சின்ன வெங்காய சாகுபடியில் அதிக லாபம் பெற சில ஆலோசனைகள்

Agriwiki.in- Learn Share Collaborate

சின்ன வெங்காய சாகுபடியில் அதிக லாபம் பெற சில ஆலோசனைகள்:

சின்ன வெங்காய சாகுபடி பொறுத்தவரையில் ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 12 டன் முதல் அதிகபட்சம் 23 டன் வரை எடுக்குமாறு இலக்கு நிர்ணயித்து விவசாயம் செய்வது நல்லது.

சின்ன வெங்காயத்தின் நல்ல பருமனான வடிவம், சிவப்பு நிறம் மற்றும் காரத்தன்மை போன்றவை சந்தையில் அதிக விலை கிடைக்க காரணமாக இருக்கும்.

தமிழகத்தில் மேட்டு நில பகுதிகளில் குறிப்பாக திண்டுக்கல், நாமக்கல், துறையூர், திருப்பூரில் அதிகம் பயிரிடப்படும் சின்ன வெங்காயத்தில் தவறான பாசன முறை, விதை தேர்வு, கோழிக்கால் நோய் போன்ற காரணங்களால் மிகவும் குறைந்த விளைச்சல் மற்றும் மன உளைச்சலால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

அனைத்துப் பகுதி வெங்காய சாகுபடியாளர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைப்பிடிப்பதால் நிச்சய வெற்றியை பெறலாம்.

1. தரமான விதை வெங்காயம் வாங்கி அதனை தரம் பிரித்து அழுகல் இல்லாத நல்ல வெங்காய விதைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

2.விதை வெங்காயத்தின் தலைப்பகுதியில் வேரை சுற்றிய இடத்தில் வெள்ளை நிறமாக இருந்தாலும், தொடும்போது பிசுபிசுப்பாக இருந்தாலும் அதனை ஒதுக்கி விட வேண்டும். மீதமுள்ள முறையான விதை வெங்காயத்திற்கு ஒரு கிலோவிற்கு 4 மில்லி டிரைக்கோ டெர்மா விரிடி அல்லது 10 மில்லி சூடோமோனஸ் கலந்து இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை மட்டுமே ஊறவைத்து விதை நேர்த்தி செய்து நன்கு உலர வைத்து விதைக்கலாம்.

3. நிலத்தை தரமாக தயாரிக்க குறைந்தபட்சம் 2 அல்லது 3 முறை உழுது நல்லது. ஒருமுறை ஐந்து கொத்து கலப்பை ஒருமுறை 9 கொத்து கலப்பை கொண்டு உழுது குறைந்த பட்சம் முக்கால் அடி ஆழம் உள்ள நிலத்தை போல போல என உழுத பின்பு ஒருமுறை ரோட்டவேட்டர் பயன்படுத்தி நிலத்தை தயார் செய்யலாம். மண் இலகுவாக இருந்தால் மட்டுமே காய் பெருக்கம் நடைபெறும். அடி உரமாக முதல் உழவின் போது ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இரண்டாம் உழவின் போது 4 டிராக்டர் லோடு மக்கிய தொழு உரத்துடன் இரண்டு கிலோ சூடோமோனஸ் 2 கிலோ பேசிலோமைசீஸ் என்ற உயிர் பூஞ்சைக் கொல்லிகளை கலந்து நிலம் முழுவதும் தூவிவிட்டு பார் பிடித்து நடலாம். அடி உரம் கொடுப்பது விளைச்சலை 30 சதவீதம் அதிகரிக்கும். பூஞ்சை கொல்லிகளை அடி உரமாக பயன்படுத்துவதால் ஏற்கனவே நிலத்தில் தங்கி இருக்கும் நோய்க்கிருமிகளை அழிக்க வாய்ப்பாக இருக்கும்.

4. கோழிக்கால் நோய் வராமல் தடுக்க முறையான நீர் பாசனம் முக்கியம். எந்த வகை நிலமாக இருந்தாலும் நிலத்தில் நீர் முழுமையாக வற்றிய பின்பு பாசனம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 8 நாட்களுக்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்வது நல்லது. பாசனம் செய்யும் முந்தைய நாள் நிலத்தை தோண்டி ஏற்கனவே கொடுத்த ஈரம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பின்பு தண்ணீர் கொடுக்கலாம். முடிந்தவரை ஒவ்வொரு தண்ணீருக்கும் ஒரு லிட்டர் அல்லது இரண்டு கிலோ சூடோமோனாஸ் அல்லது பேசிலஸ் சப்ஸ்டிலஸ் கலந்து பாய்ச்சலாம். 10 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி சூடோமோனஸ் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்.

5. பயிரின் முதல் முப்பது நாட்களில் மூன்று முறை ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற வீதத்தில் கொடுப்பது ஆரம்பகால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். 30 நாட்களுக்குப் பின்பு மீன் அமிலம் ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் அல்லது பஞ்சகாவியா, இஎம் கரைசல் 3 லிட்டர் ஒவ்வொரு 8 நாட்களுக்கு ஒரு முறை பாசனத்துடன் கொடுக்கலாம். 10 நாட்களுக்கு ஒரு முறை இ.எம் கரைசல் 10 லிட்டருக்கு 100 மில்லி என்ற வீதத்தில் ஆரம்பம் முதல் அறுவடை வரை மாலை வேளையில் பயிர்கள் மேல் தெளித்து விடலாம். களைக்கொல்லி பயன் படுத்துவது முற்றிலுமாகத் தவிர்க்கப் பட வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால் மகசூல் 40% வரை குறைந்துவிடும். மேலும் நிலத்தின் உயிர் தன்மையும் நீங்கிவிடும்.

6.முதல் 30 நாட்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளான பேன் மற்றும் பச்சை நிற புழு தொல்லையை கட்டுப்படுத்த ஏழு நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கற்பூர கரைசல் கலந்து தெளிக்கலாம் அல்லது 500 மில்லி அக்னி அஸ்திரம் கலந்து தெளிக்கலாம். உயிர்வழி தீர்வாக 10 லிட்டர் தண்ணீருக்கு 75 மில்லி வெர்ட்டிசீலியும் லக்கானி மற்றும் 75 மில்லி பெவேரியா பேசியானா மற்றும் 50 கிராம் மைதா மாவு கலந்து மாலை வேளையில் இலைகளுக்குள் இறங்குமாறு தெளித்து விடுவது நல்லது.

7. நடவு நட்ட 20-வது நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் அல்லது 4 கிலோ வாம் கொடுப்பது வேர் வளர்ச்சிக்கும் காய்கள் காட்ட தன்மையுடன் இருக்க வாய்ப்பாக இருக்கும். 15 நாட்களுக்கு ஒரு முறை இரண்டு லிட்டர் அல்லது 4 கிலோ பாஸ்போபாக்டீரியா பாசனத்துடன் கலந்து கொடுப்பதால் அதிக வேர்கள் உருவாவது மற்றும் காய்கள் சிவப்பு தன்மையுடனும் இருக்கும்.

15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 30 கிலோ அடுப்பு அல்லது செங்கல்சூளை சாம்பல் பாசன ஈரத்தின் மீது தூவி விடலாம் சாம்பல் கிடைக்காத நேரங்களில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் பொட்டாஷ் மொபைலை சிங் பாக்டீரியா பாசன வழி கொடுக்கலாம்.

மேலும் செம்மண் நிலங்களில் 200 லிட்டர் தண்ணீரில் மூன்று கிலோ சுண்ணாம்பு கல் அல்லது கிளிஞ்சல் சுண்ணாம்பு கலந்து கரைத்து பாசன நீருடன் 50 வது நாள் பாசத்துடன் கொடுப்பது நல்லது.

பிரிட்டோ ராஜ்
வேளாண் பொறியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.