தேற்றான்கொட்டை மரம்

தேற்றான்கொட்டை மரம்
Agriwiki.in- Learn Share Collaborate
தேற்றான்கொட்டை மரம்
பொது இடங்களில் வைக்கலாம் குறிப்பாக நீர் நிலைகள் பகுதியில் வைக்க வேண்டும்
இது தேற்றா அல்லது தேத்தா என்ற மரத்தின் விதையாகும். இந்த மரம், நம் முன்னோர்களால் போற்றி வளர்க்கப்பட்டது. தற்போது இதன் முக்கியத்துவத்தை இழந்து அதன் பயன்களை நம் வருங்கால சந்ததியினர் அறிய முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக தேற்றாமர வனம் (கதகாரண்யம்), தென்கயிலை, திருக்கோளிலி, புஷ்பவனம் என்றெல்லாம் அறியப்பட்ட திருக்குவளை கோயிலின் ஸ்தல விருட்சமான தேற்றான் கொட்டை மரம் மிகவும் அரிதான மரங்களில் ஒன்று.
தேற்றா மரத்துக்குப் பல பெயர்கள் உள்ளன. அவற்றில் இல்லம்’, சில்லம்’, கதலிகம்’ என்பது போன்ற பல பெயர்களோடு பிங்கலம்’ என்றும் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேறு’, தேத்தாங்கொட்டை’ என்ற பெயர்களும் உள்ளன.
கலித்தொகையிலும் நற்றிணையிலும்கூட இதன் பயன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கலம் சிதை இல்லத்து காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் நலம் பெற்றாள்’ என்பது கலித்தொகை பாடல் வரியாகும். தேற்றான்கொட்டையைத் தேய்க்க கலங்கிய நீர் தெளிவதைப்போல தலைவி, தலைவனின் அரவணைப்பால் தெளிவு பெற்றாள்’ என்பது அந்த பாடல் வரியின் பொருள்.
தேற்றான் மரம் பளபளப்பாகவும், கரும்பச்சை நிற இலைகளையும், உருண்டையான விதைகளையும் கொண்ட குறு மரம். தமிழகத்தின் மலைக்காடுகளிலும் சமவெளிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. தேற்றான் மரத்தின் பழம், விதைக்கு மருத்துவக் குணங்கள் உள்ளன.
பொதுவாக, முற்காலங்களில் நம் முன்னோர்.
தேற்றாங்கொட்டையை சேறும் சகதியுமாக கலங்கிக் காணப்படும் நீரைத் தெளிய வைக்கப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். குளம், ஊருணி போன்றவற்றில் இருந்தே குடிநீர் உள்ளிட்ட மற்ற தேவைகளுக்கும் நீர் பெறப்பட்டது. அத்தகையச் சூழலில் கலங்கலாக இருக்கும் நீரை அப்படியே குடிக்க முடியாது என்பதால், தேற்றான்கொட்டையால் நீரைத் தெளிய வைத்து பயன்படுத்தினர். இன்றைக்கும்கூட இது, சில கிராமங்களில் புழக்கத்தில் உள்ளது. தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நீரைத் தெளிய வைக்க, அதாவது கலங்கிய நீர் நிரப்பப்பட்ட பானையின் உட்புறம் தேற்றான்கொட்டையை தேய்த்துவைப்பார்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகு பானை நீர் தெளிந்து காணப்படும். அழுக்குகள் மற்றும் கிருமிகள் இல்லாத சுத்தமான குடிநீர் கிடைக்கும். இன்றைக்கும் அந்தப் பகுதிகளில் இது நடைமுறையில் உள்ளது.
அமலக்கா (நெல்லி), நாகா (நன்னாரி), உசிரா (வெட்டி வேர்), முஸ்டா (கோரைக்கிழங்கு) கோசடக்கா (நுரைபீர்க்கை), அஞ்சனா (காட்டு ஏலக்காய்) போன்றவற்றைப் பொடியாக்கிக்கொள்ள வேண்டும். அந்தப் பொடியுடன் தேற்றான்கொட்டைத் தூளைச் சேர்த்து, கிணற்று நீர் அல்லது கலங்கிய நீரில் கலந்தால் கசப்பாக இருந்தாலும், சப்பென்று இருந்தாலும் உப்பாக, ருசியில்லாமல் நாற்றமடிக்கக்கூடியதாக இருந்தாலும் அவற்றைத் தெளியவைத்துவிடும். அந்த நீரைக் குடித்தால் சுத்தமாகவும் ருசியாகவும் மணமாகவும் இருக்கும்.
இது மட்டுமல்ல ஏரி, குளம், குட்டைகளில் மீன்களைப் பிடிக்கவும் தேற்றான்கொட்டை மரத்தின் சக்கையை நம் முன்னோர் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அதாவது, அந்த மரத்தின் காய்களை இடித்து, கொட்டையை எடுத்த பிறகு கிடைக்கும் சக்கையை அந்த நீர்நிலைகளில் போடுவார்களாம். அப்போது இந்தச் சக்கை, நீரோடு கலக்கும்போது மீன்களுக்கு ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால், மீன்கள் கரை ஒதுங்கிவிடுமாம். அதன் பிறகு மிக எளிதாக அந்த மீன்களை எடுத்து வந்துவிடுவார்களாம்.
தேற்றான்மரத்தின் பழங்கள் நாவல் பழம் போன்று காணப்படும். பெரும்பாலும், இதன் விதைகளே மருத்துவத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன.
மருத்துவ பயன்கள்:

 

பொதுவாக இது வெட்டை, உட்சூடு, வயிற்றுக்கடுப்பு, மூத்திர எரிச்சல், மூத்திரக்கடுப்பு, ரணம் போன்ற கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது. மந்தத்தை உண்டாக்கும் இது கண்ணுக்கு சிறந்த மருந்து. இவை எல்லாவற்றுக்கு மேலாக தேறாதவனையும் தேற்றும் மகிமை கொண்டது தேற்றான்மரம்.
தேற்றான்கொட்டைத் தூள், திரிகடுகுத் தூள், திரிபலாத் தூள், சீரகத் தூள், சித்தரத்தைத் தூள் ஆகியவற்றுடன் பால் சேர்த்து பசைபோல் தயாரித்துக்கொள்ளவும். அதன் பிறகு இதனோடு நான்கு பங்கு வெல்லம், ஒரு பங்கு நீர்விட்டு பாகு தயாரித்து அதனுடன் ஏற்கெனவே பசைபோலத் தயாரித்து வைத்திருக்கும் மருந்துக் கலவையைச் சேர்த்துக் கிளற வேண்டும். இது அல்வா பதத்துக்கு வந்ததும், நெய்விட்டுக் கிளறி இறக்க வேண்டும். நெய் தனியாகப் பிரிந்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி, தேன் சேர்த்துக் கலக்க வேண்டும். இந்த லேகியத்தை காலை, மாலை வேளைகளில் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் தேறி வரும். தயார் செய்ய முடியாதவர்கள் சித்த ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும் . தேற்றான் கொட்டை லேகியம் மற்றும் அஸ்வகந்தா லேகியம் இரண்டையும் வாங்கி சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் தேறுவதுடன் உடலும் நன்றாக வலுவடையும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடல் பலவீனமடைவதுடன் தூக்கம் கெட்டுவிடும். அப்படிப்பட்டவர்கள் தேற்றான்கொட்டை தூளையும், செண்பகப் பூவையும் நீர்விட்டு கொதிக்க வைத்து, பால் சேர்த்துக் குடித்து வந்தால், இந்தப் பிரச்னை சரியாகும்.
பகிர்ந்து மகிழும்….
கோவிந்தராஜூ – பசுமைப் போர்வை

2 Responses to “தேற்றான்கொட்டை மரம்”

  1. பல வருடங்களுக்கு பிறகு இப்போது தான் கேள்விபடுகின்றேன். மிக்க நன்றி. ஆக்கப்பூர்வமான கட்டுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.