பாலின் அளவு ஏன் குறைகிறது

Agriwiki.in- Learn Share Collaborate
பாலின் அளவு ஏன் குறைகிறது ?

“பால் நன்றாக கறந்து கொண்டிருந்த கறவை மாட்டை வாங்கி வந்தேன். ஆனால், எங்கள் பண்ணைக்கு மாடு வந்தவுடன் பாலின் அளவு குறைந்து விட்டது. இதற்கு என்ன காரணம்?” என்று ஏ. மதிவாணன் மின்னஞ்சல் வழியாகக் கேட்டுள்ளார்.

இவருக்கு கால்நடை மருத்துவர் ப. பிரதீபா பதில் சொல்கிறார்.

“அதற்கு முக்கியக் காரணம் தீவன மாற்றமாக கூட இருக்கலாம். நாம் வாங்குவதற்கு முன்பு அந்த மாடுகள் எந்த வகையானத் தீவனங்களைச் சாப்பிட்டன என்று மாடு வாங்கும்போதே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால் பாலின் அளவு குறையாது.

தவிர தீவனம் கொடுப்பதில் சில அடிப்படையான விஷயங்களையும் விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

300 கிலோ எடை கொண்ட மாட்டுக்கு தினமும் 10 கிலோ பசுந்தீவனம், 5 கிலோ உலர் தீவனம், 3 கிலோ அடர் தீவனம் மற்றும் 40 லிட்டர் சுத்தமான நீர் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

கோ-4, கோ-5 ரக புற்கள், கொழுக்கட்டைப் புல், பாசிப் பயறு, நரிப் பயறு, தட்டைபயிறு, தீவன மக்காசோளம் போன்றவற்றின் செடி-கொடிகளை பசுந் தீவனமாகக் கொடுக்கலாம்.

வைக்கோல், சோளத் தட்டை போன்றவை உலர் தீவனங்கள்.

அடர்தீவனத்தை பெரும்பாலும் விவசாயிகள் கடைகளில்தான் வாங்குகிறார்கள். இதை அவர்களே தயாரித்துக் கொண்டால், குறைந்த விலையில் தரமாக அவர்களே தயாரித்துக் கொள்ளலாம்.

100 கிலோ அடர்தீவனம் தயாரிக்கும் முறை மக்காச் சோளம், கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் ஏதேனும் இரண்டும் சேர்த்து 30 கிலோ, தேங்காய் அல்லது கடலைப் பிண்ணாக்கு 33 கிலோ, நெல் உம்மித் தவிடு 33 கிலோ, தாதுஉப்பு 1 கிலோ, சமையலுக்கு பயன்படுத்தும் கல் உப்பு 1 கிலோ மற்றும் நாட்டுச்சர்க்கரை 1 கிலோ எடுத்துக் கொண்டு இவற்றை ஒன்றாகக் கலந்து அரைத்தால் அடர்தீவனம் தயார்.

5 லிட்டர் பால் கறக்கும் மாட்டுக்கு தினமும் 3 கிலோ அடர்தீவனம் கொடுக்க வேண்டும். மேலும் கூடுதலாக கிடைக்கும் ஒவ்வொரு 2.5 லிட்டர் பாலுக்கும் 1 கிலோ அடர்தீவனத்தைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும். இதைக் கடைபிடித்தால், கறவை மாடுகள் நல்ல முறையில் பால் கொடுக்கும்