சொர்க்க மரம்

சொர்க்க மரம் Simarouba glauca
Agriwiki.in- Learn Share Collaborate
சொர்க்க மரம்:
தாவரப் பெயர்: சைமரூபா கிளாக்கா (Simarouba Glauca)
குடும்பம்: சைமரூபேசியே

 

பரவல்:

மத்திய அமெரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட அன்னிய தோற்றமாகும். பல பயன்கள் கொண்ட இம்மரம் திறன்குறைந்த மண்களில் கூட நன்கு வளரும். விளைநிலம் மற்றும் தரிசு நிலங்களிலும் வளர்ப்பதற்கு ஏற்றதாகும்.

தேவையான சூழல்:
தட்பவெப்பநிலை:

கடல் மட்டத்திலிருந்து சராசரி உயரம் 1000 மீ வரை வளரக்கூடியது. ஆண்டு சராசரி வெப்பநிலை 17-35 டிகிரி செல்சியஸ் மற்றும் ஆண்டு சராசரி மழையளவு 500-2200 மி.மீ ஆகும்.

மண் வகை:

நல்ல வடிகால் உள்ள கார அமிலத்தன்மை 5.5 – 8.0 வரை உள்ள அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடியது. ஆயினுள் 1.0 மீ ஆழமுள்ள மண்வகை இதன் வளர்ச்சிக்கு சிறந்தது. ஆழம் குறைந்த பாறைகள் கொண்ட இடங்கள் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.

வளர்ச்சி நிலை:

இம் மரம் மூன்று வருடங்களில் பூத்து காய்க்கும் தன்மை வாயந்ததாகும். வருடத்தில் ஒரு முறை, டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையில் பூக்கும். 4-6 வருடத்தில் காய்க்கத் தொடங்கி மேலும் 4-5 வருடங்களில் நிலையான காய்ப்புத்தன்மை அடைந்துவிடும். கீழே விழும் காய்கள் (இளஞ்சிவப்பு வகைகளில் கரு ஊதா நிற காய்கள் மற்றும் பச்சை வகைகளில் வெளிர் பழுப்பு நிற காய்கள்) மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் அறுவடைக்கு தயாராகும். இடத்தின் சூழல் மற்றும் தட்பவெப்ப நிலையினை கொண்டு காய்க்கும் பருவகாலம் மற்றும் வளர்ச்சி காலம் வேறுபடும். காய்காய்த்து பின் வளர்ச்சியடைந்து பழுப்பதற்கு 1-2 மாதங்கள் ஆகும். காயானது நீள்வட்ட வடிவத்தில், 2-2.5 செ.மீ நீளம் கொண்டு, மெல்லிய கடின மேல்தோலுடன், சாறு போன்ற சதைப்பகுதியுடன் இருக்கும்.

மரத்தின் வளர்ச்சி:

அசெய்டுனோ, சைமரூபா அல்லது சொர்க்க மரம் என்று பொதுவாக அழைக்கப்படும் இம்மரம் நடுத்தர அளவுடனும், பசுமை மாறா தன்மையுடனும் (7-15 மீ உயரம்), ஆணிவேர் மற்றும் நீள உருளை வடிவ தண்டுடன் இருக்கும். மத்திய அமெரிக்காவின் எல் சால்வடோர் பகுதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட அன்னிய தோற்றமாகும்.

கால்நடைகள், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் இம்மரத்தினை உண்காது என்பதால் இதற்கு தனிகவனம் தேவையில்லை (ஷ்யாம் சுந்தர் ஜோஷி மற்றும் குழு 1996).

பயன்கள்:

சைமரூபா மரத்தின் அனைத்து பாகங்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன. இதன் விதைகளில் 50-65 சதவிகிதம் உண்ணக்கூடிய எண்ணெய் இருப்பதனால் “வனஸ்பதி” என்ற சமையல் எண்ணெய் தயாரிக்க உபயோகப்படுகின்றது.

1950ம் வருடம் முதல் எல்சால்வடோர் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் இந்த எண்ணெய் உணவு பயன்பாட்டிற்காக மன்டியா வெஜிடல் “நைவ்” (Manteea Vegetal ‘Nieve’) என்ற பெயரில் தயாரிக்கப்படுகின்றது.

தொழிற்சாலைகளிலும், தரமான சோப்புகள், உயவுப் பொருள்கள், சாயம், மெழுகூட்டு, மருந்துப்பொருட்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் இவ்வெண்ணெய் உபயோகப்படுத்தப்படுகின்றது. (ஷ்யாம்சுந்தர் ஜோஷி மற்றும் சாந்தா ஹையர்மத், 2000).

எண்ணெய் தயாரிப்பில் கிடைக்கும் புண்ணாக்கில் அதிக சதவிகிதம் புரதச்சத்து (64%) இருப்பதால் அவற்றில் உள்ள நச்சுப்பொருட்கள் நீக்கப்பட்டு கால்நடை தீவனமாகும் இயற்கை உரமாகவும் உபயோகப்படுத்துகின்றது.

காய்களின் உள்பகுதி அட்டை தயாரிப்பில் பயன்படுகின்றது. பழத்தின் 60 சதவிகிதம் பழக்கூழ் என்பதால் அதனில் 11 சதவிகிதம் சர்க்கரைச் சத்து உள்ளதாலும் பழச்சாறு மற்றும் நொதித்தல் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.

இதன் இலை குப்பை மண் புழுக்களுக்கு சிறந்த உணவு என்பதால் நல்ல உரமாக பயன்படுகின்றது. இலை மற்றும் மரப்பட்டைகளில் ‘குவர்சின்’ என்ற வேதிப்பொருள் அமீபியாசிஸ், வயிற்றுப்போக்கு மற்றும் அலேரியா போன்றவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.

இயற்கையாக வளர்த்தல்:

பறவைகள் மற்றும் குரங்குகள் இப்பழத்தினை உண்டு போடும் எச்சங்களின் மூலம் தானாகவே ஊன்றி இவ்விதைகள் முளைக்கும். ஆயினும் இயற்கையாக வளர்ச்சி இம்மரத்தில் குறைவே ஆகும்.

செயற்கையாக வளர்த்தல்; விதை முதிர்ச்சி மற்றும் விதை சேகரிப்பு:

பூத்தபின் 11-13 வாரங்களுக்கு பிறகு சைமபோ காய்கள் அதிகப்பட்ட எடையுடன், நன்கு வளர்ந்த உட்கரு மற்றும் கடின நார்போன்ற உள்பகுதியுடன் இருக்கும். இதுபோன்ற பழங்கள் மரத்திலிருந்து தானே விழுந்துவிடும். இந்நிலையில் உள்ளவை வினையியல் முதிர்ச்சி பெற்று அதிகபட்ச முளைப்புத்திறன் கொண்டவையாக கருதப்படுகின்றன. வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் ஓர் ஆராய்ச்சியில் பூத்தபின் 13 வாரங்களுக்கு பிறகு காய்கள் ஊதா நிறம் அடைந்தவுடன் விதைகள் வினையியல் முதிர்ச்சி பெற்றவையாக கருதப்படுகின்றன.

காய்கள் பச்சை மஞ்சள் நிறத்திலிருந்து கரு ஊதா நிறம் மாறியவுடன் சேகரிக்கலாம். காய்கள் மரத்திலிருந்து பறிப்பதே சிறந்தது. ஏனெனில் கீழே விழுந்த பின்னர் மண் பூஞ்சாண்களின் தாக்குதல் ஏற்படுகின்றது. காய்களின் பூஞ்சாண்கள் விதைகளையும் தாக்கி சேதப்படுத்துகின்றன. காய்களின் சதைப்பகுதி மாவுச்சத்து நிறைந்துள்ளதால் அவை கீழே விழுந்த சில மணி நேரங்களிலேயே பூஞ்சாண் தாக்குதல் ஏற்படுகின்றது. மரங்களின் அடியில் ஒரு தார்பாலின் விரிப்பை விரித்து மரத்தினை உலுக்கியோ (அ) காய்களை உருவுவதோ (அ) கிளைகளை அடித்தோ காய்களை உதிரச்செய்து சேகரிப்பது சிறந்த முறையாகும்.

விதை பிழிந்தெடுத்தல்:

நல்ல தரமான விதைகளுக்கான, காய்களை வளர்ச்சியடையாத முதிர்ச்சி பெறாத சிதைந்த மற்றும் அழுகியவற்றை தரம்பிரிக்க வேண்டும். மேலும் காய்களின் நிறங்கள் கொண்டு ழுமுமையான பச்சை, பச்சை மஞ்சள் மற்றும் அடர் ஊதா போன்றவற்றையும் பிரிக்க வேண்டும். பச்சை நிற காய்கள் தரம் குன்றியவை என்பதால் அவற்றை நிராகரிக்க வேண்டும்.

காய்களை சேகரித்தவுடன் சுத்திகரிப்பு செய்யும் இடங்களுக்கு அவற்றை சாக்குப்பைகளில் அனுப்ப வேண்டும். அங்கு காய்களின் சதைக்பகுதியை கைகளினாலோ, கருவி மூலமோ உடனடியாக பிடிய வேண்டும். கைகளினால் ஒரு வாளியல் காய்களை நன்கு பிழிந்தெடுக்க வேண்டும். இதன் மேல் நீர் ஊற்றினால் காய்களின் தோல் பகுதி வாளியின் மேலே மிதங்கும். விதைகளில் ஒட்டியுள்ள சிறிதளவு சதையுடன் மூங்கில் வாளிக்குள் வைத்து ஓடும் நீரில் நன்கு அலச வேண்டும். சிறிய அளவிளான விதைகளையே பிழிந்து நன்கு அலச வேண்டும். வாளியின் மேல் நிரம்பி வழியும் வரையில் விதைகளை எடுக்க கூடாது. அதே போல் நீண்ட நேரம் நீரினில் ஊறவைக்க கூடாது.

விதை உலர்த்துதல்:

விதைகளை எடுத்தவுடன் உடனடியாக சிலமணி நேரம் நிழலில் உலர்த்தி பின்னர் வெயிலில் உலர்த்த வேண்டும். இதனால் விதைகளின் ஈரப்பதம் குறையும். விதையின் மேல்புர ஈரத்தினை நன்கு பிழிந்து, அலசி பின்னர் உலர்த்தி குறைக்க வேண்டும். சேமிப்பு அறை ஈரப்பதம் நிறைந்து அடைத்து வைக்கப்பட்டிருந்தால் காற்றாடி உபயோகிக்கவேண்டும். விதைகளை குவித்து வைக்காமல், ஒரே அடுக்கில் பரப்பி வைக்க வேண்டும். விதையின் முதல் ஈரப்பதம் 12-15 சதவிகிதம் ஆகும்.

சேமிப்பு மற்றும் வீரியத்தன்மை:

இவை மென்தோல் விதைகள் என்பதால் குறைந்த வெப்பநிலையில் சேமித்தால் நீண்ட வருடங்களுக்கு அதிக வீரியத்தன்மையுடன் சேமிக்கலாம். அறையின் வெப்பநிலையில் காகிதப்பை (அ) துணிப்பைகளில் சேமித்தல் 9-12 மாதங்கள் வீரியத்தன்மை மாறாமல் சேமிக்கலாம். புதிய விதைகளின் முளைப்புத்திறன் 70-80 சதவிகிதம் ஆகும். விதைகளினுள் சதைப்பகுதி இருப்பதால் அவற்றின் மெல்லிய தோல் போன்ற மேல் பகுதியை பிரித்து வெயிலில் எண்ணெய் பிழிந்தெடுக்கும் வரையில் சேமிக்க வேண்டும். இப்படி செய்வதில் தாமதம் ஏற்பட்டால் எண்ணெயின் தரம் குறைந்து காணப்படும். எண்ணெய் எடுக்கும் முன்னர் விதைகளை உடைக்க வேண்டும்.

முன் நேர்த்தி:

விதைத்தூக்கம் இல்லையென்பதால் முன்நேர்த்தி எதுவும் தேவையில்லை. ஆயினும் நீரில் 12 மணிநேரம் ஊறவைப்பது முளைப்புத்திறனை அதிகரிக்கும்.

விதை தரம் பிரித்தல்:

விதைகளை தூய்மைப்படுத்தி உலர்த்திய பின்னர் அவற்றின் தரத்தினை மேலும் மேம்படுத்துவதற்காக அவற்றை நிலைப்படுத்த வேண்டும். இதற்கு நிரம்பாத, முதிர்ச்சியற்ற, உடைந்த (அ) பூச்சிகள் தாங்கி சேதமடைந்த விதைகளை களைந்தெடுக்க வேண்டும். நிரம்பிய மற்றும் நிரம்பாத விதைகளை அவற்றின் ஒப்பு அடர்த்தி வேறுபாடுகளை கொண்டு நீர் மிதவை முறையில் பிரித்தெடுக்க வேண்டும்.