ஹைட்ரோ ஃபோனிக்ஸ் தீவனங்களை ஆடுகளுக்கு தரலாமா

ஊட்டமேற்றிய ஆட்டு எரு
Agriwiki.in- Learn Share Collaborate
ஹைட்ரோ ஃபோனிக்ஸ் முறையில் விளைவித்த தீவனங்களை ஆடுகளுக்கு தரலாமா?

 

வெள்ளாடுகள், இயற்கையிலேயே பலவகைப்பட்ட தீவனங்களை உணவாக உட்கொள்ளும் பழக்கம் உடையவை.

ஒரே மாதிரியான தீவனங்களை அவை விரும்புவதும் இல்லை, உணவாக ஏற்பதும் இல்லை.
அவற்றின் தீவனத்தில் புல்வகைககள், தானிய வகைகள், பயறு வகைகள், மர இலைகள் என பல்வேறு வகைகளை உள்ளடக்கியது.

இவ்வாறு அவைகள் தேடி, தேர்ந்தெடுத்து உண்பதால் தான் வெள்ளாட்டு இறைச்சி மற்றும் பால் மருத்துவ குணம் மிக்கதாக, அனைவராலும் கருதப்படுகிறது.

தாய்பாலுக்கு இணையான சத்துக்களை உள்ளடக்கியது வெள்ளாட்டு பால் என்பது நிரூபிக்கபட்ட உண்மை.

வெள்ளாட்டு பாலில் கொழுப்புகள் உடைத்த துகள்களாய், சிறு சிறு கோளமாக கலந்து பரவி காணப்படும். இச்சிறப்பால் எளிதில் ஜீரணமாகும் பண்பை வெள்ளாட்டு பால் பெற்றுள்ளது.

இவ்வாறாக இயற்கையிலேயே தன்னை உருவாக்கம் செய்து கொண்ட வெள்ளாடுகளை வணிகரீதியில் கொட்டில் முறையில் அடைத்து வளர்க்கும் போது ,அவற்றின் தீவன தேவையை நம்மால் சரிவர முழுமையான தீவனமாக அளிக்க இயலாமல் போகும் போது பல்வேறு பிரச்சனைகளை வெள்ளாடுகள் எதிர் கொள்கின்றன.

 ஊட்டசத்து குறைபாடு
 மனஅழுத்தம்.

வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகளின் பற்றாகுறையால் தோற்ற பொலிவு குறைதல், உடல்எடை இழப்பு, சரியான இடை வெளியில் சினை பருவத்திற்கு வருவதில் தாமதம், இனவிருத்தி கிடாக்களின் வீரியம் குறைதல், கருச்சிதைவு, எடை குறைந்த குட்டிகளை ஈனுதல், இரத்தசோகை போன்ற பிரச்சனைகள் பண்ணைகளில் இருக்கும் ஆடுகளிடையே காணலாம்.

சரிவிகித தீவன பற்றாக்குறை ஆடுகளுக்கு நாள்பட்ட மன அழுத்தத்தை உண்டு பண்ணும்.

ஆடுகள் மனிதர்களை போலவே நுண்ணறிவு படைத்தவை. வளர்த்தவர்களிடத்தே மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவை. நாம் சொல்வதை நன்கு புரிந்து செயல்படும் திறன் படைத்தவை.

புதியஇடம் மற்றும், தரமில்லாத தீவனம்,ஒரே மாதிரியான தீவனம் ஆகியன ஆடுகளுக்கு மனச்சோர்வை உண்டு பண்ணும்.

நாள்பட்ட மனசோர்வு, HS(Hemorrhagic septicemia) , CCPP (contagious caprine pleuro pheumonia) போன்ற நோய்கள் உருவாக அடிப்படை காரணியாக அமைகின்றது.

கசப்பு தன்மை கொண்ட தீவனங்களை , உதாரணமாக வேப்பிலையை, தீவனம் கிடைக்காதபட்சத்தில் ஆடுகளுக்கு தீவனமாக தொடர்ந்து கொடுக்கும் போது, அதை உட்கொள்ளும் ஆடுகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு மிக அதிகம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

தீவனவிகிதாச்சாரம்

ஆடுகளின் தீவனவிகிதாச்சாரம் கீழ்கண்ட விதத்தில் அமைத்து கொண்டால் மேற்சொன்ன பிரச்சனைகளிலிருந்து நம் ஆடுகளை பேணி காக்கலாம்.

புல்வகை ( கோ3, கோ4, கோ 5, எருமைபுல், கினியாப்புல் ) — 40%

தானியவகை புற்கள் ( கோஎப்எஸ்29, கோஎப்எஸ்31, கம்பு நேப்பியர், தீவன சோளம், சூடான்சொர்க்கம்) — 20%

பயறுவகை தீவனம் ( வேலிமசால், குதிரை மசால், முயல்மசால், மக்காச்சோளம், தீவனதட்டைப்பயறு ) — 30%

மரவகை தீவனம் ( அகத்தி, கிளரிசீடியா, சுபாப்புல், கல்யாணமுருங்கை, வேம்பு, நுனா, வாகை) — 10%

தினப்படி தீவனம் வழங்குவது இது போன்ற கலவையில் இருப்பது அவசியம்.

அசோலா மற்றும் ஹைட்ரோஃபோனிக்ஸ் தீவனங்களை நன்கு அலசி, தண்ணீர் நன்கு வடிந்த பின்னர் கொடுக்க வேண்டும்.

அசோலாவில் வரும் சாண வாடையால் ஆடுகள் இதை ஏற்பதில்லை.எனவே நன்கு தண்ணீரால் இரண்டு , மூன்று முறை அலசிய அசோலாவை அடர்தீவனத்தில் கலந்து தரும்போது உண்ணும்.

ஹைட்ரோஃபோனிக்ஸ்முறையில் வளர்க்கப்படும் தீவனங்களில் பூஞ்சாணங்கள் இருக்க வழிவகை உள்ளதால் அத்தீவனத்தை, முறையே தண்ணீரால் நன்கு அலசிய பின், சிறிதளவு சமையல் உப்பு கலந்த நீரை தெளித்து, நீர் நன்கு வடிந்த பின்னர் ஆடுகளுக்கு தரலாம்.

இருந்தாலும் மற்ற கால்நடைகளை காட்டிலும் ஆடுகள், ஹைட்ரோ ஃபோனிக்ஸ் தீவனங்களை தினமும் சாப்பிடுவதை விரும்புவதில்லை.

ஆடுகள் ஈரமான அதாவது மழையில் நனைந்த, நீரில் அலசிய தீவனங்களை உண்பதில் ஆர்வம் காட்டுதில்லை. ஏனெனில் வெள்ளாடுகளுக்கு, தீவனங்கள் உலர்ந்த நிலையில் இருப்பதையே விரும்பி ஏற்கின்றன.

கொட்டில் முறையில் வெள்ளாடு வளர்ப்பவர்கள் கீழ்கண்டவாறு தீவனங்களை முறையாக நேரத்தில் கொடுக்கும் போது நம் முதலீடு சிறப்பாக வளர்ந்து, பெரும் பலனை தரும்.

#பண்ணையின் முதல் தீவனமாக அடர்தீவனம் 8.30 லிருந்து 9.30 மணிக்குள் .
அடர்தீவனத்தில் மக்காசோள மாவு, கோதுமை தவிடு, அரிசிதவிடு, பொட்டு வகைகளில் துவரை, உளுந்து, பாசிபயறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்று, புண்ணாக்கு வகைகளில் கடலை, சோயா, பருத்திகொட்டை .
இவற்றுடன் கல்உப்பு மற்றும் தாது உப்பு கலவை ( ஒரு ஆட்டிற்கு 5 -10 கிராம்) கலந்து கொடுக்கலாம்.

# இரண்டாவது உலர்தீவனம். அடர்தீவனம் ஊற்றிய உடன் போடலாம்.
உலர்தீவனத்தில் மக்காசோள தட்டை, கடலை கொடி, உளுந்து அல்லது பாசிபயறு செடிகள், சணப்பை, கோஎப்எஸ்29, 31, தீவன சோளம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

# மூன்றாவது தீவனம் 11- 12 மணிக்குள் புல்வகை , பயறு வகை,தானிய வகை புற்கள், மரவகை என 40:30:20:10 என்ற விகிதத்தில் பசுந்தீவனங்களை கலந்து இட வேண்டும்.

# நான்காவது மீண்டும் அடர்தீவனம் 4-5 மணியில்.
அடர்தீவனம் ஒரு ஆட்டிற்கு குறைந்தபட்சம் 150 லிருந்து 200 கிராம் அளவில் காலை, மாலை என இரு வே பிரித்து தரலாம்.

# ஐந்தாவதாக மீண்டும் சரிவிகிதத்தில் பசுந்தீவனம்.

இவ்வாறாக வெள்ளாடுகளின் தீவனத்தில் சிறப்பு கவனம் எடுத்து பராமரிக்கும் போது, ஆடுகளின் உடல் நலம் மேம்படுவதோடு சிறந்த உடல்எடை கூடும் திறனை விரைவிலேயே அடையும்.

பண்ணையையும் மிகுந்த இலாபகரமானதாக வழிநடத்தலாம்.

ஆரோக்கியமான பண்ணையின் அடித்தளமே சிறப்பான தீவன மேலாண்மை.

நன்றி.
அர்வின் ஃபார்ம்ஸ். போளூர்.