கட்டடங்களும் தொழில் மயப்படுத்தலும்

கட்டடங்களும் தொழில் மயப்படுத்தலும்
Agriwiki.in- Learn Share Collaborate
கட்டடங்களும் தொழில் மயப்படுத்தலும்.
வளரும் நாடுகளும் குடியிருப்பு பிரச்சினைகளும் – பகுதி ஒன்று :

இந்தியா போன்ற வளர்முகநாடுகளில் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளிலொன்று இந்த வீட்டுப் பிரச்சினை.

இத்தகைய வளர்முகநாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள். இதனால் வீடுகளைக் கட்டினால் மட்டும் போதாது குறைந்த செலவிலும் கட்ட வேண்டும்.

இதன் காரணமாகக் ‘குறைந்த செலவு வீடுகளின்’ (Low Cost Housing) தேவை வளரும் நாடுகளைப் பொறுத்த வரையில் மிகவும் அவசியமாகின்றது. பல்வேறு வளரும், அபிவிருத்தியடைந்த நாடுகளிலெல்லாம் இத்தகைய குறைந்த செலவுக் குடிமனைகளைக் கட்டுவதெப்படி என்பது பற்றியெல்லாம் ஆய்வுகள், பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. வெற்றியடைந்திருக்கின்றன. மேலும் ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுமிருக்கின்றன.

இத்தகைய வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வீடமைப்புத் திட்டங்கள் மிகுந்த முக்கியத்துவத்துடன் உருவாக்கப்பட வேண்டும். நாட்டில் கிடைக்கக்கூடிய வளங்களை அதிக அளவு பாதிக்கக்கூடியதாக, அதே சமயம் உருவாகக் கூடிய சேதங்களின் அளவைக் குறைக்கக் கூடியதாக, மேலும் கூடிய அளவு பயனைத் தரக்கூடியதாக, கட்டடம் கட்டுவதற்குரிய கால அளவைக் குறைக்கக் கூடியதாக இத்திட்டங்கள் அமைந்திருக்க வேண்டும்.

வீட்டைக் கட்டுவதுடன் மட்டும் பிரச்சினை தீர்ந்து போய்விடுவதில்லை. அவற்றில் வாழப்போகும் மக்களுக்கேற்றபடி வீடுகள் அமைந்திருக்க வேண்டும்.

இத்தகைய வீடமைப்புத் திட்டங்களை அமைக்கும்போது அவற்றில் வாழப்போகும் மக்களின் சமூக வாழ்க்கை முறை, அவர்களின் தேவைகள், மற்றும் வீடுகள் அமையவிருக்கின்ற பிரதேசங்களின் காலநிலை, அப்பகுதிகளில் கிடைக்கக்கூடிய மூலவளங்கள் என்பன பற்றியெல்லாம் கவனத்தில் கொண்டே அத்தகைய திட்டங்களை அமைக்க வேண்டும்.

கட்டடங்களைத் தொழில் மயப்படுத்தல்….

இவ்விதமான குறைந்த செலவு வீடுகளை எவ்விதம் அமைக்கலாம்? வீடு கட்டுவதற்கான செலவை எவ்விதம் குறைக்கலாம்?

வீடமைப்புச் செலவைப் பொறுத்தவரையில் மூலப்பொருட்செலவும் தொழிலாளருக்கான செலவும் முக்கியமானவை.

கட்டடங்களைத் தொழில் மயப்படுத்துவதன் மூலம் (Industrialisation of Buildings) கட்டடப் பொருட்களுக்கு அல்லது பாகங்களுக்கு (மொத்தத்தில் கட்டடங்களுக்கு) குறிப்பிட்ட அளவு முறைகளை நிர்ணயித்துத் தரப்படுத்துவதன் மூலம் பெருந்தொகையாகவும் விரைவாகவும் கட்டடப்பொருட்களை உற்பத்தி செய்யக் கூடியதாகவிருக்கும். கட்டடங்களைக் கட்டுவதும் துரிதமாகவும் இலகுவானதாகவுமிருக்கும்.

இவ்விதம் கட்டடங்களைத் தொழில் மயப்படுத்துவதற்கு முன்னோடியாக இன்னுமொன்றையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

குறிப்பிட்ட அளவினை அடிப்படை அளவாக நிர்ணயம் செய்து கொண்டு (Module) இந்த அளவினை அடிப்படையாக வைத்துக் கட்டடப் பொருட்களைப் பாகங்களை உற்பத்தி செய்ய வேண்டும்.

வீடுகளை வடிவமைக்கும் போது கூட இத்தகைய அளவு முறையில் உருவாக்கப்பட்ட பாகங்களைப் பாவிக்கக்கூடியதாகத்தான் வடிவமைக்க வேண்டும். இதனை Modular Coordination என்பார்கள்.

இத்தகைய முறைகளில் வீடுகளை அமைக்கும் போது பெறக்கூடிய முக்கியமான நன்மைகளிலொன்று வீட்டிற்கு வீடு அளவு முறைகள் மாறுவதால் ஏற்படக் கூடிய சிக்கல்களைப் பற்றிக் கவலைப் படத்தேவையில்லை என்பதே.

பெருந்தொகையாக உற்பத்தி செய்யப்படும் கட்டடப் பொருட்களை எல்லா வகையான வீடுகளுக்கும் பாவிக்கக்கூடியதாகவிருக்கும். இத்தகைய முறையில் வீட்டின் சுவர்கள், தரை, கூரை, மற்றும் ஜன்னல்கள், கதவுகளெல்லாம் மிக விரைவாகவும், தரமாகவும், குறைந்த செலவிலும் அமைக்கப்பட முடியும்.

இப்பாகங்கள் கட்டடங்களைக் கட்டுவதற்கு முன்பே உருவாக்கப்பட்டு பாதுகாத்து வைக்கவும் முடியும்.

இந்தியா, இங்கிலாந்து, போலந்து, நோர்வே போன்ற நாடுகளில் அடிப்படை அளவாக 10cm இனை அடிப்படை அளவாக
வரையறுத்துள்ளார்கள்.

சுவர்களை எடுத்துக் கொண்டால் 190X90X90mm என்னும் அளவில் உருவாக்கப்பட்ட செங்கற்களை அல்லது 390x190x190 mm என்னும் அளவில் அமைக்கப்பட்ட சுவர்ப்பாகங்களைக் கொண்டு சுவர்களை அமைக்கலாம்.

இது போல் கதவுகள், ஜன்னல்களுக்குப் பின்வரும் அளவுகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன:

கதவுகள்:
உயரம்: 2000 mm
அகலம்: 700 mm, 800mm, 900mm

ஜன்னல்கள்:
உயரம்: 400mm, 800mm,1200mm,1600mm
அகலம்: 400mm, 800mm,1200mm, 1600mm

இவ்வாறே கூரை, தரை போன்ற பாகங்களையெல்லாம் இலகுவாகவும், விரைவாகவும், குறைந்த செலவிலும் பயன்பாடு மிக்கதாகவும் உருவாக்கிக் கொள்ளலாம்.

“என்ன இவன் சும்மா மண்ணை பத்தியும் பாரம்பரிய கட்டிடத்தை பத்தியுமே எப்போ பாரு பேசிக்கிட்டே இருக்கான்னு கோபம் வருதா…??”

நாம் மாறுவதற்கு அதிக காலங்களை எடுத்து கொள்ள முடியாது தோழர்களே..

நம் பாரம்பரிய கட்டிடங்கள் அம்மா கையால் பாசத்துடன் செய்யப்பட்ட வீட்டு சாப்பாடு மாதிரி..நவீன கட்டிடங்கள் ஹோட்டல் சாப்பாடு மாதிரி..வீட்டு சாப்பாடு கொஞ்சம் ருசி கம்மியா இருக்கும் ஆனா உடம்புக்கு நல்லது.அது போல தான் பாரம்பரிய காட்டிட முறைகளும்..

அடுத்த பகுதியில் பாரம்பரிய கட்டிடங்கள்….

தொடரும்…
நான் உங்களுடன் ஹரி