புயலால் வீழ்ந்த தென்னையை மீண்டும் காப்பாற்ற முடியுமா?

புயலால் வீழ்ந்த தென்னையை மீண்டும் காப்பாற்ற முடியுமா?
Agriwiki.in- Learn Share Collaborate

புயலால் வீழ்ந்த தென்னையை மீண்டும் காப்பாற்ற முடியுமா?

பட்டதை சொல்கிறேன் தொடர்ந்து படியுங்கள்..

1982 ,83 ல் சாணஎரிவாயு கலன் அமைக்க இருபது அடி குழி எடுக்கும் போது அருகிலேயே ஆறு அல்லது ஏழு வயதான நாட்டு தென்னை மரம் காய் பிடித்திருந்தது..

விறகு அடுப்பை ஒழிக்க அரசாங்கம் சாண எரிவாயும் கொண்டு வந்த சமயம்..

கோழி முட்டை வடிவத்தில் (கான்கீரீட் முறையில்) கலன் அமைக்க வேண்டும் என்பது அரசாணை.
அருகில் இருக்கும் தென்னையையை அப்புறபடுத்துவது நல்லது என்று அரசு ஊழியர்கள் என் தந்தையிடம் கூற,
வச்சவனே எப்படி வெட்டமுடியும் .??
அப்போது எனக்கு அந்த மரத்திற்கும் ஒரே வயது..
மணமில்லை.
சரிங்க பார்துக்கிறோம்னு சொல்லி அதிகாரியை அனுப்பிவிட்டு எனது சின்ன அப்புச்சியை கூப்பிட்டு என்ன செய்யலாம்னு யோசனை கேட்டார்.

அவரும் தென்னையை வெட்ட அங்கலாப்பாதான் இருக்கு
வேனா ஒன்னு செய்யலாம்ங்க
வேரோடு தோண்டி வேறு இடத்தில் நடலாம் என்றார்.

தலையும்ங்களா என்றார் என் தந்தை..
வச்சு பார்ப்போம்.
தலஞ்சா தலையட்டும்.
இல்லாடி மரத்தை கொன்ற பாவம் நம்மை சேராமல் போகட்டும்னு சொல்லி அடுத்த நாள் பத்து ஆம்பளை ஆட்கள் கடப்பாரை கொண்டு மரத்தை சுற்றி (ஓர் அளவு வேர் அறுபடாமல்) குழி எடுத்து மரத்தை தோண்டினோம்.

எங்களிடம் இருந்த நான்கு ஜோடி எருதுகளை வைத்து வடைகயிறு போட்டு மரத்தை இருக கட்டி மரத்தை இழுத்தார்கள்.
அடிபகுதி மண்ணில் உராய்ந்து வந்ததை பார்த்த அப்பச்சி அருகில் கிடந்த பழைய நான்கடி சிமெண்ட் பைப்பை மரத்தின் அடிப்பகுதியில் போட்டு எருத்தை ஓட்ட ஆரம்பித்தார்கள்.
இரண்டு மணிநேரம் பிடித்தது இருபது அடி தூரத்தில் ஏற்கனவே இம்மரத்தை நட தோண்டியிருந்த குழிக்கு இழுத்து செல்ல..

அதன் பிறகு கயிற்றின் மூலம் பதினைந்து பேர் இழுத்து நிலை நிறுத்தி மண் கட்டி விட்டு அந்த இடத்தை காலி செய்ய ஒரு பொழுத்துக்கும் மேல் ஆகிவிட்டது..
அதன் பிறகு சாண எரிவாயு கலன் அமைத்தாயிற்று.

வைத்த தென்னையும் அடுத்த சில மாதங்களில் துளிர்விட்டு தலையவும் ஆரம்பித்தது.
இப்போது சொல்லும் அதிகாரிகளை போல மட்டை எல்லாம் ஒன்னும் வெட்டலங்க..
தோண்டினோம்.
நட்டோம்.
அவ்வளவே..

நட்டு இரண்டு வருடம் கழித்தே மாற்றம் தெரிந்தது.
அதாவது மரம் புது இடத்தில் நட்ட பிறகு ஒரு இடத்தில் வலைந்து நெளிந்திருந்தது..

நான்கு ஆண்டுளில் குறும்பை வைத்தது.
விழுந்து கொண்டே இருந்தது.

அதுவரை தண்ணீர் பாய்ச்சுவது மட்டுமே எங்களின் வேலை..

அடுத்த சில வருடங்களுக்கு பிறகு குறும்பை உதிர்வது குறைந்தது.
தேங்காய்கள் மற்ற மரங்களில் இருந்ததை போல இல்லாமல்ல மட்டை யின் அளவு சற்று கூடுதலாகவே இருந்தது.

ஆனால் என்ன பயன்..??
குலையில் பத்து காய்கள் இருந்தால் எட்டு கூகை காய்களாகவே உள்ளது.(பருப்பு இல்லாமல் மட்டை மட்டுமே)

thennai-mattai
பிடிங்கி வைத்ததால் 70 சதவீத காய்கள் இது போல கூகையாகவே காய்கிறது..

இப்போது வரை மரம் மட்டுமே உயிர் வைத்திருக்கிறதே தவிர
காய்ப்பு மிகமிக குறைவு..

ஆட்களை வைத்து பார்த்து பார்த்து சல்லி வேர்களையும் முக்கிய வேர்களையும் அடிபடாமல் தோண்டி எடுத்த எழுபது வயதை கடந்த அனுபவ விவசாயி எனது அப்பச்சியின் முயற்சியே தோற்று விட்டது என்றால்,
கஜா என்ற பெயரில் நூறுகிலோ மீட்டர் வேகத்தில் காற்று யானை பலத்துடன் பலமணி நேரம் அடித்து ஆட்டம் போட்டு, வேளாண்துறையில் வாங்கி நட்ட ஒட்டு ரக தென்னை வேறு இடத்தில் நட்டால் தலைத்து அடுத்த ஆறு மாதத்தில் பலன் தரும் என்ற பகிர்வு செய்திகள் கஜா புயலை விட வேதனையை தருகிறது..

இதில் கூடுதலாக அவர்கள் கம்பெனியாரின் காப்ப ஆக்ஸி குளோரைடையை வேர் பகுதியில் ஊற்றினால் துளிர்விட்டு தலையுமாம்..

ஏங்க
ஒற்றை பயிர் நடவு முறையை எங்கள் விவசாயிகளின் மனதில் பதியம் போட்டு,
DJ பிள்ளை,
அந்த J, இந்த Jனு நீங்களே பெயரை வைத்து,
இதை நடவுங்க மூன்றே வருடத்தில் குலைகுலையா காய் தள்ளும்,
நீங்கள் பதினைந்தே வருடத்தில் காசை அள்ளுங்கள்னுமனதில் ஆசையை தூண்டியது மட்டுமில்லாமல்,
தோண்டி வையுங்க,
நோண்டிவையுங்க
அதை போடுங் இதை போடுங்னு சொல்றது
எரிகிற ஊட்ல புடுங்குறது லாபம்னு கதையா இருக்கு..

அவர்களோட வாழ்வாதாரம் முற்றிலும் பாதிச்சு இருக்கு ஏற்றுக்கிறோம்..
புடுங்கி வேறு இடத்தில் நடலாம்..
நடலாம்தான்..
நட்டு பத்து ஆண்டுக்கு பிறகு காய் இல்லாம எங்களது போல வெறும் மட்டை மட்டும் இருந்தா என்ன செய்வாங்க அந்த விவசாயிக..

விஷ பரீட்சை வேண்டாம்..

உண்ண உணவும்
தங்க இடமும் நிரந்தரமாக்க முயற்சி எடுப்போம்..

பிறகு ஒட்டு மரம் நடலாமா,
நாட்டு மரம்நடலாம்,
ஒற்றை பயிர்முறை சாகுபடியை தவிர்கலாமானு பாதிச்சவங்க முடிவுசெய்யட்டும்..

என்னால முடிஞ்சது ரெண்டு சிப்பம் அரிசியை பாதிச்ச இடத்துக்கு அனுப்ப முடிஞ்சது.
அவ்வளே.
முடியலையா ஒன்னுமே செய்யாம கடந்து போயிடலாம்.

அதைவிட்டுவிட்டு
இப்ப போய் நான் தயாரிச்ச சோப்பை வாங்குங்க,
வாழை பழத்தை வாங்குகனு சொல்றது
மகா மட்டமான புத்தினே எனக்கு தோனுது..

யோசிங்க.
கழுத்தறு நிலையில் விவசாயிகளாகிய நம்ம இருக்கோம்..
இயற்கையும் தன்னை தகவலமச்சுகொள்ள வருஷா வருஷம் ஏதாவது ஒன்னை சொல்லீட்டே இருக்கு..
நம்மளும் மறதிங்கிற வியாதியோட ரெண்டே மாசத்துல மறந்து கடந்திடுறோம்..

யாரையும் குத்தம் சொல்ல இந்த பதிவு இல்ல..

முகநூல் பதிவு – திரு. திருமூர்த்தி