வளையாம்பட்டு வெங்கடாசலம் ஐயா

வளையாம்பட்டு வெங்கடாசலம் ஐயா
Agriwiki.in- Learn Share Collaborate

வளையாம்பட்டு வெங்கடாசலம் ஐயா
Pamayan.

தமிழர்களின் பெருமைகளை, தொன்மங்களை, சிந்து வெளியோடு இருந்த தொடர்புகளை யெல்லாம் பேசியும் எழுதியும் வந்தவர். மிகுதியாகக் கவனிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.

காலையே கலசப்பாக்கம் தோழர் இராசேந்திரன் அவர்களின் கவனிக்கப்படாத அழைப்பைப் பார்த்தேன்.

பயணத்திற்கு கிளம்பும் அவசரம். ஏதேனும் ஒரு கட்டுரை பற்றியோ அல்லது இது குறித்து எழுதுங்கள் என்று கூறவோ இருக்கும் என்று நினைத்து, பேருந்தில் பயணிக்கும் போது பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.

பேருத்தில் படிக்க சம்பரானில் காந்தி புத்தகத்தை எடுத்து மடியில் வைத்துக் கொண்டிருந்த போது இராசேந்திரனிடம் பேசிய பின் படிக்கலாம் என்று பயணத்தின் போது அழைத்த பேசிய பின் மனது கனத்துப் போனது.

இன்னுமொரு மூத்த அறிஞரை, முன்னேர் ஒன்றை இழந்து விட்டோமே என்று பெரும் சோகம் அப்பியது மனதில்.

தமிழறிஞராக, தமிழ் கணக்கியல் அறிஞராக, தொல்லியலாளராக, விதை சேமிப்பாளராக ஏறத்தாழ 50 ஆண்டுகாலம் இயங்கிக் கொண்டிருந்த வளையாம்பட்டு வெங்கடாசலம் ஐயா நேற்று இரவு இயற்கையெய்திய சேதி தான்.

செங்கம் வெங்கடாசலம் ஐயா என்று தான் என் மனதில் நிற்கிறார் வளையாம்பட்டு வெங்கடாசலம் அவர்கள்.

முதலில் எப்போது சந்தித்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் கண்ணிற்குள் இருப்பது கருத்த இராகி இரகம் ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு அது விளையும் மலைப் பகுதி, விளைவிக்கும் பழங்குடி மக்கள் என விளக்கியது மட்டும் மனக்கண்ணில் இன்றும் நிற்கிறது.

ஏறத்தாழ 40 இராகி வகைகள் என்று நினைக்கிறேன். எல்லாம் தமிழ் நாட்டு இரகங்கள். இராகியில் இத்தனை இரகங்களா என்ற என் முதல் வியப்பை முறியடிக்கும் வகையில் அடுத்து அவர் காட்டியது நெல் இரகங்கள்.

இதெல்லாம் தமிழகத்து சொத்து என்று விளக்கினார் மிகுந்த குதூகலத்துடன்.

அப்போதெல்லாம் இந்தப் பெருமை மிகு பாரம்பரியத்தின் மீது பெருமை ஏது?

இந்த நிகழ்வு அநேகமாக 1990 களின் மத்தியில் என்று நினைக்கிறேன்.

தமிழகத்தில் இன்றும் நம் கவனம் நெல்லின் மீது தான். சிறு தானியங்கள் மீதல்ல. ஆனால் நெல்லுக்கு நிகராக சிறு தானியத்தையும் சம அக்கறையுடன் பாதுகாக்க முயன்ற முதல் தமிழர் இவரே. இத்தனைக்கும் இவர் தமிழகம் முழுமைக்கும் அலைந்து திரிந்து சேகரித்தவை அல்ல. இவர் காட்டிய இராகி, திணை மற்றும் நெல் இரகங்கள் தான் வாழும் திருவண்ணாமலைப் பகுதி மற்றும் பொறியாளராகப் பணி புரிந்த பகுதிகளிலிருந்து சேகரித்தவை.

இவரது விதைகள் மீதான அக்கறையும் கவனிப்பும் நம்மாழ்வாரை ஈர்த்ததில் வியப்பில்லை. நம்மாழ்வார் பல சந்தர்ப்பங்களில் வெங்கடாசலம் பற்றி சிலாகித்து பேசியதுண்டு .

பொறியாளரான இவரது இன்னொரு தணியா ஆர்வம் கணக்கியல். தமிழர் கணக்கியல் மேதை. தமிழரின் தொன்மம் குறித்த இவரது ஆய்வுகளும் கட்டுரைகளும் இன்றைய இளைஞர்களுக்கு தேவையானது. திணையில் குறித்த பார்வை சிறப்பானது.

மூன்று மாதங்கட்குப் முன் கலசப்பாக்கத்தில் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு தலைமை இவரே. மிக நீண்ட இடைவெளிக்குப் பின் நடந்த சந்திப்பு. பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அவருக்கு. நா தழுதழுக்க,”எப்படி இருக்கீங்க செல்வம், நிறைய சுத்தறீங்க, உடம்பையும் பாத்துக்கனும்,” என்ற போது ஒரு மூத்த இளைஞனின் அன்பும் அக்கறையும் கவ்விக் கொண்டது.

தளர்ந்திருந்தார். குரலும் அப்படியே.

என்ன வயதாயிற்று என்றேன். 94 என்றார். ஆனால் அப்படி தெரியவில்லையே என்றேன். 80 களின் ஆரம்பத்தில் இருப்பார் என்று நினைத்தேன். இந்த வயதில் தலைமை உரையை எழுந்து நின்று பேச விரும்பினார். எங்களின் வற்புறுத்தல்கள் தாண்டி நின்றபடியே பேசினார்.

சிறு(அருந்) தானியங்கள் வளர்த்த உடல் அல்லவா!!!

தமிழர்களின் பெருமைகளை, தொன்மங்களை, சிந்து வெளியோடு இருந்தத் தொடர்புகளையெல்லாம் பேசியும் எழுதியும் வந்தவர். இதற்காக “நன்னன்” என்ற பெயரில் இதழ் நடத்தினார். அதில் தமிழர்களின் கணக்கியல், தொன்மை குறித்தெல்லாம் எழுதினார்.

ஐயா அவர்களுக்கு செய்ய வேண்டிய்இறுதி மரியாதையை செய்ய இயலா நிலை கூடுதல் வருத்தத்தை அளிக்கிறது.

மிகுதியாகக் கவனிக்கப்பட்டிருக்க வேண்டியவர். இருப்பினும் தனக்குப் பின் இந்த வேலைகளை எடுத்துச் செல்லும் (விதைகள் தளத்தில்) அடுத்த தலைமுறையை, இரு தலைமுறையை உருவாக்கி வைத்திருக்கிறார். தன் வேலைகள் கவனிக்கப்படாமல், மதிக்கப்படாமல் இருக்கிறதே என்ற ஏக்கமின்றி மறைந்திருக்கிறார்.

வெங்கடாசலம் ஐயாவின் இறுதிப் பயணத்திற்கு பங்கேற்க இயலாமை பயணம் முழுதும் இருக்கும். உங்களின் பிள்ளைகளுடன் தொடர்ந்து இயங்கப் பலரும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையையாவது இச்சமூகம், அடுத்த இரு தலைமுறைகள் தந்திருப்பது சற்றே மகிழ்வு தான்

உங்களது நீநீநீநீநீண்ட பயணத்தை முடித்துக் கொண்டீர்கள்.

நாங்கள் தொடர்ந்து நடப்போம். நாங்கள் தொடர்ந்து பயணிப்போம் நம்மாழ்வார், நீங்கள். போன்றவர்களின் பணியை சுமந்து கொண்டு ….

தமிழ் சமூகம் அடைய வேண்டிய தூரம், தமிழக விவசாயிகள் செய்திட வேண்டிய காரியங்கள் மிக நிறைய உள்ளன.

உங்களையொத்தவர்கள் அக்கறைப்பட்ட காரியங்களுக்கான பயணத்தை தொடர்வோம் என்ற நம்பிக்கையை உங்களுக்கு கொடுக்க முடிந்தது சற்றே மகிழ்ச்சி தான்.

நன்றிகள் ஐயா. தொழுது வணங்குகிறேன்.