மரம் சார்ந்த விவசாயம் மகத்தான வருமானம்
ஒரு முன்னோடி மாதிரி பண்ணை
அழகாய் ஓர் பசுமை நிறைந்த தோப்பு. தொலைவில் நோக்கில் வானுயர்ந்த மரங்கள், சுவர்களாய் நிற்கின்றன. சற்று அருகில் போகையில், பச்சை பசேலென நெல், கரும்பு, வாழை, சோளம், காய்கறி செடிகள், கொடிகள் என பலவகை பயிர்களும் கண்களுக்கு அழகாகவும் அறிவியல் ரீதியாய் சரியான முறையிலும் பல அடுக்குகளில் பயிரிடப்பட்டு இருந்தன. இதன் அழகைக் கண்டு வியந்த வண்ணம் விவசாயி திரு. செந்தில்குமார் அவர்களை சந்தித்தோம்.

இவர் சற்று வித்தியாசமான முறையில் மரங்களுக்கு இடையில் கரும்பு, வாழை, மஞ்சள், காய்கறிகள் பயிரிட்டுள்ளார். இவர் இயற்கை முறையில் சில மாற்றங்களைச் செய்து வெளியில் இருந்து வாங்கும் இடுப்பொருட்களின் தேவையைக் குறைத்து, வருமானத்தை அதிகரித்துள்ளார். விளை பொருட்களை மதிப்புக்கூட்டி நேரடி விற்பனை செய்வதன் மூலமும் அதிக லாபம் பெறுகிறார். இவர் தன் மரம் சார்ந்த விவசாயத்தின் பாதையில் கடந்து வந்த இடையூறுகளையும் அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறார்.

இவரின் தோட்டம் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே மேவானி என்ற கிராமத்தில் உள்ளது.
விவசாயத்தில் வருமானம் வருமா அதுவும் இயற்கை விவசாயத்துல என்ன கிடைக்கப் போகுது என நினைக்கும் விவசாயிகளுக்கு மத்தியில் வெற்றி பெற்ற இயற்கை விவசாயியாக நீங்கள் திகழ காரணம் என்ன?
முதலில் நான் ஒரு விவசாயி என்பதில் பெருமை கொள்கிறேன். விவசாயத்துல நம்ம முன்னோர்கள் என்னென்ன பண்ணாங்களோ, அதையெல்லாம் பின்பற்றினாலே பாதி வெற்றிதான். நமக்கும் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும், மக்களுக்கும் நஞ்சில்லா உணவை தரவேண்டும். மேலும் விவசாயத்துல நாம செய்யுற தவறுகள புரிஞ்சுக்கிட்டு அதை மாற்றி அமைத்தால், எல்லாரும் வெற்றி பெறலாம்.

விவசாயிகள் செய்யும் தவறு என்று எதை கூறுகிறீர்கள் மேலும் எதை மாற்றி அமைத்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
முதலில் பயிர்களுக்கான இடம் தேர்வு சரியாய் அமைய வேண்டும். இதில் ஈஷாவின் வழிகாட்டுதல் எனக்கு உதவியாக இருந்தது. அதனால் எனக்கு வெற்றி கிடைத்தது. மேலும் உள்ளீட்டுச் செலவை குறைக்க வேண்டும். நீர் பற்றாக்குறை பல பகுதிகளில் இருப்பதால் பயிருக்கு நீரின் தேவையைக் குறைக்க வேண்டும். இதற்காக நான் மூடாக்கு முறையைப் பயன்படுத்துகிறேன். மேலும் மடிந்து கிடக்கும் மண்வளத்தை மாற்றி அமைக்க வேண்டும். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாய் மரம் சார்ந்த விவசாயத்தைக் கருதுகிறேன்.
மரம் சார்ந்த விவசாயம் எப்படி இதையெல்லாம் சரி செய்யும்?
முதலில் எனக்கும் இதைப் பற்றிய புரிதல் இல்லை, பின் பல இடங்களுக்குச் சென்று பார்த்து, ஈஷா மரம் சார்ந்த விவசாய திட்டத்தின் வழிகாட்டலின் மூலம், என் வயலின் ஓரக் கால்களில் மரங்களை நடவுசெய்தேன். இதனால பெருங்காற்றைத் தடுக்க முடியுது. உள்ளுக்குள்ள இருக்கிற வாழைக்கு ஏற்படுற சேதாரம் குறையுது. வெளியில இருந்து வர காற்ற தென்றலாக உள்ள கொடுக்கிறது.
மேலும் மரத்திலிருந்து, ஓரங்களில் விழும் இலை தழைகளை எடுத்து வயலுக்கு பயன்படுத்துவதால் மண் வளமும் பெருகுகிறது. இதனால் உள்ளீட்டுச் செலவும் குறைகிறது. எல்லோரும் மரத்தை வெறும் மரமாக பார்க்கின்றனர். ஆனால் நானோ இதனை உள்ளீட்டு மூலமாக கருதுகிறேன். இப்பொழுது மரங்கள் எனக்கு இடுபொருள் தருகின்றன, பின் என் தலைமுறையினருக்கு நான் சேர்த்து வைத்துள்ள சொத்தாக அமையும்.

மரங்களினால் உங்களுக்கு என்ன வருமானம் கிடைக்கிறது?
மரங்களை சாதாரணமாக கருதி விடாதீர்கள். இதனால் சமூகத்திற்கும் நல்லது தனிமனிதனுக்கும் நல்லது. தோராயமாக, ஒரு ஏக்கரில் 200 மரங்கள் வைத்துள்ளேன். குறைந்தபட்சம் ஒரு மரத்தின் மதிப்பு 5000 ரூபாய் என்று பார்த்தால் கூட 10 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஏதாவது அவசர தேவை என்றால் கூட நண்பர்களிடமும் வங்கியிலும் கடன் வாங்க தேவையில்லை. நான்கு மரத்தை வெட்டினால் என் தேவை தீர்ந்து விடும். வெட்டிய இடத்தில் புதிய மரக்கன்றை நடவு செய்து விடலாம். இதன் மூலம் தொடர்ந்து வருமானம் கிடைக்கும்.
மரத்துக்குள்ள எந்த வெள்ளாமையும் வராது என்று சொல்வார்கள். ஆனால் மரங்கள் இருக்கிற இடத்தில்தான் மண் வளம் அதிகமாகிறது.
மரங்களுக்கு இடையே எவ்வாறு பயிர் சாகுபடி செய்கிறீர்கள்?
மரத்துக்குள்ள எந்த வெள்ளாமையும் வராது என்று சொல்வார்கள். ஆனால் மரங்கள் இருக்கிற இடத்தில்தான் மண் வளம் அதிகமாகிறது. நான் மரங்களுக்கு நடுவில் தான் மஞ்சள் மற்றும் சேனை கிழங்கு பயிர் இடுகிறேன்.
பொதுவாக ஒரே இடத்தில் தொடர்ந்து மஞ்சள் பயிர் செய்ய இயலாது. ஆனால், என் நிலத்தில் தொடர்ந்து மூன்று வருடங்களாக மஞ்சள் பயிர் செய்கிறேன். இதற்கு காரணம் மரங்கள்தான். செயற்கையாக எந்த உரமும் பூச்சிக் கொல்லியும் பயன்படுத்துவதில்லை.
மஞ்சளின் முளைப்பு மற்றும் குழந்தைப்பருவத்தில் நிலம் குளிர்ந்து இருக்க வேண்டும் சூரிய ஒளி நேரடியாக பயிருக்கு படக்கூடாது. இதில் மரங்களின் பங்கு பெரிதாக உள்ளது.
மேலும், நரிப்பயிறு உயிர் மூடாக்காக வளர்க்கிறேன். இதனால் பயிர்களுக்கு தழைச்சத்து அதிகமாக கிடைக்கிறது, பயிர்களுக்கான நீர் தேவை குறைகிறது, களைகள் வராமல் தடுக்கின்றன, மண்ணிற்குள் வாழும் நுண்ணுயிர்களின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகுகிறது.
இதேபோல் மரங்களுக்கு இடையில் வாழையும் பயிரிட்டுள்ளேன். சுற்றிலும் மரங்கள் இருப்பதால் அதிக காற்று அடிக்கும் போது வாழை கீழே விழாமல் தடுக்கிறது.

மரம் சார்ந்த விவசாய திட்டத்தின் வெற்றி ரகசியம் பற்றி மற்ற விவசாயிகளுக்கு நீங்கள் கூறும் கருத்து என்ன?
முதலில் விவசாயிகள் அனைவரும் மரங்களினால் கிடைக்கும் வருமானத்தை புரிந்து கொள்ள வேண்டும். பின், இதை எவ்வாறு செய்வது என்பது பற்றிய சரியான வழிகாட்டுதலுடன் களமிறங்க வேண்டும். என்னுடைய வெற்றிப்பாதைக்கு ஈஷா மரம் சார்ந்த விவசாயம் சிறந்த வழிகாட்டலாக இருந்தது.
மரங்களின் முக்கியத்துவம் மற்றும் அதன் தேவை அதிகமாகி கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு அனைத்து விவசாயிகளும் மரம் சார்ந்த விவசாயத்தின்கீழ் பயன்பெற வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வரமாய் அமையும் மரங்களையும் மற்ற பயிர்களையும் சரியான முறையில் பல அடுக்குகளில் வளர்த்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.
இனி வரும் நாட்களில் மேலும் பல விவசாயிகள் செழிக்க எனது வாழ்த்துக்கள்.
என்று கூறி நிறைவுற்ற வெற்றி விவசாயி, திரு. செந்தில்குமார் அவர்களின் முகத்தில் ‘ நான் ஒரு விவசாயி’, என்ற பெருமை மிளிர்ந்தது.
காவேரி கூக்குரல்.
ஈஷா மரம்சார்ந்த விவசாயம்