சுட்டெரிக்கும் வெயிலுக்கு காரணம் யார் Part 2

#சுட்டெரிக்கும் வெயிலுக்கு யார் காரணம்
Agriwiki.in- Learn Share Collaborate

#சுட்டெரிக்கும் வெயிலுக்கு யார் காரணம்??

பகுதி 2

நகரத்திலேயே பிறந்தவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. கிராமத்தில் பிறந்தவர்கள், பால்யத்தை செலவிட்டவர்கள், இரண்டொரு நிமிடம் கண்களை மூடி, கால இயந்திரத்தில் பயணித்து உங்கள் பால்ய நினைவுகளை மீட்டெடுங்கள்… உங்களால் உங்களது கிராமத் தெருவின் புழுதி வாசனையை நுகர முடிகிறதா… ? உங்கள் முகத்தில் வீசிய இளந்தென்றல் காற்றை உணர முடிகிறதா…? கீற்றோ, பனை ஓலையோ அல்லது நாட்டு ஓடோ வேய்ந்த உங்கள் வீட்டில் காலையில் நுழையும் ஒளியை பார்க்க முடிகிறதா…?. வீடெனப்படுவது அதுதான்….

 

சரி… விழிகளை திறங்கள்… நிகழ்காலத்திற்கு வாருங்கள். அடுக்குமாடி குடியிருப்பில் மின்சார விளக்குகளை போடாமல் உங்களால் ஒளியை பெற முடிகிறதா, மின்விசிறி இல்லாமல் காற்று வருகிறதா…? இயற்கையின் அனைத்து பந்தமும் அறுபட்டிருக்கும் அந்த கான்கிரீட் குவியல் எப்படி வீடெனப்படும்?

நாம் ஆசை ஆசையாக பெரும் பொருட்செலவில் கட்டிய வீட்டில், மின்சாரம் இல்லாமல், UPS இல்லாமல் ஒரு மணிநேரத்தை நம்மால் செலவிட முடிகிறதா !!

கிராமத்திற்கு செல்ல சொல்லவில்லை, கிராமத்தை உருவாக்க சொல்கிறேன்:

கிராமத்திற்கு செல்ல சொல்கிறாயா… சும்மா பிதற்றாமல் நடைமுறையை பேசு என்கிறீர்களா…? ஆம் அனைவருக்கும் உகந்த நடைமுறையை முன்மொழிவதுதான் இந்த தொடரின் நோக்கம்.

நான் கிராமத்திற்கு திரும்பி செல்ல சொல்லவில்லை, நீங்கள் வசிக்கும் இடத்திலேயே கிராமச் சூழலை உருவாக்க சொல்கிறேன். ஓலை குடிசை வீட்டில் வாழச் சொல்வது இந்த தொடரின் நோக்கம் அல்ல. அது மாநகர நடைமுறைகளுக்கு சாத்தியமானதும் இல்லை. ஆனால், ஆரோக்கியமான, தரமான மாற்று வழிகளை காட்டுவது மட்டுமே நோக்கம்.

நாம் ஆசை ஆசையாக பெரும் பொருட்செலவில் கட்டிய வீட்டில், மின்சாரம் இல்லாமல், UPS இல்லாமல் ஒரு மணிநேரத்தை நம்மால் செலவிட முடிகிறதா. நம் நவீன கான்கிரீட் குவியல், நம்மை சந்தையை சார்ந்திருக்க வைக்கிறது. அதிக மின்விளக்குகளை வாங்க வைக்கிறது, அதிக மின்விசிறி மற்றும் ஏசி யூபிஎஸ் வாங்க வைக்கிறது. அதாவது, நம்மை மேலும் மேலும் சந்தையை நோக்கி சார்ந்து இருக்க செய்கிறது.

நம் வீடுகள் இப்படிதான் இருக்குமென்றால், நமக்கு அதிக மணல், அதிக ஜல்லி, அதிக மின்சாரம் தேவை. அதற்கு நாம் இயற்கையை சுரண்டதான் வேண்டும். வேறு வழியில்லை. ஆனால், வீடென்பது இதுவல்ல… வீடு நமக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும், முழு விடுதலை பெற்றவனாக நம்மை உணர செய்ய வேண்டும், இயற்கையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். அப்படிதான் வீடுகள் முன்பு இருந்தது.

30 கி.மீ சுற்றுவட்டத்தில் நம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்:

நாம் கட்டும் வீடு எப்போதும், ஒரு 30 கி.மீ வட்டத்தில் என்ன மூலப்பொருள் கிடைக்கிறதோ அதிலிருந்து கட்டியதாக இருக்க வேண்டும்.

நீங்கள் பழங்குடிகள் வசிப்பிடத்தையோ, நவீன குளிர்பானங்கள் நுழையாத ஒரு குக்கிராமத்தையோ பார்வையிடுங்கள். அங்கு மக்கள் இன்னும் அப்படிதான் வீடு கட்டுகிறார்கள். அவர்கள் இயற்கையை சுரண்டுவதில்லை, அருகில் என்ன மூலப்பொருள் கிடைக்கிறதோ அதைக்கொண்டே வீடு கட்டுகிறார்கள். அது உயிருள்ள வீடாக இருக்கிறது. நம் தமிழர் கட்டடக் கலை அத்தகையது தான்.

ஆனால், வழக்கம் போல நமக்கு நம் மரபு மீது உள்ள தாழ்வு மனபான்மையில், அடிப்படை தேவையான வீடு கட்டுவதற்கு கூட மேற்கத்திய நாடுகளின் வழியை பின்பற்றுகிறோம்.

ஆங்கிலேயர்கள் இங்கு வருவதற்கு முன்பு நாம் என்ன வெறும் வனாந்திரத்திலேயா வசித்தோம்…? ஆனால், இப்போது மேற்கத்திய நாடுகள் தெளிவாகிவிட்டன. நம் நிலைதான் புலியை பார்த்து பூனை சூடுபோட்டு கொண்டதாக ஆகிவிட்டது.

மாநகரங்களுக்கு இது எப்படி பொருந்தும்?

சரி. புரிகிறது. இது எப்படி மாநகரங்களுக்கு பொருந்தும் என்கிறீர்களா…? நிச்சயம் பொருந்தும். நம் மக்களிடம் பழகி, நம்மிடமிருந்து வீடுகட்ட பாடம் படித்தவர் ‘லாரி பேக்கர்’ (Laurie Baker).

அவர் சூழலியலை கெடுக்காத மரபு வீடுகள் குறித்து நிறைய ஆய்வு செய்து பல வீடுகளை கட்டி உள்ளார். அவர் சொல்கிறார், “வீடுகள், உள்ளூரின் தட்ப வெப்ப நிலைமைகள், நிலவியல், பிரதேசத்தின் இயல்புகள், கனிமபொருட்கள், தாவரங்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள், ஆகியவற்றை கருத்தில் கொண்டதாகாவும், இயற்கை இடர்பாடுகளுக்கு தாக்குபிடிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்” என்று.

இவர் முன் மொழிந்து சென்ற வீடுகட்டும் முறை நவீனத்தையும் பழமையையும் இணைப்பது, இயற்கையை அதிகம் சுரண்டாதது, செலவு குறைவானது. காற்றும் வெளிச்சமும் இயல்பாக உள்ளே வரவல்லது.

லாரி பேக்கர் மட்டுமல்ல, நம் சமகாலத்திலேயே எத்தனையோ பொறியாளர்கள் இந்த வகை கட்டடங்களை கட்டிவருகிறார்கள். கர்நாடகத்தை சேர்ந்த, மெக்சிகோவில் படித்த வருண் இது போன்ற கட்டங்களை கட்டி வருகிறார். அவர், “இயற்கையோடு இயைந்து வாழ இதுவே சிறந்த வழி”என்கிறார்.

நாம் நம் அளவில் இயற்கையை சுரண்டுவதை குறைத்துக் கொள்ள, இது போன்ற மாற்று வீடுகளை முயற்சிக்க வேண்டும். இது இயற்கையை காப்பதற்கான வழி என்று பெருமிதம் கொள்ள வேண்டாம், இயற்கை தன்னை தானே காத்துக் கொள்ளும். இது நம்மை காத்து கொள்வதற்கான வழி.

இதைபோன்ற வழிகளில் செல்லாமல், இயற்கையின் கொடையான வெயிலையும், மழையும் நாம் சபித்து ஒரு பயனும் இல்லை.

(தொடரும்)

உங்கள் ஹரி

PART 1 of சுட்டெரிக்கும் வெயிலுக்கு காரணம் யார்