சரியான நீர் மேலாண்மை இல்லை

சரியான நீர் மேலாண்மை இல்லை
Agriwiki.in- Learn Share Collaborate

நம்மிடம் சரியான நீர் மேலாண்மை இல்லையென்று சொன்னால் ‘எப்படிச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள்.
பவானி என்ற ஒரேயொரு நதியை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

215 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஆறு இது. கேரளா, நீலகிரி ஆகிய இடங்களில் பெய்யும் மழை நீரானது பவானி ஆற்றில் கட்டப்பட்டிருக்கும் பவானிசாகர் அணையில் சேகரமாகிறது. இந்த அணையின் உயரம் 120 அடிகள். இப்பொழுது இந்த அணை நிரம்பிவிட்டது என்பதால் பல ஆயிரம் கன அடி நீரை (இனறைய கணக்குக்கு எழுபதாயிரம் கன-அடி) பவானி ஆற்றில் திறந்துவிடுகிறார்கள். இந்த எழுபதாயிரம் அடி கன நீர் சத்தியமங்கலம், பவானி ஆகிய நகரங்கள் வழியாக ஓடி பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றோடு கலக்கிறது. இன்றைக்கு பவானியும் சரி; காவிரியும் சரி கரை கடந்து ஓடுகிறது. தனது கரையோரம் இருக்கும் பல ஊருக்குள்ளும் புகுந்துவிட்டன.

பவானி ஆற்றிலிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன், கீழ்பவானி ஆகிய கால்வாய்கள் பிரிகின்றன. இந்தக் கால்வாய்களுக்குத் துணைக் கால்வாய்கள் உண்டு. கால்வாய்கள், துணைக் கால்வாய்கள் வழியாக ஓடும் நீரானது அக்கம்பக்கத்தில் உள்ள குளம் குட்டைகளை நிரப்பும். விவசாய நிலத்துக்கு பாயும். ஆனால் இன்னமும் பெரும்பாலான குளம் குட்டைகளை நிரப்பவில்லை. அதுதான் வருத்தமாக இருக்கிறது. காவிலிபாளையம் என்ற ஊரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பு கொண்ட குளம் அது. ஒரேயொரு முறை நிரம்பினால் கூட பல ஆண்டுகளுக்கு பலனளிக்கும். ஓடத்துறை குளம் நிரம்பவில்லை. புளியம்பட்டி சாலையில் இருக்கும் குளம் நிரம்பவில்லை. நீர் இருக்கிறது. ஆனால் அவை இன்னமும் நிரம்பவில்லை. இப்படி சுமார் ஐம்பது குளங்களைக் காட்ட முடியும்.

என் கேள்வி எல்லாம் எளிமையானது. ஏன் இவ்வளவு நாட்கள் இந்தக் குளங்களை நிரப்பவில்லை என்பதுதான்.

கால்வாய்களில் நீர் திறந்துவிட மேலிடத்திலிருந்து அனுமதி இல்லை என்று அதிகாரிகள் சொல்கிறார்களாம். சில விவசாயிகளிடம் பேசினால் ‘பராமரிப்பு சரியில்லாததால் கரை, மதகுகள் வலுவாக இல்லை…உடைந்துவிடக் கூடும் என்று பயப்படுகிறார்கள்..அதனால்தான் கால்வாய்களில் நீர் விடவில்லை’ என்கிறார்கள். பல நீர் வரத்துப் பாதைகளில் புதர் மண்டிக் கிடக்கின்றன. நீரைத் திறந்துவிட்டால் அது எதிர்த்து கரையைத் தாண்டிவிடும் என்று அதிகாரிகள் பயப்பதாக அதே விவசாயிகள் சொல்கிறார்கள். எது உண்மையான காரணம என்று சம்பந்தப்பட்டவர்கள் விளக்க வேண்டும். ஒழுங்கான மராமத்து பணி நடைபெறாததால் எழும் பயம்தான் காரணம் என்றால் வருடாவருடம் மராமத்து பணிகளுக்கு என்று கோடிக் கணக்கில் பணம் ஒதுக்கப்படுகிறது. அந்தப் பணம் எங்கே போனது? பதில் சொல்லும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது?

நீர் இருக்கும் போதே குளம் குட்டைகளை நிரப்பினால் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு தேவையான நிலத்தடி நீர் மட்டம் உயரும். அதை ஏன் செய்யாமல் விட்டு வைத்தார்கள்? இன்றைக்கு நிரம்பி வழியும் ஆற்றை பற்றித்தான் ஊடகங்கள் பேசுகின்றன. ஆறிலிருந்து வெறும் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊர்களில் நிலவும் குடிநீர் பஞ்சம் பற்றி பேசுவதில்லை. அந்த கிராமங்களைப் பற்றி எப்பொழுதும் பேச மாட்டார்கள். ஆனால் இதுதான் உண்மையான கள நிலவரம். குடிக்க நீர் இல்லை; பாசனத்துக்கு வழியுமில்லை என்று ஏகப்பட்ட கிராமங்கள் இருக்கின்றன.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்ட நீரின் அளவு முப்பது டி.எம்.சி இருக்கும் என்கிறார்கள். அணையின் மொத்த கொள்ளளவு இது. கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் மட்டும் 11 டி.எம்.சி வெளியேறியிருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று லட்சம் ஏக்கர் நிலத்துக்கான ஒரு போக பாசன அளவின் நீர் இது. யாருக்கும் பைசா பலனளிக்காமல் வெளியேறியிருக்கிறது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அணை நிரம்பியிருக்கிறது. அது இப்படி அர்த்தமேயில்லாமல் வெளியேறிக் கொண்டிருக்கிறது.

இது பற்றியெல்லாம் யார் பேசுவது? யாரிடம் கேள்வி கேட்பது?அமைச்சரிடம் கேட்பதா? எம்.எல்.ஏக்கள் பதில் சொல்வார்களா? அல்லது அதிகாரிகள் வாய் திறப்பார்களா? எங்கே போனது நம் நீர் மேலாண்மை?

இன்னமும் ஐந்து நாட்களுக்கு கேரளாவிலும் கர்நாடகாவிலும் மழை இருக்கும் என்று சொல்கிறார்கள். இன்றைக்கு காவிரியில் வரும் 1.90 லட்சம் கன-அடி நீரின் அளவு அதிகரிக்கும் போதும், பவானிசாகரில் திறந்துவிடப்படும் 70 ஆயிரம் அடி கன-அடி என்ற அளவும் அதிகரிக்கும் போதும் நிலைமை என்னவாகும் என்று பதற்றமாக இருக்கிறது. ஆனால் பத்து இருபது நாட்கள் கழிந்த பிறகு ஆற்றில் நிலைமை சீராகிவிடும். ஆனால் சற்று தள்ளி இருக்கும் பல ஊர்களிலும் அதன் பிறகும் இதே வறட்சிதான் நிலவும்.

ஒரு சாமானியனாக இந்தக் கேள்வியைத்தான் எழுப்பத் தோன்றுகிறது- மழை பெய்தாலே நம் ஊர் பெண்கள் வீட்டில் இருக்கும் வாளியெல்லாம் நிரப்பி வைத்துக் கொள்கிறார்கள். ஆற்றில் கரை கடந்து ஓடும் நீரைக் கொண்டு குளம் குட்டைகளையெல்லாம் நிரப்பாமல் ஏன் இன்னமும் வேடிக்கை பார்க்க வேண்டும் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஆட்சியாளர்கள் ஒவ்வொருவரும் தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏன் இது குறித்த எந்த சிந்தனையும் இல்லை? அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும், அதிகாரிகளும் ஒரு கணம் கூடவா யோசித்திருக்க மாட்டார்கள். இவர்களின் மெளனத்தைப் பார்த்தால் அந்த விவசாயிகள் சொன்னதுதான் சரி என்று தோன்றுகிறது. பராமரிப்பு செய்ய வேண்டிய காலத்தில் ஏய்த்து விட்டாகிவிட்டது. ஒதுக்கிய பணத்தையெல்லாம் வாயில் போட்டாகிவிட்டது. இந்த லட்சணத்தில் இன்றைக்கு வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? பலனில்லாமல் ஆற்றில் பாயும் நீரானது செல்பி எடுத்துக் கொண்டாட வெறும் வேடிக்கைப் பொருளில்லை. சிவந்து பெருக்கெடுக்கும் அது அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தின் ரத்தக் கண்ணீர்.

By Va. manikandan.
From http://www.nisaptham.com/2018/08/blog-post_66.html?m=1