுகள் பலவற்றில் மூங்கில்களைப் பின்னுவதென்பது இன்னும் கைத்தொழிலாகத் தானிருந்து வருகிறது. இந்தோனேசியாவில் மூங்கிலான பாய்களைப் பின்னுவதற்கு எளிய இயந்திரங்களைப பயன்படுத்தூக்கிறார்களென்பதும் குறிப்பிடத் தக்கது.

நன்றி
ஹரி