மண்ணில் மக்கு நிலையை உயர்த்துங்கள்

மண்ணில் மக்கு நிலையை உயர்த்துங்கள்
Agriwiki.in- Learn Share Collaborate

இயற்கை விவசாயம் பற்றி கொஞ்சம் அப்பட்டமாக பேச வேண்டியிருக்கிறது.
இது யாரையாவது புண்படுத்துமே ஆயின் மன்னிக்கவும்.

நம்மாழ்வார் “எனது குரு”, பாலேக்கர் “என் வழிகாட்டி” என புகழ் பேசி,விழா எடுப்பதால் மண் விளையப்போவதில்லை, இயற்கை விவசாயம் செழிக்க போவதும் இல்லை.

இந்த வரிகளை சொன்னதற்கு மன்னிக்கவும். 


இந்த முன்னோடிகள் என்ன சொன்னார்கள் என்பதை முழுமையாக உள்வாங்கி நமது எண்ணங்களை அதோடு இணைத்து தெளிவடைய வேண்டும்.


இவர்கள் சொல்வதெல்லாம் மண்ணை வளமாக்குதலை மட்டுமே. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அவரவர் பாணியில் சொல்லியிருக்கிறார்கள்.


மண்ணில் மக்கு நிலையை உயர்த்துங்கள் என்பது தான் அவர்களின் அறிவுரை.

அதற்கு தொழு உரம் நிறைய கொடுங்கள், பசுந் தாள் உரம் பயிரிட்டு மண்ணில் கலந்து விடுங்கள், இவை மக்குவதற்கு நுண்ணுயிர்கள் அவசியம்.
அதை ஜீவாமிர்தம், பஞ்சகவியம் போன்றவைகள் வழியாக பெருக்கி மண்ணுக்கு கொடுங்கள் என சொல்கிறார்கள்.

மக்கு இல்லாத மண்ணில் நுண்ணுயிர்கள் நிலைத்திருக்க வாய்ப்பு இல்லை என்பதை தெளிவாக கூறிவிட்டார்கள்.

ஜீவாமிர்தம் உரமல்ல, அது நுண்ணுயிர்களின் செறுவுட்டப்பட்ட அதிசய கலவை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார்கள்.

ஆனால் நாம் தொழு உரம் பற்றியோ, பசுந் தாள் உரம் பற்றியோ கவலைப்படாமல் ஜீவாமிர்தம், பஞ்சகவியம் ஆகிய இடுபொருள் பற்றி மட்டுமே பேசுகிறோம். 

இது சரியாக வழி நடத்தாது.

உதாரணமாக பசுமைப்புரட்சி தோல்வியை தழுவியதற்கான முதல் காரணம் பற்றி சொல்ல வேண்டும்.
எந்த ரசாயன உரத்தை பரிந்துரை செய்யுமுன் ஏக்கருக்கு 12 டன் தொழுவுரம் இடுங்கள் என்பதை தெளிவாக சொன்னார்கள்.

நாம் என்ன செய்தோம்?!

வசதியாக அந்த தொழு உர சிபாரிசை மறந்து விட்டு ரசாயன உரங்களை மட்டுமே கொட்டினோம். உண்டா, இல்லையா?

இது காலப்போக்கில் மண்ணின் கரிமச்சத்து குறைய வழி செய்தது. அதனால் நுண்ணுயிர்கள் குறைந்து மண் மலடாகி போனது.

இந்த உண்மை நமக்கு எத்தனை பேருக்கு தெரியும்?!

அதே நிலைதான் இன்று இயற்கை விவசாயத்திலும் நடக்கிறது.

ஜீவாமிர்தம், பஞ்சகவியம், waste decomposer எல்லாமே தேவை தான், ஆனால் மண்ணில் மக்கு இருந்தால் மட்டுமே இவைகள் செயல்பட முடியும் என்பதை தெளிவாக உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

இயற்கை இடு பொருள்கள் வியாபார பொருள் அல்ல.

அதை அவரவரே தயாரிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அது தான் zero budget method விவசாயம்.

இது என் ஆதங்கத்தின் வெளிப்பாடு.

இதில் உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கொடுங்கள். வாத திறமையால் எதுவும் நடக்கப் போவதில்லை.

Kaligounder Pulli