தற்சார்பு விவசாயி-7 மாட்டுவண்டி

Agriwiki.in- Learn Share Collaborate

தற்சார்பு விவசாயி — அத்தியாயம் 7

விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை இறைக்க மட்டும் ஆற்றல் இருந்தால் போதாது. எருவை கொண்டுவரவும், விளைபொருட்களை கொண்டுசெல்லவும், மண் அடிக்கவும் இன்ன பிற செயல்கள் செய்யவும் மற்றும் போக்குவரத்துக்கும் ஆற்றல் தேவை. தற்போதுள்ள நிலைமையில் ஒரு டிராக்டர் மற்றும் ட்ரைலர் மொத்தமாக சேர்ந்து குறைந்தபட்சம் 3 லட்சம் ஆகும். தற்போது ஒரு வண்டியை வேலைக்கு வாடகைக்கு எடுக்கவேண்டுமென்றால் 800 தேவை. பக்கத்து ஊருக்கு போக சுளையாக 1500 முதல் ஆகும். சிறு, குறு விவசாயிகளால் அது முடியாது.

 

ஆகவேதான் என்னோடைய தோட்டத்துக்கு வேண்டி வாங்க முடிவெடுத்தது ஒரு மாட்டுவண்டி. அது இன்னமும் நிறைவேறவில்லையென்றாலும் அதற்கான முதற்காரணம் என்னுடைய காலம் கடத்துதலால்தான். மாடு வந்தபின்தான் மாட்டுவண்டி. மெதுவாகப்போனால் போதும். தலைபோகிற அவசரம் எதுவும் தோட்டத்தில் இல்லை. எங்கு செல்லவேண்டும், என்ன செய்யவேண்டுமென்று படத்தில் வரைந்துள்ளேன்.

முறையாக, சிறுமழுஞ்சி வாழை ஏலம் நடைபெறும் இடத்திலிருந்து வாழைக்கழிவுகள் கொண்டுவரவேண்டும். செண்பகராமநல்லூர் கோயில் குருக்கள் வீட்டிலிருந்து சாணி கொண்டுவர, காய்கறியை நான்குனேரிக்கு கொண்டுசெல்ல, சுப்பு வீட்டிலிருந்து கோமியம், ஏமங்குளத்துக்கு சென்று பொருட்களை வெளியூருக்கு வண்டியேற்ற…….

ஆனால் இந்த திட்டம் எளிதில் செயல்படுத்த முடியாது. நடுவில் சுங்கச் சாவடிகொண்ட நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலை (நால்வழிச்சாலை) வருகிறது. அது மாட்டுவண்டிக்கு ஆபத்து. அனுமதிக்கவும் மாட்டார்கள். சுற்றிப்போக பாதைகள் குறைவு. மேலும் இது எண்வழிச்சாலையாகவும் வாய்ப்புள்ளது.

பசு மாட்டை காப்பாற்ற நினைப்பவர்கள், நாட்டுமாட்டை காப்பாற்ற ஜல்லிக்கட்டு செய்பவர்கள், பிறக்கும் ஆண் கன்றுகளை வண்டி மாடாக பழக்க ஆவன செய்யவேண்டும். அதற்கொரு பாதையை அமைக்கவேண்டும்.

இவர்கள் இயற்றும் திட்டங்களை வைத்தே இதை போராடிப்பெறுவோம். அதுபோகட்டும்.

மாட்டுவண்டியை எங்கே வாங்குவது ? அங்கிங்கு விசாரித்து நாம் விரைந்தது பணகுடிக்கு. பணகுடி மற்றும் ஆரல்வாய்மொழி ஒரு அருமையான ஊர். மகேந்திரகிரி மலையின் அடிவாரத்தில் பொதிகையில் இடுக்குவழியாக ஊடுருவும் கேரள காற்றில் நனையும் ஊர். இங்குதான் ராக்கத காற்றாலைகள் காணமுடியும். பணகுடி, கருப்பட்டிக்கு பேர்போன இடம்.

அங்கு தேடி சென்றது மாட்டுவண்டி செய்யும் ஒரு பட்டறையை . குப்புசாமி ஆசாரி என்பவர் தென்பட்டார். “கடைசியாக மாட்டுவண்டி செய்து 15 வருடமாகிவிட்டது, வேலையாட்களும் வருவதில்லை. தற்போது பெரும் பணக்காரர்களுக்கு ஆர்டரின்பேரில் பந்தய வண்டி செய்கிறேன், கோயில் தேர் செய்கிறேன்” என்றார். அப்படி ஒருவேளை செய்வதாக இருந்தால் 60 ஆயிரம் மேலாகும் என்கிறார். லேசாக குடித்திருந்தார். மனைவியும் மகனும் வெளிநாட்டில் இருக்கிறார்களாம்.

கையில் கொண்டுபோனது 15 ஆயிரம் பணம். கனத்தது. எங்கெங்கும் பழைய வண்டி கூட விற்பனைக்கு தென்படவில்லை. செல்லரித்துப்போய்விட்டன போலும்.

ஆகவே மாட்டுவண்டியை பட்டறையில் ரப்பர் டயர்கொண்டு செய்துகொள்ள வேண்டியதுதான்.
பொதுப்பணித்துறையினர் பல்லாண்டுகள் முன்பிருந்தே இப்படித்தான் செய்துகொள்கிறார்கள். புத்திசாலிகள் !!

Alwar Narayanan
— வளரும்
#தற்சார்புவிவசாயி