அனைத்து தானியப் பயிர்கள், பூ பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் காய்கறிப் பயிர்கள் செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு;
நமது தோட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் புழுக்களை உருவாக்கும் பூச்சிகளிடமிருந்து நமது பயிரை காப்பாற்ற கீழ்க்கண்ட முறைகளை அவசியம் அனைத்து நிலங்களிலும் கடைபிடிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
1. ஆமணக்கு விதைகளை 5 அடிக்கு ஒன்று என வரப்பை சுற்றி மற்றும் குறுக்கு வரப்புகளில் நடவு செய்ய வேண்டும்
2. தட்டைப்பயிர் விதைகளை 10 சென்டி மீட்டர் இடைவெளியில் இதே இடங்களில் நடவு செய்யவும்.
3. மஞ்சள் நிற ஒட்டும் அட்டைகள் 15 எண்கள் நீல நிற ஒட்டும் அட்டைகள் 5 எண்கள் போன்றவற்றை ஒரு ஏக்கர் நிலத்தில், பயிர்களின் தலைப்பகுதியில் இருக்குமாறு குச்சிகளில் கட்டி, நிறுத்தி பயன்படுத்துவது நல்லது.
4. பயிருக்கு தேவையான இனக்கவர்ச்சிப் பொறி அமைப்புகளை, ஒரு ஏக்கருக்கு 8 எண்ணிக்கையில் வைப்பது நல்லது.
5. சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி ஒரு ஏக்கருக்கு இரண்டு எண்கள் வாங்கி மாலை வேளையில் 6 மணி முதல் 9 மணி வரை எரிய விடலாம். தினசரி இடத்தை மாற்றி வைப்பது நல்லது.
6. குறைந்த விலை பூச்சிவிரட்டி கரைசல்கள் ஆன வெள்ளை வேல மரப்பட்டை கரைசல், கருவேல மரப்பட்டை கரைசல், அக்னி அஸ்திரம், ஐந்து இலை, 10 இலை கசாயம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை, போதுமான அளவில் தயார் செய்து, சொந்தமாக தெளிப்பான் இதற்காக வாங்கி வைத்துக் கொண்டு, முறையான அளவில் கலந்து, முறையான இடைவெளியில் தெளிப்பது நல்லது.
7. இயற்கை பாதுகாப்பு பொருள்களான மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை வளர்ச்சி ஊக்கிகள் பஞ்சகாவியம், இ. எம் கரைசல் தேமோர் கரைசல் போன்றவற்றுடன் கலந்து தெளிக்கக் கூடாது.
8. பூச்சிவிரட்டி திரவங்களை அதி காலை நேரத்திலோ அல்லது மாலை வேளையிலோ வெயில் இல்லாத நேரங்களில் தெளிக்க வேண்டும்.
9. எந்த பயிருக்கும் இலை வெளியில் வந்த ஆரம்ப காலம் முதல் தொடர்ந்து தெளிப்பது நல்லது. ஒரு குறைபாடு வந்தவுடன் தெளிக்க ஆரம்பிப்பதால் மிகவும் குறைந்த பலன்களே ஏற்படும்.
10. பூச்சிகள் அதிகம் கடிக்கும் முக்கிய பயிர்களான மிளகாய், வெண்டை, கத்தரி, பருத்தி போன்ற பயிர்களில் உடனடியாக ஆரம்ப நாட்கள் முதல் கொண்டு செயல்படுத்த வேண்டும்
பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்